நிகழ்வுகள், சந்திப்புகள்- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

கடந்த செப்டம்பர், அக்டோபர் இருமாதங்களிலும் இந்தியாவிலும் கனடாவிலும் தொடர்ந்து உங்களை சந்திக்கும் வாய்ப்பு பெற்றதை பெருவரமாக நினைக்கிறேன். இம்முறை இந்தியாவிற்கு விடுமுறைக்கு வந்த போது கூடுதலாக சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்ததே அங்கு நீங்கள் நடத்தும் வகுப்புகளில் கலந்துகொள்ள  வேண்டுமென்ற எண்ணத்துடன் தான். ஆகஸ்ட் மாதம் அங்கு வந்தபின் உங்கள் தளத்தில் அதற்கான அறிவிப்புகளுக்காக காத்திருந்தேன். சத் தர்ஷன் இடத்தில்  ‘விரிதழல்’ நிகழ்வுக்கான அறிவிப்பு முதலில் தெரிய வந்தது.உடனே அதற்கு பதிவு செய்தேன் . அதற்கு அடுத்த சில தினங்களிலியே வெள்ளிமலையில் நீங்கள் நடத்தும் தத்துவ வகுப்பு முதல்நிலைக்குமான அறிவிப்பும் வந்தது.அதைப் பார்த்தவுடன் மிகுந்த உற்சாகமாகவும் மகிழ்வாகவும் இருந்தது . ஒரு கணம் கூட தாமதிக்காமல் அதற்கும் பதிவு செய்து விட்டேன் .வெள்ளிமலையில் நீங்கள் நடத்தும் வகுப்பில் கலந்துகொள்ள வேண்டுமென்பது ஒரு பெரும்கனவு  எனக்கு. அதுவும் குறிப்பாக உங்கள்  தத்துவ வகுப்பில்.

செப்டம்பர் 8 ,9 ,10 இல் வெள்ளிமலையில் தத்துவ வகுப்பு நிகழ்ந்தது.செப்டம்பர் 7 ஆம் தேதி காலையில் கிளம்பி அன்று  மாலைக்குள் வெள்ளிமலை வந்து சேர்ந்துவிட முடிந்தது. நித்யவனத்தை நெருங்க நெருங்க ஒரு  பரவசம் உள்ளுக்குள் தொற்றிக் கொண்டது. வெள்ளிமலையை சென்றடையும் வழிப்பாதையெங்கும் பனி மூடிய மலைகள்,முகில்கள் கூடவே அன்று சாரல் மழை வேறு.ஒரு ரம்மியமான இயற்கைசூழ்ந்த சாலைவழிப்  பயணம். நித்யவனத்தை நெருங்கியவுடன் முதலில் கண்ணில்பட்டது புத்தர் சிலைதான். அழகிய அந்தியில் பறவைகளின் கீச்சிடும் குரல்களுக்கு மத்தியில்  முன்னிருந்த  கல்விளக்கில் சாரல் மழை சொட்டித் தெறிக்க அமைதியில் லயித்திருந்த புத்தர் சிலையை பார்த்த போது அந்த இடமும் சூழலும் மிகவும் அணுக்கமாக ஆனதை உணர்ந்தேன்.வகுப்பிற்கு  முந்தைய நாள் என்பதால் ஆட்கள் அதிகம் இல்லை .மலைகள் சூழ,மென்மழையில் துவட்டி நின்ற மரங்களை, அந்த மழைமாலையின் அமைதியின் அழகை பூரணமாக அனுபவிக்க முடிந்தது.

