குள்ளச்சித்தன் – சதீஷ்குமார்

குள்ளச்சித்தன் சரித்திரம் தமிழ் விக்கி

பழகி தேய்ந்து போன ஒரே மாதிரியான வாழ்க்கை ஓட்டத்தில் எந்த அமானுஷ்யங்களுக்கும் பேய்களுக்கும் கடவுள்களுக்கும் ஏன் ஆன்மீகத்திற்கும் கூட இடமில்லை தாக்ஷ்ன். இந்த சூழலில் திடீர் என்று ஒருவர் உள்ளே புகுந்து நம் கடந்த காலம், எதிர்காலம், முன் ஜென்மங்களில் நாம் எடுத்த பிறவிகள் என்று ஒன்று ஒன்றாக புட்டு புட்டு வைத்தால் ‌‌அதை நாம் எப்படி எதிர்கொள்வோம். “இப்பொழுது நீ நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் தர்க்க அமைப்பை குழந்தைத்தனமானது என்று சொல்லி சிரிக்கக் கூடிய வேறு ஒரு தர்க்க அமைப்பும் உள்ளது தம்பி” என்று சொல்லி இதமான புன்முறுவலுடன் தோளில் சிறு தட்டு தட்டி சென்றால் நாம் என்னதான் செய்வது.

யுவன் சந்திரசேகரின் குள்ள சித்தன் சரித்திர நாவலே காலம் இடம் ரூபம் ஆகியவற்றைப் பற்றி மனித பிரஞ்ஞை கொண்டுள்ள அறிவின் எல்லை மற்றும் அறிவின் போதாமையை பற்றி உசாவுகிறது எனலாம். மனிதப் பிரஞ்ஞையின் நவீன அறிவை தவிர்த்து வேறு ஏதேனும் மாற்று அறிவை நிகழ்வுகளின் மேல் போட்டுப் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா அவ்வாறு போட்டுப் பார்த்தால் எவ்வாறு இருக்கும் என்று அறிய முயல்கிறது. நாவலில் நிறைய அம்சங்கள் புதைந்து கிடக்கிறது என்றாலும் என் தோதுக்காக நான்காக பகுத்து முன் வைக்கிறேன்.

முதலாவது ஜென்ம பிறவிகள் பற்றியது பல பிறவிகளை நாம் தொடர்ந்து ஜென்மம் ஜென்மமாக எடுத்து வருகிறோம் என்று வைத்துக் கொண்டால் காலம் என்பது ஒரு நேர் கோடாக கற்பிதம் செய்துகொள்ளலாம். அதில் காலம் காலமாக வேறு வேறு உருவம் தரித்துக்கொண்டே வருதல். குள்ள சித்தன் சரித்திர நாவலில் குள்ள சித்தனின் மறுபிறவியாக வரும் முத்துச்சாமி முன் ஜென்மத்தில் தான் எடுத்த பல அவதாரங்களை நினைவு கூறி செல்கிறார். கழுகாக புலியாக பென்குயினாக, ராஜ குல போர் வீரராக, ஆங்கிலேயனாக, சித்தராக என்று முந்தைய ஜென்மங்களில் தான் எடுத்த பிறவிகதைகளை கூறுகிறார். “பிறவி ஜென்மங்களை நினைவூட்டி பார்பது நம் கடந்த காலத்தை நினைவூட்டி பார்பது போல மிகவும் எளிமையானது தான். ஆனால் பயன் கருதி மட்டுமே சிந்திக்க கூடிய இனமாக மனித இனம் மாறிவிட்டமையால் இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க நேரமில்லாமல் ஆகிவிட்டது. உண்மையில் முன் ஜென்மங்களை காண்பது என்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமில்லை கையை ஊன்றி சுவரில் எம்பி ஏரி உட்காருவது போன்ற மிக எளிதுதான்” என்கிறார் சித்தர் முத்துசாமி.

இரண்டாவது பல ரூபங்களை ஒரே காலத்தில் ஆனால் வேறு வேறு இடத்தில் வைத்துப் பார்ப்பது. இதில் காலம் என்பது நேர்கோடல்ல மாறாக ஒன்றுக்கொன்று இணையாக ஒற்றைக் கற்றையாக இருப்பதாக பார்ப்பது. குள்ள சித்தன் திருவண்ணாமலையில் வாழ்ந்த அதே காலத்தில் மதுரையில் வாமன சுவாமிகளாகவும் ,பழனியில் ஆலமரமாக மாறிய சித்தராகவும், தாயம்மாவிற்கு உதவிய கிராமத்து சித்தராகவும் ஒரே காலத்தில் வேறு வேறு இடத்தில் ஒரே ரூபம் தரித்து அவதரிப்பது. அவர்கள் எல்லாரையும் ஒன்றாக இணைக்கும் ஒரு கிளவுட் மனம் எங்கோ தனியேஸஇருப்பது போன்ற உணர்வை கொண்டுவருவது.

