அமெரிக்காவில் பெரும்பகுதி காடுகள்தான் என்று சொன்னால் இளமையில் நான் நம்பியிருக்க மாட்டேன். சின்னவயதில் நானறிந்த அமெரிக்கா இரண்டுவகை. ஒன்று வானுரசி மாளிகைகளின் தொகுப்பு. இன்னொன்று துப்பாக்கிகளுடனும், குதிரைச்சவுக்குகளுடனும், மெக்ஸிகத் தொப்பிகளுடனும் அலையும் மாட்டுப்பயல்களின் பாலைநிலம். பல கட்டுரைகளில் படித்திருந்தாலும்கூட 2009ல் முதல்முறையாக அமெரிக்கா வந்தபோது அமெரிக்கப்பெருநிலத்தின் விரிவு என் கண்களை அறைந்தது. அமெரிக்கா என்பது உண்மையில் ஒரு காடு என்று கண்டுகொண்டேன்.
விரிந்துபரந்த அமெரிக்க நிலம் மிகப்பெரும்பாலும் காலியாகவே கிடக்கிறது. நகர்களைக் கடந்து சென்றால் பெரும்பாலான இடங்களில் மானுடவாசமே இல்லை. கிராமங்கள் என்பவை வசதியான சிறிய பண்ணைவீடுகளின் தொகைகள். அல்லது ஒரு சிறு தேவாலயத்தைச் சுற்றி சில வீடுகள். மற்றபடி காடுகள், வயல்வெளிகள், மீண்டும் காடுகள். வீடுகள் இருந்தாலும் வெளியே மனிதநடமாட்டம் அரிது. ஆகவே அமெரிக்காவே சற்றுமுன் மனிதர் காலிசெய்துவிட்டுச் சென்ற இடம்போல தோன்றும். அல்லது நள்ளிரவில் வெளிச்சம் வந்துவிட்டதுபோல.
அமெரிக்கக் காடுகளின் தனித்தன்மை பற்றி அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். அவை அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளைப்போல சீராக வடிவமைத்து, செம்மையாக கட்டப்பட்டவை போலத் தோன்றுபவை. ஒரு காட்டில் பெரும்பாலும் ஒரேவகை மரங்களே ஓங்கிக் காணப்படும். பைன், பிர்ச், சைப்ரஸ்,ஓக். கூர்ந்து கவனித்தால் பலவகை தாவரங்கள் இருப்பதைக் காணலாம். ஆனால் நம் விழிகளறிந்த வெப்பமண்டலக் காட்டின் மூச்சடைக்கவைக்கும் தாவரப்பன்மை கிடையாது.
2015ல் நானும் அருண்மொழியும் ராஜன் சோமசுந்தரத்துடன் ராலே நகரில் ஓர் இயற்கையியல் பூங்காவுக்குச் சென்றபோது ஓர் அம்மையார் எங்களை வரவேற்று அங்குள்ள நூற்றுக்கணக்கான தாவரங்களை அடையாளம் காட்டினார். அவர் சுற்றுலா வழிகாட்டி அல்ல, அங்கே பள்ளியில் இயற்கையியல் ஆசிரியர். ஓய்வுநேர சமூகப்பணியாக அதைச் செய்கிறார். இயற்கையுடன் இருப்பதற்கான வழியாகவும் கருதுகிறார். நான் அவரிடம் காகங்களைப் பற்றி நிறையச் சொன்னேன். அவர் என்னிடம் பேசியவற்றை ஒரு கட்டுரையாக எழுதி பள்ளிப்பாடத்தில் சேர்த்துவிட்டதாகச் சொன்னார்.