மறுநாள் காலை,வகுப்பின் முதல் நாளன்று உணவருந்தும் இடத்திற்கு அருகே உங்களை சந்தித்தேன்.அதற்கு முன் சென்ற ஆண்டு தூரன் விருது விழாவில் தான் உங்களை முதன்முறையாகப் பார்த்தது. எந்தக் கால இடைவெளியில் ஆசிரியரை சந்தித்தாலும் முதன்முறை பார்க்கும் அதே  உற்சாகமும்   ஆனந்தமும் தான் உங்களை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இருக்கிறதென்று உணர்ந்தேன். தத்துவ கல்வியின் முதல் நாளை காலை வகுப்புகள் தொடங்கிய போதே  தத்துவம் சார்ந்து இது எத்தகைய அரிய கற்றலுக்கான ஒரு பெரும் திறப்பு என்று தெரிந்தது. எது பிரபஞ்சமாகவும், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்திலும்  வியாபித்து இருக்கிறதோ அத்தகைய ஒரு பேராற்றலை நுண்ணியறிந்து  கொள்ளும் ஒரு தேடல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.அது தான்  தத்துவ வகுப்பில் கலந்து கொள்ளும் ஆர்வத்தை உந்தியது. மூன்று நாட்கள் தத்துவக் கல்வியின் முதல்நிலை வகுப்பு முடிந்த போது   உள்ளிருந்த நிறைய கேள்விகளுக்கான விடையும், ஒரு தெளிவும் கிடைத்தது.

தத்துவ வகுப்பின் இரண்டாம் நாள் மாலை பெய்த மழையும், அந்த பெருமழையின் இடியோசைக்கு மத்தியில்  வேதங்கள் பற்றி நீங்கள் எடுத்த வகுப்பும் ஓர்உச்ச ஆசீர்வாதம் எங்கள் அனைவருக்கும். “மழையென்றால் அது இலையடர்ந்து மரங்கள் மேல் பொழிய வேண்டும். மரங்கள் தலைசுற்றி அலற, திசைகள் கிழிந்து பறக்க,மண் அதிரும் மழை’ என்று சங்கச்சித்திரங்கள் நூலில் நீங்கள் எழுதிய வரிகளை நினைப்படுத்திய மழை. மழைப்பாடலின் மழைவேதம் பற்றி நீங்கள் விவரித்த போது அங்கு தவளை சத்தமும் மழைவேதத்துடன் சேர்ந்து  ஒலித்துக் கொண்டிருந்தது .இரண்டு மணி நேரம் தொடர்ந்து நீங்கள் வகுப்பெடுத்தீர்கள். சிருஷ்டி கீதம் வாசித்தீர்கள். தத்துவ வகுப்பின் சாரத்தோடு,அந்த பெருமழையோடு உங்கள் குரலில் அதை அன்று வாசித்துக் கேட்டது  ஒரு pure  divineness உணர்வு.மீண்டுமொரு முறை  சிருஷ்டி கீதம் நீங்கள் வாசித்து கேட்க வேண்டும் போல் இருந்தது.வகுப்பு முடியும் நேரத்தில் சிருஷ்டி கீதத்தோடு இவ்வகுப்பை நிறைவு செய்வோம் என்று நீங்களே மீண்டுமொருமுறை வாசித்தீர்கள்.கண்களை மூடி நீங்கள் வாசிப்பதைக் கேட்டேன். கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தது. ’அதை யார் உண்டுபண்ணினார்கள்? அல்லது உண்டுபண்ணவில்லை? ஆகாய வடிவான அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது’ என்று நீங்கள் முடித்த போது, ஒரு பெரும் பரவச நிலை உள்ளுக்குள் இருந்தது. அந்த நாள் வகுப்பு எத்தகைய ஓர்  வரம் என்று அதை  அமைத்துக் கொடுத்த இயற்கையின் பெரும்கருணையை நன்றியுடன் நினைத்துக் கொண்டேன். அந்த வகுப்பு முடிந்து எல்லோரையும் பார்த்த போது,அங்கிருந்த யாவருமே  அப்படியான ஒரு உணர்வுநிலையில்  தான் இருந்தோம்  என்பது புரிந்தது. How soulful session என்று எல்லோரும் பேசிக் கொண்டோம்.

