மனிதவலை

பல ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம் ஒரு மூத்த தமிழ் எழுத்தாளர் கேட்டார். “பயணங்களால் எழுத்தாளனுக்கு என்ன பயன்? அவன் எழுதவேண்டியது அவனுக்கு நன்றாகத் தெரிந்த இடங்களையும் மனிதர்களையும்தானே? பயணங்களில் மேலோட்டமாகப் பார்த்துச்செல்லும் நிலமும், ஊர்களும், சில நிமிடங்கள் சந்தித்து பிரியும் மனிதர்களும் அவனுக்கு எப்படி உதவ முடியும்? அவன் தனக்கு தெரிந்தவர்களைத்தானே நுட்பமாக எழுத முடியும்?”

நான் அவருக்கு சொன்ன பதில் இது

எழுத்தாளர்கள் இரண்டு வகை. தனக்கு நன்றாகத் தெரிந்த, தான் அனுபவித்தறிந்த, விஷயங்களை பெரும்பாலும் நேரடியான சித்தரிப்பாக, சரியான தகவல்களுடன் எழுதுபவர்கள் முதல் வகை. இவர்களே எண்ணிக்கையில் மிகுதி. இவர்களில் ஒருசிலர் கொஞ்சம் இலக்கிய முக்கியத்துவம் உடையவர்களும்கூட. ஆனால் ஒருபோதும் இவர்கள் கலைஞர்களல்ல. ஏனென்றால் இலக்கியம் என்பது கற்பனையை கருவியாகக் கொண்ட ஒரு தேடல். இவர்கள் கற்பனைக்கு எதிரானவர்கள். கற்பனையை புரிந்துகொள்ளவும் திறனற்றவர்கள். இவர்களுக்கு ‘வாழ்க்கைப்பதிவாளர்கள்’ என்னும் அடையாளமே விமர்சனத்தில் போடப்படும். இலக்கியவாதி என்றல்ல

இரண்டாம் வகை எழுத்தாளர்கள் கலைஞர்கள். கற்பனையை கருவியாக்கியவர்கள். இலக்கியம் இங்கே நிகழும் வாழ்க்கையின் நேரடி ஆவணப்பதிவு அல்ல. மனிதவரலாறு தோன்றிய காலம் முதலே அது இங்கு நிகழும் வாழ்க்கைக்குச் சமானமாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு கற்பனை வாழ்க்கைதான். வியாசனும், ஹோமரும், தல்ஸ்தோயும், புதுமைப்பித்தனும் எல்லாம் அந்த உலகை ஒட்டுமொத்தமாக உருவாக்கியவர்கள்.

அந்த உலகம் இங்கே வாழ்க்கை எப்படி நிகழ்கிறது, எப்படி நிகழ்ந்தது என்பதைப் பற்றியதல்ல. எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்கலாம், எப்படியெல்லாம் நிகழவேண்டும் என்பதைப் பற்றிய கனவுகளும் இலட்சியங்களும் அடங்கியது. அதுதான் நாம் நம்பும் அறம், நீதி, அன்பு, கருணை, பாசம் என அனைத்தையும் உருவாக்கியது. நிலைநிறுத்தி வருகிறது. அவற்றின்மேல் ஐயங்களை உருவாக்கி உடைத்து மீண்டும் உருவாக்குவதும் அதுவே

இலக்கியவாதிக்கு அனுபவம் என்பது கற்பனைக்கான தொடக்கத்தை அளிப்பது மட்டுமே. அதற்கான கச்சாப்பொருள் மட்டுமே. கலைக்கான கற்பனை நிகழ்வது நினைவுப்பதிவில் அல்ல. ஆழ்மனதில்.  கலைஞனின் ஆழ்மனதைத் தீண்டி எழுப்பும் அனுபவத்துளிகளே கலையாக ஆகின்றன. பலசமயம் அவை நேரடியான வெளிப்பாடுகளாகக்கூட இருப்பதில்லை. நேரெதிரான வெளிப்பாடுகளாகவும்கூட அமையக்கூடும். மழைத்துளி தேடும் முத்துச்சிப்பி போல ஆழ்மனதை திறந்துவைத்துக்கொண்டு அனுபவங்களின் வெளியில் அலைவதே கலைஞர்களின் வழி. உலகமெங்கும் பெரும்படைப்பாளிகள் நிலங்களில், வாழ்க்கைகளில் தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தவர்கள்தான்.

