பூன் தினங்கள், கடிதம்

அன்பு ஜெ,

”எழுது! பூன் முகாமைப்பற்றி எழுது!” என்று முன்னோர்கள் சௌந்தர் அண்ணன் மூலமாகச் சொன்னார்கள். எழுதுவது என்று வந்துவிட்ட பின்பு சென்ற ஆண்டின் முகாமையும் சேர்த்தே எழுதிவிட வேண்டியதுதானே. சென்ற வருடம் எனது முதல் இலக்கியக்கூட்டம் என்பதால் எல்லாவற்றையும் கண்கள் விரிந்த ஆச்சர்யத்துடனே அனுபவித்தேன். முதல் முறை என்பதால் எப்படி அணுகுவது என்று தெரியாமல் குறை குடத்திற்கே உண்டான சத்தம் கொடுத்து விடக்கூடாது என்று கவனிப்போடு இருந்தேன்.

கலந்துரையாடலாக்குத் தேர்வு செய்த நூல்களில் மிகச் சொற்பமானதையே படித்திருந்தேன். ஆனால் அங்கு நான் கண்டதோ தேடல் மட்டுமே முன்வைத்துச் சேர்ந்திருக்கும் ஒரு நண்பர் கூட்டம். பயம் விலகியதும், முதல் நாள் இரவு பாஸ்டன் பாலாவை நீங்கள் எவ்வளவு வருடம் ஜெவை வாசிக்கிறீர்கள் என்று கேட்டது இன்னும் நினைவிருக்கிறது. நிகழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் வாசகர்கள் ஒரு இலக்கியப் படைப்பைப் பற்றிய உரையை ஆற்ற என் அகம் ஒரு பெரும் அறிவு திரளின் வாயிலில் நிற்பதாக உணர்ந்தது.

ஜெகதீஷின் சீரிய அவதானிப்புகள், விவேக்கின் வாசிப்பின் ஆழம், ரெமிதாவின் ஆங்கிலப்புலமை, மதுவின் நுண்மையான வாசிப்பு, பாலாஜி ராஜுவின் கவிதைப்பித்து என்று அண்ணாந்து பார்த்து பிரமித்து நின்றேன். விவாதங்களில் ஒரு கூற்றுத் தெளிவாகும்போது அந்த வினா எவரிடமெல்லாம் இருந்ததோ அவர்கள் முகங்களில் எல்லாம் ஒரு விளக்கு ஏற்றப்பட்டதைப் போல ஒரு தெளிவு பிறப்பதை வேடிக்கை பார்த்தேன். இரண்டு நாட்களின் நிகழ்வுகளிலும், இடைவெளிகளில் நடந்த உரையாடல்களிலும் பல முகங்கள் ஒளி கொண்டன. பல சமயம் ஜெயின் விளக்கத்தால், சில சமயம் மற்ற நண்பர்களால்.

முதல் முகாமிலிருந்து என் மனதில் இன்னும் நிற்பவை பெருஞ்செயல்கள் புரிந்தும் அதை வெளிக்காட்டாத பாஸ்டன் பாலாவின் எளிமை, பாலாஜி ராஜுவின் கவிதை வாசிப்பு குரல், ஷங்கரின் ஆழமான மௌனம், வி.பி.யின் உபசரிப்பு, ஆறடிக்கு மேலிருந்து நம்மை நோக்கும் அருணின் குழந்தை புன்னகை, நடைப்பயிற்சி, திருச்செந்தாழையின் ஆபரணம், பல வருடங்கள் நீடிக்கப் போகும் நட்புகள். இவற்றுடன், ஒரு மெல்லிய சிலிர்ப்புடன் கூடி நினைவிற்கு வரும் அந்தக் கண்கள். அவை ஜெயமோகனை நோக்கி உரையாடி, அதட்டி, சிலாகித்து, பெருமிதம் கொள்ளும் அருண்மொழி நங்கை அவர்களின் கண்கள்.

இவ்வருடம் சற்று முன்னேற்பாடாகத் தேவையான நூல்களைத் தேடி வைத்து, சிலவற்றைப் படிக்கவும் செய்து, கொஞ்சம் தயாராக இருந்தேன். சென்ற வருடம் போல ஜெவை பார்த்து இரண்டு புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொண்டு திரும்பாமல், ஒன்றிரண்டு அரைகுறை கருத்துக்களையும் சொல்லி, முற்றாத கேள்விகளையும் கேட்டுவிட்டேன். கேள்வியோ கருத்தோ கற்கும் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் ஆய்வுக்கட்டுரையின் ஆழத்தோடு பதில் வந்தது. பதில் சொல்பவர் மீது நம்பிக்கை வைத்து அடுத்து வருடமும் தொடரலாம் என்று இருக்கிறேன்.

முகாமிற்குச் செல்லும் வழியில் கவிதை அமர்வுக்கான கவிதைகளைக் கூட்டாக அலசி ஆராய்ந்தது கவிஞர் இசையின் படைப்புலகிற்குள் என்னை இட்டுச் சென்றது. நண்பர் சிஜோ சிரத்தையுடன் முகாமில் விவாதிக்கப்பட இருந்த கவிதைகளையும், சிறுகதைகளையும் தொகுத்து அழகாக வெள்ளைத் தாளில் அச்சிட்டுக் கொண்டுவந்திருந்தார். எங்களுடன் காரில் வந்த நண்பர்கள் அதைப் படித்து விவாதித்துக்கொண்டே பயணத்தை இனிமையுடன் கடந்தோம்.

