அடியடைவு

காசிக்கு கிளம்பவேண்டும் என தோன்றியதற்கு தனிக் காரணம் ஒன்றுமில்லை, சும்மா தோன்றியது. விசாலாட்சியம்மாவை நினைத்துக் கொண்டேன்.  ஏன் தோன்றியது என்பதற்கு இப்போது காரணங்களை எண்ணிக்கொள்ளலாம், அப்போது ஒன்றும் திட்டமில்லை. ஆனால் சுற்றுலா மனநிலை அல்ல. வேறொன்று. ஆகவே உடன் இணக்கமான மனநிலை கொண்ட ஒருவர், மரபான நம்பிக்கை கொண்டவர் வேண்டும் என நினைத்தேன். ஆகவே அந்தியூர் மணியை கூட்டிக்கொண்டேன்.

ஷில்லாங் விழாவில் இருந்து 18 அன்று திரும்பி வந்தேன். அன்றே மாலை கிளம்பி கோவை. 19 அன்று கோவையில் இருந்தேன். நண்பர்களுடன் சிறு சந்திப்புகள். 20 காலை சென்னை வழியாக வரணாசி. அந்தியூர் மணி கோவையில் முந்தைய நாளே வந்து என்னுடன் இணைந்துகொண்டார். அந்தியூர் மணியின் முதல் விமானப்பயணம், முதல் முறையாக காசி. அவரைப்போன்ற அதிசைவருக்கு காசி என்பது ஓர் ஊர் மட்டுமல்ல.

நான் காசிக்கு வருவது எட்டாவது தடவை. முதல்முறை 19 வயதில், அற்று அலைந்த மனச்சிக்கல் கொண்ட இளைஞனாக வந்தேன். காசியின் படிக்கட்டுகளில் பிச்சைக்காரனாக வாழ்ந்தேன். அங்கிருந்து கிளம்பி பலவாறாக அலைந்து அமைந்து எழுதலானேன். இப்போது வாழ்க்கையின் மறுபக்கத்தை காணத்தொடங்கும் 61 வயதான மனிதனாக வந்துள்ளேன். என்றும் எஞ்சும் ஒரு தனிமை. அது அன்றுமின்றும் உடனுண்டு. காசி அந்த தனிமையின் நகரம். நகரமென்ன, இது கங்கைக்கரை. இந்நகரம் அதிலெழுந்த ஒரு நீர்க்குமிழி.

நான் நிறைய மாறிவிட்டேன். வாழ்ந்ததை விட பற்பல மடங்கு அதிகமாக எழுத்தினூடாக வாழ்ந்துவிட்டேன். வாழ்ந்து அறிந்தது துளி, எழுதியறிந்தது பெருக்கு. என் அகவளர்ச்சி நான் எழுதும் தருணங்களில் நிகழ்ந்தது மட்டுமே. நித்யாஎழுத்து உனக்கான யோகம், இன்னொன்று தேவையில்லைஎன்று சொன்னது இன்று புரிகிறது. நான் அறிந்தவை  யோகி தன் ஆழ்நிலையில் அறிவனவற்றுக்கு நிகரானவை. அதற்குரிய எல்லா கண்ணீரையும் நானும் கொடுத்திருக்கிறேன். 

சென்ற ஆண்டு என் பிறந்தநாளின்போதே வரவேண்டியிருந்தது. என் அம்மா அப்பாவுக்குச் சடங்குகள் செய்ய விரும்பினேன். எனக்கு அண்ணா இருப்பதனால் நான் காசி தவிர எங்கும் சடங்குகள் செய்யலாகாது. எனக்கு சடங்குகள் அவ்வளவு முக்கியமென தோன்றவில்லை. இன்று அவை தேவை எனும் அறிதல் (நம்பிக்கை அல்ல, அறிதல்) உருவாகியுள்ளது.  