அன்று அந்த ஆசிரியர் சொன்னதிலிருந்து நான் அறிந்த விசித்திரமான செய்தி அமெரிக்காவில் அந்த நிலத்திலுள்ள தாவரங்களில் மிகப்பெரும்பாலானவை சென்ற நாநூறாண்டுகளில், அங்கே ஐரோப்பியக் குடியேற்றம் நிகழ்ந்தபின் , அங்கே வந்த மனிதர்கள் வழியாக வந்து தகவமைத்துக்கொண்டு வளர்ந்து நிலைகொண்டவை என்பது. இந்தியக்காடுகளிலேயே கணிசமான செடிகள் அவ்வாறு சென்ற இருநூறாண்டுகளில் வெளியே இருந்து வந்தவைதான். அது சென்ற மூன்று நூற்றாண்டு உலகப்பந்தில் முழுக்க நிகழ்ந்தது. மானுடப்பண்பாட்டுக் கலப்பு நாமறிந்தது. இயற்கைக்கலப்பை அறிந்திருக்க மாட்டோம். ஆனால் அமெரிக்காவில் அந்த விகிதம் மிக அதிகம். எல்லா கலப்பும்.
இந்தியக் காடு என்பது யானையின் உலகம். குட்டப்பன் யானைதான் காட்டின் அரசன் என்கிறான். இந்தியக்காடுகளில் மிக அபாயமான விலங்கு யானைதான். புலி சிறுத்தை இரண்டும் அஞ்சப்படுபவை. ஆனால் பொதுவாக அவை மனிதர்களை தவிர்ப்பவை. காட்டெருமை, கரடி, காட்டெருது, காண்டாமிருகம் என தாக்கும் விலங்குகள் பல உண்டு. பன்றிகூட அபாயமானதுதான். ஆனால் மனிதர்களை தேடிவந்து, காத்திருந்து, திட்டமிட்டு எல்லாம் தாக்குவது யானைதான். காரணமில்லாமல் கொல்வதும் அதுதான். அல்லது அதற்கு என்ன காரணம் என நமக்கு தெரியாது. ஏனென்றால் அதற்கு நினைவு, அறிவாற்றல் மிகுதி. அதற்கு நிறைய காடு தேவை. நாம் அதன் பகையை ஈட்டிக்கொண்டே இருப்பவர்களும்கூட.
இந்தியக்காடுகளில் நம் புலன்களில் யானை பற்றிய எச்சரிக்கை இருந்துகொண்டே இருக்கும். ஒரு சுள்ளி உடையும் ஒலியிலேயே மெய்சிலிர்க்கும். அதுவே இங்குள்ள காட்டனுபவம் என்பது. யானை போன்ற ஒரு விலங்கு இல்லை என்பதனாலேயே அமெரிக்கக் காடு ‘நவீனமயமாக்கப்பட்ட’ ஒன்று என்று தோன்றும். எப்போது எந்த விலங்கு எதிரே வரும் என்று கூகிளில் தேடி தெரிந்துகொள்ளலாம் என்னும் மனப்பிரமை எழும். அங்கே புலி, சிறுத்தை, ஓநாய் போன்ற வேட்டைவிலங்குகளும் அனேகமாக இல்லை. அங்கே மாடுமேய்க்க வந்த ஐரோப்பியர் அவற்றை ஏறத்தாழ அழித்துவிட்டனர். ஆங்காங்கே சில தப்பிப்பிழைத்து வாழக்கூடும், பூர்வகுடி அமெரிக்கர்களைப் போல.
வேட்டை விலங்கு இல்லாத காரணத்தால் பல இடங்களில் மான்கள் மிகுதி. அமெரிக்கக் குடியிருப்புகள் நடுவே ‘பேணப்படும் காடுகள்’ ஊடுருவுகின்றன. நகருக்குள்ளேயே காடுகளுண்டு. ஆகவே சாலையிலேயே மான்கள் நிற்பது சாதாரணம். பூன் முகாம் நிகழும் பகுதியில் சாலையில் மான்கூட்டங்கள் உலவின. ஆஸ்டினில் நானும் சௌந்தரும் நடைசென்ற சாலையில் காலையில் ஒரு மான் காரில் அடிபட்டு சிதைந்து கிடந்தது. அங்கே அந்தக் கொலை குற்றம் அல்ல. கொன்றவர் தகவல் தெரிவித்துவிட்டு மானை கொண்டுசெல்லலாம். சமைத்துச் சாப்பிடலாம்.
