காசியின் மணிகர்ணிகா கட்டத்தில் சிதை அணையலாகாது என்பது தொன்மம். அது காசிவாசியான காலபைரவனுக்கான படையல். ஆகவே இப்பகுதியில் இருநூறு கிலோமீட்டர் தொலைவில் எவர் இறந்தாலும் இங்கே உடலைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒருநாளில் முந்நூறுக்கும் குறையாத உடல்கள் இங்கே எரிக்கப்படுகின்றன. இன்னொரு அணையாச்சிதை அரிச்சந்திரா கட்டம்.
இங்கே எரிந்துகொண்டிருக்கும் இந்தச் சிதைகள் பற்றி நம் இதழாளர்களுக்கு ஏதும் தெரியாது. அவர்கள் அறிந்துகொள்ள முயல்வதுமில்லை. இச்சிதைகளால் கங்கை மாசுபடுகிறது, கங்கையில் சடலங்களை தூக்கி வீசிவிடுகிறார்கள் என்றெல்லாம் ஆண்டுக்கு இருமுறையேனும் செய்திகள் வரும். அது அறியாமையின் விளைவு என்று எண்ணியிருந்தேன். அது ஒரு ஊடகச் சதி, கூலிபெற்று எழுதுவது என ஆங்கில ஊடகவியலாளர்களே பலர் சொல்லியிருக்கிறார்கள்.
கங்கை மாசுபடுவது உத்தரகாசி முதல் இமையமலை அடிவாரம் வரை இருக்கும் வெவ்வேறு குவாரிகளால். கல்முதல் ஜிப்ஸம் வரை தோண்டி எடுத்து அந்த புழுதியை கங்கையில் கலந்துவிடுகிறார்கள். அதற்கு எதிராக போராடி சுவாமி நிகமானந்தா முதல் மூன்று துறவிகள் உண்ணாநோன்பிருந்து மறைந்திருக்கிறார்கள். மன்மோகன்சிங் அரசோ இன்றைய அரசோ எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. வெறும் வாக்குறுதிகள் மட்டுமே.
நடவடிக்கை எடுப்பது எளிதல்ல. ஏனென்றால் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களே அந்த குவாரிகளை மறைமுகமாக நடத்துகிறார்கள். மலைகளை வெட்டி விற்கும் தொழில் என்பது ஒரு கொள்ளை மட்டுமே. அதை எப்படி கைவிடுவார்கள்? இமையமலையின் காடுகளை அழித்தவர் கமலாபதி திரிபாதி என்ற காங்கிரஸ் தலைவர். இவர்கள் அவர் வாரிசுகள். (நீர் நெருப்பு – ஒரு பயணம், கங்கைக்காக ஒர் உயிர்ப்போர், நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு. சாது நிகமானந்தா குறித்த நூல்- வாங்க)
இன்னொரு மாசுபாடு, பனாரஸ் நகரின் மாபெரும் சாக்கடைகள் அனைத்துமே வரணா, அஸி என்னும் இரு சாக்கடைகள் வழியாக கங்கையில் கலப்பது. அவை முழுக்க ரசாயனக்கழிவுகள். அவற்றை தூய்மைப்படுத்த ராஜீவ்காந்தி காலத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் பெரும்பாலான தூய்மை இயந்திரங்கள் இன்று செயலாற்றுவதில்லை. கழிவுகளை பகல் முழுக்க தேக்கி, இரவில் கங்கையில் விடுவதையே செய்துகொண்டிருக்கிறார்கள்.
சிதைகள் எரிந்து எஞ்சுவது மிகக்குறைவான சாம்பல். அதை படகுகளில் உடனே மறுகரைக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள். இரு படிக்கட்டுகளில் சிதைகள் எரிவதனால் உருவாகும் மாசுபாடு என்பது கங்கைவெளியின் காற்று, நீரின் பெருக்குடன் ஒப்பிடுகையில் மிகமிக குறைவானது. ஆனால் அதையே திரும்பத் திரும்பச் சொல்லி நம்மை நம்பச் செய்கிறார்கள். கங்கையின் மாசு பற்றிப்பேச நமக்கு தகுதி இல்லை. கங்கையை விட தாமிரபரணியோ வைகையோ காவிரியோ ஒன்றும் தூய்மையானது அல்ல.
இந்தச் சிதைகள் மிகமிகத் தொன்மையானவை. இங்குள்ள தொன்மக்கதையின்படி இது பழங்காலத்தில் ஒரு கங்கைக்கரைக் காடு. பைரவாரண்யம் என்று பெயர். இங்கே காலபைரவன் தன் உக்கிரவடிவில் எழுந்தருளி தவம் செய்துகொண்டிருந்தார். வான்வழியாகச் சென்ற இந்திரன் அந்தக் காட்டின் அழகைக் கண்டு மயங்கி கீழிறங்கி அங்கே அப்சரஸ்களுடன் மகிழ்ந்திருக்க எண்ணினார். சீற்றம் கொண்ட காலைபைரவர் அவனை எதிர்த்தார். அவனால் அவரை வெல்லமுடியவில்லை. அவர் பிரம்மனை கூட்டிவந்தார். பிரம்மன் வெல்லமுடியாமலானபோது விஷ்ணுவையே அழைத்துவந்தார். அவரும் வெல்லமுடியவில்லை.