காசியில் 22 பின்காலையில் நானும் அந்தியூர் மணியும் அவரவர் மூதாதையருக்கான சடங்கைச் செய்தோம். ஊழ் ஒருவரை அங்கே கொண்டுவந்து உடனமர்த்தியிருந்தது. சிவாஜி என்பவர் தன் தந்தை சக்திவேல் கவுண்டருக்கு கடன் முடிக்க வந்திருந்தார். எங்களுக்கு முன் மகாராஷ்டிரத்தில் எங்கோ இருந்து இரு சகோதரர்கள் எலும்புக்கலமாக தங்கள் தந்தையை கொண்டுவந்திருந்தனர். பல்லாயிரமாண்டுகளாக அவ்வாறு வந்துகொண்டே இருக்கிறார்கள்.

தமிழறிந்த சாஸ்திரிகள் சடங்குகளை தமிழிலும் விளக்கி செய்துவைத்தார். மந்திரங்களே தெளிவாகப் புரியும்படித்தான் இருந்தன. மூன்று கிளைகள் கொண்ட கங்கையே மூன்று அடுக்குகள் கொண்ட என் வினைகளை தீர். அறிந்தும் அறியாமலும் மனம் சொல் செயலால் ஆற்றிய பிழைகளை பொறுத்தருள். உனக்கு மஞ்சள் குங்குமம் அளிக்கிறேன். மலர்களும் தூபமும் அளிக்கிறேன். அனைத்து மங்கலப்பொருட்களையும் அளிக்கிறேன். முடிவற்றவளே உன் அருகே மகவென அமர்ந்திருக்கிறேன்

முறையான எளிய சடங்கு. அதன் அமைப்பு என்னை பிரமிப்படையச் செய்தது. என் பெற்றோர் இருவர், அவர்களின் பெற்றோர்கள், அவர்கள் நால்வரின் பெற்றோர்கள் என மூன்று தலைமுறையினருக்கான நீர்க்கடன். என் மனைவியின் பெற்றோரின் பெற்றோர் நால்வரின் முந்தைய இரு தலைமுறை மூதாதையருக்கான நீர்க்கடன்கள். பெயர்கள் எனக்குத் தெரிந்திருந்தன என்பதே எனக்கு வியப்புதான். இவை மூதாதையர் கடன்கள்.

என் குடும்பத்திலும் என் மனைவி குடும்பத்திலும் இறந்தவர்களுக்கான நீர்க்கடன்கள். அப்படி நினைவுகூரச் சொன்னபோதுதான் முகங்களாக எழுந்து வந்தன. என் மைத்துனர் லெனின் கண்ணன். கொரோனா காலகட்டத்தில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு மறைந்தார். என் பெரியம்மாவின் மகனும் என் உடன்பிறந்தார் வரிசையில் இரண்டாமருமான ஆரியநாடு ரவி அண்ணா. என் தாய்மாமாக்களான வேலாயுதன் பிள்ளை, சசிதரன் நாயர், கங்காதரன் நாயர், காளிப்பிள்ளை. என் தாய்மாமனின் மகன்களான கங்கா, குமார்.  எத்தனைபேர்! 

அதன்பின் நண்பர்கள். அவர்கள் இந்துக்களாக இருக்கவேண்டியதில்லை என்று புரோகிதர் சொன்னார், இஸ்லாமியர்களுக்குக்கூட செய்யலாம். தற்கொலை செய்துகொண்ட என் நண்பன் ராதாகிருஷ்ணன் காசர்கோட்டில்  என்னுடன் பணியாற்றி இதயநோயால் மறைந்த என் நண்பன் அப்துல் ரஸாக் (ரஸாக் குற்றிக்கம்) ஆகியோரை எண்ணி கடனளித்தேன்.

எனக்குத் தெரிந்து வாரிசின்றி மறைந்தவர்களுக்கும் நீர்க்கடன் அளிக்கலாம். என் அப்பாவின் மாமியான காளிக்குட்டிப் பிள்ளையை நினைத்துக்கொண்டேன். அவர்கள் மறைந்து நாற்பதாண்டுகளாகின்றன. பிள்ளைகளில்லாத அவர்களின் இல்லம் உடன்பிறந்தார் வழி வாரிசுகளுக்குச் சென்றது. வயதான காலத்தில் உணவின் மேல் பெரும் விருப்பு கொண்டமையால், எதையும் தின்றுசெரிக்கும் ஆற்றல் கொண்டிருந்தமையால் அக்னிகுண்டம் என ஊரில் அழைக்கப்பட்டார்.

