பெருமதிப்பிற்கும்,பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
யுவனின் கதைகளைப் படிக்கும் போது குழந்தைகள் விளையாடும் Assembly-Disassembly விளையாட்டுப் பொருள்களை கலைத்து ஒரு பையில் போட்டு அவர் நம் கையில் தந்து விடுவது போன்று ஒரு உணர்வு தோன்றும். கலைத்துப் போடப்பட்ட உருவங்களை இணைக்க முழு கவனத்துடனும், முனைப்புடனும் வாசகன் இருந்தே ஆக வேண்டும்.சற்று கவனம் பிசகினாலும் உருவம் மாறிவிடும். முழு உருவம் புலப்பட ஆரம்பித்து,முழுமையடையும் போது கிடைக்கும் வாசிப்பின்பத்திற்கு இணையேது?
ஆனால் வாசிக்கின்ற ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட உருவம் கிடைக்கும் ஆச்சரியத்தை அளித்துக் கொண்டே இருக்கிறார் யுவன்.ஏன் எனக்கு இன்று வாசிக்கும் போது கிடைக்கும் அதே உருவம் மறுவாசிப்பு செய்யும் போது கிடைக்கும் என்பதற்கான சாத்தியக்கூறு எதையும் உறுதி கொடுப்பதில்லை அவர். கிட்டத்தட்ட பகடை உருட்டுவதை போல. ஒவ்வொரு உருட்டுக்கும் ஒவ்வொரு எண் விழும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளை அளித்துக் கொண்டே தொடர்கின்றன அவரது படைப்புகள். ஆம்…அந்தப் பகடையாட்டத்தில் ஒரு வெளிப்பாடு தான் அவரின் பகடையாட்டம் நூல்.
பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான பூர்வ கிரந்தம், அந்த பூர்வகிரந்தத்தை ஆட்சி முறையிலும் வாழ்க்கை முறையிலும் பிடிவாதமாகப் பின்பற்றும் ஸோமிட்ஸியா, அவர்களை ஆளும் ஸோமிட்ஸு, அவர்களைத் தேர்ந்தெடுக்கும்,கட்டுப்படுத்தும் ஈனோங், எல்லைப்பகுதியைக் காக்கும் மேஜர் கிருஷ்,நியூஸ் மேன் பத்திரிக்கை வாசிக்கும் செல்லச்சாமி வாத்தியார்,ஸயரில் பிறந்து,ஆஸ்திரியாவில் வளர்ந்து, உலகமெங்கும் உலகில் உள்ள மலைகளில் ஏறும் ஜூலியஸ் லுமும்பா, முன்னாள் நாஜி ஹான்ஸ் வெய்ஸ்முல்லர், புலித்தாக்குதலில் முகத்தின் ஒரு பகுதி நசுங்கி வாழும் லேக்கி, ஸோமிட்ஸூவாகத் தேர்வு செய்யப்பட்டு அந்த கட்டுப்பாடான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கை வாழத்துடிக்கும் 26 ஆம் ஸோமிட்ஸூ,மலைப்பாதையில் கடை வைத்திருக்கும் ரூப்மதி-பகதூர் சிங், நாட்டை நவீனப்பாதைக்குக் கொண்டு செல்ல விரும்பும் வாங்யே பிரபு,வேலையாட்கள் நிரூபா, வாங் சுக், இல் சுங், ஃபூ தோர்ஜி எனக் கதை மாந்தர்கள் அத்தனை பேரும் இந்த பகடையாட்டத்தின் பகடைக்காய்கள்.
பழங்குடி வாழ்க்கைக்கும்,நவீன வாழ்க்கைக்கும் நடுவில் சிக்கிக்கொண்ட லுமும்பாவுடனும், ஊர்சுற்றியாய்த் திரிந்து அலையும் வெய்ஸ்முல்லருடனும் ஏற்பட்ட பழக்கம் 26 ஆம் ஸோமிட்ஸுவின் விடுதலை வேட்கையை தூண்டிவிடுகிறது.விளைவாகக் கொல்லப்படுகிறான் லுமும்பா.ஸோமிட்ஸுவின் மாறி வரும் மனப்பாங்கும்,திபெத்தின் மீதான சீனாவின் படையெடுப்பும், தலாய்லாமாவின் அடைக்கலமும், ஈனோங்கை ஸோமிட்ஸுவுடன் இந்தியாவுக்குள் அடைக்கலம் நாடி நுழையத் தூண்டுகிறது.இறுதியில் தானாடிய பகடையில் தானே வெட்டுப்பட்டு சாகிறார் ஈனோங்.அவரை கொன்றதுயார்?சோமிட்ஸுவா, வெய்ஸ்முல்லரா, சீனாவா, வாங்யேவா, வேலையாட்களா? அவர்களின் நிலை என்ன? ஸோமிட்ஸூவின் எதிர்காலம் என்னவாயிற்று?என அத்தனை கேள்விகளுக்கும் வாசகனின் கற்பனையையே பதிலாகத் தந்து செல்கிறார் யுவன்.
இமாலயம்,இந்தியா,திபெத்,சீனா எல்லைப் பகுதிகளின் நில விவரணைகள்,ஸோமிட்ஸுகளின் வித்தியாசமான வாழ்க்கை முறை வர்ணனைகள்,1960களின் புவியரசியல் எனப் பரந்து பட்ட ஒரு அனுபவத்தை தருகிறது இந்நூல்…எங்கோ நகர்த்தப்படும் ஒரு காய் எங்கேயோ பிறந்து, வளர்ந்து,வாழும் ஒருவனின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது என்பதை காட்டும் மேஜர் கிருஷ்ஷின் கேள்விகளோடும், அல்லாடும் அவரது ஓய்வுக்கால வாழ்க்கையோடும் நிறைவடைகிறது இந்த நூல்.(நூலை வாசிக்கும் போது சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஒரு மடத்தின் அடுத்த வாரிசை அப்போதைய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்ததும்,மழலை மாறாத அச்சிறுவனை அவனது பெற்றோர் அவர்களிடம் ஒப்படைத்த சடங்குகளும்,அவற்றை அன்றைய பத்திரிகைகள் பிரசுரித்ததும் நினைவுக்கு வந்தது.) நிறைவான வாசிப்பனுபவம்…நன்றி யுவன் சார்…
சி.செந்தில்குமரன், பொள்ளாச்சி.