Stories of the True வாங்க
பிரியம்வதா தன் கணவர் விஜயரங்கனுடன் அமெரிக்காவில் லாஸ் ஆஞ்சலிஸ் நகரில் சென்று இறங்கினார். அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பாளர் சங்க விருதுக்கான இறுதிப்பட்டியலில் என் அறம் கதைகளுக்கான ஆங்கில மொழியாக்கமான Stories of the True உள்ளது. அங்கே விஷ்ணுபுரம் நண்பர் ஸ்ரீராம் அவரை வரவேற்றார்,
ஸ்ரீராம் இயற்கையுணவு ஆர்வலர். பண்ணைப்பால் வினியோகம் செய்கிறார்- சேவைபோல. சொந்தமாக காய்கறித்தோட்டமும் வைத்திருக்கிறார். அவருடன் நான் லா வேகாஸ் சென்றிருந்தேன். அவர் அங்கே சூதில் தோற்கும்பொருட்டு கொண்டுவந்த பணத்தை முழுமையாக தோற்க முடியவில்லை. நடுவே சின்னச்சின்ன வெற்றிகள் வரவே பதறிவிட்டார். திரும்பும்போது கொஞ்சம் பணம் எஞ்சியிருந்ததில் அவ்வளவு வருத்தம். வழியெங்கும் புலம்பிக்கொண்டே இருந்தார்.
பிரியம்வதா ஸ்டோரீஸ் ஆப் த ட்ரூ நூல்களில் கையெழுத்திடும் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். 2013ல் ஆண்டுகளுக்கு முன்பு அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கக்கூடிய, ஆனால் இலக்கற்ற ஒருவராக தன்னை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு பதில்போட்டிருந்தேன். ஒரு வாசகியாக அவர் தொடர்ச்சியாக கடிதமெழுதிக்கொண்டிருந்தார்.
2016ல் நான் அறிமுக எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ச்சியாக வெளியிட்டபோதுதான் அவருடைய நீண்ட விமர்சனக் கட்டுரை ஒன்று வெளியானது. அப்போது ஓர் எழுத்தாளர் அது நானே புனைபெயரில் எழுதும் விமர்சனம், எனக்கு வாசகர்கள் எல்லாம் கடிதம் எழுதுவதில்லை (ஏனென்றால் அவருக்கு எவரும் எழுதுவதில்லையாம்) என எழுதியிருந்தார். அந்த ஐயம் கதையாசிரியர்களுக்கு வரக்கூடாது என அவருடைய மின்னஞ்சல் புரஃபைலில் இருந்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டேன். ஏதோ மலையேற்றத்தின்போது எடுத்தது.
பிரியம்வதா வாசகர் என்னும் நிலையில் இருந்து எழுத்தாளராக ஆனார். அவர் எழுதுவது நான் எழுதுவதுதான் என்று ஒரு குற்றச்சாட்டு வந்ததே அவருக்கான கௌரவம்தான் என்று அரங்கசாமி சொன்னார். அப்படி குற்றம் சாட்டப்பட்ட பலர், ரம்யா (நீலி) உடபட இன்று எழுத்தாளர்கள் ஆகிவிட்டனர்.
ஸ்டோரீஸ் ஆப் த ட்ரூ மொழியாக்கம் வழியாக அவர் இந்தியாவெங்கும் இலக்கியச்சூழலில் அறியப்பட்டவராக ஆகிவிட்டார். பல இலக்கிய விழாக்கள், இலக்கியச் சந்திப்புகள்.இன்று அவர் அமெரிக்காவில் அந்நூல்களுக்குக் கையெழுத்திடும் காட்சி மனம்நிறையச் செய்கிறது. ஒரு வகையில் அது தனிப்பட்ட முறையில் என்னுடைய வெற்றியும்கூடத்தான்.
ஆச்சரியமான ஒன்று, இன்று என் மொழிபெயர்ப்பாளர்களாக, என் செயல்திட்டங்களை தலைக்கொண்டு முன்னிற்பவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள். என் மகள்கள் எனச் சொல்லத்தக்கவர்கள்.
சைதன்யாவிடம் அதைச்சொன்னேன். “அப்பாக்கள் சும்மா ஷோ காட்டிட்டு ரியலா கொஞ்சம் சொங்கி மாதிரி இருந்தா பெண்களுக்கு பிடிக்கும்” என்றாள்.