எத்தனை பேர் மறைந்துவிட்டனர். மனிதர்கள் மறைந்துகொண்டே இருக்கிறார்கள். மிகமிக எளிதாகக் கடந்து வந்துவிடுகிறோம். ராதாகிருஷ்ணன் மறைந்து இப்போது முப்பத்திமூன்று ஆண்டுகளாகின்றன. ரஸாக் மறைந்து பதினைந்தாண்டுகள். அனைத்தையும் கரைத்துச்செல்லும் இந்த கங்கை நம் உள்ளே பிரக்ஞைப்பெருக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. 

அதன்பின் நான் வளர்த்து, மறைந்த விலங்குகளுக்கு நீர்க்கடன். அதற்குரிய மந்திரங்கள் இருப்பதே திகைப்பூட்டியது. என் பிரியத்திற்குரிய ஹீரோ, டெட்டி, டோரா ஆகியோரை நினைத்துக்கொண்டேன். என் பிறவியின் நற்பயனாக என்னுடன் சிலகாலம் வாழ்ந்தவர்கள். பேரன்பு மிளிர்ந்த அவர்களின் அழகிய விழிகள். நாய்களின் கண்கள்போல் அழகிய மலர்கள் இப்புவியில் இல்லை.

அதன்பின் நான் முறித்த மரங்களுக்கும் நீர்க்கடன் அளிக்கும்படிச் சொன்னார். நான் முறித்தது ஒரே மரம், என் கொல்லையில் நின்றிருந்த ஒரு மாமரம். அதை எண்ணிக்கொண்டேன். அதற்கும் ஓர் ஆத்மா இருந்தது. அதுவும் ஏதோ ஊழ்வலைப் பின்னலால் என் கொல்லையில் எழுந்து, ஒரு முறைகூட பூக்காமல் காய்க்காமல், என் கொல்லைச்சுவரை பிளந்து, என் கையால் மறைந்தது. அதற்கு நான் ஒரு பிழை இழைத்திருக்கலாம். ஆம், பிழையே என்கின்றன தொன்மையான ரிஷிவார்த்தைகள். அந்த மரத்துக்கும் நீர்க்கடன் அளித்தேன்.

என் அம்மாவுக்கு நான் பிழை ஒன்று செய்தேன் என என் வாழ்நாளெல்லாம் உணர்ந்திருக்கிறேன். எனக்கு வேலை கிடைத்ததுமே சிறிது நாள் என்னுடன் அவர்களை கொண்டுசென்று வைத்திருந்திருக்க வேண்டும். மிக இளமையில் அம்மா சுமந்த குடும்ப வாழ்க்கையெனும் நுகத்தில் இருந்து அவர்களுக்கு ஓர் இளைப்பாறலை அளித்திருக்கவேண்டும். என்னுடன் இருந்திருந்தால் கொண்டாட்டமாக இருந்திருப்பார்கள்.

அம்மாவின் மகிழ்ச்சியே என்னுடன் இலக்கியம் பேசுவதாக மட்டுமே இருந்தது. ஆனால் என் 19 வயதில் ஆன்மிக அலைக்கழிப்பு எனக் கிளம்பியதிலிருந்து நான் அம்மாவிடமிருந்து விலகி விலகிச் சென்றேன். எனக்கான உலகம், எனக்கான தனிமை. இன்றுவரை நீடிக்கும் அகத்தனிமை. அம்மா என்னை இழந்தமையால் துயருற்று, வாழ்க்கையின் பொருளை இழந்து, தனக்கான எடைமிக்க தனிமையில் சென்று ஒடுங்கியதை அவர்கள் மறைந்து பத்தாண்டுகளுக்குப் பின்னரே உணர்ந்தேன்.

