பூன் முகாம், கடிதம்

 

முகாம் நிகழும் தங்குமிடத்தை அடைந்ததுமே  பைகளை கிடைத்த இடத்தில் வீசிவிட்டு கேட்ட முதல் கேள்வி  “ஆசான் பேசிக்கொண்டிருக்கிறாரா?”.  இல்லை. கொஞ்ச நேரம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன், ஒரு வருடத்துக்கு பின் சந்திக்கிறோம் ஆனால் எந்த இடைவெளியும் இல்லாமல் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் துவங்க முடிந்தது. பலருக்கும் இந்த ஒரு வருடத்தில் பட்டப்பெயர்கள் உருவாகி விட்டன, அளவளாவல்களுக்கிடேயே ஒரு  நண்பர் வந்து என் காதுபடபேசிக்கிட்டிருக்கார்என்று ஒற்றை வார்த்தை சொல்லிவிட்டு கிளம்பினார்

முதன்மை தங்குமிடத்திற்குள் நுழைந்ததுமே சபை கூடிவிட்டதை காண முடிந்ததுவழக்கம்போல தற்செயலாகக் கூடிய சபை, சமையல் மேடைக்கு அருகே, மாடிப்படிகள் துவங்கும் இடத்தில், உணவு மேசையில் சாய்ந்தபடி என வித விதமான இடங்களில் எங்கு எப்போது வேண்டுமானாலும் திடுக்கென்று துவங்கி விடக்கூடிய சபை. அனால் எங்கு எப்போது எதைப்பற்றி பேசியபடி துவங்கினாலும் இரண்டே நிமிடங்களில் அறிவுக்காக பசித்த கண்களுடன் மாணவர்கள் உங்களை மையமாக்கி ஒரு சுற்றுவட்டத்தை உருவாக்கி விடுகிறார்கள். நான் வெளிவட்டத்தில் பேச்சு கேட்கும் தொலைவில் நின்றுகொண்டேன், அன்று புனைவிலக்கியத்தில் இசை அம்சம் பற்றிய பேச்சு மெல்ல சுருதி ஏறிக்கொண்டிருந்தது.

பரவலாக தமிழில் எவையெல்லாம் இசை பற்றிய புனைவுகள் என்ற புகழுடன்   அறியப்படுகின்றதோ அவையெல்லாம் நிதானமாக ஒவொன்றாக கிழே போட்டு உடைக்கப்பட்டுக் கொண்டிருந்தன, “இசைன்னா ஒரு சக்தி வாய்ந்த வெங்காயம் என்கிற அளவில் தான் அந்த எழுத்தாளருடைய புரிதல் என்பார் சு.ராகுழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றோம்அவருடைய எந்த படைப்பையும் படிச்சு பாருங்க, இசையை கேட்டவுடனேயே கதாநாயகனுக்கு கண்ணுல கரகரன்னு ஜலம் வந்துடும்கூர்மையான விமர்சனம் தான். ஆனால் Bandaidஐ பிய்த்து எடுக்கும் போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும். தமிழ் புனைவிலக்கியத்தில் வராத இசைகூறுகள் பற்றி பேச்சு தொடர்ந்தது 

புராதனமான பெரிய கோவில்களில் அச்சில் வார்த்தது போல வரிசையாக நிற்கும் தூண்களை அருகில் சென்று கூர்ந்து பார்த்தால் ஒன்று தெரியும், முதல் பார்வையில் எல்லாத் தூண்களிலும் ஒரே சிற்பம் செதுக்கப் பட்டிருப்பது போல இருக்கும். ஆனால் உண்மையில்  எங்கேனும் சிறிய வேறுபாடு இருக்கும், ஒரு கைமுத்திரையில் , காதணியில்  அல்லது வேறு ஏதாவது ஆபரணத்தில் சிறிய வேறுபாடு செதுக்கப்பட்டிருக்கும். அனால் ஒட்டுமொத்தமாக வரிசையாக நிற்கும் எல்லா தூண்களும் ஒரே மாதிரி தான் தெரியும்

இசையிலும் அப்படித்தான் இசை கலைஞர்களுக்கு இது உடனே புரியும். தாளக்கட்டு ஒன்றை கேட்பவருக்கு மேலோட்டமாக  ஒரே ஒலி திரும்ப திரும்ப வருவது போல  இருக்கும் ஆனால்  வாசிப்பவருக்கு தெரியும் ஒவ்வொரு முறையும் சிறிய வேறுபாடு எப்படியும் வந்துவிடும், தேர்ந்த இசை ரசிகருக்கும் இது தெரியும். ஒரு சிறிய மௌனம், நம் ஊரில் நம் மரபில் யாளி இல்லை அனால் கோவில்களில் எத்தனை யாளி சிற்பங்கள்?, ஒரு ஸ்தபதி கிட்ட கேட்டேன், ஒரு சிறிய ஆலாபனையை சொல்லி அதனுடைய கல்வடிவம் தான் யாளிங்கறார்யாளி சிற்பத்தை பாருங்க அது சும்மா அப்படி நிக்கிறது இல்லையா? யாளியின் வடிவை ஒரு கை அசைவில் எங்கள் கண்முன் உருவாக்கி ஆலாபனையுடன் இணைத்து காட்டிய பொழுது ஒருகணம் என் சிந்தை உறைந்தது மீண்டது.

சிற்பக் கலையும்  இசையும்  ஒண்ணோட  ஒண்ணு பிணைஞ்சிருக்கு இல்லையா? சென்னையில் ஒரு அரங்கில் இசை கேட்பதற்கும் அதே இசையை அதே கலைஞர்கள் சிற்ப இலக்கணப்படி கட்டப்பட்ட கோவிலில் இசைப்பதைக் கேட்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு இல்லையா? அங்கே கோவில் பிரகாரத்துல ஒரு ஒத்திசைவு(synergy) உருவாகுது இல்லையா?

இசைக்கு சிற்பக்கலை மட்டுமில்ல அந்த இசை தோன்றிய நிலம் அந்த நிலத்துடைய  தத்துவம் இலக்கியம் எல்லாத்துடனும்  தொடர்பிருக்கு, ஒரு கலாச்சாரத்தோட சாறு தான் இசை. என்று சொல்லி நிறுத்தியவுடன் ஒரு பத்து வினாடிக்கு எல்லோரிடமும் மௌனம் நிலவியது.