மூன்று நாட்கள் முழுவதுமாக நித்யவனத்தின் சூழலில் திளைத்திருக்க முடிந்தது. ‘ஒரு புதிய நிலம் இல்லாமல் புதிய கல்வி நிகழ முடியாது’ என்று நீங்கள் சொல்லும் வார்த்தைகள் எத்தனை உண்மையானது என்பது புரிந்தது. மலைக்கு கீழே இறங்குகையில் தாமரைக்கரையையொட்டி இருந்த குளத்தில் சிறுவர்கள் சேற்றுநீரில் குதித்து  குதூகலமாய் அதுவொன்றே உலகமாய் லயித்து அக்குளத்தில்  விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தபோது வெள்ளிமலையில் கிடைத்ததும் இப்படியானதொரு பூரணமான அனுபவம் தான்  என்று தோன்றியது. டவர் இல்லாமல், வெளி உலகத்தோடு தொடர்பில்லாமல் புதிய நிலத்தின், புதிய கல்வியின்,  புதிய மனிதர்களுடனான அனுபவத்தில் பூரணமாக ஒன்றியிருக்க  முடிந்த மூன்று நாட்கள்.

வீடு திரும்பிய  போதும், வெள்ளிமலை இடத்தின் சூழலும், வகுப்பின் நினைவுகளும் சிறிய ஏக்கத்தோடு உள்ளுக்குள் ஓடிக்கொண்டுதானிருந்தது. அடுத்த வாரம் சத் தர்ஷன் இடத்தில் உங்கள் வகுப்பொன்றில் மீண்டும் கலந்து கொள்ள போகிறோம் என்ற எண்ணம் எழும்பிய போது இருந்த சிறு ஏக்கமும் உற்சாகமாக மாறியது.

மறுவாரம் செப்டம்பர் 16, 17 இல் ஆனைக்கட்டி சட் தர்ஷன் இடத்தில் ‘விரிதழல்’ நிகழ்வு நடந்தது. வாசித்த புத்தகத்தை தொகுத்து ஒரு ஏழு நிமிடத்தில் செறிவான மதிப்புரை எப்படி வழங்குவது என்று பயிற்சி அளித்தீர்கள். முதல் ஒரு நிமிடத்தில் அந்த புத்தகத்தை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை சுவராஸ்யமாக எப்படி கொடுப்பது என்றும், அடுத்த மூன்று நிமிடங்கள் அப்படைப்பின்  கதை சுருக்கத்தை (synopsis ) எப்படி சொல்ல வேண்டுமென்றும், கடைசி மூன்று நிமிடத்தில் அப்படைப்பின் வாயிலாக நாம் அடைந்த சிந்தனையையும், அப்படைப்பு குறித்து நமது சொந்தக் கருத்துக்களை எப்படி வெளிப்படுத்துவது என்பதற்கான பயிற்சிப்பட்டறையாகவும்  அது இருந்தது. அது கிட்டத்தட்ட மேடையுரை பயிற்சி போல் பேசுவதற்கான பயிற்சியாகவும், அதே படைப்பை பற்றி எழுதுவதென்றாலும் ஒரு மதிப்புரை எவ்வாறு இருக்க வேண்டுமென்றும், ஒரு ரசனைக்குறிப்பு (வாசிப்பனுபவம்) எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் கற்றுத் தந்தீர்கள். அங்கு கலந்து கொண்டு அனைவருமே கிட்டத்தட்ட 50  பேருக்கும் மேல் நாங்கள் வாசித்து வந்த புத்தகத்தை பற்றி ஏழு நிமிட உரையாற்றினோம். ஒவ்வொரு உரையையும் கூர்மையாக கவனித்து அதில் உள்ள பிழைகளை திருத்தி, இன்னும் செறிவாக அதை எப்படி அமைக்க முடியும் என்று ஒவ்வொருவருக்கும் அவரவர்  உரையின் சரி தவறுகளை சுட்டிக்காட்டி பின்னூட்டம் அளித்தீர்கள். அன்றைக்கு அத்தனை புதிய புத்தக அறிமுகங்களும், ஒவ்வொரு படைப்பையும் வாசிப்பிற்கு பிறகு அதை சிந்தனையாக எப்படி விரித்துக் கொள்ளவேண்டுமென்று ஒரு பெரும் கற்றலாக அமைந்தது அந்நிகழ்வு.

