என் முதல் வெளிநாட்டுப் பயணத்தின்போது, 2001ல் , டொரெண்டோவில் முதல்முறையாக சுவர்க்கிறுக்கல் பண்பாட்டின் முதல் தடையத்தை பார்த்தேன். சுவரில் இருந்த அந்தக் கிறுக்கல்கள் ஓவியமா எழுத்துக்களா என எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடன் வந்த நண்பரிடம் அதைப் பற்றிக் கேட்டேன்.அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை.
“இதையெல்லாம் டிரக் அடிக்டுகள் எழுதி வைக்கிறாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். அவைகளிண்ட சீக்ரட் கோடு இதெல்லாம். எங்க டிரக் கிடைக்குமெண்டு இதைப்பாத்து தெரிஞ்சுகிடுவாங்க” என்றார். முதலில் திகைப்பாக இருந்தது. ஒரு நிலத்தடி உலகின் அடையாளம் மேலே எழுந்து தெரிகிறது. பாதாள உலகிலிருந்து நாகம் ஒன்று வந்ததுபோல. பரபரப்பாக உணர்ந்தேன். அதைப்புரிந்துகொள்ள முயன்று மயங்கினேன்.
ஆனால் அப்படி சுவரில் எழுதிப்போட்டால் எப்படியும் போலீஸ் அதை பிரித்தறிந்துவிடுவார்கள் அல்லவா என்னும் ஐயம் உடனே உருவானது.அப்படி விட்டுவிடுவார்களா என்ன? மேலும் போதையடிமைகளும் விற்பவர்களும் அப்படி ஒரு ஒற்றுமையான, உறுதியான அமைப்பாகவா இருப்பார்கள்? அடுத்தவேளை மருந்துக்காக ஒரு போதையடிமையே போலீஸுக்குச் சொல்லிவிட மாட்டானா?
அன்றும் பிறநாட்களிலும் டொரெண்டோவிலும் மாண்ட்ரியலிலும் அந்த எழுத்துக்களை, ஓவியங்களைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். விசாரித்தபோது எவருக்கும் எந்த புரிதலுமில்லை என கண்டேன். பலர் அவற்றை நின்று கவனித்ததுகூட இல்லை. கனடா முழுக்க அவை இருந்தன. பிரம்மாண்டமான சுவர்க்கிறுக்கல்கள்கூட இருந்தன. அவை எங்கோ உள்ள எவரிடமோ அறைகூவிக்கொண்டிருந்தன.
அதன்பின்னர் அதை ஆஸ்திரேலியாவில், ஜப்பானில், இந்தோனேசியாவில், நமீபியாவில் என உலகமெங்கும் கண்டேன். மலேசியாவிலும். சரி, சிங்கப்பூரில்? சிங்கப்பூர் ’ட்ரூமேன் ஷோ’ படம் போல ஒரு மாபெரும் சினிமாசெட் தான். எல்லா மூலையும் முழுமையாகவே கண்காணிக்கப்படும் ஒரு நிலப்பகுதி அது. ஆம், அங்கும் இருந்தது. பஸ்நிறுத்தம் அருகே ஒரு சந்துக்குள். மிக அவசரமாக ரோஸ் நிறத்தில் சிலநாட்களுக்கு முன் வீசி வரையப்பட்டது.
இவை அமெரிக்காவில் மட்டும் இப்போது கடுமையாக தண்டிக்கப்படுவதில்லை, ஆனால் சட்டவிரோதம். அனுமதிக்கப்பட்ட சுவர்களில் வரையலாம். மற்றநாடுகளில் போலீஸுக்கு தெரியாமல் கிறுக்கவேண்டும். அதற்கான வழி வண்ணப்ப்பீய்ச்சல் செய்வதுதான்.”ஸ்ப்ரே பெயிண்ட்’ புட்டிகளுடன் ‘பொத்தினாப்ல’ ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பது. காவலர் கண் மறைந்ததும் சர் என்று வீசி வரைந்துவிடுவது. இந்த ஓவியங்கள் பெரும்பாலும் ஐந்து நிமிடங்களில் வரையப்படுகின்றன. அவற்றில் பல முழுமையான ஓவியங்கள்.
