டொரெண்டோ, கடிதம்

பாலஸ்தீன் வாழ்வுரிமை

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் சமீபத்தில் கனடா வந்திருந்தபோது இலக்கியத் தோட்ட நிகழ்வில் நிகழ்த்திய பேச்சைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவர் உங்களுக்கு எழுதிய கடிதத்தையும் அதற்கு நீங்கள் அளித்த பதிலையும் வாசிக்க நேர்ந்தது. அது குறித்த எனது வருத்தத்தைத் தெரிவிப்பதற்காக இதை எழுதுகிறேன்

ரவிச்சந்திரன் குறிப்பிடும்உங்கள் உரைக்குப் பின்னான முதல் கேள்வியைக் கேட்டவன் நான் என்ற வகையில் உங்கள் பதிலின் முதற்கூறு அனைத்தும் என்னை மையமாக வைத்து ஈழத்தமிழர்கள் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனமாகப் பார்க்கிறேன். அது குறித்த எனது அவதானிப்புகள்:

1) ரவிச்சந்திரனின் கேள்விகனடாவில் ஆற்றிய உரைக்குப் பின் கேள்வியின்போது நீங்கள் ஹமாஸ்இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல பேசுகிறீர்கள். இது பற்றி உங்கள் நிலைபாட்டை அறிய விரும்புகிறேன்என்பது தான். அதற்கான பதில் இரண்டாம் கூறில் இருக்கிறது. அக்குறிப்பிட்ட நிகழ்வில் நான் கேட்ட கேள்வியும் பாலஸ்தீனஇஸ்ரேல் பிரச்சனை பற்றியது மட்டுமே. ஈழ அரசியல் பற்றி நான் எதையுமே கேட்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் பதிலின் முதற்கூறு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மீதான ஒரு blanket விமர்சனமாக இருக்கிறது

2) ரவிசந்திரனுக்கான பதிலில்அரசியல் சமபந்தமாகப் பேசலாகாது. அது மேடையிலும் அறிவிக்கப்பட்டதுஎனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அப்படிக் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. காணொளியிலும் அப்படியொரு பதிவு காணப்படவில்லை. அப்படி முற்கூட்டியே சொல்லப்பட்டிருந்தால் நான் எனது கேள்வியைத் தவிர்த்திருப்பேன். அப்படியிருந்தும்எனது கேள்வி சர்ச்சையைக் கிளப்புமானால் அதை நான் மீளப்பெற்றுக்கொள்கிறேன் என்ற caveat ஐயும் நான் தெரிவித்திருந்தேன். உங்களைச் சிக்கலில் மாட்டுவதற்கென்று நான் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. உங்கள் பேச்சுஅறம்பற்றி இருந்ததால் நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனஇஸ்ரேல் போரை எந்த வகையான அறக் கண்ணாடியூடு பார்க்கலாம் (relevance) என்பதே எனது கேள்வியாக இருந்தது. நீங்கள் கூறியது போல நானும் 60 வயதைத் தாண்டியவன். ஈழ அரசியல் என்னோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஈழ அரசியலுக்குள் இழுத்து உங்கள்அறத்தைப் பரீட்சித்துப் பார்க்க நான் முனையவில்லை. அது எனது அகவிளையாட்டாகவும் இருக்கவில்லை.

3) “ஓர் அரங்குக்கு வந்து ஒரு வகையில் தன்னை புனைந்து முன்வைத்துவிட்டால் தனக்கொரு அடையாளம் அமைந்துவிட்டது என நினைக்கிறார்கள். தங்கள் சமரசங்களும் சரிவுகளும் எல்லாம் பிறரை குற்றம் சாட்டுவதன் வழியாக சரியாகிவிடுமென கற்பனைசெய்கிறார்கள்” – இந்த தொப்பியையும் நான் போட்டுப் பார்த்தேன். அளவாக இருந்தது. இது எனக்கு மிக வருத்தத்தைத் தருகிறது. அடையாளத்துக்காக இலக்கியமோ அல்லது அரசியலோ செய்பவன் நானல்ல. சுய தம்பட்டமும் நான் செய்வதில்லை

என்னை நியாயப்படுத்துவதற்காக நான் இதை எழுதவில்லை. நான் மதிப்பு வைத்திருந்த ஒருவரிடமிருந்து வந்த கருத்து எனக்கு மிக மிக வருத்தத்தைத் தந்தது. அதை உங்களிடம் தெரிவிப்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

சிவதாசன்

அன்புள்ள சிவதாசன்,

உங்கள் மேல் எனக்கு பெருமதிப்புண்டு. உங்கள் கேள்விக்கான பதிலில் கூட விபுலானந்தரின் பெருநூலான யாழ்நூலை பதிப்பித்தவர் என்று கூறியபின்னரே பதில் சொல்கிறேன்.

இரண்டு விஷயங்கள். விருந்தினர் விசாவில் வந்திருப்பவர் அரசியல் பேசக்கூடாது என்பது அனைவரும் அறிந்த நெறி. நான் எப்போதும் அதற்குக் கட்டுப்பட்டவன். ஆனால் சென்றமுறை சாம்ராஜ் வந்தபோதும் ஒரு சிறுகூட்டம் எழுந்து அரசியல்கூச்சலிட்டது. என் வருகையின்போதும் எனக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று வந்து நின்றது. வழக்கத்திற்கு மாறான கூட்டம் நிகழ்வுக்கு இருந்தமையால் அவர்கள் சென்றுவிட்டனர். நிகழ்வுக்குப் பின் ஒரு வானொலிப்பேட்டிக்கு கேட்டனர். அரசியல் பேசக்கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்தேன். இருந்தும் அரசியலே பேசினர். இயல்பாக அச்செயல்களை ஒட்டியே நான் சிந்தித்தேன். உங்கள் நோக்கம் புரிகிறது. தனிப்பட்ட முறையில் உங்களை உத்தேசிக்கவில்லை. நீங்கள் மனம் வருந்தியது எனக்கும் வருத்தமளிக்கிறது. மன்னிக்கவும்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரபந்தம் கடிதம்
அடுத்த கட்டுரைசெவ்விலக்கிய மறுவாசிப்பு, ஓர் உரை- பார்கவி