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேட்டை சிலபல நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அரசாங்க நிபந்தனைகளெல்லாம் சும்மா சால்ஜாப்பாகவே இருக்க வாய்ப்பு. 2017 ல் சுவிட்சர்லாந்தில் இருந்து ஆஸ்திரியா வரும் பாதையில் வேட்டையிறைச்சி மட்டுமே பரிமாறப்படும் ஒரு ‘ஸ்டேக் ஸ்பெஷல்’ உணவகத்தை பார்த்தேன். புளியம்விறகு வெட்டி அடுக்கப்பட்டிருப்பதுபோல எல்க் என்னும் உள்ளூர் மிளாவின் பெருந்தொடைகளை இடுப்பளவு உயரத்துக்கு அடுக்கியிருந்தனர். பயந்து ஓடிவந்துவிட்டோம்.
எல்க்கை பலமுறை அமெரிக்காவில் காணநேர்ந்துள்ளது. பெரும்பாலும் கிராண்ட் கான்யன் பகுதிக்குச் செல்லும்போது. சுற்றுலாப்பயணிகளை பொருட்படுத்தாமல் அவை பெரிய கொம்புகளுடன் அலைந்துகொண்டிருந்தன. எனக்கு அவற்றின்மேல் ஓர் அனுதாபம் உண்டு. அவற்றுக்கு அந்த கொம்புகளின் தேவையே இல்லை. நொடித்துப்போன அந்தக்காலப் போர்க்குடிகள் மீசை வைத்துக்கொள்வதுபோல ஒரு ஜம்பம்தான். வீணாகச் சுமந்து அலையவேண்டும்.
மூஸ் என்னும் விலங்கை ஒரே முறை கனடாவில் பார்த்தேன். அசமஞ்சமான பெரிய விலங்கு. மண்ணைக் கிளறும் ஏதோ இயந்திரத்தின் பகுதி போன்ற கொம்புகள். மூஸ் மில்லர் என்னும் காமிக் பட்டையை நான் அக்காலத்தில் விரும்பி வாசித்ததுண்டு. பொதுவாக அமெரிக்க வாழ்க்கையைப் பற்றிய ஒரு நல்ல சித்திரத்தை அளிப்பவை அங்குள்ள இவ்வகையான காமிக் கதைமாந்தர் என்பது என் எண்ணம். இலக்கியத்துக்குச் சமானமாகவே. மூஸ்மில்லர் ஒரு சராசரியான மோட்டாவான, அசமஞ்சமான அமெரிக்க ஆள். டிரம்புக்கு ஓட்டுபோடும் பல லட்சங்களின் சரியான உதாரணம். சாலைகளில் நான் காமிக் கதைமாந்தர்களை நிறையவே பார்ப்பேன். அதிகமாக பார்ப்பது மூஸ் மில்லர், ஹெர்மன் வகையறாக்களைத்தான்.
மூஸின் உடலில் உள்ள ஓர் உண்ணி நம்மை கடித்தால் சிலசமயம் நரம்புகள் பாதிக்கப்பட்டு நிரந்தரமாக பக்கவாதம் வந்துவிட வாய்ப்புண்டு என்றனர். அமெரிக்க வடபுலக் காட்டில் மனிதர்களுக்கு கடும் ஒவ்வாமையை உருவாக்கும் சிலவகை உண்ணிகள் உண்டு. சென்ற 2019ல் வைட் மௌண்டேன் பக்கம் சென்றபோது என்னிடம் ராஜன் சோமசுந்தரம், பாஸ்டன் பாலா, வேங்கடப்பிரசாத் அனைவரும் அதைப்பற்றி திகிலூட்டும் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இந்தியாவில் வெப்பமண்டலக் காட்டில் இல்லாத உண்ணிகள் இல்லை. ஆனால் பலநூறாண்டுகளாக நாம் அவற்றுடன் ‘ஒண்ணுமண்ணாக’ பழகி ஒத்திசைவும் எதிர்ப்புசக்தியும் பெற்றுவிட்டோம். அமெரிக்காவுக்கு அதன் குடிமக்கள் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். பத்தாண்டுகளுக்குள் சென்றவர்கள், அல்லது கொஞ்சம் முன்னால் நாநூறாண்டுகளுக்கு முன்பு வந்தவர்கள். அவர்களுக்கு இன்னமும் கூட அந்நிலம் புதியது. அதன் காடுகளில் இன்னமும்கூட மானுடக்காலடி படாத இடங்கள் மிகுதியாக இருக்கக் கூடும்.