ஆனால் நான் என்ன செய்திருக்க முடியும்? ஒரு வாய் குடிநீர் கூட அம்மாவிடம் இருந்தன்றி வாங்கிக் குடிக்காதவர் மறைந்த கரடிநாயர். அறிவாளி, நியாயமானவர், ஊர்ப்பெரியவர். ஆனால் தனக்கென ஒரு வாழ்க்கையை வாழ அறியாதவர். தான் தன் மனைவியில் பாதி என உணராதவர். அதனாலேயே தன்னை வதைத்து, தன் மனைவியை வதைத்து, வாழ்க்கையை அழித்துக்கொண்டவர். அவரிடமிருந்து அம்மாவை கூட்டிச்சென்றிருக்க முடியாது. முயன்றாலும் அம்மா வந்திருக்க மாட்டார்.

அப்பா மேல் எனக்கு கடும் ஒவ்வாமை இருந்தது. கசப்பு இருந்தது. என் அம்மாவின் வாழ்க்கையை அழித்தார் என. அவள் சாவுக்கு தன் மூர்க்கத்தால் வழிவகுத்தார் என. அன்று ஒரு கடிதத்தில் என் கோபத்தை அப்பாவிடம் காட்டியிருக்கிறேன். இன்று உணர்கிறேன். பெற்றோரை, மூதாதையரை விமர்சனம் செய்ய பிள்ளைகளுக்கு உரிமை இல்லை. மதிப்பிடவும்கூட தகுதி இல்லை. அவர்கள் வாழ்ந்த சூழல் நம்மால் எவ்வகையிலும் அறிய முடியாதது. அவர்கள் நமக்களித்தமைக்காக நாம் நன்றியுடன் இருக்கவேண்டும். நாம் அவர்களுக்குச் செய்தல் நினைவுகூர்தல் மட்டுமே.

அந்த உணர்வை வெண்முரசு வழியாகவே அடைந்தேன். வெண்முரசு அளித்த தெளிவுகளை எண்ணிக் கொள்கிறேன். என் ஐயங்களெல்லாம் அனேகமாக மறைந்தன. ஒவ்வொன்றுக்கும் அதில் எங்கோ பதில் இருக்கிறது. அதன் பின் சட்டென்று பாகுலேயன் பிள்ளை சட்டென்று பிரியத்துக்குரிய கரடிநாயராக மாறிவிட்டார். பேரன்பும் மூர்க்கமும் உலகியல் பதற்றமும் கொண்ட அப்பாவியான, அறிஞரான, பழைய மனிதர். பிரியத்துக்குரியவர். சட்டென்று நான் அவருக்கு அப்பாவாக நின்று அவரை அறிகிறேன்.

இந்த மகாமயானத்தில், காலபைரவ க்ஷேத்ரத்தில் இருந்து அவரிடம் சொல்லிக்கொண்டேன். மறைந்தவர்களின் முன் சுருளவிழ்ந்து சரிந்து அவர்களை நம்மிடமிருந்து முற்றாக அகற்றும் காலத்திரையைக் கிழிக்கும் ஆற்றல்கொண்டது ஒன்று இருந்தாகவேண்டும். சில சொற்களேனும் சென்று சேர்ந்தாகவேண்டும். சில உணர்வுகளாவது அங்கே பெறப்பட்டாகவேண்டும். இச்சொற்கள் அங்கு செல்லட்டும். இந்த உணர்வுகள் அங்கே நிறையட்டும்.

இப்புவியில் புழுக்கள், கிருமிகளென கணம்கோடிப் பெருகும் உயிர்த்துளிகளில் ஒன்றாக நின்று சொல்லும் சொற்கள் இவை. பொறுத்தருள்க. இளமையில் ஞானமென்றும் திறமையென்றும் என்னிடமுள்ள எதையோ ஒன்றை நம்பினேன். அது இங்குள்ள என்றுமழியா பெருக்கொன்றின் சின்னஞ்சிறு துமி என்று இன்று உணர்கிறேன். அந்தத் தருக்கு அன்று என்னில் நிகழ்த்திய பிழைகளை என் தந்தையும் மூதாதையரும் பொறுத்தருளவேண்டும். வெண்முரசு ஒன்றுக்காக அதை அவர்கள் எனக்காகச் செய்யலாம். என் மேல் விழுந்த குருவருளுக்காகச் செய்யலாம்.