ஐரோப்பாவில் பசுமை ஏதும் இன்றி சலேரென்று பனி நடுவே ஓங்கி நிற்கும் மலை முகடுகளுக்கும் அந்த நிலத்தில் உருவான கோதிக்(Gothic) கதீட்ரல்களின் உயர்ந்த கோபுரங்களும் பியானோ இசையின் அடிப்படை ஓசை அலகுக்கும் இடையே சூட்சுமமான ஒத்திசைவு உண்டு, இந்த ஒத்திசைவை தென் இந்தியாவில் பசுமை செறிந்த மலைமுகடுகளுக்கும் நம் கோவில் கோபுரங்களுக்கு இடையேயும் காண முடியும். அந்த ஒத்திசைவை நாதஸ்வர இசையிலும் காணலாம் என்று சுட்டியது புதிய அகத்திறப்பை அளித்தது. இது கவிதை போல நுணுக்கமான கற்பனையால் மட்டுமே தொட்டு எடுக்கக் கூடிய ஒரு அறிதல் என எனக்கு தோன்றியது, ஆனால் கவிதையை போலவே ஒரே ஒரு பண்படாத கச்சாத் தர்க்கக் கேள்வியால் அந்த அறிதலை எளிதாக அழித்துக்கொள்ளவும் முடியும்

கீழே  இறங்கி வந்துஇதைப்பற்றியெல்லாம் ஒரு அறிவும் இல்லாமல் அவருடைய  இசை தேவாமிருதம் போல் இனித்தது, நல்ல நெய்விட்ட பொங்கலும் டிகிரி காப்பியும்  சாப்பிட்டது போல திவ்யமாக இருந்தது என்று  இசை விமர்சனம் எழுதுகிறார்கள், கலையை எப்ப உணவோட தொடர்பு படுத்தறாங்களோ அப்பவே அது குறைபட்ட ரசனை ஆகிவிடும்”. என்று தொடர்ந்தீர்கள். இதே வாக்கியங்கள் தானா என நினைவில்லை, ஆனால் என் மனதில் இப்படித்தான் பதிவாகி இருக்கிறது

ஒரு புகழ் பெற்ற இசை விமர்சகரை சுட்டி அவரின் இசை ரசனையைப்பற்றி சு.ரா வைத்த கடுமையான விமர்சனத்தை பகிர்ந்து கொண்டீர்கள், எனக்கு இசை தெரியாது ஆனால்  அந்த விமர்சகரை பற்றி அறிமுகம் உண்டு. தள்ளாத வயதில் காது குடைவதில் கடவுள் எவ்வளவு இன்பம் வைத்திருக்கிறார் என குமுதத்தில் இரட்டை அர்த்த கவிதை எழுதியவர்.

பேச்சு நின்ற இடைவெளியில், இசை கலைஞர்கள் எழுதும் இசை குறித்த கட்டுரைகள் பற்றி உங்கள் கருத்தை கேட்டேன், சிகரம் நோக்கி மலையேறுபவர் தோளில் விழுந்த சருகை தட்டிவிடும் லாவகத்துடன்  “நான் சொல்ல வருகிற  விஷயமே வேறு, புனைவில் வருகிற இசையை பற்றி பேசிக்கிட்டிருக்கோம்,”  என்றபடி தொடர்ந்தீர்கள், அதன் பின் இசையைப் பற்றி பேசிப்பேசி அந்த உரை வழியே சென்றடைந்த உச்சத்தில் நின்று நீங்கள் சொன்ன வாக்கியத்தை எழுதினால் அங்கே உங்களுடன் நின்றிருந்தவர் தவிர வேறு எவருக்கும் அர்த்தமற்ற சொற்களாகவே இருக்கும், அவ்வளவு அரூபமாக ஆனால் துல்லியமாக இருந்தது மேற்கத்திய இசையைப்பற்றிய அந்த வாக்கியம்.

ஒரு சிறுகதையில், நாவலில் அல்லது கவிதையில் படிமங்கள் போன்ற மொழிக் கருவியை உபயோகித்து ஒரு விஷயத்தின் சாரமான ஒன்றை உணர்த்தி விடலாம், அனால் அதை ஒரு உரையாடலில் நிகழ்த்தி காட்டியது வியப்பாக இருந்தது. கற்றலின் கேட்டல் நன்று என கடந்த ஆண்டு முகாம் முடிவில் சொன்ன சொல்லின் தொடர்ச்சியாக இந்த முகாம் துவங்கியது. இலக்கியத்தில் சிறப்பாக இசையை கையாண்ட படைப்புகளாக Romain Rolland என்கிற ஜெர்மனிய எழுத்தாளரின் Jean Christophe என்ற 10 தொகுதிகள் கொண்ட நாவல் நிரையை சுட்டினீர்கள், இந்த நாவல் இசைக்கலைக்கும் அடிப்படை இச்சைகளுக்குமான ஊட்டாட்டத்தை உணர்த்துகிறது, இத்துடன் நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட வேறு இரு படைப்புகளும் உள்ளன. Gunter Grass எழுதிய The Tin Drum இசையை நுட்பமான குறியீடுகளாக்கி பண்பாட்டைப் பேசுகிறது, Thomas mann எழுதிய Doctor Faustus இசையை ஒரு பரந்துபட்ட தத்துவப்புலத்தில் வைத்துப்பேசுகிறது.

தமிழில் அப்படிப்பட்ட படைப்புகள் இல்லை, இருப்பதில் இசையை சரியாக புனைவாக்கியது ஜெயகாந்தனின்பாரிசுக்கு போநாவல் தான் என்ற போது மகிழ்ச்சி அளித்தது, அரை நூற்றாண்டு ஆன பிறகும் புதிதாகவே இருக்கும் அந்த படைப்பு என் மனதுக்கும் நெருக்கமானது.

அன்றைய சபை முடிந்து அறை திரும்புகையில் நண்பர் சொன்னது நினைவிருக்கிறது,  “இன்னைக்கு கேட்டதே போதும், அடுத்த இரண்டு நாள் அவர் பேசுவதை கேட்பதெல்லாம் போனஸ் தான்

இரவுணவுக்குப் பின் எனக்கு ஒதுக்கப் பட்டிருந்த தங்குமிடத்தில் நண்பர்களுடன் ஒரு அமர்வு இயல்பாக நிகழ்ந்தது. கண்ணாடி மெழுகு பூசியது போல விளக்கொளியை பிரதிபலிக்கும் கனத்த மரங்களால் ஆன சுவர்களால்  அமைந்த கட்டிடம்உயர்ந்த கூரை கொண்ட அதன் கூடத்தில் அமைக்கப் பட்டிருந்த பெரிய கணப்பை சுற்றி போடப்பட்டிருந்த ஓய்விருக்கைகளில் விவேக் , பாலாஜி ராஜு, ஸ்ரீனி சங்கரன், செந்தில், மதன் ஆகியோர் விதவிதமாக அமர்ந்திருக்க உரையாடல் துவங்கியது.  