சென்றமுறை 2022ல் அமெரிக்கா சென்றபோது நியூஜெர்ஸியில் இருந்து மறுகரையான நியூஜெர்ஸி வரை ஒரு இருகரை பயணம் செய்தோம். வழியில் ஒரு சிற்றூரில் டீ குடிக்க நிறுத்தினோம். டெக்ஸ் வில்லர் மாதிரி உடையணிந்த ஒருவர் அருண்மொழியின் தோற்றத்தால் கவரப்பட்டு அவளிடம் பேச்சுக்கொடுத்தார். இந்தியர்களெல்லாம் டிரம்ப் ஆதரவாளர்கள் என்பதனால் அவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவர் டிரம்பின் ஆதரவாளர் என்பதைச் சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவர் நாநூறே ஏக்கர் நிலம் வைத்து விவசாயம் செய்யும் ஒரு சிறுவிவசாயி. அரசு மானியம் போதவில்லை என்ற மனக்குறையைச் சொன்னார்.
அமெரிக்காவின் நிர்வாகமுறை பற்றி அவருக்கு பல புகார்கள். அணைக்கட்டுகளில் நீரிலிருந்து மின்சாரம் எடுக்கிறார்கள். இப்போது குன்றுகளில் காற்றாடி நிறுவி காற்றிலுள்ள மின்சாரத்தையும் எடுக்கிறார்கள். அவை நகர்களுக்குச் செல்கின்றன. அந்த மின்சாரம் கிராமவாசிகளுக்குச் சொந்தமானது. மின்சாரம் எடுக்கப்பட்ட நீரும் காற்றும் கிடைப்பதனால் வயல்களில் சோளமும் கோதுமையும் சரிவர விளைவதில்லை. டிரம்ப் வந்தால்தான் மீண்டும் அமெரிக்கா விமோசனம் பெறும். இந்தியர்கள் துணைநிற்கவேண்டும்.
பேச்சு வாக்கில் அவர் சொன்னார், அன்றுகாலை அவர் மூன்று ‘கௌ’க்களை சுட்டுக்கொன்றார் என. அதற்காக அவர் இரவெல்லாம் விழித்திருக்கவேண்டியிருந்தது. பசுக்களைச் சுட்டு வீழ்த்துவதா? நான் திகைத்தேன். அவர் படங்களைக் காட்டினார். ஓநாய் போன்ற ஒரு விலங்கு. ஓநாய்க்கும் நரிக்கும் இடையிலான பழக்கவழக்கங்கள் கொண்டது. அதன் பெயர் Coyote. பசுக்களை வேட்டையாடும் அந்த விலங்கை வேட்டையாடாமல் விவசாயம் செய்ய முடியாது. கொல்லப்பட்ட கெயோட்கள் ஒரு மூங்கிலில் தலைகீழாக தொங்கி சிரித்த வாயுடன் தெரிந்தன.
பயணங்களில் ‘தற்செயலாக’ குறுக்கே வரும் விலங்குகளை கூர்ந்து கவனிப்பது என் வழக்கம். அவற்றை பற்றி தகவல்சார்ந்து நிறைய தெரிந்துகொள்வதில்லை. அமெரிக்காவில் எல்லாவற்றைப்பற்றியும் தேவைக்கதிகமான தகவல்கள் கிடைக்கும். எனக்கு அவை கண்ணில்பட்ட தருணம், அவை அப்போது நடந்துகொண்ட முறை, அவற்றின் மீதான என் உளப்பதிவுகளே முக்கியம். அவை படிமமாகி இலக்கியத்துக்குள் நுழையவேண்டுமென்றால் அந்தச் சுதந்திரத்தை நாம் அளித்தாகவேண்டும். இயற்கையியல் ஆய்வு அடிப்படையில் இலக்கியத்துக்கு எதிரானது.