அன்னம் பதினேழு உருளைகளாக. மலர்கள். மங்கலப்பொருட்கள். அவற்றை கங்கையில் விட்டு நீர்க்கடன் முடித்துக் கரையேறினேன். உணர்வெழுச்சிகள் ஏதுமில்லை. மனம் ஓர் ஆழ்நிலையில் அமைந்திருந்தது. ஒரு சொல் மிச்சமில்லை. இச்சடங்கு எனக்காக. இது ஒரு முழுமை. ஓர் எளிய வட்டம். இது இங்கே நிறைவடையட்டும்.

இது ஒரு பூர்ணபிண்டம். அனைவருக்கும் ஒட்டுமொத்தமாகச் செய்யவேண்டியது. அதன்பின் கடன்கள் இல்லை. அவர்களிடம் சொல்ல ஏதும் மிச்சமில்லை. அவர்கள் நம்மிடம் சொல்லவும் ஏதும் மிச்சமில்லை. அவர்களின் வாழ்த்துக்கள் மட்டுமே இங்கே எஞ்சும். இது ஊரில் திதி கொடுப்பதுபோல அல்ல. இது ஒரு மங்கலச் செயல்பாடு என்றார் சாஸ்திரிகள். ஆகவே இதைச்செய்தபின் நீராடக்கூடாது.

அனைத்தும் முடிந்தபோது ஓர் எடையின்மையை உணர்ந்தேன். எத்தனை தொன்மையான சடங்கு. அதன் வேர்களைப் பற்றிக்கொண்டு சென்றால் ராமனும் கிருஷ்ணனும் பிறந்த காலத்திலிருந்து பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுக்காலம் பின்னால் செல்லவேண்டியிருக்கும். ஹோமோசேப்பியன்களின் முன்னோடிக் குரங்குகள் கூட இறுதிச்சடங்குகள் செய்துள்ளன. மிக எளிமையானது, மிகமிக அடிப்படையானது இச்செயல். நமது அறிவு, நமது இருப்பே கூட இதன்முன் ஒன்றுமே இல்லை.

காசியில் அந்தியூர் மணியுடன் அலைந்தேன். படிக்கட்டுக்கள் கொஞ்சம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இன்னும் கொஞ்சம் தூய்மை கூடியிருக்கிறது. ஆனால் மாபெரும் கட்டிடங்களின் காலப்பழமை, அங்கே வந்து கூடும் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளின் உணர்வுத் தொன்மை அப்படியேதான் இருந்தது. எதுவுமே மாறவில்லை என்பதுபோல. எதுவும் மாறவும் போவதில்லை என்பதுபோல. மகாபாரதத்தில் யுதிஷ்டிரனுக்கே அது தொன்மையான காலபைரவ க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் அப்படியேதான் இருக்கும்.

மகாமயானம். மணிகர்ணிகா கட்டில், அரிச்சந்திரா கட்டில் சிதை எரியும் ஒளி. காலபைரவனுக்கு ஒருபோதும் அணையாத சமையல் அடுப்புஅங்கே இரவெல்லாம் அமர்ந்து எரிந்த சிதையை பார்த்துக்கொண்டிருப்பது என் வழக்கம். ஆனால் அந்தியூர் மணி உடனே அப்பால் சென்றுவிட்டார்.