இவற்றிலுள்ள எழுத்துக்கள் எந்த மொழிக்கும் உரிய எழுத்துக்களல்ல. எழுத்துபோன்ற வடிவங்கள். ஆங்கில எழுத்துக்கள், பிற ரோமன் எழுத்துக்கள் சிதைக்கப்பட்டு இவை உருவாக்கப்படுகின்றன.அவ்வாறு சிதைப்பதில் ஓர் அழகியல் காலப்போக்கில் உருவாகி வந்தது. எழுத்துக்கள் வீங்கியவை போலிருக்கும். ஒன்றுடனொன்று ஏறியமர்ந்து, ஒன்றையொன்று அழித்துக்கொண்டு குறுகிய இடத்துக்குள் செறிந்திருக்கும்.
இந்த ’எழுத்தல்லா எழுத்து’க்களைப் பார்க்கையில் குழந்தை மனித மொழியை சொல்ல முயல்வதுபோல ஒரு பக்கமும், வேண்டுமென்றே ஒரு கோமாளி நம் மொழியை நையாண்டி செய்வதுபோல் இன்னொரு பக்கமும் தோன்றிக்கொண்டே இருந்தது. எழுத்துக்களல்லா எழுத்துக்கள் இதுவரை எழுதப்பட்ட அனைத்துக்கும் எதிராக இருப்பது கலையின் விந்தைதான்
இப்போது இந்த சுவர்க்கிறுக்கல் ஓர் அழகியலாகவே நிலைகொண்டுவிட்டது. நூல்களின் அட்டைகளும், விளம்பரங்களும்கூட இதே வடிவில் இன்று அமைக்கப்படுகின்றன. மக்களின் கண்களுக்கு நன்கு பழகிய வடிவம். அத்துடன் இவை எதிர்ப்பின் வடிவங்கள். மீறலின் வடிவங்கள். ஆகவே இளைஞர்களைக் கவர்பவை.
இந்த எழுத்தல்லா எழுத்துருக்கள் இன்று ஆங்கில எழுத்துருவாக மாறி சுவரொட்டிகளில் தென்படுகின்றன. ஒரு போஸ்டரைப் பார்த்தேன். எழுத்தல்லா எழுத்து என முதலில் தோன்றியது- லிவிங் லெஜண்ட் என உடனே வாசித்துவிட்டேன். ஆனால் செய்தி வெளிப்படையானது – அது ஒரு மாற்றுக்கலை நிகழ்வு.
இந்தச் சுவர்க்கிறுக்கல் பண்பாடு அமெரிககவில் பிலடெல்பியா மாகாணத்தில் 1960களில் தொடங்கியது எனப்படுகிறது. தொடக்ககாலத்தில் கருப்பின மக்களின் ஒருவகை எதிர்வினையாக இவை இருந்தன. அவர்களால் எந்த பொதுவெளியிலும் தங்கள் குரலை ஒலிக்கவிடமுடியவில்லை. ஆகவே வெள்ளையர் காணுமிடங்களில் தங்கள் எதிர்ப்பை கிறுக்கி வைத்தனர். பலசமயம் எதிர்ப்பு வரிகள். சிலசமயம் எழுதப்படிக்கத் தெரியாதவர்களின் வெறும் கரிக்கிறுக்கல்கள். வெள்ளையர்களுக்கு என்னவென்றே புரியாத கிறுக்கல்கள் ஒருவகை ஏளனமாகவும் கருப்பின மக்களால் கொண்டாடப்பட்டன.
அண்மைக்காலத்தில் அமெரிக்கரான டெரில் மெக்கிரே ( Darryl McCray )என்பவர் Cornbread என்ற பேரில் 1967ல் பிலடெல்பியாவில் தன் காதலியை கவரும்பொருட்டு வரைந்த சுவர்க்கிறுக்கல்கள்தான் இந்தக்கலையின் தொடக்கம் என்னும் ஒரு வரலாறு பேசப்படுகிறது. இதை இன்று நிரூபிப்பது கடினம்.