சான் அண்டனியோவில் அலமோ என்னும் கோட்டையைப் பார்க்கச் சென்றிருந்தபோது ஓர் உயரமான கட்டிடத்தின் விளிம்பில் ரேவன் என்னும் ஐரோப்பிய- அமெரிக்கக் பெருங்காகத்தை பார்த்தேன். நம்மூரில் காகம் என நாம் சொல்லும் பறவையினத்தில் அண்டங்காக்கையும் காகமும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகள். அவற்றின் உடல்மொழி, குரல்மொழி ஒன்றாக இருப்பதனால் அவற்றுக்குள் ஓர் ஒத்திசைவு உருவாகி ஒன்றாக வாழ்கின்றன. ரேவன் காகம் அல்ல. அது வேறொரு பறவை, ஆனால் காகம் போன்றது. அளவில் இரு மடங்கு.
ஐரோப்பிய பேய்க்கதைகளை வாசித்தவர்கள் ரேவனை மறக்கமுடியாது. அவை பாழடைந்த பங்களாக்கள், கைவிடப்பட்ட நிலங்களில் மர்மமாக சுழன்றுகொண்டிருக்கும் பேய்ப்பறவைகள் என சித்தரிக்கப்பட்டிருக்கும், காரணம், நம்மூர் காகம் போல நாளுக்கு நாலாயிரம் தடவை சம்ஸ்கிருதத்தில் “ஏன்?” (கா?) என அவை கத்திக்கொண்டிருப்பதில்லை. அவற்றுக்கு ஏன் என்று தெரியும். ஆகவே அமைதியாகவே இருக்கின்றன.
அண்மையில் டென்மார்க்கின் ரோவநாமி சென்றபோது உறைகீழ் வெப்பம் 12ல் ரேவன்கள் அமைதியாக சுழன்று பறப்பதைக் கண்டேன். மங்கலான சாம்பல்நிற வானில் அவை கறைப்புள்ளிகள் போலிருந்தன. மேலும் உறைவு தொடங்கி, முற்றிலும் உணவு இல்லாமலான பின்னர் அவை கீழே இடம்பெயரும் என்றனர். அப்போது முதற்பனியில் செத்து அவற்றுக்கு உணவாகும் எலிகள் நிறையவே கிடைக்கும்.
பெருங்காகம் கீழிருந்து பார்க்க பருந்து என தோற்றம் அளித்தது. எழவில்லை, கரையவில்லை. கரவா கரைந்துண்ணும் பழக்கமெல்லாம் அதற்கில்லை. அதை கீழிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஹாலோவீன் சிற்பங்களிலெல்லாம் அதேபோல ரேவன் பொம்மை செய்து வைத்திருந்தார்கள். சூனியக்காரிகளின் ஆடைகளும் ரேவனின் சிறகுகள் போலவே இருந்தன.
சட்டென்று ஒரு வயதான துரைதான் அமர்ந்திருக்கிறாரோ என்று தோன்றிவிட்டது. அமெரிக்காவில் வயதான துரைகளைப் பார்க்கையில் எல்லாம் அவர்கள் இந்தியா வந்தால் துரை துரை என எவ்வளவோ மதிப்புடன் பார்ப்போமே என்ற அங்கலாய்ப்பு எழும். ரேவனின் இந்திய வடிவமான காகம் இங்கே மூதாதை வடிவம். கலிதேவனின் கொடியடையாளம். கிட்டத்தட்ட தெய்வம். அருண்மொழியிடம் தினம் ஏழெட்டு காகங்கள் வந்து கண்டபடி திட்டி, அதட்டி சோறு வாங்கி தின்றுவிட்டு ‘ஒழுங்கா இரு, ஆமா’ என எச்சரித்துவிட்டு செல்வதுண்டு. பித்ருக்கள் என்றால் சும்மாவா?
