வெளியேற்றம் – சதீஷ்குமார்

வெளியேற்றம் தமிழ் விக்கி

நம் வாழ்க்கையில காரணமே புலப்படாத விஷயங்கள் எவ்வளவு நடக்குதுன்னு எப்பவாவது யோசிச்சு பார்த்திருக்கிறோமா? எந்த காரண காரியத்திற்குள்ளும் அடங்காத, தற்செயல் என்று நம்மால் சுட்டப்படுகின்ற பல தற்செயல் நிகழ்வுகள் சேர்ந்தது தான் நம் உலக வாழ்க்கை அல்லவா? தொடர்ந்து தன் வாழ்வில் காரணத்திற்க்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளே நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை தற்செயல்கள் என்று எப்படி ஒரேயடியாக அடித்து சொல்லிட முடியும். ஒருவேளை அவற்றுக்கே உரித்தான வேறு ஒரு தர்க்கத்தின்படிகூட அவைகள் நடக்கலாம் என்று தோன்றதானே செய்யும். இல்லை அப்படி ஒரு தர்க்கம் அதன் பின்னால் இருக்க வாய்ப்பே இருக்காது என்று சொல்வதற்கு நமக்கு என்ன அறிவு தகுதி இருக்கிறது.

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வெளியேற்றம் நாவலில் இப்படி இவ்வுலக காரண காரியத்துக்குள் அடங்காத தற்செயல்களால் ஆன பல மாந்தர்களின் கதைகளை சுவாரசியமாக சொல்லி, அவற்றை தர்க்கமுறையிலும் அதர்க்கமுறையிலும் உஷாவி, அவர் சுட்டும் மாற்று மெய்மையை நோக்கி வாசகர்களையும் கொண்டு செல்கிறார்.

இந்நாவல் முழுவதுமே அமானுஷ்யங்கள் நிரம்பிய கதைகளால் ஆனது. கதை சுருக்கம் என்று பார்த்தால் கதைக்கு மையமாக குரு வேதமூர்த்தி அமைகிறார். அவரை இயக்கும் ஆதார விசையாக அவர் குருவின் வாக்கு அமைகிறது.

“1. வெளி உலகை எல்லாம் அலைந்து திரிந்து தேடும் வாழ்க்கை நல்லது தான் என்றாலும் வெளியே இருக்க கூடிய அதே பிரபஞ்சம் தான் நம் உள்ளேயும் உள்ளது, ஒரு வேலை ஒரே இடத்தில் அமர்ந்து உள்முகமாக தேடித் திரிந்தால் நாம் தேடுவது கிடைத்திருக்குமோ என்னமோ. என்னை போன்று வெளியே அதிகம் அலைந்து திரிந்து காலத்தை வீணாக்கி விடாதே.

2. என் பயணத்தில் நான் கண்டடைந்த அனுபவங்கள் அனைத்துமே எனக்குரியவை மட்டும் தான் மற்றவர்களுக்கு உதவாது, இது தடம் மிஞ்சாத ஒரு வழிப்பாதை. இந்த அனுபவத்தை பகிரத் தான் முடியாதே ஒழிய, அந்த அனுபவமே இல்லை என்று ஆகிவிடாது அல்லவா?. உனக்கென்று ஒரு சிஷ்ய மரபை உருவாக்கு. மெய்யனுபவத்தை கற்பிக்க முடியாது என்றாலும் அப்படி ஒரு அனுபவம் உள்ளது என்ற சிந்தையை அவர்கள் மூலம் தொடர்வதை உறுதி செய்து கொள்.

3. மரணத்தை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் வரவழைத்துக் கொள்ளும் கலை ஒன்று உள்ளது அதை தேடி கற்றுக் கொள். அதன்மூலம் இறந்தவர்களின் உலகில் பிரஞ்ஞை தவறி நுழையும் பிறர்மாதிரி அல்லாமல் முழு பிரஞ்ஞையுடன் உன்னால் நுழைந்து பார்க்க முடியும்”

என்ற குருவின் வாக்கியத்தை அவர் மரணத் தருவாயில் இருக்கும் பொழுது பெற்றுக்கொண்டு அடுத்த ஐம்பது வருடத்தில் தன் குரு சிஷ்ய மரபை உருவாக்குகிறார் வேதமூர்த்தி. அதன் பின் காசிக்குச் சென்று சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் பல பேர் முன்னிலையில் அவரே விரும்பி சமாதி அடைகிறார் (இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேறுகிறார் அல்லது வேறு உலகத்திற்குள் பிரஞ்ஞை பூர்வமாக நுழைகிறார்) . அவருடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்த பயணத்தில் ஒரு சிறு கிளையை எடுத்துக்கொண்டு அதில் அவரோடு உறவாட வாய்க்கப்பட்ட மற்றவர்களின் வெளியேற்ற கதைகளையும் சேர்த்து பேசுகிறது நாவல்.