எங்கெங்கோ சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்த பேச்சை பாலாஜி ராஜு ஒரு கவிதை அமர்வாக மாற்றினார், முதல் கவிதை நியூயார்க் நகர கவிஞர் Frank O’Hara எழுதிய  Lana Turner Has Collapsed. அவர் செல்பேசி திரையில் கவிதையை எடுத்துத் தர நான் வாசித்தேன், அந்த கவிதையின் மேல் வேறொரு கவிதை நிகழ்வில் நிகழ்ந்த பன்முக வாசிப்புகளை பாலாஜி ராஜு பகிர்ந்து கொண்டார், சிறப்பாக இருந்தது, என் பார்வையில் அது ஒரு சிறிய சுவாரஸ்யமான அன்றாடக் கவிதை என்றே பட்டது. “இந்த கவிதையில் இருந்தா ஆன்ம ஞான தரிசனத்துக்கெல்லாம் போனார்கள் சில வாசகர்கள்?” என்கிற என் மனக்குரலை அப்படியே வைத்திருக்காமல் சுய கட்டுப்பாட்டை இழந்து நண்பர்களிடம் சொல்லிவிட்டேன். எழுதாமலாவது இருக்க வேண்டும்.

அடுத்து ஆத்மாநாமின்சுழற்சிஎன்கிற கவிதையை  பாலாஜி ராஜூவே வாசித்தார், வார்த்தைகளால் உருவாக்கப்பட்ட வெட்டி ஒட்டப்பட்ட படத்தொகுப்பு(collage) ஒன்றை பார்க்கும் அனுபவத்தை முதல் வாசிப்பில் எனக்கு அளித்தது அந்த கவிதை, மீண்டும் ஓரிரு முறை வாசித்தோம், பாலாஜி ராஜு அவர் வாசிப்பை பகிர்ந்தார். கலங்கிய காட்சிகள் புலப்படுவது போல இருந்தன, நண்பர்கள் அவரவர் வாசிப்பை பகிர்ந்துகொண்டோம், ஆத்மாநாமை பற்றி, அவர் வாழ்க்கையை பற்றி அறிந்த ஒருவருக்கு இப்போது கிடைக்கும் வரிகளை தடயங்களாக வைத்துக்கொண்டு அந்த கவிதையின் ஊற்றாக இருந்திருக்கக் கூடிய அவரின் மனநிலைக்கு செல்வது அவ்வளவு கடினமல்ல. ஆனால் அந்த மனநிலையை அடைந்தபின் என்ன செய்வது என்ற கேள்வி எஞ்சியது

அவரைப் பற்றி ஸ்டெல்லா ப்ருஸ் எழுதியஎன் நண்பர் ஆத்மாநாம்என்கிற நீள் கட்டுரை நினைவுக்கு வந்தது, தொடர்ந்து ஸ்டெல்லா ப்ருஸ் பற்றிய நினைவுகள். அவர் மறைவுக்குப்பின் கழித்த உறக்கம் வராத நீண்ட ஓரிரு இரவுகள். வெளியே நல்ல குளிராக இருந்திருக்க வேண்டும், தங்குமிடத்தை சுற்றி இருந்த மரங்களில் இலையுதிர் காலம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, அப்பலாச்சியன் மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த பூன் மலையில் திடீரென எதிர்பாராமல் அனால் மிக இயல்பாக மொத்த இலைகளும் ஓரிரு நாட்களில் உதிர்ந்துவிடும் என்று சொன்னார்கள்.

உள்ளே கவிதை விவாதம் சூடு பிடிக்க துவங்கியிருந்தது , இன்னும் எனக்கு பன்முக வாசிப்பின் எல்லையில் அது பிழை வாசிப்பாக மாறும் தருணங்களை வகை பிரிக்க தெரிவதில்லை, இன்னும் சில கவிதைகள் வழியே உரையாடல் தொடர்ந்தது. நள்ளிரவு இரண்டு மணியை நெருங்கும் நேரத்தில் நண்பர் மதன் கிட்டத்தட்ட அடிக்க வரும் தீவிரத்துடன் கவிதையை உள்வாங்கும் கலையை தண்ணீரில் கல்லை தாவிச்செல்லும்படி எறியும்  விளையாட்டுடன் ஒப்பிட்டு பேசிக் கொண்டிருந்தார். கவிதையை வாசித்து, விலகி, திரும்ப வந்து மீண்டும் வாசித்து விலகி செல்லும் ரசனை முறையை அவர் விளக்கியது சில விஷயங்களை தெளிவாகியது. கடந்த ஆண்டு முகாம் முடிந்தபின் நிகழ்ந்த விவாதங்களுக்கு பின் விபி என அழைக்கப்படுகிற வெங்கட பிரசாத் கவிதையை பற்றி சொன்னது நினைவுக்கு வந்ததுசிறந்த கவிதை ஒரு தீப்பொறி போல வாசித்து வாசித்து ஏற்கனவே தயாராக இருக்கும் மனதை ஒரு கணத்தில் பற்றவைக்கும்’. 

அன்று இரவு சம்மந்தமில்லாமல் விசித்திரமான கனவு வந்தது, ஒரு பெரிய மைதானத்தில் ஆழமான தாழி வடிவில் ஒரு தங்கப் பானை வைக்கப்பட்டிருந்தது. தேன் என்று அதன்மேல் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. சுற்றி பல வெள்ளை நிற பூனைகள் பானைக்குள் கைவிட்டு தேனை அள்ளி உண்டபடி விளையாடிக்கொண்டிருந்தன. அடியில் மட்டுமே தேன் இருந்திருக்க வேண்டும், கையை பானைக்குள் விட்டு தேனெடுக்க முயன்று தோற்ற சில பூனைகள் கைகளில் தேன் ஒட்டி இருப்பது போலவும், தேனின் சுவையில் கண் கிறங்கி மயங்கிச் சரிவது போலவும் பொய் பாவனைகள் செய்தன. தூரத்தில் ஒரு சாம்பல் நிற பூனை குடத்தை சுற்றி நிகழ்பவற்றை பார்த்துமுட்டாள்கள், காலிப் பானையை வைத்து கொண்டு விளையாடுகிறார்கள்என்கிற தோரணையில் குறுக்கும் மறுக்கும் நடந்துகொண்டிருந்தது.

