விஷ்ணுபுரம் விருந்தினர், கடிதம்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் எழுதிய படைப்புகளை இணையம் வழியாக தேடித்தேடிப் படித்துக்கொண்டிருக்கிறேன். தீபு ஹரி கவிஞர், ஆனால் அவர் எழுதும் கதைகள் சிலவும் எனக்கு மிகவும் அணுக்கமானவையாக இருந்தன. நான் சென்ற ஐந்தாண்டுகளில் சென்றுவந்த சில சிக்கலான மனநிலைகளை எளிமையான சில உருவகங்கள், படிமங்கள் வழியாகச் சொல்கிறார்.

இரண்டு சிறுகதைகளை வாசித்தேன். மித்ராதேன்கூடு. சிறுகதைக்குரிய டிவிஸ்ட் அல்லது சம்மிட் அல்லது சப்ளிமேஷன் ஏதும் நிகழவில்லை. ஒருவகையான கவிதைக்கதைகள் என்று சொல்லலாம். ஒரு படிமத்தைச் சொல்கிறார். அல்லது ஒரு மொழிச்சூழலை எழுதுகிறார். ஆனால் அவை உண்மையான மனநிலையின் வெளிப்பாடாக இருப்பதனால் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்குகின்றன ( மனச்சோர்வில் இருப்பவர்கள் படித்தால் உடனே அதெல்லாம் தீவிரமடையும்)

மனச்சோர்வுநிலை என்பது இன்றையக் காலகட்டத்துக்குரிய பெரிய பிரச்சினையாக உள்ளது. என் அத்தைகள் சித்திகளெல்லாம் வாழ்க்கையிலே பல பிரச்சினைகள் கொண்டவர்கள். ஆனால் ஒரு பாட்டம் அழுது மூக்கைச்சிந்திவிட்டால் சிரிப்பார்கள். அப்படி அழமுடியாதவர்களாக நம் படிப்பும் வேலையுமெல்லாம் நம்மை ஆக்கிவிட்டது. ஆகவே ஆழமான மனச்சோர்வு. கிளினிக்கல் டிப்ரஷன். அந்த மனநிலையில் கிடைக்கும் தனிமை, அலைக்கழிப்பு கூடவே பலவகையான தரிசனங்கள் ஆகியவை தீபு ஹரியின் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுகின்றன.

ராஜி

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விருந்தினர்களில் வாசு முருகவேலின் மூத்த அகதி, ஜாஃப்னா பேக்கரி ஆகிய நாவல்களை வாசித்தேன். வாசுவின் முக்கியமான சிறப்பம்சம் அவரிடமிருக்கும் மென்மையான ஒரு சிரிப்பும் நையாண்டியும்தான் என நினைக்கிறேன். சுகுமாரன் ஒரு கவிதையில் சொல்வதுபோல ’தற்கொலைக்குத் தோற்றவனின் அமைதி’ போல கைவிடப்பட்டவர்களுக்குரிய ஒரு சோர்வு நிறைந்த விட்டேத்திநிலை வெளிப்படுகிறது. அது மூத்த அகதி நாவலில் சிறப்பாகவே வெளிப்படுகிறது.

குமரன் ஆறுமுகம்

விஷ்ணுபுரம் விருந்தினர்: பா.ராகவன்

விஷ்ணுபுரம் விருந்தினர், சந்திரா

விஷ்ணுபுரம் விருந்தினர் – க.விக்னேஷ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர்- வாசு முருகவேல்

விஷ்ணுபுரம் விருந்தினர்: தீபு ஹரி

விஷ்ணுபுரம் விருந்தினர்: அரவின் குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்:இல.சுபத்ரா

விஷ்ணுபுரம் விருந்தினர்: லதா அருணாசலம்

முந்தைய கட்டுரைஆலயக்கலை வகுப்பு- அறிவிப்பு
அடுத்த கட்டுரைகண்களைக் கண்டடைதல், கடிதம்