குடிமைப்பண்பு- கடிதம்

இனக்குழுப் பண்பில் இருந்து குடிமைப் பண்புக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு,

இனக்குழு பண்பிலிருந்து குடிமைப் பண்புக்கு கட்டுரையில் நீங்கள் பதிவு செய்திருக்கும் ஒவ்வொரு கருத்தும் நிதர்சனமான உண்மை. நவீன குடிமைப்பண்பு நமக்கு கற்பிக்கப்படாமலும், இயல்பாக அமையப்பெறாமலும் போனதற்கு இன்னொரு முக்கியமான காரணமாக இந்த சமூகத்தில் நிலவும் போட்டி மனப்பான்மையையும் சேர்த்துக் கொள்ளலாமா. பள்ளிக்கல்வி முதல் கல்லூரி மேற்படிப்பு கல்லூரி வரையிலும், பின்னர் தொழிலுக்காகவும் என வாழ்வின் எல்லா தருணங்களிலும் நாம் எப்போதுமே போட்டி மனப்பான்மையிலேயே வாழ்கிறோம் என தோன்றுகிறது. பல்கி பெருகி முதன்மையில் இருக்கும் நம்முடைய மக்கள் தொகையும், அதன் பொருட்டு வாய்ப்புகளுக்காக நமக்குள்ளே உருவாகி வந்திருக்கும் போட்டி மனநிலையும் எப்பொழுதும் நம்முடைய சக மனிதனை பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாழ நம்மை பழக்கி வைத்திருக்கிறது. அடுத்த தலைமுறையேனும் இதிலிருந்து மீளுமா?

உங்கள் நலம் விழையும் மாணவன்,

திறல் சங்கர்

அன்புள்ள திறல் சங்கர்

நம்மைவிட கடும் போட்டி நிலவுமிடங்கள் ஐரோப்பாவும் அமெரிக்காவும். போட்டிகளில் வெல்லாதோருக்கு வாழ்வே இல்லைநேரடியாகத் தெருதான். எல்லா இடங்களிலும் போட்டி. குடும்ப வாழ்விலேகூட. ஒருவன் பொருளியல்ரீதியாக பின் தங்கினாலே மனைவியை இழக்கவேண்டி வரலாம். அங்கே ஏன் குடிமைப்பண்புக்கு அப்போட்டி எதிரானதாக இல்லை? உண்மையில் முறையான போட்டி நிலவவேண்டும் என்றால் குடிமைப்பண்பு இருந்தாகவேண்டும்

ஜெ

ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு.

இனக்குழு பண்பில் இருந்து குடிமைப் பண்புக்கு கடிதம் படித்தேன். சமூகவியல் மாணவன் என்ற முறையில் தங்களுடைய ஆய்வு கவனிக்க தக்கது.தன்னுடைய வீட்டை சுத்தமாக வைத்திருக்கும் ஒரு குடிமை பண்பு கொண்ட ஒரு தனிமனிதனை சுற்றி இருக்கும் குடிசை கலாச்சாரத்தை அவ்வளவு எளிதாக மாற்றும் மனநிலை  இல்லை.

இந்த சமயத்தில் காந்திஜியை நினைவு கொள்ளவேண்டியதிருக்கிறது. சுகாதாராத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் உலகறிந்தது.குடிமை பண்பு தற்போது தனியார் நடுவண் அரசு பாடதிட்டத்தில் மாணவர்களுக்கு சமூக விஞ்ஞான பாடதிட்டத்தில் ஒரு பகுதியாகஉள்ளது. பழமையில் ஊறிப்போன முதியோர்களின் மனநிலையில் மாற்றத்தை கொண்டுவர காலம் கடந்து விட்டது.

எப்படியாவது  அறமற்ற குறுக்கு வழியில் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியிலிருந்து முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட வகுப்பில் சென்று பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தற்போதைய அரசியல் வாதிகளைப் போல சாதாரண  இரண்டாம் வகுப்பு பயணிகளும் நினைக்க ஆரம்பித்து விட்டதன் விளைவு தற்போதைய ரயில் பயணம் இந்திய நாட்டின் சமுதாய படிநிலைகளை பிரதிபலிப்பதாக உள்ளது.மாணவர்களின் மனநிலைகளில் குடிமைபண்பு பற்றிய அறிவை முழுமையாக கொண்டு வந்தால் சிறிது மாற்றம் படிப்படியாக கொண்டுவர முடியும்.

காந்தியின் கொள்கை கழிப்பறை கழுவுவதில் ஆரம்பித்தது.அரசுகள் மற்ற ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தைப்போல சுகாதார பணியாளர்களுக்கும் வழங்கி அவர்களை பொது மேடையில் கவுரவிக்க வேண்டும். சுகாதாரம் அற்ற  சூழலில் இருந்து நட்சத்திர வகுப்பு உணவகம்,சர்வதேச பள்ளி,மருந்துவமனை ஆகியவற்றில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களை இன்றும் காணமுடியும்.அவர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்பபடுத்த வேண்டியதும் ஒரு நிலைபாடு.

தகுந்த நேரத்தில் இந்த கருத்தை வாசகர் மற்றும் ஆசிரியர் கடிதபோக்குவரத்தில் வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி.

தா.சிதம்பரம்.

தோவாளை.

முந்தைய கட்டுரைநிகழ்வுகள், சந்திப்புகள்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், கடிதங்கள்