மறுநாள் காலை உங்கள் துவக்க உரையுடன் அமர்வுகள் துவங்கின, வழக்கமான விவாத நெறிகள் பற்றிய குறிப்புணர்த்தல்கள்அதன்பின் இலக்கிய வாசிப்பு என்பது அந்தரங்கமான தனிச்செயலாக இருந்தாலும் இணைமனங்களின் தொடர்பு அந்த செயலுக்கு எப்படி வளம் சேர்க்கும், எப்படி நுண்ணுணர்வு கொண்ட  மனங்கள் சந்தித்தே ஆகவேண்டிய  தனிமையையும்  சலிப்பையும் கடக்க உதவும் என்பதை பற்றி பேசியது பயனுள்ளதாக இருந்தது

அது உண்மை என உணர்கிறேன், இலக்கிய நண்பர்கள் சிலர் அழைத்தால் ஒரு மணிநேரத்துக்கு குறையாமல் உரையாடல்கள் முடிவதில்லை, அரசியல், சினிமா, செய்திகள், உணவு, பாலியல், பணம், வேலை, பதவி உயர்வு, முதலீடு என பேசியதையே திரும்பத்  திரும்பப்  பேசிதாலியறுக்கும்சூழலில் வாழ நேர்ந்த  நுண்ணுணர்வு கொண்ட மனங்கள் அவற்றிலிருந்து விலகிய ஒரு வெளியை கண்டு கொள்வது நல்லது. உணவு, பாலியல் போன்றவை கீழானவை என்பது அனைவருக்கும் தெரியும், ஆகவே விடுபடுவது எளிது, ஆனால் அரசியல், சமூக ஊடகம், செய்திகள் போன்றவை அறிவார்ந்தவை  என அறியப்படுவதால் அவற்றிலிருந்து மீள்வது எளிதல்ல

துரித உணவுகள் உண்பவர்கள் ஏன் ஆரோக்கியத்தை இழந்து அதீத பருமனை அடைகிறார்கள் என செய்யப்பட்ட ஆய்வுகள் இப்படி சொல்கின்றன, உடலுக்கு தேவையான நுண்ணுட்டச்சத்துக்கள் துரித உணவுகளில் குறைவான விகிதத்தில் உள்ளதால் அவற்றை பெருமளவில் உட்கொண்டால் மட்டுமே தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன, ஆனால் அவ்வளவு உணவை உட்கொண்டால் அனைத்து மிகையுணவு  விளைவுகளையும் சந்திக்க நேரிடும். முறையான உணவில் நுண்ணுட்டச்சத்துக்கள் சரி விகிதத்தில் இருப்பதால் குறைந்த அளவு உட்கொண்டாலே போதுமானது.

அரசியல் பேச்சு, செய்தி அலசல், சமூக ஊடக விவாதங்கள் போன்றவற்றுக்கும் துரித உணவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. மனிதர்கள் அனைவருமே உள்ளுற அறிவுத் தேடல் கொண்டவர்களே, தேடலுக்கு தீனி போடுவதற்காக இந்த உள்ளீடற்ற விஷயங்களில் சிக்கிக் கொள்கிறோம். இலக்கியம் அந்த தேடலுக்கு நல்லுணவளித்து உரமூட்டி ஒளியேற்றுகிறது. அனால் ஒரு எல்லையில் இலக்கியமும் உலகியல் செயல்தான், அதன் எல்லைகளை தாண்டி சொற்களற்ற ஒரு தீவிர அகத்தேடுதல் நிலை அமையலாம், ஜெயகாந்தன் எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்தியது போல, அந்த நிலையை அடைவது வரை நுண்ணுணர்வும் தேடலும் கொண்டவர்களுக்கு இலக்கியமே மிகச்சிறந்த புகலிடம் என்று உங்கள் துவக்க உரைக்குப் பின் எண்ணிக்கொண்டேன்.

உண்மையில் உங்கள் தனி உரைகளையும் ஒவ்வொரு அமர்வின் இறுதியிலும் நீங்கள் பகிர்ந்து கொள்வதையும் கேட்பதே அனைவருக்கும் முதன்மை நோக்கம். ஆனால் இந்த வருடம் பிற அமர்வுகளும் சிறப்பாக அமைந்தன

மதன் முதற்கனலை பற்றி நிகழ்த்திய உரை ஆழமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது, இவ்விரு அம்சங்களும் ஒன்றையொன்று ரத்து செய்பவை, ஒன்றிருந்தால் பிறதிற்கு இடமில்லை என்கிற பொதுவான அபிப்ராயத்தை உடைத்துக் காட்டியது

மதுநிகா வழக்கம் போல அவர் எடுத்துக் கொண்ட சிறுகதையை பற்றி தடையற்ற உரையை ஆற்றினார், இந்த வருடம் எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று தமிழ் சிறுகதைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக வரலாற்றில் நகரும் காலச்சக்கரத்தை பெண்ணிய நோக்கில் எடுத்த மூன்று snapshotகள் போல அமைந்திருந்தது.

ஆங்கில சிறுகதைகளைப்  பற்றிய அமர்வுகளும் சிறப்பாக இருந்தன, The Lottery என்கிற கதையை தன்னுடைய வாசிப்பில் எவ்வாறு அர்த்தப்படுத்திக்  கொண்டார் என  நிர்மல் பகிர்ந்துகொண்டார். முப்பட்டக கண்ணாடியில் ஒளியை செலுத்தினால் பல வண்ணங்களில் வெளிவருவது போல பிற பங்கேற்பாளர்கள் தங்கள் வேறுபட்ட வாசிப்பை பகிர்ந்து கொண்டார்கள். குறியீட்டுத் தன்மை கொண்ட ஒரு படைப்பு எழுதி முடிக்கப்பட்டபின் பன்முக வாசிப்பு வழியே பல திசைகளில் கிளை விட்டு வளர்வதை கண்முன்னே காணமுடிந்தது.