ஏன் அலையவேண்டும்? ஏனென்றால் நாம் வாழும் சூழல் நமக்கு பழகிவிடுகிறது. அதில் நமக்குத் தேவையானவை  அல்லாதவை கண்ணுக்கே படுவதில்லை. நமக்கு கொஞ்சம் தெரிந்ததும் தெரிந்ததைக் கொண்டு எஞ்சியவற்றை விளக்கிக்கொள்கிறோம். ஆகவே அதுவரையிலான அறிதலே மேற்கொண்டு அறியமுடியாமல் ஆக்கிவிடுகிறது. ‘பழக்கத்தின் பாசி’ என சுந்தர ராமசாமி அதைத்தான் சொல்கிறார். அதுதான் அனுபவத்தைக் குறுக்கும் மிகப்பெரிய மாயை. இலக்கியவாதிகள் அதை வெல்லவே பயணம் செய்கிறார்கள்”

மயாமியில் சந்தித்தவர்

எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு நன்கு பழக்கமான, உங்களுடனேயே இருக்கும் ஒருவரை நீங்கள் உண்மையில் அறிந்திருக்கிறீர்களா என்ன? அவர் உடனிருப்பதே அவரை அறிய தடையாக ஆகவில்லையா? அவர்மீதான உங்கள் விருப்பு வெறுப்புகளை அல்லவா அவரைப்பற்றிய மதிப்பீடாக நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? ஏதோ ஒரு தருணத்தில் பொட்டில் அடி விழுந்ததுபோல ஒரு புதிய கோணத்தில் அவர் தென்படும்போதுதான் உண்மையில் அவரை கொஞ்சம் அறிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள். அப்படி ஒரு பத்து தருணங்கள்தான் உங்கள் மனைவியை அறியவே உங்களுக்கு ஆதாரமாக இருக்கும்

ஆனால் ஒரு பயணத்தில் நீங்கள் சந்திக்கும் ஓர் அன்னியரிடம் உங்களுக்கு எந்த முன் முடிவும் இல்லை. விருப்பு வெறுப்புகள் இல்லை. அவரை அறிந்து உங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. அவரிடம் அந்த ‘திறப்புத்தருணம்’ மிக எளிதாக நிகழும். மிக எளிதாக உங்களுக்கு அவர் தன்னை அறியத்தருவார். தர்க்கபூர்வமாக அல்ல, ஆழ்மனம் சார்ந்து அவரை நீங்கள் ஓரிரு நிமிடங்களிலேயே மிக ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். உலகமெங்கும் மாபெரும் புனைவுப்படைப்புகளில் தோன்றி, உலகம் முழுக்க பலநூறாண்டுகளாகப் பேசப்படும் பல கதைமாந்தர்கள் அப்படி மிகக்குறுகிய பொழுதில் அப்படைப்பின் ஆசிரியரால் சந்திக்கப்பட்ட மனிதர்கள்தான்

ஓ ஹென்றி நினைவகம்

நாம் வாழும் நிலத்தை நாம் அறிவதற்கு தொடர்ச்சியான தியானம் தேவை. தியானம் என்பது நம்மை ஒவ்வொரு நாளும் புதியதாக நிகழ்த்திக்கொள்வது. நான் கடைப்பிடிக்கும், கற்பிக்கும் தியானமுறை என்பதே நிலத்தை ஒவ்வொரு நாளும் புதியதாகக் கண்டடைவதுதான். ஆனால் பொதுவாக அது நிகழ்வதில்லை. நம் தேவைகள், நம் பிரச்சினைகள் சார்ந்தே நாம் நம் சூழலை அணுகுகிறோம். ஆனால் முற்றிலும் புதிய நிலம் அந்த தியானநிலையை மிக இயல்பாக உருவாக்கிவிடுகிறது. அந்த நிலத்தை நாம் மிக ஆழமாக அறிகிறோம். அந்நிலம் ஓர் ஓவியம் அல்லது புகைப்படத்தில் வந்தால்கூட அந்த விலக்கமும் அதன் விளைவான அறிதலும் நிகழ்கிறது. பயணம் செய்வது அதற்காகத்தான்.

ஆனால் எந்தப் பயனுமில்லை. அந்த எழுத்தாளர் நான் சொல்வதென்ன என்று உணரவே இல்லை. “எனக்கெல்லாம் புது இடம் என்றாலே அசௌகரியம்தான்….புதிய மனிதர்கள் என்றாலே தூரம்தான்… அப்படியெல்லாம் புதிய மனிதர்களை நாம் அணுகமுடியாது. அவர்கள் நம் கேள்விகளுக்கெல்லாம் பொய் சொல்வார்கள்…” என்று ஆரம்பித்தார். “நாம் அவர்களிடம் பேசவேகூட தேவையில்லை” என்று சொல்லி நான் நிறுத்திக்கொண்டேன்.