1971ல் சுவர்க்க்கிறுக்கல் இயக்கம் நியூயார்க்கை மையமாக்கியது. கருப்பின மக்களின் ஜனநாயக உரிமைக்கான குரல் எழுந்து போராட்டமானபோது சுவர்க்கிறுக்கல்கள் அரசியல் பிரச்சார ஊடகமாக ஆயின. அதன்பின் வியட்நாம் போருக்கு எதிரான மக்களியக்கத்தின்போது அவை முழுமையான தெருக்கலை இயக்கமாக உருக்கொண்டன.
1970களின் இறுதியில் ஃபீட் தலைமுறையின் கலையாக சுவர்க்கிறுக்கல் மாறியது. ஹிப்பி இயக்கம் அதை ஒரு எதிர்ப்புக் கலைவடிவமாக கையிலெடுத்து இன்றைய உருவுக்கு கொண்டு வந்தது. பின்னர் பல்வேறு உதிரிக்குழுக்கள் அதை கையாளலாயின. இன்று போதையடிமைகள், குற்றவாளிகள், உதிரிக்கலைஞர்கள் என அனைவராலும் அது வரையப்படுகிறது. இன்று அதில் அகதிகள் மற்றும் குடியேறிகளுக்கு எதிரான குரலும் அவ்வப்போது வெளிப்படுகிறது.
அமெரிக்கச் சுவர்க்கிறுக்கல் பற்றி இன்று மிகமிக விரிவாக இணையத்திலேயே வாசிக்கலாம். ஏராளமான நூல்கள், ஆவணப்படங்கள் கிடைக்கின்றன. நான் அவற்றை வாசிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கல்விநிறுவனங்கள் எங்கும் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவில் ஆவணப்படுத்துதல், வரலாறாக்குதல் என்பதேகூட ஒருவகை மைய அதிகாரத்தின் செயல்பாடுகளே. அவை இக்கலையை அங்கீகரித்து தழுவி கொலைசெய்பவை.
இன்று தெருக்கலை ( Street Art) என்ற பெயரில் பொதுவாக பிற நிகழ்த்துகலைகளுடன் இணைத்து சுவர்க்கிறுக்கல் கலை சுட்டப்படுகிறது. உதாரணமாக, தன்னை ஒரு வகையில் பொதுவெளியில் முன்வைப்பதும் இந்தவகையில் படும். அதன் பல்வேறு வடிவங்கள் தொடர்ச்சியாக கண்டடையப்படுகின்றன.
உதாரணமாக, நியூயார்க் டைம் ஸ்குயரில் ஒருவர் தன் கழுத்தில் பாதி குத்தப்பட்ட கத்தியுடன் ‘நான் இஸ்ரேலின் இரை’ என்று அட்டையை தொங்கவிட்டபடி நின்றிருந்தார். முகத்தில் வண்ணங்களை வரைந்துகொள்வது எதிர்ப்புக் கலைவடிவமாக உள்ளது. நிர்வாண உடலில் ஓவியங்கள் வரைந்துகொள்வதுண்டு.
கேரளத்தில் ஜெயலட்சுமி என்னும் பெண் சில ஆண்டுகள் முன் தன் உடலெங்கும் கரியுடன் அரைநிர்வாணமாக தெருவில் தோன்றி கருப்புநிறத்துக்கு கேரளத்திலுள்ள ஒவ்வாமைக்கு தன் எதிர்ப்பை காட்டினார். அதன்மீது கடுமையான விமர்சனங்களும் எள்ளல்களும் எழுந்தன. அது சரியான போராட்டவடிவமா என்பது வேறு, ஆனால் அது ஒரு வடிவம்.
இன்று சுவர்க்கிறுக்கல் என்பது மிக முக்கியமான ஒரு ஓவியக்கலை வடிவம். அது மற்ற செவ்வியல், நவீன ஓவியங்களைப்போல நுண்ணர்த்தங்களும் வடிவஅமைதியும் கொண்டது அல்ல. அது போஸ்டர்களைப்போல ஒரு அறிவிப்புக்கலை. கூச்சலிடும் கலை. ஆகவே மிக வெளிப்படையாக அது அறைகூவுகிறது, ஆர்ப்பரிக்கிறது, ஓலமிடுகிறது. அதன் வண்ணங்கள் கண்களை அறைபவை. அதன் வடிவங்கள் முரட்டுத்தனமானவை. அது பார்வையாளனை ஓங்கி அறைந்து அவனிடம் பேச முற்படுகிறது.