அவ்வகுப்பின் முதல்நாள் மாலை இருளும் வேளையில் செல்பேசியோடு மற்ற எல்லா வெளிச்சத்தையும் அணைத்துவிட்டு புறவுலக ஒலியேதுமின்றி மின்மினிகளையம், அதன் ஒளியையும் மட்டும் கவனிக்கக் கிடைத்த  அந்த ஒரு மணிநேரம் ஒரு தியானம் போல் இருந்தது. நேரம் செல்ல செல்ல உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த எண்ண இரைச்சல்களெல்லாம்  கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கி முழுதும் அத்தருணத்தில் இருக்க முடிந்தது. அது முடிந்து மீண்டும்  இரவு வகுப்புகள் தொடங்கும் முன் செயல்கள் வழியாக மட்டுமே  காலத்தின் நீளத்தை சலிப்பின்றி கடக்கவும், செயல்களே நிறைவை கொடுக்கும் என்பது பற்றி ஐந்து நிமிட உரையொன்று ஆற்றினீர்கள். ஆசிரியரின் சொற்கள்  ஒவ்வொன்றும் விதைபோல் என் உள்ளுக்குள்   பதிந்து கொண்டிருந்தது.

மறுநாள் எல்லா உரைகளும் அதற்கான பின்னூட்டங்களும் முடிந்த பின்னர் பின்மதியத்தில் வாசிப்பு, இலக்கியம்  சார்ந்து பொதுவாக இருக்கும் ஐயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வதற்கான உரையாடல் வகுப்பாக அமைத்திருந்தது. வாசிப்பென்பது எப்படி ஆளுமை தொடர்புடையதாக இருக்கிறது, அது ஒருவொருக்கொருவர் எப்படி வேறுபடுகிறது, எது கூர்மையான வாசிப்பு, அதை எப்படி மேம்படுத்திக் கொள்ள முடியும், ஒவ்வொரு வாசிப்பிற்கு பின்னரும் அதை எப்படி  சிந்தனையாகத் தொகுத்துக் கொள்வது, வாசித்தபின் அதைப்பற்றி முழுசொற்றடர்களாகவும், வாசிப்பனுபவங்களாகவும் எழுதுவது எத்தனை முக்கியமானது என்று எங்களுக்கு எடுத்துரைத்தீர்கள். எந்த ஒரு நல்ல இலக்கிய படைப்பும் நேரடியான ஒரு விஷயத்தை சொல்வதற்காக எழுதப்படுவது அல்ல எனவும் அதன் இடைவெளிகளை வாசிப்பு மூலமாக வாசகன் கண்டடைந்து  திறக்க வேண்டுமென்றும்  விளக்கினீர்கள். வாசிப்பு சார்ந்து உள்ளுக்குள் இருந்த நிறைய ஐயங்களுக்கு அவ்வகுப்பின் முடிவில் தெளிவு கிடைத்தது. நான் தங்கள் வகுப்புகளில் கலந்துகொண்டது இதுவே  முதன்முறை. தத்துவ வகுப்பு, விரிதழல் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்புகளிலும் ஓர் ஆசிரியராக நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்தது எனக்கு வெண்முரசின் வரிகளை நினைவுபடுத்தியது. ‘கற்பிக்கையில் முற்றிலும் கல்வியாக மட்டுமே மாறிவிடும் யோகத்தை அவர் அறிந்திருந்தார். விறகு தழலாக மாறி நிற்பது போல் அவரது ஞானம் மட்டுமே முன் நின்றது.அதில் விறகின் வடிவோ வாசனையோ இருக்கவில்லை.’ என்று துரோணரைப் பற்றி வரும் வண்ணக்கடலின் வரிகள்.விடுமுறைக்காக இந்தியா வந்த சமயத்தில் அடுத்தடுத்த இரு வாரங்கள் தொடர்ந்து உங்கள்  வகுப்புகளில் கலந்து கொள்ளும் படி அமைந்த என் நல்லூழை பெரும் நன்றியும் நினைத்துக் கொண்டேன்.  விரிதழல் வகுப்பு முடிந்த பின் இங்கு டொரோண்டோ வரும்போது உங்களை சந்திக்க வருகிறேன் சார் என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டேன். ‘அங்க கோட்டு சூட்டெல்லாம் போட்டு வேற மாறி இருப்பேன்’ என்று புன்னகைத்துக் கொண்டே சொன்னீர்கள்.

