ஆழ்வார், கடிதம்

அன்பிற்கினிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,

தமிழ் இலக்கியத்தில் நான் ஒரு ஆரம்ப கட்ட மாணவன். நண்பர் செல்வேந்திரன் மூலம் தங்கள் படைப்புகளின் அறிமுகம் கிட்டியது. அறம், இன்றைய காந்தி, தன்மீட்சி போன்ற படைப்புகள் என் வாழ்க்கைப் பார்வையை மாற்றியவை.

நாலாயிர திவ்ய பிரபந்தம் வகுப்புகள், வெள்ளிமலையில் எனது முதல் அனுபவம். வழிகாட்டியமைக்காக, நண்பர்கள் மலைச்சாமி, கண்ணூர் மற்றும் செல்வேந்திரன், ஓசூர்,அவர்களுக்கு எனது நன்றிகள்.

ஆசிரியர் திரு. ஜா. ராஜகோபாலன் அவர்களுக்கு எனது குரு வணக்கத்துடன்  கூடிய நன்றிகள். ஒரு சிறந்த ஆசிரியரின் சிறப்பே அவர் எடுத்தாளும் உதாரணங்கள் தான். அந்த வகையில் ஆசிரியர் திரு. ராஜகோபாலன் அவர்கள் எளிமையான உதாரணங்களை மட்டுமல்லாமல் கூடுதல் தகவல்களையும் பகிர்ந்தார். அது அவர் எந்த அளவு இந்த வகுப்புகளுக்கு தயாராகி வந்திருந்தார் என்பதை சொல்லாமல் சொல்லியது.

இருபது வருடங்களாய் ஆசிரியராக பணி  செய்து வருவதால், ஒரு பாடத்தை தெளிவாக புரிந்து கொள்ள ஒரு நுட்பமான  ஆசிரியரின் பங்கு எந்த அளவுக்கு முக்கியம் என்றுமீண்டும் திரு. ராஜகோபாலன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. என்னை செதுக்கிய சிறந்த ஆசிரியர்கள் வரிசையில் திரு. ராஜகோபாலனும் ஒருவர்.

முதல் நாள் காலையில் ஆசிரியர், பக்தி இயக்கத்தின் இயல்முறைகள் மற்றும் கட்டமைப்பு  குறித்த அடிப்படைகளை மிக எளிமையாக விளக்கினார். பக்தி இலக்கியத்தை வாசிக்கும் முறையை அவர் கற்பித்த பிறகு, எப்படி ஒரு இலக்கியத்தை அதன் சொல்லழகு, நாடகீயம் மற்றும் தத்துவம் சார்ந்த பார்வையில் ரசிப்பது என்பது மிக நன்றாக  விளங்கியது.

முதல் நாள் மாலையில் வைணவ மதம் குறித்த அடிப்படைகளை மிக விரிவாக விவரித்தார் ஆசிரியர். பகவான் ஶ்ரீநாராயணின் ஐவகை தோற்ற நிலைகளான பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி மற்றும் அர்ச்சை பற்றியும், பகவான் ஸ்ரீவிஷ்ணுவின் பல்வேறு கல்யாண குணங்களை பற்றியும், வைணவ சமயத்தின் கொள்கைகளான தத்துவம், இதம் மற்றும் புருஷார்த்தம் பற்றியும், வைணவத்தின் மூன்று பக்திகளான பரபக்தி, பரஞானம் மற்றும் பரமபக்தி பற்றியும், இறைவனை அடைய விரோதிகளாக இருப்பவை பற்றியும், பன்னிரு ஆழ்வார்கள் பற்றியும் மிகத் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைத்தார்.

பக்கம் கரும் சிறு பாறை மீதே அருவிகள் பகர்ந்து அனைய 

அக்கு வடம் இழிந்து ஏறி தாழ அணி அல்குல் புடைபெயர

மக்கள் உலகினில் பெய்து அறியா மணி குழவி உருவின் 

தக்க மா மணிவண்ணன்  வாசுதேவன் தளர் நடை நடவானோ

பெரியாழ்வார் இயற்றிய இப்பாசுரத்தை, “நப்பின்னை காணில் சிரிக்கும்” என்ற தலைப்பின்கீழ், ஆசிரியர் திரு. ராஜகோபாலன் விவரித்த அழகே அழகு.

