காவல் கோட்டம்:எஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

அன்பிற்குரிய ஜெயமோகன்
தங்கள் வலைப்பதிவில் காவல்கோட்டம் பற்றிய விளக்கம் கண்டேன். அதில் என்னுடைய நெடுங்குருதி முதலிய நூல்களுக்கான அடிப்படை தரவுகளை வெங்கடேசன் தான் அளித்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

இது தவறான தகவல். யாரிடமிருந்து நீங்கள் இதை பெற்றீர்கள் என்று தெரியவில்லை. இது முழுமையான பொய். விசாரிக்காமல் எப்படி இது போன்ற முடிவுகளை வெளியிடுகிறீர்கள் என்பது வருத்தமளிக்கிறது .

கூடுதலான  இன்னொரு தகவல் பிழை நெடுங்குருதி முதலிய நூல்கள் ? என்றால், வேறு எந்த புத்தகங்கள். என்ன தகவல்கள். எதற்காக முதலிய என்ற சொல்லை பயன்படுத்துகிறீர்கள் என்றும் தெரியவில்லை.

காட்டின் உருவம் என்ற என்னுடைய மாடு திருடும் கள்ளர்களை பற்றிய சிறுகதை 1992ல் வெளிவந்திருக்கிறது. அது குற்றப்பரம்பரை பற்றிய கதை தானே. 1992ல் இந்த களவு உலகை பதிவு  செய்ய துவங்கிய நான் புலிக்கட்டம்,  ரகசிய ஆண்கள் என கள்ளர்கள் பற்றி தொடர்ச்சியாக பல கதைகள் எழுதியிருக்கிறேன்.  அதன் தொடர்ச்சியே நெடுங்குருதி.

நான் ராமநாதபுர மாவட்டத்தில் பிறந்தவன். மதுரையில் படித்தவன். தெருத்தெருவாக மதுரையில் பல காலம் சுற்றியலைந்தவன். எனக்கு மதுரை மற்றும் அதன் கிழக்கு மேற்கான கிராமங்கள் , அங்கு வாழும் மக்கள் பற்றி இன்னொருவர் சொல்லிதர வேண்டியதில்லை.

மதுரையை பற்றிய ஆதாரமான சரித்திர நூல்களான நெல்சன் மானுவல், மதுரைகெஜட்டியர், ஒர்ம் ஜெர்னல் துவங்கி தர்ஸ்டனின் குலங்களும் குடிகளும் நாயக்கர் வரலாறு  உள்ளிட்ட பல முக்கிய புத்தகங்கள்  ஏசியன் எஜ÷கேஷன் சொசைட்டி வெளியீடுகளாக  கிடைக்கின்றன.  மேலும் மதுரை மிஷனரி ரிக்கார்ட்ஸ் துவங்கி ஆவணகாப்பகம் ரிக்காடு வரை யாவும் கொஞ்சம் முயற்சி செய்தால் வாசிக்க எளிதாக கிடைக்கின்றன.  இதில் கிடைக்காத தரவுகள் கூட இன்று கோர்ட் ஆவணகாப்பகத்தில் நேரடியாக வாசிக்க கிடைக்கின்றன.

மதுரையில் இருந்து கள்ளர்பஞ்சாயத்துமுறை பற்றி டாக்டர் ஜெகதீசன் என்ற பேராசிரியரின் புத்தகம் வெளிவந்திருக்கிறது. அதில் கீழக்குயில் குடியில் சிடி ஆக்டில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய பல முக்கிய குற்றவியல் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய  கோர்ட் ஆவணங்களின் முக்கிய தரவுகள் ஆண்டுவாரியாக தரப்பட்டுள்ளன. அது  நூலகங்களில் கூட வாசிக்க கிடைக்கின்றன.  இதை யார் வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்பதே உண்மை.

மதுரைக்கு வரும் வெளிநாட்டுகாரர்களுக்கு வேண்டுமானால் கைடு தேவைப்படலாம். நான் உள்ளுர்காரன் காரன். எனக்கு வரலாறும் தெரியும். அதன் இருட்டடிப்புகளும் தெரியும்.

வெங்கடேசன் இரண்டு முறை கீழக்குயில்குடியில் உள்ள சமண மலையை காண்பதற்கு  அழைத்து சென்றிருக்கிறார்கள். அதை பற்றி நானே குறிப்பிட்டிருக்கிறேன். அதற்காக நெடுங்குருதி நாவலில் வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறேன்.

இது போல உங்களையும் அவர் கீழக்குயில்குடிக்கு அழைத்து சென்றார் என்பதையும் அறிவேன்.

இன்னொரு முறை நான் கண்ணகி கோட்டம் நோக்கி பயணம் செய்யும் போது என்னுடன் வெங்கடேசனை துணைக்கு நான் தான் அழைத்து கொண்டு சென்றேன். அப்போது தான் பெரியார் அணையை பார்வையிட்டோம்.  பென்னிகுக் பற்றிய அறிந்து கொண்டேன். அதை  நன்றி மறக்காமல் நானே தெரிவித்திருக்கிறேன்.

இதை தவிர அவரோடு வேறு பயணம் எதையும் நான் மேற்கொண்டதில்லை.

ஆனால் காவல்கோட்டம் விமர்சனத்தின் பின்பு இது போன்ற மலினமான அவதூறுகள் வெளியே வந்து கொண்டிருக்கின்றன.

தமிழின் முக்கிய படைப்பாளியாக நான் மதிக்கும் நீங்களும் இதை நம்புவதால் தான் இந்த பதில் எழுத வேண்டிய அவசியம் உண்டாகிறது.

மிக்க அன்புடன்
எஸ்ராமகிருஷ்ணன்.

அன்புள்ள ராமகிருஷ்ணன்,

உங்கள் கடிதம் கண்டேன். வெங்கடேசன் உங்களுக்கு தகவல்கள் அளித்து உதவினார் என்பது நான் ‘செவி வழியாக’ கேள்விப்பட்டதுதான். உங்கள் நூல்களிலும் கட்டுரைகளிலும் நீங்கள் வெங்கடேசனை குறிப்பிட்டிருக்கிரீர்கள் .ஆகவே நம்பி விட்டேன். உங்கள் மறுப்பை நம்புகிறேன். அந்த குறிப்புக்காக தாங்கள் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும்

நீங்கள் குறிப்பிட்ட சில நூல்கள் என்னிடம் உள்ளன. ஆவணங்களை படித்து வருகிறேன். ஆனால் ஜெகதீசன் அவர்களின் நூல்களில் எனக்கு பெரிய ஏமாற்றம் உன்டு. அதை முன்னரே எழுதியிருக்கிறேன்
ஜெ

முந்தைய கட்டுரைகாவல் கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 3