இங்கு டொரோண்டோவில் தாங்கள் வருகை தரும் அக்டோபர் 21, 22 தேதிகளுக்காகக் காத்திருந்தேன். மென்குளிர் ஆரம்பித்து மரங்கள் எல்லாம் வண்ண வண்ண இலைகளோடு  இலையுதிர் காலத்திற்காக தயாராக இருந்த நேரம். Fall colour  season  மனதிற்கு மிகவும் அணுக்கமான ஒன்று. சங்கச்சித்திரங்களில் நீங்கள் எழுதியிருந்த வரிகள் வழியாய் பார்த்தது தான் இங்கு டொரோண்டோ மற்றும் algonquin  இன் முதல் இலையுதிர்காலம் .இவ்வருடம் உங்கள் வருகையால் இந்தாண்டு  இலையுதிர் காலம் இன்னும் கூடுதல் விஷேசமாகிப்  போனது எனக்கு. ‘பனி உருகுவதில்லை’, ‘பெருந்தேன் நட்பு’ வாசித்து முடித்த கையோடு அருண்மொழிநங்கை அவர்களை முதன்முறையாக இங்கு  சந்திக்கப் போகிறோம் என்று நினைக்கவே இன்னும் கூடுதல் உற்சாகமாக இருந்தது. அக்டோபர் 21 சனிக்கிழமை மாலை நிகழ்வு நடக்கும் அரங்கிற்கு சற்று முன்னராகவே வந்துவிட்டேன்.தூரத்தில் இருந்து கண்ணாடி கதவின் வழியாக ஒரே நீல நிற உடைகளில் நீங்களும், அருண்மொழிநங்கை அவர்களும் நுழைவதைக் காணவே மகிழ்வாய் இருந்தது. உரை தொடங்கும் நேரத்தில் நீங்கள் முன்னர் சொன்னது போலவே கோட் சூட்டிற்கு மாறியிருந்தீர்கள். ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் உரையாற்றினீர்கள். youtube  காணொளிகளைக் காட்டிலும் நேரில் கேட்கும் உரைகள் இன்னும் ஆழமாக மனதில் தங்கிவிடுகிறது.அன்று உங்களோடு அ.முத்துலிங்கம் சார் ,காலம் செல்வம் சார் என்று உங்கள் மூவரையும்   ஒருசேர  பார்க்கவே மிகுந்த மகிழ்ச்சியாக  இருந்தது. அந்த நாள்  முழுதுமே விழா மனநிலைக்கான கொண்டாட்டம் தான்.

மறுநாள் ‘stories of  the  true’ பற்றிய ஆங்கில கலந்துரையாடல் நிகழ்வு.அறம் புத்தகம் பற்றி சமீப மாதங்களில் ஜூம் வழியாகவும் தங்களுடன் நிறைய உரையாடல்கள் நிகழ்ந்தன. அந்த ஆங்கில கலந்துரையாடல்  நிகழ்ச்சி  இன்னும் அணுக்கமாக இருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளர் அறம் புத்தகம் பற்றி கேட்ட கேள்விகளுக்கும், வாசகர்களின் கேள்விகளுக்கும் அத்தனை ஆத்மார்த்தமாகவும் உண்மையாகவும் ஆங்கிலத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தீர்கள். அன்று sense of  justice, இயற்கைக்கும் உங்களுக்குமான தொடர்பு, இயற்கை காட்சிகளில் நீங்கள் உணர்ந்த ஆன்மீக தரிசனங்கள் பற்றி பேசிய போது உங்கள் எழுத்துக்களோடு பிணைந்த அனுபவங்களையும் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.  ‘Every good writing is very  much  bigger  than  the  writer’ என்று அறம் கதைகளில் உள்ள idealism  பற்றி நீங்கள் பேசியது, அறம் சார்ந்த உங்கள் எழுத்துக்களின் தாக்கத்தால் உருவாகி   இயங்கிக் கொண்டிருக்கும் social workers ஐய் பற்றி பேசும் போது ‘I  am  giving  hope  to  them and I am also  getting  hope  from them ‘ என்ற உங்கள் பதில்கள் ஒவ்வொன்றிலும் இருந்த நேர்மை அந்நிகழ்வை மேலும் அணுக்கமாகியது . ஒரு மொழி சார்ந்த எழுத்தாளனாக இல்லாமல், உலகை நேசிக்கும், அறம் வழி நடக்கும், ஒரு மானுடனாக பதில் சொன்னீர்கள் என்று ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் உங்கள் உரையைப் பற்றி சொன்ன வார்த்தைகள் அத்தனை  உண்மையானது. டொரோண்டோவில் உங்களை சந்தித்ததும், இங்கு நீங்கள் வீட்டுக்கு வரும்படி அமைந்ததையெல்லாம் பெரும் ஆசீர்வாதமாக உணர்ந்தேன். மிக்க நன்றி ஜெ.