காலையில் கங்கை மங்கலான ஒரு ஒளிப்பரப்பு. வான்சாம்பல் நிறம், அதில் காலையொளி விழும்போது நீருக்குள் ஓர் அகச்சுடர் தோன்றியது. பனி பரந்த வானிலும் சூரியன் மறைந்தே ஒளிர்ந்துகொண்டிருந்தது. ஒளிதுழாவி, ஒளியை அளாவிச் செல்லும் படகுகள். அவை வானில் மெல்லப் பறப்பதுபோலத் தோன்றின. படிக்கட்டுகளில் இந்தியாவெங்கணுமிருந்து வந்தவர்கள் நீராடிக்கொண்டிருந்தார்கள். பலநிற, பல வடிவ, பல இனச்சாயல் கொண்ட மக்கள். கலந்தொலித்த பல மொழிகள். கூச்சல்கள், சிரிப்புகள். 

காசியின் உலகத்தலைவனின் ஆலயம். அவனை விழிகளால் ஆளும் அகல்விழியன்னையின் ஆலயம். காலத்தின் தலைவனின் ஆலயம். ஒவ்வொரு இடமாகச் சென்றோம். மாலையில் கங்கைக்கு வழிபாடு. சுடராட்டு, நறும்புகையாட்டு. கங்கையை விசிறித்துயிலச் செய்யும் இறுதி நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்தபோது நெகிழ்வும் நிறைவுமான ஒரு புன்னகையை அடைந்தேன்.

காசியின் விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து கங்கைக்கு இறங்குமிடம் மட்டும் முற்றிலும் புதியதாக கட்டப்பட்டிருந்தது. மாபெரும் தோரணவாயில். டில்லி செங்கோட்டை போன்ற கட்டிடப்பாணி. படிக்கட்டுகள். நவீன விடுதிகள், உணவறைகள், கழிப்பறைகள். இரவில் பொன்னொளியில் அது ஜொலித்தது. பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகளே அங்கிருந்தனர். அது நாம் வெள்ளையருக்காக உருவாக்கிய காசியின் வரவேற்பறை. ஆனால் மணிகர்ணிகா கட்டில்தான் வெள்ளையர்களை உண்மையில் பார்க்கமுடிந்தது.

காசிப் படித்துறைகள் காலமின்மையை உணரச்செய்பவை. அங்குள்ள இடிபாடுகள் மட்டுமல்ல, காலந்தோறும் செய்யப்படும் செப்பனிடல்களும் கூடத்தான். மிகச்சிறிய, இடுங்கலான பாதைகள். பல பாதைகளில் நான் என்னை மறந்து சுற்றியலைந்திருக்கிறேன். இன்று எந்த இடமும் அடையாளம் தெரியவில்லை. என்னைவிட அந்தியூர் மணி நல்ல திசையுணர்வு கொண்டவராகத் திகழ்ந்தார். ஆனால் எந்த இடமும் பெரிதாக மாறிவிடவுமில்லை.

காசியில் அரிச்சந்திரா கட் செல்லும் வழியில் பாரதி வாழ்ந்த இல்லம் இருக்கிறது. இன்றைய கணக்கிலேயே பெரிய வீடுதான். பாரதியின் அடையாளமான மீசையை அவர் இங்கேதான் அடைந்தார். அந்த மீசைதான் அன்றிருந்த தமிழ் பிராமணர்கள் நடுவே அவரை அன்னியராக்கியது. கவிஞருமாக்கியது. அண்மையில் அந்த இல்லம் நினைவுச்சின்னமாக ஆக்கப்பட்டுள்ளது. நாங்கள் சென்றபோது பூட்டப்பட்டிருந்தது

அந்தியில் தசாஸ்வமேத கட்டத்தில் பெருங்கூட்டம். கங்கைப் படித்துறையெங்கும் மனிதத்தலைகள். எல்லா நாடுகளிலும் இருந்து வந்தவர்கள். மனம் ஒன்றச்செய்யும் பஜனை பாடும் குழு ஒன்று அமர்ந்திருந்தது, கங்கை இருளில் ஆயிரம் விளக்குகள் சுடர்கொள்ள ஓடிக்கொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைசி.கனகன்
அடுத்த கட்டுரைசெயல் எழுக, ஒரு நிகழ்வு