வண்ணங்களை வேகமாகப் பீய்ச்சியடித்தல் சுவர்க்கிறுக்கல் ஓவியங்களின் வரைதல்முறையாக தொடங்கியமையால் இன்றுவரை அந்த காட்சித்தன்மை நீடிக்கிறது. வன்மையான வடிவங்கள், அலட்சியமான கோடுகள். தூரிகையால் நிதானமாக வரையப்படும்போதும்கூட அவசரமும், பதற்றமும் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் அவை சுவரிலிருந்து பொங்கி எழ முற்படுவதுபோலுள்ளன.
சுவர்க்கிறுக்கல் ஓவியங்களின் இன்னொரு தன்மை அவை வரையப்பட்ட இடங்களின் இயல்புகளை பயன்படுத்திக்கொள்ளுவது. சுவரின் மேடுபள்ளங்கள், மடிப்புகள் எல்லாமே ஓவியத்தின் வடிவமாக ஆகும். ஒரு முறை சுவரில் இருந்த ஓர் இயல்பான ஓட்டை டிரம்பின் வாய் ஆக மாற்றப்பட்டிருந்ததைக் கண்டேன்.
சுவர்க்கிறுக்கல் ஓவியங்களுடன் நேர் எதிர்ப்பக்கம் வைக்கப்படத்தக்க ஓர் ஓவியத்தை மயாமியின் தேவாலயம் ஒன்றில் கண்டேன். தென்னமேரிக்கா – அமெரிக்காவுக்கு வந்த மிஷனரிகள் மற்றும் படைத்தலைவர்களின் படங்களால் ஆன ஒரு கலவை ஓவியம் அது. அந்த மண்ணை ‘மீட்கப்பட்டதாக’ ஆக்கிய கதை.
(ஆபாசப்பகடி)
அடிப்படையில் மொத்த சுவர்க்கிறுக்கோவியங்களும் அந்த ஓவியத்துக்கு எதிரானவை என்று சொல்லலாம். ஆதிக்கத்தின் வடிவமான அந்த தேவாலய சுவரோவியம் மென்மையான வண்ணங்கள், நேர்த்தியான வடிவங்கள், ஒன்றையொன்று கச்சிதமாக நிரப்பும் காட்சிப்பரப்பு கொண்டதாக இருந்தது. அதன் அனைத்து இலக்கணங்களையும் தலைகீழாக்கினால் அதுதான் சுவர்க்கிறுக்கோவியம்
சுவர்க்கிறுக்கோவியத்தை இப்படி வரையறை செய்யலாம். நம் அன்றாடத்தில் நாம் புழங்காதவை எல்லாம் குப்பை எனப்படுகின்றன. நமக்கு பயனளிக்காத தாவரங்களெல்லாம் களை எனப்படுகின்றன. இது குப்பைகளாலான கலை. களையாலான தோட்டம். இந்த ’மையநாகரீகம்’ புறக்கணித்த மனிதர்களுக்காக அவர்களால் உருவாக்கப்படுவது. அவர்களுக்காகப் பேசுவது.
சுவர்க்கிறுக்கல் ஓவியங்களின் மனநிலை எப்போதுமே அரசு எதிர்ப்பு, அமைப்பு எதிர்ப்பு, ஆதிக்க எதிர்ப்புதான். அரசின்மைவாதத்தின் கலைவெளிப்பாடுகள் அவை. அமெரிக்கக் கொடி, வாஷிங்டன் போன்ற உருவங்கள் மிகமிக எதிர்மறையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். மிக வெளிப்படையான எள்ளலும் நையாண்டியும் இருக்கும்.