நீங்கள் எப்போதும் சொல்வீர்கள் ஒரு படைப்பை முடித்த கணமே அதிலிருந்து முற்றிலுமாக  விடுபட்டு  உடனே அடுத்த படைப்பிற்குள் உங்களால் பூரணமாக உட்செல்ல முடியும் என்று. வாழ்விலும் கூட நீங்கள் அப்படித் தானே. தத்துவ வகுப்பு முடிந்த கணமே அடுத்து மலைக்கு கீழே ஒரு பழங்குடி மக்களின்  திறப்பு விழா  நிகழ்வுக்கு தயாரானீர்கள்.இங்கு டொரோண்டோவிலும் அடுத்தடுத்த சந்திப்புகளுக்கும் நிகழ்வுகளுக்கும் உங்களை திறந்து வைத்திருந்தீர்கள்.எங்கும் நீங்கள் அப்படித்தான். நேற்று, நாளையன்றி அக்கணத்தில் மட்டுமே  முழுமையாய்  வாழும் பெரும்யோகத்தை  பயின்று அதற்கு முன்னுதாரணமாகவும் இருக்கிறீர்கள். ஆசிரியரின் அருகாமை என்பது எத்தனை உன்னதம் , அது எத்தனை பெரிய விஷயங்களை  கற்றுக் கொடுப்பதாக இருக்கிறது. வகுப்புகளிலும்,நிகழ்வுகளிலும் தொடர்ந்து உங்களை சந்தித்தது  பெரும் நிறைவாக இருந்தது. இனி தீவிரமாக வாசிக்கவும், செயலாற்றவும் அது ஊக்கத்தை அளித்திருக்கிறது. ஆம்! குரு மட்டுமே நிரப்பும் அகவெற்றிடம் எல்லோருக்குள்ளும் உண்டு.

பணிவன்புடன் ,
இந்துமதி.

அன்புள்ள இந்துமதி,

மானுட மூளை கற்றுக்கொண்டே இருப்பதற்காக அமைப்பு கொண்டது. கற்றலே அதன் இன்பம். அவ்வின்பம் அமையாதபோது அது உணரும் வெற்றிடத்தை நுகர்வால், வம்புகளால், அன்றாடத்தால் நிரப்பவே இயலாது. அதேபோல ஒட்டுமொத்த மானுட இருப்பும் தன் விலங்கியல்பில் இருந்து மேலெழுந்து இன்னொன்றை தொட்டு உணரும்பொருட்டே இங்கு நிகழ்கிறது. அதை ஆன்மிகம் என நான் வரையறுப்பேன். அது ஒன்றே மகிழ்வுக்கான வழி. என்றும் அதனுடன் இருத்தல். அதை தொடர்ச்சியாக முன்வைக்கும் ஒரு பெருமரபு இங்குண்டு. அதன் ஒரு சிறுதொடர்ச்சியாக என்னை நான் வைத்துக்கொள்கிறேன்.

உங்களை சந்தித்ததில், கனடாவில் உங்கள் இல்லத்துக்கு வந்ததில் பெருமகிழ்ச்சி. அந்நாளே உற்சாகமானதாக இருந்தது. மீண்டும் சந்திப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைபேரியாற்றுக் குமிழிகள்
அடுத்த கட்டுரைகுடிமைப்பண்பு- கடிதம்