ஓவியத்தினூடாக அறிதல், கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். சரியான அறிமுகம் இல்லாமல் ஓவியங்களையும் கலை பொருட்களையும் ரசிக்கும் பொழுது முற்றிலும் தவறான புரிதலை அடைகிறோம். மிக முக்கியமாக, படைப்பு தரும் ஆழத்தை இழந்து விடுகிறோம். இந்த பிரச்சனை அணுக நல்வாய்ப்பாக அமைந்தது ஆசிரியர் A.V. மணிகண்டன் அவர்களின் நவீன கலை பற்றிய அறிமுக வகுப்பு.

எது கலை எது அல்ல என்ற கேள்விக்கு பதிலாக முதல் அமர்வு அமைந்தது. படிமங்கள் அது செயல்படும் விதம் அதை பயன்படுத்தி அரசியல் மற்றும் மத நிறுவனங்கள் செய்யும் பரப்புரை, அதன் நன்மை தீமைகள் இவ்வாறாக  முதல் அமர்வு முடிந்தது. முக்கியமாக புகைப்பட கலை எவ்வாறு ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளைப் பற்றிய தவறான ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்பட்டது என்று விரிவாக விளக்கினார். மேற்கத்திய நாடுகளின் இந்த நோக்கத்தை உணராமல் நாமே அவர்களுக்கு தேவையான புகைப்படங்களை எடுத்து இந்த போக்கிற்கு உதவுவதைப் பற்றியும் குறிப்பிட்டார்.  இது ஒரு முக்கியமான அற பார்வை . புகைப்படத்தின் நோக்கத்தை அறியாமல் அதை வெறும் வண்ணக் கலவையாக காண்பதில் உள்ள தவறுகள் புரிந்தது.

ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட  கால பிரக்ஞை,  தான் மறைந்த பின்னரும் தன்னுடைய நினைவை விட்டு செல்ல நினைக்கும் முனைப்பு, அதன் முதல் தடையமான குகை ஓவியங்களில் இருந்து, அது வளர்ந்து, கிளை பிரிந்து, முயங்கி இன்றைய காலகட்டம் வரையான  (பின் நவீனத்துவத்திற்கு பிறகான) கலைப் போக்குகள் வரை இந்த வகுப்பில் கற்பிக்கப்பட்டது. கிரேக்க, ரோம, மறுமலர்ச்சி, நவீன, நவீனத்துவ கால கலை போக்குகள் அதன் உட்பிரிவுகள் பற்றி ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் அளிக்கப்பட்டது. அதன் பின் ஒவ்வொரு காலகட்டமாக விரிவாக பார்த்தோம். அனைத்து கலைப்போக்குகளை விவரிக்கும் பொழுது அதற்கு பின்னணியான தத்துவங்கள் என்ன,  தத்துவ ஆசிரியர்கள் யார்,  அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இதை தொகுத்துக் கொள்வதற்கு மிக வசதியாக இருந்தது.