ஓ ஹென்றி நினைவகம்

என் பயணங்களில் தற்செயலாகச் சந்தித்த மனிதர்கள் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். நிகழ்தல், வாழ்விலே ஒருமுறை, சங்கசித்திரங்கள் ஆகிய நூல்களில் நேரடியாக அவ்வனுபவங்கள் உள்ளன. அவ்வனுபவங்கள் மட்டுமே கொண்ட முகங்களின் தேசம் என்னும் நூல் வெளிவந்துள்ளது. ஏராளமான சிறுகதைகளும் அவர்களைக் கொண்டு எழுதியுள்ளேன். என் களஞ்சியம் ஒருபோதும் ஒழியாமலிருப்பது என் பயணங்களால்தான்.

பொதுவாக நண்பர்களுடனிருக்கையில் புதியவர்களுடனான உரையாடல் நிகழ்வது கொஞ்சம் குறைவு. என்றாலும் எப்போதுமே தற்செயல்களை நம்பவேண்டியதுதான். மயாமி கடற்கரையில் நானும் அருண்மொழியும் டாக்டர் ரஜினிகாந்தும் ,அபியும், ஆஸ்டின் சௌந்தரும், ராதாவும் நின்றிருந்தபோது ஒருவர் கடற்பசுக்களைச் சுட்டிக்காட்டினார்.

கடற்பசுக்களை ஓடி ஓடி பார்த்துக்கொண்டிருந்த போது ஒரு வெள்ளையினப் பெண்மணி “கடற்பசுக்கள்!” என்று சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் ஏற்கனவே பார்த்துவிட்டோம்” என்றோம்

”ஆனால் நீங்கள் ஏன் எனக்குச் சொல்லவில்லை?” என்று சிரித்தபடி கேட்டார்.

மன்னிப்பு கோரி அறிமுகம் செய்துகொண்டோம். மார்த்தா ஒரு சமூகவியல் ஆசிரியை. அன்று காலை மிகுந்த உளச்சோர்வுடன் கண்விழித்தாராம். முந்தையநாளிரவு இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதல்களை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார். குழந்தைகளின் சாவு அவரை உலுக்கிவிட்டது.

“மனிதர்களாகிய நாம் எதையுமே கற்றுக்கொள்வதில்லை. நமக்கே பெருங்கொடுமை இழைக்கப்பட்ட அனுபவம் இருக்கையில்கூட நாம் இன்னொருவருக்கு கொடுமையிழைக்க தயங்குவதில்லை” என்றார்.

அவர் குரலில் இருந்த நடுக்கம், தளர்வு அவருக்கு உளச்சோர்வும் இருக்கலாம் என்று தோன்றச் செய்தது. காலையில் கடலோரம் வந்து உள்ளத்தை தேற்றிக்கொள்ள முயன்றிருக்கிறார். கடற்பசுக்களின் கும்மாளம் அவரை புன்னகைக்கச் செய்துவிட்டது.

“மிக இனியவை…சாந்தமானவை” என்று அவர் சொன்னார்.

எல்லா சோர்விலிருந்தும் இயற்கை மீட்டுவிடுகிறது. இயற்கையில் ஒரு வாக்குதத்தம் எப்போதும் எஞ்சியிருக்கிறது.

எல்லா இடங்களிலும் என்னை அறிமுகம் செய்துகொண்டதும் விக்கிப்பீடியாவில் உடனே பார்த்துவிடுகிறார்கள். முகம் மலர்கிறார்கள். ஆனால் என்னை எழுத்தாளன் என நான் அறிமுகம் செய்துகொள்வதே இல்லை. இன்னொருவர் சொன்னால்கூட ஒரு சின்ன சம்மல்தான் எனக்கு. ஒருவர் அவரே அறிந்து அறிமுகம் செய்துகொள்வதொன்றே இயல்பானது.

ஆஸ்டினில் ஓ.ஹென்றி வாழ்ந்த இல்லத்தைப் பார்க்கச் சென்றிருந்தபோது ஓர் அம்மையார் “ஓ.ஹென்றி தெரியுமல்லவா?” என்று கேட்டார்.

பொதுவாக இந்தியர்கள் சுற்றுலா ஆர்வத்துடன் அங்கெல்லாம் வந்தாலும் அமெரிக்க இலக்கியம், பண்பாடு, வரலாறு பற்றி மிக ஆரம்பநிலை அறிமுகம் கொண்டிருப்பதுகூட மிகமிக அரிது.

