கட்டிடக்கலை வடிவமைப்புப் பிரிவில் பொறியியல் கல்வி முடித்துவிட்டு, பிற தேசங்களில் தனக்கமைந்த பணிவாய்ப்புகளைத் தவிர்த்து, இந்தியச் சூழலில் கழிவுகள் மேலாண்மை, மாற்றுக் கழிப்பறை வடிவமைப்பு சார்ந்து செயலாற்றுகிறார் விஷ்ணுப்ரியா. ‘மீள்’ எனும் ஆவணப் பயணத்தின் மூலம் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள கழிவுச்சூழல் நிலைகுறித்தும், கழிவுமேலாண்மை மாற்றுத்திட்டங்கள் குறித்தும் ஆவணப்படுத்துகிறார்.
கழிவு மேலாண்மை மற்றும் கழிப்பறை மாற்றுவடிவமைப்பு ஆகிய துறைகளில் மிகுந்த தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்கள் கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் தான். ஆகவே, மீள் சூழலியல் இயக்கத்தின் கல்விச் செயற்திட்டமாக, ‘Eco-san Toilet’ எனப்படும் சூழல்மேம்பாட்டு சுகாதாரக் கழிப்பறைகளை வடிவமைக்கும் தேசிய அளவிலான போட்டியொன்று முன்னெடுக்கப்படுகிறது. ‘நீரில்லாக் கழிப்பறைகள் (Dry Toilet) என்றும் அழைக்கப்படும் இக்கழிப்பறைகளை மக்களின் வாழிடத்திற்கேற்ப சுற்றுச்சூழலோடு இயைந்த முறையில் வடிவமைக்கும் ஆர்வமுள்ளோருக்கான போட்டி இது.
இப்போட்டியின் நடுவர்குழுவாக கட்டிடக்கலைத்துறையின் இந்தியப் பேராசான் நீல்கந்த் சாயா (அகமதாபாத் CEPT பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகள் தலைமைப்பொறுப்பு வகித்தவர்) , கட்டிடக்கலைப் பேராசிரியர் சத்ய பிரகாஷ் வாரணாசி (Eco-san கட்டிடக்கலைஞர், இவரது கட்டுரைகள் ஹிந்து பத்திரிக்கையில் தொடர்ந்து பிரசுரமாகின்றன. பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிகிறார்), தற்சார்புக் கட்டிடக்கலைப் பேராசிரியர் ஜிக்னா தேசாய் (Centre for Heritage conservation கூட்டமைப்பின் தலைமை ஆய்வறிஞர்) ஆகியோர் உள்ளனர்.
மேலும், பேரன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனின் மகளும், எளிய மக்களுக்கான சேவைமருத்துவருமான சத்யா, மற்றும் நலம் பயக்கும் செயற்திட்டங்களுக்குத் துணைநிற்கும் கல்வியாளர் ஜெயபாரதி ஆகிய முன்னோடிகளும் இதில் இணைந்து தங்கள் பங்களிப்பை நல்கவுள்ளனர். இவர்கள் ஐவரே தலைமை தேர்வுக்குழுவாக இருந்து பரிசுக்குரிய வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பார்கள்.
விரைவில் நிகழவிருக்கும் ‘மீள்’ சூழலியல் ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளர்களுக்கான நற்சான்றிதழும் கெளரவிப்பும் முன்னோடி ஆளுமைகளின் கரங்களால் அளிக்கப்படவுள்ளது. மேலும், இப்போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகளிலிருந்து தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு Eco-san Toilet வடிவமைப்பை கட்டுவதற்குத் தேவையான நிதியும், துறைசார்ந்த வழிகாட்டலும் வழங்கப்படும். ஆகவே, நிலத்தின் தன்மைக்கேற்ப மாற்றுக் கழிப்பறை வடிவமைப்பை வடிவமைக்கக் கோருகிறோம்.