முற்கால கலை வெளிப்பாடுகளில் மதம் மட்டுமே பிரதான பங்கை வகிக்கிறது. மத நிறுவனங்கள் படிமங்களை பற்றிய தெளிவான பார்வை கொண்டிருந்தன. அவற்றை தங்கள் வளர்ச்சிக்கும் வெளிப்பாட்டிற்கும் பரப்புரைக்கும் எவ்வாறு பயன்படுத்தின என்று விரிவாக விவரிக்கப்பட்டது. மறுமலர்ச்சி காலத்திலும் மதமே பிரதானமாக இருந்தது. அதற்கு முந்தைய கால கட்டத்தின் படிமங்களை அது பயன்படுத்தினாலும் நுண்ணிய வேறுபாடுகளால் அது மனித மனதிற்கு மேலும் நெருக்கமாக இருந்தது. ஓவிய கலையில் மனித நோக்கு சார்ந்த புரிதல் (Perspective) எவ்வாறு மறுமலர்ச்சி கால கலை புரட்சிக்கு வித்திட்டது என்று  விரிவான அமர்வு அமைந்தது. அதன் சாராம்சப்படுத்துதல் (Theorize) எவ்வளவு முக்கியமான ஒரு முன் நகர்வு என்று விவரிக்கப்பட்டது. இந்த சாராம்சப்படுத்தலின் மூலம் அதன் தரிசனம் சிற்பம், புடைப்பு சிற்பம், கட்டிடக்கலை,  என்று அனைத்திலும் பிரதிபலித்து, ஒட்டுமொத்த பாய்ச்சலான மறுமலர்ச்சி காலகட்டம் பற்றிய விரிவான அமர்வாக அமைந்தது.  (தரிசனத்தின் சாராம்சப்படுத்துதல் எவ்வாறு ஒரு பண்பாட்டின் பல்வேறு கலைகளுக்கு வளர்ச்சியை கொடுக்கிறது,  இந்தியாவில் இதற்கு இணையாக ஏதேனும் நிகழ்ந்ததா என்பதை பற்றி  A V மணிகண்டன், அஜிதன்,  ராஜமாணிக்கம் இடையே இரவு ஒரு சிறு விவாதம் நிகழ்ந்தது.) கலை வடிவங்கள், அதன் பின்புலமான தத்துவங்கள்,  தத்துவ ஆசிரியர்கள், விமர்சகர்,  கவிஞர்கள்  என்று இந்த புலத்தின் அனைத்து

கூறுகளையும் இந்த வகுப்பு தொடர்புபடுத்துவதால், இந்த வகுப்பின் கற்றல்களை  எங்கெங்கெல்லாம் மேலும் வளர்த்தெடுக்க முடியும் என்று அறிதல் ஏற்பட்டது.

நவீனத்துவ அலையை அறிமுகப்படுத்தும் பொழுது,  ஆசிரியர் சொன்னது இதில் கலை,  கலை அல்ல என்ற பகுபாடே கிடையாது. கலை என்று கலைஞன் வரையறுக்க பொருளிலிருந்து  நாம் எவ்வளவு தூரம் செல்கிறோம் என்பதே முக்கியம். அதாவது நவீனத்துவ கலை என்பது நமக்கு முன்னால் வைக்கப்பட்ட ஒரு பிரதிபலிக்கும் ஆடி. உதாரணமாக, ஒரு பெண்ணின் அலைபாயும் சிகை அலங்காரத்தை காண்பித்து இது எதையெல்லாம் உங்களுக்கு நினைவுபடுத்துகிறது என்று கேட்டார்.  இதிகாசங்களில், காப்பியங்களில், சினிமாவில் இருந்து அதற்கு ஒப்புமைகள் சொல்ல, அதை ஆமோதித்து கவிஞர் இசையின் “லூஸ் ஹேர்” கவிதை வரை நீட்டிக்க முடியும் என்று சொன்னார்.

இந்த நவீனத்துவ ஓவியத்தை குறிப்பிடும் பொழுது அதை இரண்டு விமர்சகர்களின்  பார்வையாக முன்வைத்து அது எடுத்துச் செல்லும் தூரங்களை விளக்கினார். இது விமர்சகர்களின் பங்களிப்பை புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைந்தது. கலையின் வரலாறு ஏன் முக்கியமாகிறது? இந்த இரண்டு கலை படைப்புகளை நான் எந்த வரலாற்று புரிதல் இல்லாமல் பார்த்தால், இது வெறும் சாதாரண கவன ஈர்ப்பு மட்டுமே என்று கடந்து செல்லவே செய்வேன்.   கலை வரலாற்று பின்புலத்தோடு இதை அணுகும் போது அது கொடுக்கும் உச்சங்கள் பிரத்யேகமானவை. நேரமின்மை காரணமாக புகைப்படக்கலை பற்றி பேச முடியவில்லை. ஆனால் ஆசிரியரின் மூன்று புகைப்பட புத்தகங்களை குறித்து விவாதித்ததில் புகைப்பட இதழியல் பற்றிய புரிதல் ஏற்பட்டது.

