யுவன், கடிதம்

அன்பு ஜெ,

யுவனின் குள்ளசித்தன் சரித்திரம், வெளியேற்றம் என இரண்டும் சமீபத்தில் படித்தேன். இந்த இரு நாவல்கள் தான் எனக்கு அவரின் முதல் அறிமுக தொடக்கம்.

உங்களின் புறப்பாடுகளில், பலதரப்பட்ட மனிதர்கள், அனுபவங்களை தான் பெரிதும் பார்த்திருந்தேன். ஆனால் ஒரு வெளியேற்றத்தில் தன்னின் ஒரு இடத்தை விட்டு பெயர்தல் என்பது எவ்வளவு வலிவு மிக்கது என்பது புரிந்தது. காரணங்கள் பல. ஆனால் எவர்கள் நகர்ந்தனர், என்ன ஆயினர் என்பது கொண்டு செல்வதில் நாவல் வலிவுடன் சென்றது. அனைத்து பாத்திரங்களும் மிக உண்மையாக மனதில் நின்றதன் காரணம் அவர்கள் யாவரும் உண்மைக்கு அருகில், தன்னின் உலகில் முழுமையாக உண்மையில் இருந்தனர். ஒவ்வொருவரும் வாழ்வின் ஒரு இடத்தில் இருந்து வந்து, அதனின் ஏதோ கணக்கில் தேர்வாகி தன்னின் களம் அமைந்து ஆற்ற தொடங்கியிருந்தனர். சாதாரண வாழ்வின் ஒட்டத்தில் தன்னின் உடல் நோவு தீர வெளியேறி வாழ்வும் குழந்தைகளும் ஆசிர்வாதிக்கப்பட்ட தங்கம், மன்னாதி, அன்புக்கு ஏங்கிய கோவர்த்தனம் அன்பை வழங்க கூடிய இடமாக அமைந்ததும், தன்வயிற்று தீராப்பசியில் இருந்து வெளியேறி எல்லோரின் பசியை தீர்த்த குத்தாலிங்கப்பிள்ளை, தன்னின் காமத்திலிருந்து வெளியேறி உட்கார இடம் அமைந்த ராமலிங்கம் என கதாபாத்திர நிரை வகைகள் பல. நம் லொளீக கணக்குகளில் சேராத தேர்ச்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையினர், இயற்கையின் வழியில் அமையப்பெற்றதின் கதைகள். இதிலுச்சமாக மாற்று மெய்மை எனும் வார்த்தைகளில் அடைக்க முடியா உலகில் வாழக்கிடைத்த ஜய்ராம், ஹரிஹரன் போன்றோர் தனி வகை.

சிலரின் வாழ்வில் நடந்த, நடந்து கொண்டு இருக்கும் இந்த மாய மெய்மை குள்ளசித்தன் சரித்திரம். அதில் முத்துசாமி அந்த உலகத்தை மொழியில் கொண்டு வரும் பாத்திரம். அறிவியலை ஆலாசத்திற்கு சொல்லி செல்லும் வாகு யுவனின் புரிதல். அதே அதிசயங்கள் அடுத்த கட்டமாக பெரும் தர்மமாக மாறி பெரும் உலகத்தை காட்டும் படைப்பு வெளியேற்றம்.உண்மையில் இரண்டையும் சேர்த்திருந்தால் கூட பெரிய வித்தியாசமாக தெரியாது.

கதாபாத்திரங்களின் ஊர், அவர்களின் வாழ்க்கை பின்னணி, பேசும் மொழி என யுவனின் தேர்ச்சி பிரமிக்க வைக்கும் தளங்கள். பேசும் மொழியே பெரும்பாலும் எழுத்திலும் வருவது அந்த இணைத்தலை நன்கு இயற்றுகிறது. முளுக்க, பளனி என ள ல ழ, ற, ர வகைகளை பெரும்பாலானோர் பேசும் வாக்கிலேயே அமைத்து சென்றது புதிய அனுபவம். அதே போல பாத்திரங்கள் உலவும் ஊர்களின் நிரைகளும் அற்புதம்.

இரண்டு நாவல்களும் மிக புதிதாக உள் ஒன்றை தொட்டன. யுவனுக்கு என் நன்றிகளும், விஷ்ணுபுர விருதுக்கு வாழ்த்துக்களும்

அன்புடன்,

லிங்கராஜ்

யுவன் சந்திரசேகர் – வல்லினம் சிறப்பிதழ்

முந்தைய கட்டுரைஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்
அடுத்த கட்டுரைதிருச்சி பாரதன்.