போட்டியின் விதிமுறைகளாக, Eco-san toilet கட்டுவதற்கான அவசியமுள்ள ஓர் அரசுப்பள்ளியைத் தேர்வுசெய்ய வேண்டும். கழிப்பறைக் கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கும் பகுதியின் சூழ்நிலையும் இப்போட்டியில் முக்கியக் கவனத்தில் கொள்ளப்படும். காரணம், வடிவமைத்துக் கட்டிடமாகக் கட்டித்தருவதோடு நின்றுவிடாமல், அடுத்த சில ஆண்டுகள் அக்கழிப்பறை தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளதை உறுதிசெய்வதாகவும் இடத்தேர்வு அமையவேண்டும். இதையெல்லாம் உள்ளடக்கித்தான் இப்போட்டி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிகழும் பல கட்டிடக்கலைப் போட்டிகள் வெறும் வடிவமைப்புடன் நின்றுவிடுபவை. கட்டியெழுப்புதல் நிலைக்குக்கூட அவை செல்வதில்லை. ஆனால், இப்போட்டியின் மூலம் கட்டப்படும் கழிப்பறையையானது கிட்டத்தட்ட ஓர் கல்விப்பாடத்திட்டம் போல சுற்றுப்புற பிள்ளைகளுக்கு சூழலியல் பாதுகாப்புணர்வை பயிற்றுவிக்கக் கூடியாதாக அமைதல் நலம். வடிவமைப்பு + கட்டியெழுப்புதல் (Designing + Building ) என்கிற அடிப்படையில் இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படியொரு போட்டி நிகழ்கிறது. ஆகவே, ஓர் முன்னுதாரணப் போட்டியாக இச்செயல் விரிவிடைந்து தேசத்தின் பல மாற்றுத்திட்டங்கள் உருவாகுவதற்கு நிச்சயம் வழிகோலும்.
கட்டிடக்கலையில் மாற்றம் விளைவிக்கும் சமகால மாற்றுச்சிந்தனையாளர்கள் கைகளால்தான் எதிர்காலத்தின் மிகப்பெரும் தீர்வுக்கான வரைபடம் வரையப்படவுள்ளது. இந்தியாவில் கழிவுகளால் மிகவும் பாதிப்படைவது வீதியிலோ சேரியிலோ வசிக்கும் சாமானியர்கள்தான். ஆகவே, அம்மக்களின் வாழ்க்கையும் சூழலையும் உணர்ந்த செயல்மனிதர்கள் சேர்ந்து அவர்களுக்கான தீர்வையும் மீட்பையும் வழங்குவதே கால அவசியம். நிலத்தையோ, நீர்நிலையையோ மாசுபடுத்தாத கழிப்பறைப் பயன்பாடு நம் மரபில் இருந்திருக்கிறது. அதை இந்நவீனகாலப் பயன்பாட்டிற்கு ஏற்றதாக, கட்டிடக்கலை உத்திகளோடு வடிவமைத்து, அத்தகைய மாற்றுக் கழிப்பறைகளை ஒவ்வொன்றாகக் கட்டியெழுப்புவதே இச்செயலின் ஒற்றைக்கனவு.
வகுப்பறையில் அமர்ந்து அச்சத்தில் மலத்தை அடக்கியடக்கி, தனது இரத்தத்தில் மலம் கலந்து செத்துப்போன ஓர் பள்ளிச்சிறுமியின் கதையைக்கேட்ட அலறலிலிருந்து துவங்கியது ‘மீள்’ ஆவணப்பயணம். மாற்றுக்கழிப்பறையை வடிவமைக்கும் இப்போட்டி அச்சிறுமியின் இறுதிநொடி சுமந்த ஏக்கத்திற்கானது. சுகாதாரமான கழிப்பறைகளோ, கழிவுநீர் வடிகால்களோ இல்லாத பல்லாயிரம் கிராமங்களைக்கொண்ட இத்தேசத்தில் இம்முயற்சி உருவாக்கப்போகிற விளைவு எத்தகையது என்பதை உணர்ந்தாலே போதும், தீர்வுகள் ஒன்றெடுத்து ஒன்றென இங்கு உருவாகியெழும்.
மிகமுக்கியமாக, இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமென்பது பள்ளிக்குழந்தைகளிடம் Eco-san கழிப்பறை குறித்த விழிப்புணர்வையும் உண்டாக்கி, அவர்களுக்குள் இருக்கும் பயன்பாட்டுக் கூச்சத்தை நீக்குவதுதான். தங்கள் வகுப்பறையைத் தாண்டி தங்கள் வாழிடத்தின் நன்மைக்காக அவர்களின் அன்றாடத்தைத் தீர்மானிக்கும் உள்ளுறுதியை வழங்கும் ‘கழிப்பறைக் கல்வி’யாக இதை நாங்கள் கருதுகிறோம். ஆகவே, இவ்வுணர்வைப் பெற்றடைந்த ஒவ்வொரு பிள்ளையும் இத்தேசத்தின் நிலத்தையும் நீர்நிலைகளையும் அழிவிலிருந்து மீட்கும் ஆற்றலுள்ளவர்களாக வளர்ந்தெழுவார்கள்.
~
குக்கூ காட்டுப்பள்ளி