ஆகவே இயல்பாகவே ஆபாசம் அவற்றில் உள்ளது. பலசமயம் நுணுக்கமாகவும்கூட. நான் கண்ட ஓர் ஓவியத்தை வாழைப்பழ நிறுவனத்தின் விளம்பரம் என்றுதான் உண்மையாகவே முதலில் நினைத்தேன். அமேஸான் பிரைம் நிறுவனத்தின் அடையாளம் நினைவுக்கு வந்ததும் எள்ளலோ என ஐயுற்றேன். வரிகளைப் பார்த்ததும் சிரித்துவிட்டேன். பெண்ணியவாதிகளில் ஒருசாரார் கொதிக்கலாம். ஆனால் அது அப்படித்தான்.
சுவர்க்கிறுக்கல் ஓவியங்கள் பலவற்றுக்கு இன்று பல்லாயிரம் டாலர் விலை மதிப்பு உள்ளது. எவர் வரைந்ததென்றே தெரியாத ஓவியங்கள் லேஸர் தொழில்நுட்பம் வழியாக பெயர்த்து எடுக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் பேணப்படுகின்றன. பெருந்தொகைக்கு விற்பனையாகின்றன. அவ்வாறு விலை அமைவதே சுவர்க்கிறுக்கல்கலை சாகத்தொடங்கிவிட்டமைக்குச் சான்று. தெருக்கலையைப் பொறுத்தவரை அது தெருவில் மிதிபட்டால் மட்டுமே அது கலை.
சுவர்க்கிறுக்கல் கலையில் பிக்காஸோவுக்கு நிகரானவராக Banksy என்னும் கலைஞர் கருதப்படுகிறார். அப்பெயரில் தன் கிறுக்கலோவியங்களை வரைந்த பிரிட்டிஷ் கலைஞர் இன்றுவரை தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை. கலையுலகமே அவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அவருடைய ஓவியங்கள் குறித்து அவரே இயக்கிய ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.
எங்கு சென்றாலும் அங்குள்ள கிறுக்கலோவியங்களைப் பார்ப்பது என் வழக்கம். அமெரிக்காவின் எதிர்ப்பு முகங்களான பாப் மார்லி, மால்கம் எக்ஸ் ஆகியவர்களுடன் சே குவேராவும் பெரும்பாலும் எங்கும் இருப்பார்கள். சங்கிலிகள் உடைக்கப்படும் உருவகவடிவம் பல இடங்களில் உண்டு. எல்லா இடங்களிலுமே சமன்குலைக்கும் ஓவியங்களாகவே அவை இருக்கும்.
இம்முறையும் பல்வேறு அமெரிக்கச் சுவரோவியங்களுடன் படம் எடுத்துக் கொண்டேன். நகரின் மையங்களில் இருந்து விலகி, நம்மூர் மொழியில் சொல்வதானால் மூத்திரச்சந்துகளில், வரையப்பட்டவை. அவற்றிலிருந்த கலையின் வேகம் எனக்கு மிக உவப்பானது. நான் அந்த கலைஞர்களுடன் என்னை அடையாளம் காணவிரும்புகிறேன். அந்த ஓவியங்களுக்கு கீழே கையில் Stories of the True நூலுடன் நானும் நிற்க முடியும் என நினைக்கிறேன்.
ஃப்ளோரிடா,போர்ட்லண்ட் போன்ற ‘முற்போக்கு’ மாநிலங்கள் அமெரிக்காவில் இந்த சுவர் வரைகலையை பெரும்பாலும் அனுமதிக்கின்றன.ஃப்ளோரிடா அதையே அந்த மாநிலத்தின் சுற்றுலாக் கவற்சியாக ஆக்கிக்கொண்டுவிட்டது. மயாமியின் விமானநிலையத்திலேயே அங்குள்ள புகழ்பெற்ற சுவர்க்கிறுக்கல்களைத்தான் வரைந்து வைத்துள்ளார்கள். ஊர் முழுக்க சுவர்க்கிறுக்கல்கள்.
மயாமியின் நகர்மையம் என்பது சுவர்க்கிறுக்கல்களின் பெருந்தொகுப்பு. ஒரு மாபெரும் ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்டது போன்ற அனுபவம். நம் உள்ளம் அர்த்தங்களை உண்டுபண்ணிக்கொண்டே இருக்கிறது. இந்த ஓவியங்கள் சட்டென்று அர்த்தங்களை சிதறடித்து ஒருவகை பிரமைநிலைக்கு கொண்டுசென்றுவிடுகின்றன. கண்காட்சியில்கூட ஓவியங்களை பொருள்கொள்ள ஒவ்வொருவரும் முயன்று மெல்லமெல்ல பேச்சடங்குவதைக் காணமுடிந்தது.