அடுத்த அமர்வில் The Nine Billion Names of God என்கிற மிகப் பிரபலமான சிறுகதை விவாதிக்கப் பட்டது, விஜய் அந்தக் கதையை சிறப்பாக முன்வைத்து தன்  வாசிப்பை பகிர்ந்து கொண்டார், புத்த பிக்குகள் வாழும் மடாலயப்  பின்னணியில் ஒரு ஆன்மீகச் சூழலில் கதை நிகழ்ந்தாலும் ஆழமான தத்துவ கூறுகள் எதுவும் இந்த படைப்பில் தென்படவில்லை என அந்த படைப்பின்  போதாமைகளையும் சுட்டிக்காட்டினார், அவர் குறிப்பிட்ட போதாமைகள் போதவில்லை என்று நானும் என் பங்குக்கு கொஞ்சம் சேர்த்தேன். பிரபலமான, புகழ் பெற்ற, பல விருதுகளை ஈட்டிய, பல பட்டியல்களில் இடம் பெற்ற கதை என்னும்பொழுது அதன் இலக்கியமதிப்பை கூர்ந்து ஆராய்வது வாசகனின் தனிப்பட்ட இலக்கிய ரசனையை தீட்டிக்கொள்ள வெகுவாக உதவுகிறது.

சிறுகதையின் வடிவ இலக்கணத்தை, கதைத் தொழில் நுட்பத்தை கற்க நினைப்பவருக்கு இந்த கதை ஒரு பாடம், வடிவக் கச்சிதம், செய் நேர்த்தி போன்ற அம்சங்களை விளக்க இந்த கதை ஒரு உதாரணமாக பல இடங்களிலும் சுட்டப்படுகிறது, அதனாலேயே இதன் உள்ளீடற்ற தன்மை ஒரு இலக்கிய வாசகனை தொந்தரவு செய்யும், தத்துவ ஆன்மீகச் சூழலில் வந்திறங்கும் ஒரு வெகுதிறன் இயந்திரம் என்கிற வரி பல சாத்தியங்களை கற்பனை செய்ய வைக்கிறது. அனால் அந்த எதிர் முனைகளின்  சந்திப்புப்  புள்ளியை வெறும் ஒரு கதை திருப்பத்துக்கான அலங்காரப்  பின்னணியாக வைப்பதில் உள்ள வீணடிப்பை கவனிக்காமலிருக்க முடியவில்லை.

கண்ணெதிரே மறையும் நட்சத்திரம் எனும் வரி கூட சிந்தனையை தூண்டுவதாக உள்ளது, தொலை நோக்கி இல்லாமல் நம் கண்களால் காணக்கூடிய நட்சத்திரங்களில் மிக அருகே உள்ள Alpha Centuri என்கிற நட்சத்திரம் நான்கு ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது, அந்த நட்சத்திரம் மறைந்தால் நன்கு வருடங்களுக்கு பின் தான் அது மறைவதை நம் கண்களால் காண்போம், தொலைவில் இருக்கும் பல நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கான ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளன, அவற்றில் பல இன்றில்லை, அவை நாம் பிறப்பதற்கு முன்னே இறந்துவிட்டன. அதாவது இல்லாத ஒன்றை நம் வாழ்நாள் முழுக்க நிஜம் போல கண்டு கொண்டிருக்கிறோம், கண்முன்னே ஒவ்வொரு இரவும் நிகழும் இந்த மாயத்தை காணும்படி நம்மை புடம் போட்டு அகக்கண்களை திறப்பதாகவே தத்துவமும் ஆன்மீகமும் அதை சுட்டி நிற்கும் இலக்கியமும் இருக்க முடியும்.

சு.ராவின் பெயரையோ குரு நித்யாவின் பெயரையோ  சொல்லாமல் உங்கள் வாழ்வில் ஒரு நாள் கூட  கடக்காது என நினைக்கிறேன், என் தந்தையுடன் மானசீகமாக உரையாடாமல் ஒரு நாள் கூட எனக்கு கடந்ததில்லை, காலமாகிவிட்ட அவர்களின் இருப்பு நாம் வானில் தினமும் காணும் மறைந்த நட்சத்திரங்கள் போல என தோன்றுகிறது  “நம்மை விட்டுவிட்டு இவ்வுலகிலிருந்து நீங்கும் நம் அன்புக்குரியவர்கள் வானில் நட்சத்திரமாக மாறுகிறார்கள்”  என்கிற கவித்துவமான கூற்று இலக்கியம் என்கிற வடிவத்தை அடையாத தொல்குடி சமூகங்களின் மொழியில் கூட இருக்கும். இவ்வளவு கவித்துவ சாத்தியங்கள் கொண்ட விஷயங்கள் கதையில் இருந்தும் அவையெல்லாம் ஒரு எதிர்பாராத திருப்பதுக்காக உள்ளே கொண்டுவரப்பட்ட உபகரணங்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னுடைய தனிப்பட்ட ரசனையில் இந்த கதையை ஊகிக்கவே முடியாத திருப்பங்கள் நிறைந்த ராஜேஷ்குமார் கதைகளின் வரிசையில் வைப்பேன்.  “விலையாக ஒரு கொலை” , “அரை வினாடி அநியாயம்”, “திக் திக் திவ்யா”, The Nine Billion Names of God”.