அமெரிக்காவின் காடுகளையும் வனவிலங்குகளையும் பார்ப்பதென்றால் அதற்கான தனிப்பயணம்தான் செய்யவேண்டும். வடக்கே பனியுறையும் குளிர்மரக்காடுகள். தெற்கே ஃப்ளோரிடா பகுதியில் நல்ல வெப்பமண்டலக் காடு உண்டு. தென்னமேரிக்க காடுகளின் நீட்சி போல. அங்கே பலவகை மரங்களும், செடிகளும், அவற்றை உண்ணும் விலங்குகளும் உண்டு.
ஃப்ளோரிடாவில் ஐரோப்பியக் குடியேற்றம் வந்தபின் பலவகையான ஈச்சை, தென்னை, வாழைப் பயிர்களை கொண்டுவந்து பரப்பினார்கள். ஆனால் அங்கே தென்னையும் ஈச்சையும் வெறும் அலங்காரப்பயிர்கள்தான். அங்கே 1876 ல் சில்வர் லேக் பகுதியில் பொன்ஸ் டி லியோன் என்னும் ஸ்பானிஷ் குடியேற்றக்காரரால் வாழை விவசாயம் தொடங்கப்பட்டது. அதற்காகவே அங்கே ரயில்பாதைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இன்று ஃப்ளோரிடா வாழைப்பழத்தை பெருமளவு உற்பத்தி செய்வதில்லை. அதற்கு தென்னமேரிக்க வாழைப்பழக்குடியரசுகளைச் சுரண்டுவதே லாபகரமானது என அமெரிக்கா கண்டுகொண்டது.
குளிர்நிலக் காடுகளில் உயிர்க்குலம் குறைவு. அந்த மரங்களில் பெரும்பாலானவை காயாகவோ கனியாகவோ விதையாகவோ இலையாகவோ எந்த உயிரும் உண்ணத்தக்கவை அல்ல. பெரும்பாலானவை கடும்நெடி கொண்ட தைலம் கொண்டவை. உதிரியாக முளைக்கும் புல்லைத்தின்று மான்கள் உயிர்வாழவேண்டும். கோடைநிலக் காடு உயிர்ப்பெருக்கம் கொண்டது. ஆகவே விலங்குப்பெருக்கம் உண்டு. ஃப்ளோரிடாவின் பெரும்பகுதி கோடைநிலக் காடுதான். அமெரிக்க நிலப்படத்தில் அப்பகுதியே பச்சையாக வெறும் காடாகத்தான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
ஃப்ளோரிடாவில் மிகோசாகி பழங்குடிகளின் சாம்ராஜ்யம் ஒன்று இருந்துள்ளது. ஆனால் வேளாண்மை என்பதே உருவாகவில்லை. காரணம் ஏராளமாகக் கிடைத்த வேட்டை உணவு. வேட்டையின் மிச்சத்தால் கிடைத்த பொழுதில் கலையும் கலாச்சாரமும் வளர்ந்தன. ஆனால் கட்டிடக்கலை, கோட்டைகட்டும்கலை ஆகியவை உருவாகவில்லை. பிற நிலவுடைமைச் சமூகங்களில் உள்ளதுபோன்று வேலைப்பகுப்பு, அதிகார அடுக்கு ஆகியவை அமையவில்லை.