கவிஞர் இசையின் காதல் என்னும் கவிதையில் வரும் தடியனும் குழந்தையும் இப்போதும் என் உடனே இருக்கிறார்கள். திரிபுரம் கதை என்னை நகர்த்தவில்லை என்று கூறிவந்த எனக்கு. முதல் பகுதியிலேயே மது அந்தக் கதையின் ஆழத்தைத் தொகுத்துச்சொல்லி என்னைச் சரியான மனநிலைக்குக் கொண்டு வந்தார். அத்தோடு ஜெ, திரிபுராந்தகி புராணத்தையும் விளக்கி அந்தக் கதையின் ஆழத்தை புரிந்து கொள்ள உதவினார். அதன் பிறகு இரண்டு நாட்களும் பல்வேறு திறப்புகள், ரசனையின் உச்சங்கள், ஒளி கொண்ட முகங்கள் என்று வெகு ஜோராக நகர்ந்தது.

சுட்டுப் போட்டாலும் சங்கீதம் வராத பெஞ்சில் இருந்த என்னை, சென்ற வருடம் ராஜன் – ஒவ்வொருவரும் சிறு வயதுமுதல் எந்த இசை கேட்கிறார்களோ அந்த இசையே அவர்களுக்குச் சிறந்த இசையாகத் தெரியும் என்று சொன்னதும். அதனால் சினிமா இசை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அதில் ஒன்றும் ரசனை குறைவு இல்லை என்று சொன்னதும் ஒரு சிறு திறப்பை அளித்தது. இந்த வருடம் சிம்ஃபொனி, மரபிசை, பாப் என்று சற்றே என் எல்லைகளை விரிக்க உதவியது. ஏற்றப்படும் விளக்குகள் எல்லாமே சிறு விளக்குகள் அல்ல, சில விளக்குகள் ராஜன் போலத் தன்னளவில் மிகப்பெரிய விளக்குகள்.

இந்த வருடம் புதிதாய் சிவஞானம், ஜெயஸ்ரீ போன்ற இன்னும் சில ஆழமான வாசகர்களும் பங்களிப்பாளர்களும் பங்கேற்றது ஒரு சிறப்பு. முதற்கனல் பற்றி உரை நிகழ்த்திய மதனிடம் கேட்டேன், எத்தனை முறை படித்தீர்கள் என்று. மூன்று முறை என்றார். அந்த ஆழம் உரையில் தெரிந்தது, எழுத்து வடிவில் வெளியிடுவார் என்று நம்புகிறேன். டைமிங் ஜோக் போல டைமிங்கோடு உளுந்து வடை கவிதையைச் சொல்லி சிரிப்பில் ஆழ்த்திய ராஜு விற்கு ஒரு நன்றி. கம்பராமாயணம் நிகழ்வில் ஒரு உரையாக இருக்குமென்று கேட்டதும், உரையாளரின் வயதைப்பற்றி ஒரு அனுமானம் இருந்தது. சென்ற வருடம் ஜீன்ஸ் டி-ஷர்ட் அனிந்து “ஹாய் ஐ ஒர்க் பார் எ ஸ்டார்ட்டப் ” என்று அறிமுகம் செய்துகொண்ட இளைஞர் விசு ஆர்வமாய்க் கம்பனை எல்லாருக்கும் கடத்திச் சென்றார். இந்த வருடமும் இளைஞர்களான பிரபுவும், விஜயும் மற்றவர்களோடு சேர்ந்து பாடி, பின்பு விளக்கம் கொடுத்தார்கள்.

பழனியின் ஆழி சூழ் உலகு என்ற நூலைப்பற்றிய உரை முடிந்ததும் என்னைச் சுற்றி காற்றின் இரைச்சலும், உடம்பில் மெல்லிய ஈரமும் குறைவது கவனிக்க முடிந்தது. கட்டுமரத்தின் மேல் ஏற்றி ஒரு சுற்று சுற்றி கூட்டி வந்துவிட்டார்.

கடைசியாய் மீண்டும் அருண்மொழி நங்கை அவர்களின் கண்கள். ஜெவை அருண்மொழி கவனிக்கும் பொழுது அவர் கண்களைப் பார்க்க வேண்டும். சில சமயம் அன்னையின் பெருமிதம், சில சமயம் ராதையின் பித்து, சில சமயம் மரத்தில் பூ உதிர்த்து விளையாடிய சிறுமியின் துள்ளல், சில சமயம் மெல்லிய எள்ளல் என்று மாறி மாறி எத்தனை வெளிப்பாடுகள். அவ்வப்பொழுது ஜெவும் அந்தக் கண்களைப் பார்த்துத் தன்னைத்தான் சரிபார்த்துக்கொள்வது போல் தோன்றும். டால்ஸ்டாய் பற்றியும் ஷேஸ்பியர் பற்றியும் உரை நிகழ்த்தும்பொழுது எழுத்தாளராக முற்றிலும் வேறொரு தளத்திலிருந்து நம்மைப் பார்க்கும் அதே உணர்ச்சிமிக்கக் கண்கள். இந்தக் கண்களால் வார்த்தெடுக்கப்பட்டவர்தான் ஜெயமோகனா அல்லது ஜெயமோகனுக்காக வார்க்கப்பட்ட கண்களா? அடுத்த வருடம் கண்முன் அரங்கேறும் இந்தக் சீமந்தகக் காதலுக்கு நிகழ்வில் ஒரு இடம் அமைக்க வேண்டும், முன்னோர்கள் சார்பாகச் சௌந்தர் அண்ணனைக் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

பாலாஜி

முந்தைய கட்டுரைஆளுமைப்பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைதியாகம், காதல், இசை