கவிதை தொடர்பான அமர்வுகள் மிக சிறப்பாக அமைந்தன என்றே சொல்வேன், குறிப்பாக ரெமிதா நிகழ்த்திய Emily Dickinsonனின் கவியுலகம் குறித்த உரை, சுவாரஸ்யமான துவக்கம், தங்கு தடையற்ற சொல்லொழுக்கு, கவிதையை நிகழ்த்திக் காட்டுவதற்கு பொருத்தமான உடைத்தேர்வு, அணிகள், திலகம், கையசைவுகள், உடல்மொழி என அந்த அமர்வை நிகழ்த்து கலையாகவே மாற்றி விட்டார் என்றே சொல்லவேண்டும். இப்படி அழகுடன் அவர் அந்த மேடையில் அவதரிக்க வைத்த கவிதைகளில் சில மரணத்தை பற்றியது. மேலோட்டமான பார்வையில் அழகும் மரணமும் முரண்படுவதாக தோன்றினாலும் அது அப்படி அல்ல என தோன்றியது. முழுமை , சமச்சீர்(symmetry) , அழகு என பல வார்த்தைகளில் நாம் சுட்டுபவை அனைத்தும் ஒருவகையில் ஒன்றே , பிறப்பு என்கிற நிகழ்வை சமன் செய்து  வாழ்வுக்கு சமச்சீரை அளிக்கிறது இறப்பு, வாழ்வை முழுமையாக்குகிறது, ஆகவே அழகாக்குகிறது, வாழ்வெனும் இனிய கவிதையின் அழகிய முத்தாய்ப்பு மரணம். இந்த எண்ணங்களை அடைந்ததுமேஇன்று,இங்கு இப்பொழுதுஎன்கிற தொடர்பற்ற சொற்கள் மேலெழுந்தது, அகத்தில் எங்கோ ஒரு தேன்குடம் சரிந்து இனிமை ஊறத்துவங்கியது, அடுத்து வெங்கட பிரசாத் நிகழ்த்திய அமர்வில் வாசிக்கப்பட்ட கவிஞர் இசையின் கவிதைகள் அந்த இனிமையை மேலும் தூண்டியது. குறிப்பாக  ‘போலீஸ் வதனம்என்கிற பொருத்தமற்ற தலைப்பு கொண்ட கவிதை. தொடர் குண்டுவெடிப்பு போல தொடர் கனிவால் எதிர்பாராமல்தாக்கப்படும்மனிதத் சங்கிலியின் சித்திரத்தை வரையும்  கவிதை. நாள் முழுக்க உள்ளுறிய மெல்லிய இனிமையை அன்றிரவு மனதுக்குள்ளேயே ஒரு பாடாவதி கவிதை எழுதிக் கிழித்துப்போட்டு முடிவுக்குக் கொண்டுவந்தேன்.

இசையின் கவிதைகள் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தன, படிமக்  கவிதை தான் என்றாலும் அபி, பிரமிள் போல என் ரசனைக்கு எட்டாத (என் பார்வையில்) சிதைந்த வார்த்தைச் சித்திரங்களால் அல்லாமல்  முழுமையான சித்திரங்களை(imagery)  கொண்டிருந்ததால் எளிதில் உள்வாங்க  முடிந்தது. மேலும் அவருடைய கவிதைகள் நானறிந்த உலகில் இருந்து மேலெழுந்து செல்பவை என தோன்றியது, மாறாக  மேகங்களுக்கு மேலே உள்ள வெளியில் உருவாகி எப்போதாவது கருணையுடன் தரையைத்  தொடும் அருவக் கவிதைகளின் உலகில் நுழைய இன்னும் என்னால் முடிவதில்லை.

கவிதையை பற்றிய பேச்சு ஒரு தர்க்க விவாதமாக மாறத் துவங்கியபொழுதுதர்க்கத்தை வைத்துக்கொண்டு கவிதையை ஆராய்வது அதை Rape செய்வதற்கு ஒப்பானதுஎன திட்டவட்டமாக நீங்கள் சொன்னது மிக உபயோகமாக இருந்தது. சரி விவாதம் வேண்டாம் என்றால் தனியாகவே கவிதை படிக்கலாமே? ஒரு அரங்கில் இத்தனை பேர் ஒன்று கூடி கவிதையை படிப்பது எதற்கு? இவ்வளவு நேரமும் அந்த கவிதையை பற்றி தான் பேசிக்கொண்டிருந்தார்கள், அவையெல்லாம் விவாதம் அல்லவா? என்கிற கேள்விகள் எஞ்சியிருந்தன, அந்த சாம்பல் நிற பூனைக்குட்டி அரங்கில் உள்ள யாராவது ஒருவர் வழியாக வெளிப்படும் ஆவலில் துடிதுடித்துக் கொண்டிருந்தது

அமர்வுக்கு பின்னர் நிகழ்ந்த தனி  உரையாடல் வழியே என் எண்ணங்களை இப்படி தொகுத்துக் கொண்டேன், கவிதை பற்றிய பகிர்தல்கள் உரையாடல்கள் ஏன் தர்க்க விவாதங்கள் கூட உகந்தவையே அவை அந்த கவிதையை மேலும் விரிப்பதாக இருக்கும் பட்சத்தில், அந்த கவிதையை பெருகச் செய்வதாக இருக்கும்வரையில் எந்த வகையான விவாதமும் கவிதை ரசனையே, அனால் ஒரு கவிதையை குறுக்குவதாக, சுருக்குவதாக, சிதைப்பதாக இருக்கும் எந்த உரையாடலும் கவிதை ரசனையல்ல. அதாவது எப்படியென்றால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிகழும் உடலுறவு Rape ஆகவும் இருக்கலாம் Love making ஆகவும் இருக்கலாம். அதுபோலவே கவிதை விவாதமும், அதே மனிதர்கள், அதே செயல், ஆனால் இரு சாத்தியங்கள்.

இந்த இலக்கிய முகாமில் நான் சற்றும் எதிர்பாராமல் உருவாக்கச்  செயற்கை நுண்ணறிவு (Generative AI) குறித்த ஒரு விரிந்த பார்வை கோணம் அறிமுகமானது, இந்த துறையில் பல நிறுவனங்கள் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக பெரும் நிதியை செலவிட்டு வந்துள்ளன, எண்பதுகளில் கணினிகளை பேச வைத்துவிடுவது பற்றிய பெரும் நம்பிக்கைகளும் உற்சாகமும் இருந்தது, ஆனால் எங்கோ அதன் எல்லைகளை உணர்ந்து எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டார்கள். ஆனால் கடந்த ஓரிரு வருடங்களில் என்ன நடந்தது என சொல்லிவிட முடியாதபடி விபத்து போல ChatGPT மாதிரியான நுண்ணறிவுக் கருவிகள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திவிட்டன

என்னைப் போல கணினி துறையில் பணி புரிபவர்கள் திடீரென ஒருநாள் இந்த தொழில்நுட்பப்  புயலின் நடுவே கண்விழிக்க வேண்டிவந்தது, கிட்டத்தட்ட இதை பற்றிய எல்லா முக்கியமான ஆய்வு கட்டுரைகளையும் வாசித்துவிட்டேன், எல்லா நிறுவங்களிலும் இதை உபயோகப் படுத்துவதற்கான முனைப்பும் திட்டங்களும் மும்முரமாக நிகழ்ந்து கொண்டுள்ளன.