ஒவ்வொரு கலை வடிவத்திலும் உன்னதமாக்கல் எவ்வாறு நிகழ்கிறது என்று ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் கோடிட்டு காட்டப்பட்டது.  கடைசி 15 நிமிடத்தில் மொத்த வகுப்பையும் வேகமாக முன்னோக்கி காண்பித்தது, ஒரு மின்னல் தெறிப்பு போல் இருந்தது.

வண்ணங்களும் வடிவங்களும் மட்டுமே கலையை உருவாக்குகிறதா? மேற்கத்திய கலைக்கும் இந்திய கலைக்கும் இருக்கும் அடிப்படையான வேறுபாடு? பின் நவீனத்துவத்திற்கு பிறகான போக்குகளில் ஏன் கலைஞர்கள் வாங்கவும் விற்கவும் முடியாத கலை வடிவங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்? நவீன கலையில் பெண்ணியத்தின் தாக்கங்கள் என்னென்ன? பல்வேறு காலகட்டங்களின் இருந்த தடைகளை காண்பியல் கலை எவ்வாறு தாண்டி செல்கிறது? இதன் வருங்கால பாய்ச்சல்கள் எவ்வாறு இருக்கும்? புகைப்படக்கலை சாத்தியப்படுத்திய நவீன கலை வடிவங்கள் என்ன? இவ்வாறு பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகவும், அது சார்ந்து சிந்தனையை தூண்டும் விதமாகவும் இந்த வகுப்புகள் அமைந்தன. ஆசிரியர் A V மணிகண்டன் அவர்களுக்கு என் இதயத்தில் இருந்து நன்றிகள்.

திரு A V மணிகண்டன் தனித்துவமான ஆளுமையாக நான் காண்கிறேன்.   காரணம், காண்பியல் கலை மட்டுமல்லாது,  செவ்விலக்கியம், நவீன இலக்கியம்,  கோட்பாட்டியல், சித்தர் பாடல்கள் சார்ந்த அவருடைய ஆழமான புரிதல் மற்றும் இவையனைத்தையும் உடுவிறிச்செல்லும் அவரின் அறநோக்கு.  இந்த தனித்தன்மை காரணமாக அவர் வகுப்பின் கற்றலை பல தளங்களுக்கு எடுத்துச் செல்கிறார் . நவீன இலக்கிய வாசகருக்கும் கலை ரசிகர்களுக்கும் அவர் அளிக்கக்கூடிய கற்றல் சாத்தியங்கள் பற்பல. தன்னுடைய நெருக்கடியான பணி சூழலுக்கும் நடுவில் கடந்த 10 மாதங்களாகஇந்த வகுப்பிற்காக தயார் செய்திருக்கிறார். அவருடைய 20 வருட தேடலின் விளைகனி என்றே இதை கொள்ளவேண்டும். (கேள்வி பதிலிலும், விவாதத்திலும் அவரில் வெளிப்படும் வேகமும் கூர்மையும்  இன்னும் பிரத்தியேகமானது :))

நித்யவனத்தில் நீங்கள் ஏற்படுத்தியுள்ள பிரியமான சூழல், இந்த அமைப்பின் ஆசிரியர் நிரை, கற்றல் சாத்தியங்கள் அதன் பின்னால் உள்ள உங்களுடைய தொலைநோக்கு அனைத்திற்கும் என் வணக்கங்கள்.

இதன் நிர்வாகியாகவும், செயலாற்றுபவராகவும், வகுப்புகளில் பங்கெடுப்பாளராகவும், விவாதங்களில் பங்களிப்பாளர் ஆகவும், எங்கும் திகழும், அந்தியூர் மணி அண்ணன் அவர்களுக்கு என் நன்றி.

அன்புடன்,

 

க.பாலமுருகன்

முந்தைய கட்டுரைதியானப்பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைகுரு நமச்சிவாயர்