அருகருகில் இருக்கும் கருநிறமான சிறிய பாறைகளின் இடையில் ஒளிவிடும் அருவி போல, இடையில் அணிந்திருக்கும் சங்குமணி வடம் உயர்ந்தும் தாழ்ந்தும்  ஒளிவிட, தளர் நடை நடக்கும் குழந்தை வாசுதேவனின் அழகை விவரித்த ஆசிரியரின் காட்சிப்படுத்தல் நுட்பம் மிக அருமை.

சழக்கு நாக்கொடு புன்  கவி சொன்னேன் சங்கு சக்கரம்  ஏந்து  கையனே 

பிழைப்பாராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே 

விழிக்கும் கண்ணிலேன் நின் கண் மற்று அல்லால் 

வேறொருவரோடு என் மனம் பற்றாது 

உழைக்கு ஓர் புள்ளி மிகை அன்று கண்டாய் ஊழி ஏழ் உலகு 

உண்டு உமிழ்ந்தானே

 பெரியாழ்வாரின் இந்த பாடலையும், “பாதியும் உறங்கிப் போகும்” என்னும் தலைப்பின்கீழ், ஆசிரியர் விளக்கிய  விதம் மிக அருமை. புள்ளி மானுக்கு ஒரு புள்ளி கூடினால் என்ன குறை என்ற உவமையுடன் இந்த அற்பனின் அத்தனை பிழைகளையும் மன்னித்த பெரியோருக்கு  மேலும் ஒரு பிழையை மன்னிப்பது என்ன குறை, என்று அற்புதமாக உருவகப்படுத்தி விளக்கினார் ஆசிரியர் திரு. ராஜகோபாலன்.

திரு. மாலோலன் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பிரபந்தப் புலமை பிரமிக்க வைத்தது. அந்தியூர் மணி அண்ணனின் அரவணைப்பில் மூன்று நாட்கள் மிகவும் பாதுகாப்பாய் உணர்ந்தோம். மூன்று நாட்களும் மிகச்சுவையான உணவைச் சமைத்துப் பரிமாறிய அன்னலட்சுமி சரஸ்வதி அம்மாவுக்கு என் நன்றிகள். அக்கார அடிசிலை சுவைக்க வைத்த ஈரோடு பாலாஜி அய்யா அவர்களுக்கும், அவர் குடும்பத்தாருக்கும் என் நன்றிகள்.

மேலும், வேறு திசையில் கற்றலை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த என்னை, கற்றலின்  மிகச்சரியான திசை எது என்று புரிய வைத்ததும் திவ்ய பிரபந்தம் வகுப்புகள் என்றால் அது மிகையாகாது. மேலாண்மை ஆராய்ச்சி ஆய்வுகளை ஒப்பிடும்போது  நாலாயிர திவ்ய பிரபந்தம் குறித்த ஆய்வுகள் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும், மனதிற்கு மிக  நெருக்கமாகவும், மிகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது. இதுதான் நான் பயணிக்க வேண்டிய திசை என்று புரிந்தது.

இவ்வாறான கற்றலுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி, மிகச்சிறந்த ஆசிரியரிடம், ஒரு மிகச்சிறந்த பாடத்தை கற்க உதவிய ஆசான் ஜெயமோகனுக்கு கோடி நன்றிகள். மேலும் இத்தகைய வகுப்புகளை கற்பதற்கு ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

வணக்கங்களுடன்,

சுரேஷ்குமார்,

ஸ்ரீராமபுரம், திண்டுக்கல்

முந்தைய கட்டுரைபூன் முகாம், கடிதம்
அடுத்த கட்டுரைராஜ் சிவா