நிலைமை எப்படி இருக்கிறது என்றால், வேலை விஷயமாக மட்டுமல்ல நான் வசிக்கும் வீட்டருகே கூட இதைப்பற்றி பேச்சு நிகழ்கிறது, இந்த முகாமுக்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன் அப்படி வீட்டருகே குழந்தைகளின் விளையாட்டு மைதானத்தில் சந்தித்த ஒருவரிடம் கிட்டத்தட்ட ஒருமணி நேர உரையாடல், அவர் இந்த தொழில்நுட்பத்தில் வெகுவாக உபயோகிக்கப்படும் Tensor என்கிற தரவமைப்பை நேரடியாக கையாளும் மின்னணு சில்லுகளை(Tensor Processing Unit) உருவாக்கும் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறார், நான் பொழுதுபோக்காக Stanford பல்கலை கழகம் உருவாக்கிய Alpaca என்கிற GPTயையொத்த மொழி இயந்திரத்தை என் மடிக்கணினியில் நிறுவி அதற்கு தமிழ் உரைகளை புகட்டும் முயற்சியில் இருந்தேன்

இப்படிப்பட்ட சூழலில் இருந்து கிளம்பி வந்து ஒரு இலக்கிய ஆசிரியரிடம் இருந்து இதைப்பற்றிய ஒரு விரிந்த கோணத்தை பெற்றுக்கொண்டேன், அங்கே நீங்கள் இதைப்பற்றி கூறியதை நான் இப்படி குறித்து வைத்துள்ளேன். மொழி என நாம் குறிப்பிடுவதில் இரண்டு கூறுகள் உள்ளன, நாம் சாதாரணமாக தினசரி வாழ்வில் பேசிக்கொள்வதை புறமொழி(Parole) எனலாம். தனி மனித மனதில் நுண்வடிவில், அர்த்த வடிவில் இருக்கும் மொழியை, அந்த மொழியின்  பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானங்களை அகமொழி(Langue) எனலாம்.  

அவர் ஒரு பசுவைப்போலஎன்றால் மொழி கட்டுமானத்தின் படி அவருக்கு நன்கு கால்கள் கூட இருக்கலாம், ஆனால் நடைமுறையில் அவர் பசு போல சாதுவானவர் என்பதே புறமொழி உருவாக்கும் அர்த்தம். எண்பதுகளில் நிகழ்ந்த நுண்ணறிவு ஆய்வுகளில் இந்த புறமொழியை கணினிக்கு கற்றுக் கொடுக்கும் சாத்தியங்கள் இல்லை,ஆகவே மொழியின் கட்டுமானத்தை இலக்கணத்தை ஒரு  கணித அமைப்பாக உருமாற்றி செயல்பட வைக்கும் திசையில் அந்த ஆய்வுகள் சென்றன. அனால் இணையமும், சமுக ஊடகங்களும் அன்றாட புறமொழியில்(parole) ஒரு பிரம்மாண்டமான உரைத்தொகையை உருவாகிவிட்டன, அவற்றை செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்கு புகட்டியதும் அவை வார்த்தைகளின் சரியான அர்த்தத்தை புரிந்துகொண்டு உரையாடும் திறன் பெற்றுவிட்டன. இதுவே நிகழ்ந்தது.

அன்றிரவும் என் தங்குமிடத்தில் நள்ளிரவு தாண்டிய பேச்சு நிகழ்ந்தது, நேரில் மட்டுமே பேசிக்கொள்ளக்கூடிய பிரசுரிக்க முடியாத ஆழமான அறச்சிக்கல் நிறைந்த விஷயங்கள், காலையிலிருந்து மாலை வரை முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட பேச்சுகள், அது முடிந்து நண்பர்களிடையே தனி உரையாடல்கள், நண்பர்களுடன் பேசியபடி மலை நடை, அப்புறம் இரவுணவுக்கு பிறகு உங்கள் சபையில் உங்கள் பேச்சு, அதன்பின் அறைக்கு வந்து மறுபடியும் நள்ளிரவை தாண்டிய பேச்சு. மூன்று நாட்களாக ஓயாத பேச்சு.

வாகனத்தின் சக்கரத்தில் கற்கள் அழுந்தி நொறுங்கும் ஓசையுடன் நண்பர்களுடன் முகாமிலிருந்து வெளியேறும் பொழுது அந்த கேள்வி எழுந்தது, “எதற்கு இத்தனை பேச்சு?” இதனால் ஏதாவது பயன் உண்டா? தெரியவில்லை, Freudடும்  Jungஉம் முதல் முதலில் சந்தித்துக் கொண்ட பொழுது ஒரே அமர்வில் பதிமூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் உரையாடலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறதுநோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென் அவர் உலகுக்கு  அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கருத்துகளின் அடிப்படைகளை இளவயதில் தன் நண்பர் சுக்ஹமோயுடன் கல்கத்தா நகரில் காபி ஷாப்களில் நிகழ்ந்த நீண்ட உரையாடல்கள் வழியே உருவாக்கி பட்டை தீட்டிக் கொண்டதாக சொல்கிறார்

இதையெல்லாம் விட நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று நபர்களின் கதை சிறப்பாக இருந்தது, நெல்லையப்பன், கண்ணன், சுப்பிரமணியன் என்கிற மூன்று நபர்கள் மெரினா கடற்கரையில் இன்று காந்திசிலை இருக்கும் இடத்தில தினமும் கூடி உரையாடும் வழக்கம் இருந்தது, அந்த பேச்சுகளில் இருந்து தான் நவீன தமிழ் உரைநடை பிறந்தது. பாரதி யானையால் அடிபட்டு சிகிச்சையில் இருந்தபொழுது அருகே இருந்து கவனித்துக் கொண்டவர்கள் குவளைக் கண்ணனும் நெல்லையப்பரும் தான். தன் கடைசி சொல்லைக்கூட அவர்களிடம் சொன்னதாகவே நன் படித்தவரையில் நினைவிருக்கிறது. பெரிய விஷயங்கள் மட்டுமல்ல சிறிய விஷயங்கள் கூட இந்த மாதிரி உரையாடல்கள் வழியே தான் உருவாகி வளர்கின்றன

அப்படியெல்லாம் ஒரு குறிக்கோள் அல்லது பயனை கருதி செய்யும் செயல்களில் எனக்கு வாழ்வின் இந்த கட்டத்தில் பெரிய ஈடுபாடு இல்லை, செயல் செய்வதற்கான கச்சாப்பொருளாக எரிபொருளாக மட்டுமே இலக்குகளை உபயோகிக்கும் ஒரு வாழ்முறையையே நான் இப்போது நாடுகிறேன். அதற்காக பல இழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதற்கும் மேல் இன்று இப்பொழுது இந்த கணத்தை முழுமையாக வாழும் நிலையை நோக்கி செல்வதே என் விருப்பம், ஆனால் இந்த குழுவில் இருந்து எழுத்தாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள், இசை கலைஞர்கள், ஏன் திரைப்பட கலைஞர்கள் கூட உருவாகி வருவதை காண மகிழ்வளிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை

எழுதும் ஆவல் கொண்ட ஒரு நண்பர் என்னிடம் தொலைபேசி தனி உரையாடலில் சொன்னது நினைவிருக்கிறதுவாழ்ந்ததுக்கு அடையாளமா நாம இங்கே கண்டதை சொல்ல நாலே நாலு சிறுகதையாவது எழுதிடனும், அதில எங்கயாவது இரண்டே இரண்டு வரி, படிச்சவுடனே மூச்சடைக்கிற மாதிரி இருக்கணும், எழுதினவன் செத்ததுக்கு அப்புறமும் அதை  படிப்பாங்க இல்ல?, அந்த வரியில் அவனுடைய இதயம் சாவை மீறி  துடிச்சுக்கிட்டிருக்கும் இல்லையா?”  எப்படியாவது இரண்டு புத்தகத்தை பதிப்பித்து விடவேண்டும் , நான்கு மேடைகளில் ஏறிவிடவேண்டும் என்கிற வழக்கமான நோக்கங்கள் அல்லாமல் இப்படிப்பட்ட மேலான பெரிய இலக்குகள் கொண்டவீரம்மிகுந்த நண்பர்களிடேயே புழங்குவது ஆத்மாவை நிறைப்பதாக  உள்ளது.

முகாமில் நிகழ்ந்தவற்றை பற்றி உற்சாகமான பேச்சுகளோடு நண்பர்களுடன் விமான நிலையத்தை நோக்கி செல்லும்பொழுது மீண்டும் இசை பற்றிய உரையாடல் நினைவுக்கு வந்தது. ஒரே அச்சில் வார்த்தது போன்ற தூண்கள் ஆனால் ஒவ்வொன்றும் வேறு, ஒரே தாளக்கட்டு ஒவ்வொரு முறை வாசிக்கப்படும் பொழுதும் புதிதாக நிகழ்கிறது, வாகனம் விரைந்துகொண்டிருந்த சாலையின் இருமருங்கிலும் வரப்போகும் இலையொழிவு காலத்துக்காக பூமஞ்சளும் மலர்ச்செம்மையும் அணிந்து நிற்கும் மேப்பிள்  இலைகளில் ஒரே வடிவத்தில் இரு இலைகள் எந்த காலத்திலும் தோன்றியதில்லை என திடுக்கிடலுடன் உணர்ந்தபொழுது அந்த பேச்சு இசையையோ சிற்பங்களையோ அல்லது வேறெந்த கலைகளையும்  பற்றியதோ அல்ல என்று பட்டது

அடிக்கும் வண்ணங்களுடன் நிற்கும் இந்த மரங்கள் வரப்போகும் கடும்குளிரின், புல்லையும் கருகச்செய்யும் பனிக்காலத்தின் முன்னறிவிப்பு என்பதை நினைத்தபொழுதுதுயரின் அழகுஎன்கிற வார்த்தை மேலெழுந்து வந்தது, எங்கே என்று மனதுக்குள் தேடி வழக்கம்போல வெண்முரசில் முடிந்தது அந்த தேடல்நீலத்தில் ராதை உதிர்ந்து ஒழியும் ஒரு மலர்மரத்தில் கீழ் அமர்ந்து கருத்தழியும் கட்டம்.

இன்னொரு மலர் உதிர்ந்து என் தோள்தொட்டு விழுந்தது,அஞ்சி எழுந்த சிறுமுள் தொகை அல்லியெழுந்த குறுஞ்சிமிழ், இம்மெல்லிதழ் அடுக்கை எத்தனைமுறை பயின்று அமைத்தது மலர்களின் தெய்வம்?, நுண்ணிய நரம்பின் பின்னல்கள், புல்லி வட்டத்தின் மலர்வை அல்லிக்கொத்தின் மலர்பொடியை ஊதி ஊதி பொருத்திய உலைமூச்சு எது? அந்தப் பொன்னுலைக் கனல் இன்று எங்கே? இங்கே வீணுக்கு உதிர்ந்து வெறுமைகொண்டு மட்கி மீண்டும் உப்பாகையில் எங்கு சென்று நின்று ஏங்கி விம்முகிறது இம்மலரின் எழில்? அழிவதெல்லாம் அழகு இப்புவியில் துயரெல்லாம் பேரழகு

ஆத்மாநாமையும் ஸ்டெல்லா ப்ரூசையும் நினைத்துக்கொண்டேன், நுண்ணுணர்வு கொண்ட மனங்கள் கடந்தே ஆகவேண்டிய அகத்தில் நிகழும் கடும்பனிக் காலத்தையும் நினைத்துக்கொண்டேன், இலையொழியத்  தயாராக இன்று நிற்கும் மேப்பிள் மரங்கள், டிசம்பர் ஜனவரி மாதங்களில் பனிப்பாலையின் நடுவே தன்னந்தனியே வறண்ட முட்களை போல நிற்கும். இலையுதிர் காலத்திலும் வசந்த காலத்தின் துவக்கத்திலும் இந்த மரங்களை கொத்தித் துளையிட்டு அதன் சாற்றை வடியவிட்டு தேனெடுப்பர்கள், மேப்பிள் சிறப்(Maple syrup) என்கிற மரத்தேன். உறைபனியும் வெயிலும் மாறிமாறி அமையும் இந்த காலத்தில் தான் அவற்றில் தேனூறத் துவங்குகிறது, இந்த மரங்கள் ஒவ்வொன்றும் வான்நோக்கி தரையிலிருந்து பொத்துக்கொண்ட ஒரு தேனூற்று, ஊற்று உறைந்து மர வடிவில் நிற்கிறது. உயிர்களை கடுமையாக தண்டிக்கும் குளிர்காலத்தில் கொடும் பனிப்பாலை நிலமெங்கும் விரவியிருக்க போகும் தேனூற்றுக்கள், அகக்கண்ணால் மட்டுமே காணக்கூடியவை.

ங்கர் பிரதாப் 

முந்தைய கட்டுரைசுந்தர ராமசாமி இணையதளம்
அடுத்த கட்டுரைஆழ்வார், கடிதம்