மயாமியின் சிறப்புகளில் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சுவரோவியக் கண்காட்சி. உலக அளவில் சுவர்க்கிறுக்கல் ஓவியங்களுக்கான முதல் கண்காட்சி இது என்று சொல்லப்படுகிறது. மயாமியில் Wynwood பகுதியில் அமைந்துள்ள இந்த ஓவியக் கண்காட்சிக்குச் செல்லும் வழி முழுக்கவே மாபெரும் சுவர்சித்திரங்கள்தான்.
பல ஓவியங்கள் காரில் போய்க்கொண்டே பார்க்கும் அளவு மிகப்பெரியவை. அவற்றின் வடிவச்சிக்கல்களும், வண்ணக்குழம்பல்களும் பெரும் கலைஞர்களால் இயல்பவை. ஆனால் சுவர்க்கிறுக்கலோவியங்களுக்கே உரிய அலட்சியமும் வேகமும் தெரிபவையும்கூட.
(தேவாலய கொலாஜ்- தெருக்கிறுக்கல்களுக்கு நேர் எதிர்)
சுவர்க்கிறுக்கலோவியக் கண்காட்சியில் சுற்றித்திரிந்தோம். அங்குள்ள பேசுபொருட்களில் நேரடி எதிர்ப்பும், ஆபாசமும் சற்று குறைவு. சீற்றமும் இல்லை. ஆனால் நகர்மயமாக்கம், வணிகமயமாக்கம் ஆகியவற்றுக்கு எதிரான எள்ளலும் கசப்பும் எதிர்ப்பும் பெரும்பாலானவற்றில் இருந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அழகியல். ஆனால் பொதுவான அம்சம் சிவப்பு, நீலம் ஆகியவை கலந்த அடிக்கும் வண்ணங்களும் மோட்டாவான கோடுகளும், உச்சகட்ட உணர்ச்சிகள் வெளிப்படும் முகங்களும், சிக்கலாக பின்னிக்கொண்ட வன்மையான வடிவங்களும்
டேவிட் மைக்யூஸ் என்பவரின் நவீன அறிவியலை கருப்பொருளாக்கிய சுவரோவியங்கள் அங்கே ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. அவை சுவரோவியங்களின் இயல்பிலிருந்து விலகி திரைச்சீலை ஓவியங்களை நோக்கி நகர்ந்திருந்தன. சர்ரியலிஸ ஓவியங்களின் அழகியல் கொண்டிருந்தன. (வெளிப்படையாகவே டாலியை நினைவுறுத்தின) ஆகவே எனக்கு பெரிதாக உவக்கவில்லை.
காந்தியின் கடிதங்களை வாசிக்கையில் ஆச்சரியமளிக்கும் ஒன்றை கவனிக்கலாம். சமகால ஐரோப்பாவின் எல்லா மாற்றுச் சிந்தனைகளுடனும் அவர் தொடர்பு கொண்டிருந்தார். நீர்மருத்துவம், மண் மருத்துவம், சைவ உணவு இயக்கம் என என்னென்னவோ. அவர் ஐரோப்பா என கண்டது காலனியாதிக்கவாதிகளை அல்ல. அந்த மாற்று ஐரோப்பாவைத்தான். அமெரிக்காவுக்கும் அப்படி ஒரு முகம் உண்டு. உலகமெங்கும் ஆதிக்கம்,சுரண்டலுக்கு எதிராக எழும் குரல்களின் விளைநிலமும் அதுவே. எல்லாவகையான மாற்றுக்களின் தொடக்கமும் அதுவே. நான் என்னை அடையாளம் காண்பது அந்தக் கிறுக்கு அமெரிக்காவுடன்தான் .
Graffiti in America: A Brief History of Modern Graffiti
‘The History of American Graffiti:’ From Subway Car to Gallery
The writing on the wall: exploring the cultural value of graffiti and street art