மாயவெளி அமானுஷ்யம் போன்றவைகள் பேசப்பட்டாலே அது பிற்போக்குத்தனம் என்று எண்ணப்பட்ட சூழலில் இந்த நாவலை யுவன் எழுதியிருப்பதாக பின்னுரையில் இருந்து அறிய முடிகிறது. மேல்மன சிந்தனையை மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய தர்க்க மொழியை கொண்டு மாற்று மெய்மையை விளக்க முடியாது, அதற்கு ஆழ்மனத்தை வெளிப்படுத்தும் கலை தான் ஓரளவு சரியான வழி என்று யுவன் முன்வைக்கிறார். நாவலை முழுதாக படித்திருக்கும் வாசகர்களுக்கும் யுவன் சொல்வது தான் சரி என்று படும் என்று நினைக்கிறேன்.

ஒரு சின்ன வாழ்க்கை வட்டத்திற்குள் நின்று பார்த்தால் இவை யாவும் மாயவெளிதான், கொஞ்சம் முயன்று வெளிவந்து பார்த்தால்தான் தெரியும் இவைகளும் ஒரு வாழ்வெளிதான் என்று. என்ன கொஞ்சம் முயற்சி செய்து நகர்ந்துவந்து பார்க்க வேண்டும் அவ்வளவுதான், அதற்குரிய மனம் வாய்க்க பெறுவதுதான் முக்கியம் எங்கிறது நாவல். மேலும் நமக்கு புரியும் ஒன்றை தர்க்க முறைப்படி என்றும், புரியாத ஒன்றை மாயவெளி என்றும் சொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நம் தகுதியை நோக்கி கேள்வி எழுப்புகிறது.

ஜய்ராம், வைத்தியர், ஹரிஹர சுப்பிரமணியன், கோவர்த்தனம், மன்னாதி, பால்பாண்டி, வைரவன், குற்றாலிங்கம், சிவராமன், ராமலிங்கம், தங்கம்-கணபதி, சுத்தானந்தம் என்ற ஒவ்வொருவரின் கதையாக மறுபடியும் படித்துப் பார்க்கிறேன். ஒவ்வொன்றும் கணம்கூடியவை தனித்து ஆகச்சிறந்த கதைகளாக நிற்பவை. ஒவ்வொருவருக்கும் வேறொருவருக்கு இல்லாத காரணங்கள். அத்தனையுமே பிறப்பின் மூலம் பந்தப்பட்டு போன இவ்வுலக வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதற்கான கச்சிதமான காரணங்கள் கொண்டவை. அவர்கள் தழும்பி வெளியேறும் கணத்தில் தான் குரு வருகிறார் மெல்லிய அமானுஷ்ய சாயலுடன். அதன்பின் நடப்பதெல்லாம் இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டவை அல்லது நமக்கு தெரியாத, இன்னும் அறிவியல் குழந்தை தீண்டிப் பார்த்திடாத வேறொரு தர்க்கம் மூலம் இயங்குபவை.

வெளியேற்றம் என்ற வார்த்தையே வசீகரிக்கிறது. அப்படியே வெளியேறி நாடோடியாக கொஞ்ச காலமாவது அலைந்து திரிய வேண்டும் என்ற நிராசை எல்லோருக்கும் இருக்கத்தானே செய்யும். அப்படி வெளியேறியவர்களை பார்க்கும்போது கொஞ்ச நேரமேனும் மானசிகமாக அவர்களின் உலகில் வாழ்ந்து பார்த்து தன்னை ஆசுவாசப்படுத்தக் கொண்டதாக யுவன் கூறுகிறார். அவருடைய வெற்றி எது என்றால் வாசகர்களையும் அப்படி வாழ்ந்து பார்க்க வைத்தது தான். யுவனின் “நடந்து கடக்க முடியாத அளவுக்கு தொலைவு ஒன்றும் அல்ல இவ்வுலகம் அதை சும்மா நடந்து பார்த்தாலே தெரியும்” என்ற வரியாக இருக்கட்டும், “சும்மா நடந்து அப்படியே போங்க மனுசமக்கள் புழங்குகிற இடம்தான” என்ற வரியாகட்டும் பூங்குன்றனாரின் வரிக்கு நிகர்.

யுவன் சந்திரசேகரின் பத்து நாவல்களிலும் எனக்கு மிகவும் பிடித்தது “வெளியேற்றம்” தான். நண்பர்கள் யார் என்னிடம் கேட்டாலும் அவர்களுக்கு யுவன் நாவலில் முதலில் பரிந்துரைப்பது வெளியேற்றம் தான். கூடவே ஒருவாட்டி படிச்சிட்டு விட்டுடாதிங்க, கூடவே மறுவாசிப்பும் செய்துவிடுங்கள் என்பேன். வாழ்க்கை முழுதும் உடன் வைத்துகொள்ள தகுதியுள்ள நாவல் யுவனின் வெளியேற்றம்.

சதீஷ்குமார்

முந்தைய கட்டுரைஒரு போர்வையின் கதை – பழனிவேல்ராஜா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்