மூன்றாவது, காலத்தை ஒரு வட்டமாக ஊகிப்பது. நேற்று இன்று நாளை என்ற எதுவும் இல்லாமல் ஒன்றோடு ஒன்று குழம்பிக் கிடப்பது மாதிரி கற்பிதம் செய்துகொள்வது. குள்ள சித்தன் சரித்திர நாவலில் சிகப்பி பழனிச்சாமி என்ற தம்பதியருக்கு பத்து வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி பல பரிகாரங்கள் செய்து பல கோயில் ஏறி இறங்குகின்றனர். திருவண்ணாமலையில் எதேச்சையாக சந்திக்கும் பண்டாரம், இன்னும் ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கும் என்று சொல்லி செல்கிறார். அதற்கடுத்த ஆறு மாதங்கள் கழித்து பழனியும் சிகப்பியும் கரட்டுப்பட்டியில் உள்ள கண் தெரியாத ஜோசியர் ஒருவரை பார்க்க செல்கிறார்கள். அவர் சீக்கிரம் குழந்தை வரம் வரப்போகிறது என்றும் வீட்டில் உள்ள தாயத்துக்கள் எந்திரங்கள் போன்றவைகள் இனிமேல் தேவையில்லை என்று சொல்லி ஆற்றில் எறிந்து விட சொல்கிறார். ஏதேனும் தங்கமாக இருந்தால் கோமியத்தில் கழுவி விற்று விட சொல்கிறார் வாங்குபவருக்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்பதால்.

ஜோசியர் சொன்னபடியே செய்த அவர்கள் ஒரே ஒரு தங்கத் தாயத்தை மட்டும் கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஒரு மூன்று நான்கு மாதங்கள் கழித்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்படி ஒரு தங்க தாயத்து மிஞ்சி விட்டது என்று கருப்பி கண்டு கொள்கிறாள் அன்று மதியமே அந்த தாயத்தை விற்க இருவரும் முடிவு செய்கிறார்கள். அன்று மதியம் பழனி தங்கத்தாயத்தை விற்க கிளம்பும் பொழுது அவர் வீட்டிற்கு ஒரு இளைஞன் வருகிறான். தான் காரைக்குடியில் இருந்து வருவதாகவும் நீங்கள் விற்க போகும் தங்கத்தை கோமியத்தில் கழுவ மறந்து விட்டீர்களாம் இதை திருவண்ணாமலை பண்டாரம் சொல்லிக் கொடுக்க சொன்னார் என்று கோமிய பாட்டிலை கொடுத்து விட்டு செல்கிறார்.

பழனிக்கு கால இட பேதம் குழம்பி தலை சுற்றுகிறது. மூன்று மாதம் முன்பு கரட்டுப்பட்டி ஜோசியர் சொன்ன விடயம் எப்படி ஒரு வருடம் முன்பு சந்தித்த பண்டாரத்திற்கு தெரியும். இரண்டு மணி நேரம் முன்பு தான் ஒரு தாயத்து மிஞ்சி இருக்கிறது என்று எங்கள் இருவருக்கும் தெரியும், அது இருக்க எப்படி ஒருவர் காரைக்குடியில் இருந்து சரியாக இங்கு வர முடியும் அப்படி வருவது என்றால் கூட ஆறு எட்டு மணி நேரம் எடுக்குமே. திருவண்ணாமலையில் அலைந்து திரியும் பண்டாரம் எப்படி காரைக்குடியில் உள்ள அதுவும் சரியாக காது கேட்காத இவருக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தினார் (செல்போன் புழக்கத்தில் இல்லாத காலம்.)

நான்காவது கால பிரஞ்ஞை சம்பந்தமானது. மனிதனின் ஒருநாளும் பூவின் ஒருநாளும் பூமியின் ஒரு நாளும் வேறு வேறு காலமல்லவா இது நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது ஆனால் மனிதனாக நான் உணரும் காலப் பிரஞ்ஞையும் சக மனிதன் உணரும் காலப்பிரஞ்ஞையும் வேறு வேறாக இருந்தால். நாவலில் வரும் தாயம்மாள் தன் மகள் தவறான உறவால் கருத்தரித்திருக்கும் விசயத்தை ஊரார் கண்ணில் இருந்து மறைக்க வேண்டும் என்று பிரயாசைப்படுகிறார். தன் மகள் மாசமாக இருக்கும் எட்டு மாத காலமும் ஊராருக்கு ஒரு இரவாக மாற்றி தருகிறார் சித்தர். ஆக இன்று சாயந்திரம் தாயம்மாள் கிளவியிடம் காலை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சென்று மறுநாள் காலை வந்து பார்த்தால் மூன்று மாத கர்ப்பம் முழு பிரசவமாகி குழந்தை பிறந்து தொலைந்தும் விடுகிறது. இது முடியும் என்றும் என்னும் பட்சத்தில் காலத்தின் மீது நாம் கொண்டிருக்கும் பிரஞ்ஞைக்கு என்ன தான் மதிப்பு.

நாவல் மிக மிக சுவாரசியமாக இருந்தது முதல் வாசிப்பில் அனைத்தும் குழம்பிக் கிடந்தாலும் இரண்டாம் வாசிப்பில் ஒரு ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கப்பெற்றது அனைத்தும் அடிப்படையான கேள்விகள் பதிலை பெறுவதற்கு அல்ல கேள்வியாக மட்டுமே எஞ்ச உருவான கேள்விகள் உயிர்த்துளிப்புள்ள ஒவ்வொரு மனமும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் நாவல் முழுவதும் விரைவி உள்ளது. இப்போதுள்ள கால விட அமைப்பை சிறு பிள்ளைகள் செப்பு வைத்து விளையாடும் விளையாட்டாய் தென்பட வைக்கும் வேறு ஒருத்தருக்கு அமைப்பு இருப்பதாக உணர்த்துகிறார் மாற்று மெய்மையை முன்வைக்கும் யுவன் சந்திரசேகர்.

சதீஷ்குமார்

முந்தைய கட்டுரையோகம், கடிதம்
அடுத்த கட்டுரைகதாநாயகி – வாசிப்பு