“நன்றாகத் தெரியும்…இவர் ஓர் எழுத்தாளர்” என்று சௌந்தர் என்னை அறிமுகம் செய்தார்.

அதன்பின் அவர் விளக்கமாகவே சொன்னார்.  ஓ.ஹென்றியின் வாழ்க்கையின் அவலங்கள் நிகழ்ந்த ஊர் ஆஸ்டின். அவர் ஒரு நிதிமோசடியில் பங்குகொண்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறைசெல்ல நேர்ந்தது.

”அவர் நிதிமோசடி செய்பவர் அல்ல. அவருக்கு நிதியைக் கையாளும் கவனம் கிடையாது என்பதே உண்மை. அவர் ஓ.ஹென்றி என்ற பேரில் எழுதினார். அவர் நியூயார்க்கில் புகழ்பெற்ற எழுத்தாளர். ஆனால் அன்று அந்தப்புகழுக்கு எந்த மதிப்பும் இல்லை. ஆகவே அவர் ஓ.ஹென்றிதான் தான் என்பதை மறைத்தே வாழ்ந்தார்” என்று அவர் சொன்னார்

“இன்று நானும்கூட அப்படித்தான் நாகர்கோயிலில் வாழ்கிறேன்…” என்று சொல்லிக்கொண்டேன்.

இந்த பூமி ஒரே நிலம். உலகமெங்கும் பரவி இதை ஒன்றென இணைக்கும் கூறுகள் பல உண்டு. காற்று, நீர், சூரிய ஒளி நாமறிந்தவை. உலகமெங்குமுள்ள தாவரங்கள் ஒன்றுடனொன்று இணைந்து ஒற்றைப்பரப்பாக உள்ளன என்று ஒரு கொள்கை உண்டு. உலகமெங்குமுள்ள பறவையினம் ஒரே தொகுப்பு என்றும் சொல்லப்படுவதுண்டு

மனிதர்கள் வழியாக ஒரு சரடு உருவாகி உலகை இணைத்துள்ளது என தோன்றும் தருணங்களுண்டு. போர்லண்டில் இருந்து சியாட்டில் வழியாக வான்கூவர் சென்றுகொண்டிருந்தோம். நண்பர் பிரபு காரை ஓட்டினார். போர்ட்லண்டை ஒட்டி வரிசையாக ஓர் இயற்கையழகுச் சாலை உண்டு. காரின் இடப்பக்கம் மலைத்தொடர்கள் காடுசெறிந்து செங்குத்தாக எழுந்து நின்றன. அவற்றிலிருந்து சிறிதும்பெரிதுமாக ஏராளமான அருவிகள் மலையிறங்குகின்றன. அவை சென்று சேரும் ஆறு அகன்ற நீர்வெளியாக சாலைக்கு இணையாக வலப்பக்கம் வந்துகொண்டே இருந்தது.

இலையுதிர்வுக் கால செம்மை, குளிர், மழைமுகில் வானம், ஒளிரும் அருவிகள், ஒளிப்பரப்பான பேராறு என அந்தப் பயணமே ஒரு கனவுபோல் நினைவில் எஞ்சியுள்ளது. பார்த்தேன் என்பதைவிட அங்கே ஆழ்ந்திருந்தேன் என்பதே சரி. ஆகவே எதையும் அறிந்துகொள்ள, நினைவில் நிறுத்திக்கொள்ள முயலவில்லை. என் ஆழுள்ளத்தை அந்நிலத்துக்கு ஒப்படைத்துவிட்டிருந்தேன்.

அருவி ஒன்றை பார்த்துவிட்டு அணுகிச்செல்ல மேலேறினோம். அருவிக்கு மேலே செல்வதற்கு ஓர் ஒற்றையடிப் பாதை. அங்கே நின்று அருவியை பார்த்துக்கொண்டிருந்தபோது பருமனான ஒரு வயதான வெள்ளையர் புன்னகைத்து “எந்த ஊர்?” என்றார்.

“இந்தியா , தென்னிந்தியாவில் தமிழ்நாடு” என்றோம்.

“தமிழ்நாட்டில் எங்கே?”

