விஷ்ணுபுரம் நிகழ்வில் விருந்தினர்களாகக் கூப்பிடப்படுபவர்கள் எந்த அளவுகளில் அழைக்கப்படுகிறார்கள்? அதன் அரசியல் என்ன? விஷ்ணுபுரம் அமைப்புக்குள் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. சீனியர் எழுத்தாளர்கள் வரும் அதே சபையில் இன்னும் எழுத ஆரம்பிக்காத இளம்வயதானவர்களையும் கூப்பிட்டு சரிக்குச் சரியாக அமரவைக்கிறீர்கள். இது ஒரு தப்பான சித்திரத்தை அளிக்கிறது. பா.ராகவன் சீனியர் எழுத்தாளர். அர்வின்குமார் என்ற பையனின் படம் இருக்கிறது. அவர் எவர் என்றே தெரியவில்லை. இந்த அரசியல் என்ன என்று தெரியவில்லை. உங்கள் அதிகாரத்தை இங்கே நிலைநாட்ட முற்படுகிறீர்கள்.
ரங்கராஜ் .எம் (ஸ்ரீரங்கா)
அன்புள்ள ரங்கராஜ்,
இந்த விழாவிற்கு அழைக்கப்படுபவர்களின் அடிப்படைத் தகுதி என்பது அவர்கள் இலக்கியத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு இதற்குள் செயல்படவேண்டும் என்பது மட்டுமே. பொழுதுபோக்கு எழுத்தாளர்களை அழைப்பதில்லை. வெவ்வேறு அரசியலமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அரசியல் காரணமாக இங்கே வருவதை தவிர்க்கிறார்கள். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
எங்களுக்கு அரசியல் இல்லை. இதை திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அரசியலுக்குள் உழல்பவர்களால் அதை புரிந்துகொள்ளமுடியாது. தங்களவர் அல்லாத எவரும் அவர்களுக்கு எதிர் அரசியல் கொண்டவர்களே. அது அவர்களுக்குரிய ஒருவகை மனச்சிக்கல்.
அதிகாரம் உண்டா என்றால் உண்டு. இது இலக்கிய அதிகாரம். நாம் சரியானதென நினைப்பதை நிலைநாட்டவே ஒவ்வொருவரும் சிந்திக்கிறோம், செயல்படுகிறோம். அதை will என்பார்கள். செயல்பாடுகளின் அடிப்படை அதுவே. நான்
- வ.வெ.சு.ஐயர்,
- புதுமைப்பித்தன்,
- ரா.ஸ்ரீதேசிகன்,
- க.நா.சு,
- சி.சு.செல்லப்பா,
- ஆ.முத்துசிவன்
- சுந்தர ராமசாமி,
- பிரமிள்,
- வெங்கட் சாமிநாதன்,
- வேதசகாய குமார்,
- ராஜமார்த்தாண்டன்
என வரும் ஓர் அழகியல் விமர்சன மரபைச் சேர்ந்தவன். அதை முன்வைப்பவன். என்னுடன் இணைபவர்கள் அடங்கியதே விஷ்ணுபுரம் அமைப்பு. நாங்கள் முன்வைக்கும் மதிப்பீடு அழகியல் சார்ந்தது. அதற்கான களம் இந்த விழா. அதை எதிர்க்கும் மாற்றுத்தரப்புகள் நாலைந்து இங்கே ஏற்கனவே உள்ளன. அவையும் தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன.
எங்கள் விருந்தினர்களின் பட்டியலில் மூத்த எழுத்தாளர்களுடன் தொடக்கநிலையாளர்களும் எப்போதுமிருப்பார்கள். தொடக்கநிலையாளர்களுக்குக் கவனம்பெற்றுத்தருவதுதான் நோக்கம். பா.ராகவனுக்கு நாங்கள் கவனம் பெற்றுத்தர வேண்டியதில்லை. ஆனால் பா.ராகவன் தன் அரங்கின் வழியாக அர்வின் குமாருக்கு கவனம் பெற்றுத்தந்தே ஆகவேண்டும். அதுதான் இலக்கிய மரபு. அர்வின்குமார் இன்று மலேசியாவில் புதியவிசையுடன் எழுத வந்திருக்கும் படைப்பாளி.
ஜெ