மூவினிமை, கடிதம்

மூவினிமை (புதிய சிறுகதை)

அன்புள்ள ஜெ,

‘மூவினிமை’ வாசித்தேன். திரிமதுரத்தை முழுமையாகச் சுவைக்கப் பல ஆண்டுகள் தவம் செய்யவேண்டும் போல. போத்தி ஒவ்வொரு நாளும் தவறாமல் திரிமதுரம் செய்து கிருஷ்ணனுக்கு நைவேத்தியம் செய்தபின் வலிய கேசவனுக்குத் தருகிறார். தான் ஒருநாளும் சுவைத்ததில்லை. பலமுறை தனக்குத் திரிமதுரம் தருமாறு வேண்டி யானையின் காலடியில் கிடக்கிறார். பல நூற்றாண்டுகளுக்குமுன் பாட்டி ஒருத்தி யானைமுகத்தானிடம் திரிமதுரம் தருமாறு கேட்டாள். அவளும் நான்கு மதுரங்களை நாளும் தந்து இப்படித்தானே தவம் செய்திருக்கவேண்டும்?

போத்தி விரும்பும் திரிமதுரம் எது? அவர் மண்டைக்குள் “புளித்துக் கெட்டு நாறுவது” என்ன? அது அறியாத துக்கம். அவரோடு சேர்ந்து சிதையில் எரியவேண்டிய துக்கம். ஒருவேளை பிடித்த‌ தோழியின் பிரிவினால் உருவானதாக இருக்கலாம். மனதில் கலை இருந்தால் அந்த துக்கமே மதுரமாக மாறும். ஆயிரம் ஜென்மம் எடுத்தபிறகும் மிச்சமிருக்கும் மதுரம். அந்த மதுரம் போத்திக்கு உஷா பரிணயம் கதகளி காணும் நேரத்தில் வந்தமைகிறது.

ஆசாரி அதற்குப்பின் தான் திரிமதுரம் சுவைத்ததேயில்லை என்கிறார். ஆனால் பொன்வேலைப்பாடு செய்வதுபோல் பலாமரத்தடியைச் சீவுகிறார். அவர் இந்தக் கதையை அசைபோடும் போதெல்லாம் அவர் உள்ளமே பொன்னாக மின்னுகிறது. அவருக்கு மட்டுமல்ல அதைக் கேட்ட ராமாச்சாருக்கும் உங்களுக்கும் கூடத்தான். உங்கள் கதையைப் படிக்கும் எங்களுக்கும் கூடத்தான். இனிமை நிறைந்த கதை.

அன்புடன்,
த.திருமூலநாதன்.

*

அன்புள்ள ஜெ

கரடி நாயரும், ஆனயும் வருவதால் இக்கதை முன்னர் எழுதிய 100 கதைகளின் தொடர்ச்சியே. தங்களின் மனம் அள்ள அள்ளக்  குறையாத அட்சய பாத்திரம். இத் தீபாவளி நாளில் சாப்பிட்ட இனிப்புகளில் திருமதுரம் தனி சுவை. நன்றி

அன்புடன் சேது வேலுமணி,

சென்னை.

முந்தைய கட்டுரைஎன் கண்களின் மழை
அடுத்த கட்டுரைதி.வை.சதாசிவப் பண்டாரத்தார்