“நான் நாகர்கோயிலில் இருக்கிறேன்”

“ஆ, நான் பிறந்தது அங்கே வில்லுக்குறி என்னும் ஊரில்”

உலகம் சட்டென்று ஒரு சின்ன குமிழியாக ஆகிவிட்டது. அவர் இந்தியாவில் மிஷனரிப் பணிக்காக வந்த ஒருவரின் மகன். அமெரிக்கன் மிஷனை சார்ந்தவர். வில்லுக்குறியில் பிறந்து, மதுரை திருமங்கலம், திருநகர், பசுமலை ஆகிய இடங்களில் இளமையில் வளர்ந்தார். அமெரிக்காவில் கல்விமுடித்தபின் கொடைக்கானலில் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். அவர் மனைவி மதுரையில் பிறந்தவர். மகன்கள் ஆஸ்திரேலியாவில் இருக்க அவர் அமெரிக்கா திரும்பிவிட்டார். அவர் தந்தையின் சொந்த ஊர் போர்ட்லந்துதான்.

வில்லுக்குறியில் பிறந்தவர்

“என் மனைவி மேலே சென்றிருக்கிறாள். என்னால் ஏறமுடியாது. கால் மூட்டு மாற்ற சிகிழ்ச்சை செய்துள்ளேன்” என்று சொன்னார். “சின்ன வயதில் இந்த அருவிமேல் பலமுறை ஏறியிருக்கிறேன்”

பிரபு நான் எழுத்தாளர் என அறிமுகம் செய்தார். ஆனால் அவருக்கு அது எந்த சுவாரசியத்தையும் உருவாக்கவில்லை. பிரபு  என்னைப்பற்றி இவர் iமகாபாரதத்தை எழுதியவர் என்றார். மகாபாரதம் பெயரே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவருடையது மிஷனரிகளின் சிறிய உலகுக்குள் உள்ள ஒரு மிகச்சிறிய தமிழ்நாடு. பனித்துளிக்குள் பனை.

தமிழ்நாடு தனக்கு பிடிக்கும் என்று சொன்னார். குறிப்பாக கொடைக்கானலின் பருவநிலை இதமானது என்றார். அங்கே நிறைய தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போது இந்தியாவுடன் தொடர்பு குறைவு. தமிழர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார்.

மயாமியில் ஊரைச்சுற்றிக் காட்ட ஒரு வண்டியை ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்தார். அதில் நானும் அருண்மொழியும் சௌந்தரும் ராதாவும் அவரும் அபியும் நகருக்குள் சுற்றி வந்தோம். தென்னமேரிக்கக் கலப்பின வெள்ளையரான ஓட்டுநர் ஒரு கார்நிறுவனம் நடத்துவபர். கோவிட் கால இழப்புக்கு பின் தேறிவந்துகொண்டிருந்தார்.

மயாமியின் வரலாறு, புவியியல், இயற்கை பற்றி சுவாரசியமாகப் பேசிக்கொண்டே இருந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். நான் எழுத்தாளன் என்று ரஜினிகாந்த் சொன்னதும் மகிழ்ந்து அவரும் மயாமி பற்றி ஒரு நூல் எழுதியிருப்பதாகச் சொன்னார்.

ரஜினிகாந்த் கொஞ்சம் அவநம்பிக்கையுடன் மகாபாரதம் தெரியுமா என்றார்.

“ஆம், கிருஷ்ணனின் கதை. அவர் தோழன் அர்ஜுனன். அவர்கள் ஒரு பெரிய போரை நடத்தினர். களத்தில் பகவத்கீதை சொல்லப்பட்டது”

உற்சாகமாக இருந்தது. இந்தியாவில் எங்கேனும் ஏதேனும் ஒரு வழிகாட்டி ஓர் ஐரோப்பியப் பயணியிடம் ”இலியட் தெரியும்” என்று சொல்லியிருக்கக்கூடுமா?

ஆனால் இருபதாண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் ஆலப்புழாவில் ஓர் அமெரிக்க நடனக்கலைஞருடன் ஒரு நட்சத்திர விடுதியில்  அறைபோட்டேன். அறைக்கு அவருக்கு மதுவும் உணவும் கொண்டுவந்த இளைஞனிடம் அவர் பேசினார். அவருடைய ஊர் அமெரிக்காவில் நியூ அல்பெனி.

அவர் அதைச் சொன்னதுமே இளைஞர் சொன்னார். “நியூ அல்பெனி…ஃபாக்னர் பிறந்த ஊர்”

ஆனால் நடனக்கலைஞருக்கு ஃபாக்னர் யார் என தெரிந்திருக்கவில்லை.

முந்தைய கட்டுரைதிருச்சி பாரதன்.
அடுத்த கட்டுரைஓவியக்கலைப் பயிற்சி, கடிதம்