ஆகவே அனைவரும் சென்று சிவனிடம் முறையிட்டனர். சிவன் அவர்களிடம் காசிக்குச் சென்று பார்க்கும்படி ஆணையிட்டார். அவர்கள் காசிக்கு வந்து பைரவரை பார்த்தபோது காலபைரவரே சிவனாக மாறி தோற்றமளித்தார். தானும் காலபைரவனும் ஒன்றே என சிவன் அறிவித்தார். அவர்கள் அவரை அங்கே உலகாள்வோனாக மங்கலத் தோற்றத்தில் நிறுவி வழிபட்டனர். காசி காலபைரவனின் ஊர்தான் இன்றும்.
பொதுவாக ஆலயங்களில் நீலநிற மலர்கள் வழிபாட்டுக்கு எடுக்கப்படுவதில்லை. அவை தமோகுணம் கொண்டவை என்பது நம்பிக்கை. ஆனால் காசி காலபைரவர் ஆலயத்தில் மட்டுமல்ல, விஸ்வநாதர் ஆலயத்திலும் நீலமலர்களும், நஞ்சுநிறைந்த எருக்குமலர் மொட்டுகளாலான மாலைகளும் வழிபாட்டுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. நீலம் பித்தின் நிறம், கனவின் நிறம். நீலம் சாவின் நிறம். முழுமையின் நிறம்.
காலையிலேயே இங்கே சாவின் கொடி ஏறிவிடுகிறது. அல்லது முக்தியின் கொடி. விடுதலையின் பதாகை. சூரியச்செங்கதிருடன் சிதையொளி கலக்க காசி விழித்தெழுவது ஓர் அரிய காட்சி. இயல்பாக டீ குடித்து, நீராடி, காலைப்பூசனைகள் முடித்து, மக்கள் அதைச்சூழ்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சிதையில் ஒரு மனிதர் தன் கால்களும் இடையும் தழலாவதை தானே பார்த்துக்கொண்டிருந்தார்.
மணிகர்ணிகாவில் பெருங்கூட்டம். ஒரு மயானம் இத்தனை கொண்டாட்டமாக, கோலாகலமாக இருப்பதை வேறெங்கும் பார்க்கமுடியாது. சாவின் எல்லா பாவனைகளும் அழிந்து, அது வெறுமொரு எரிதலாக மட்டுமே எஞ்சும் இடம். பிணங்கள் வந்துகொண்டே இருந்தன. பல இடங்களில் பற்றி எரிந்துகொண்டிருந்தன. தீயின் செம்மை இரவின் பின்னணியில் உக்கிரம் கொண்டிருந்தது. வெள்ளையர்கள் பலர் தெரிந்தனர். ஒரு வெள்ளையின மாது மரப்பலகையில் படுத்து எரிதலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கண்களில் நான் அடையாளம் காணமுடியாத ஓர் உணர்வு.
‘பஞ்சபூதங்களென் காத்ரம்’ என தொடங்கும் சங்ஙம்புழா கிருஷ்ணபிள்ளையின் புகழ்பெற்ற கவிதை ஒன்றுண்டு. அது காசிவாசியான சம்ஸ்கிருத கவிஞர் ஜகன்னாத பண்டிதரின் ஒரு கவிதையின் தழுவல். என் உடல் ஐந்து பருப்பொருட்களாலானது. ஐந்தும் ஐந்து மூலவடிவங்களையும் சென்றடைக. எஞ்சுவதை தழலே நீ விண்ணுக்கு கொண்டுசெல்க, எங்கிருந்து வந்ததோ அங்கே.
சிதையை கிண்டிக்கொண்டே இருந்தார்கள். மௌனமாக, எதிர்ப்பில்லாமல் அந்த அடிகளை வாங்கிக்கொண்டிருந்தது எரியால் உண்ணப்பட்டுக் கொண்டிருந்த உடல். எதிர்ப்பின்றி புரண்டது. அதன்மேல் செந்தழல்கதிர்கள் தழுவித்தழுவி என்ன நடனம். என்ன ஒரு கொண்டாட்டமான விருந்துண்ணல். பார்த்துக்கொண்டே நிற்கச்செய்வது எது? அவ்வளவுதான் அவ்வளவுதான் என துயரின்றி ஒரு நிறைவு ஏன் நம்முள் உருவாகிறது?
அந்த உடல் எவரோ. நான் பார்ப்பதற்குள் கரிவடிவமாகியிருந்தது. ஆனால் உடலுரு எஞ்சியிருந்தது. காசியில் சிதை நீளமானது அல்ல. கால்களை மடித்த வடிவிலேயே சிதையேற்றுவார்கள். அப்படியே எரிந்துகொண்டிருந்த உடலை புரட்டியபோது அது மண்டியிட்டு வணங்குவதுபோல் தோன்றியது. பிழையிரப்பதுபோல. வேண்டிக்கொள்வதுபோல. அத்தனை எரிந்தபடி ஒரு மகத்தான பிரார்த்தனை.
சிதைகளினூடாக ஒரு கரியநாய் செல்வதைக் கண்டேன். அதற்கு ஊன் எரியும் வாசனையின் கிளர்ச்சி இல்லை. தழல்கண்டு நாய்கள் பொதுவாக அஞ்சும், அது தயங்கவே இல்லை. ஊடாகச் சென்றுகொண்டே இருந்தது. எதையோ தேடியது. விஷ்ணுபுரத்தின் கரிய நாயை நினைவுகூர்ந்தேன். அந்த நாயை நான் இங்கிருந்துதான் எடுத்துக்கொண்டிக்கிறேன். சொல்லில் பதியனிட்டு எடுத்துச்சென்றிருக்கிறேன்.