மயாமியின் பூங்காவில் உடும்பு வகை பிராணி ஒன்றை பார்த்தேன். குட்டிக்குட்டி டைனோஸர்கள்தான். ஜுராஸிக் பார்க் போல கூட்டம் கூட்டமாக அவை நடமாடிக்கொண்டிருந்தன. Nile monitor Lizard என்னும் இந்த பிராணி இந்த நிலத்துக்குரியது அல்ல. எவனோ கொண்டுவந்து செல்லமாக வளர்த்து காடுகளுக்குள் விட்டுவிட்டான். அவை பல்கிப்பெருகி எங்கெங்கும் நடமாடுகின்றன. அவற்றின் சூழியல் விளைவு என்ன என்று இன்னும் கண்டடையப்படவில்லை. இதேபோல ஆஃப்ரிக்காவின் போவா ஸ்டிரிக்டர் என்னும் மலைப்பாம்பையும் கொண்டு வந்து வளர்த்து காட்டுக்குள் கைவிட்டு அவை பெருகியுள்ளன என்கிறார்கள். வருவன எல்லாம் வளர்ந்து பெரும் இந்நிலத்தின் இயல்புதான் இன்று நம்மையும் கொண்டுவந்துள்ளது.
ஃப்ளோரிடாவில் டாக்டர் ரஜினிகாந்துடன் நான் அருணா சௌந்தர் ராதா ஆகியோர் கடற்கரைக்கு சென்றிருந்தோம். அங்கே ஒருவர் எங்களிடம் “கடற்பசுக்கள்” என்று சுட்டிக்காட்டினார். கொஞ்சம் கண்களை தீட்டிக்கொண்டபோது பார்த்துவிட்டோம். கரிய புடைப்பாக தலை தெரிந்தது. பின்னர் அது முக்குளியிட்டபோது மழமழப்பான முதுகு.Manatee என அழைக்கப்படும் இந்த விலங்கு கடலுக்குள், கடற்தாவரங்களை மேய்ந்து வாழ்வது. சாதுவானது.
இதை அண்மைக்காலம் வரை வேட்டையாடிக்கொண்டிருந்தார்கள். 1973 முதல் அவற்றை வேட்டையாடுவது குற்றம். ஆகவே வேட்டை குறைந்ததும் கரையோரமாக அவை வரத்தொடங்கியுள்ளன. மயாமி கடற்கரையில் இருந்த உணவகத்தில் பழைய கடற்பசு வேட்டையின் புகைப்படங்கள் இருந்தன. பழங்குடிகள் அவற்றை உணவாக பிடித்துவந்தனர். வெள்ளையர் அவற்றை உண்பதில்லை. ஆனால் ஒரு விளையாட்டாக அதை கொன்று குவித்திருக்கின்றனர். மிகப்பெரிய கடற்பசுவை கொன்றவர் மிகப்பெரிய வீரராக போற்றப்பட்டுள்ளார். (கடற்பசு பேணுதல் ப்ளோரிடா)
தோட்டத்திலும், அருகே கார் நிறுத்துமிடத்திலும் அன்னம் போல ஒரு பெரிய பறவை நடமாடிக்கொண்டிருந்தது. மக்கள் அதற்கு ஊட்டுவார்கள் போலிருக்கிறது. அருண்மொழிக்கு கொஞ்சம் மூட்டுவலி உண்டு என்பதனால் அவள் அன்னநடை நடப்பாள். அது அவளை பின் தொடர்ந்து வந்து தலையை நீட்டி “ஒண்ணுமில்லியா?” என்று கேட்டது. ஆசைப்படுகிறதே என அதனுடன் அவள் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.
அமெரிக்காவில், குறிப்பாக ப்ளோரிடாவில் என்னைக் கவர்ந்தவை சில கட்டிடங்கள் . சூழ்ந்திருக்கும் மரங்களுடன் இயல்பாக அவற்றின் வண்ணங்களும் வடிவங்களும் இணைந்துகொண்டன. அவற்றினூடாகச் செல்லும்போது மெய்யாகவே காடே ஒரு கட்டிடமாக எழுந்தது போலிருந்தன. எங்கிருந்தாலும் கடலைப் பார்க்கும்படி திறந்த சாளரங்களும் உப்பரிகைகளும் கொண்டவை. கடலை நோக்கிய தனித்த கல்பெஞ்சுகள். மொத்த நகரமே கடலை நோக்கி கண்கள் விழித்து வியந்து அமர்ந்திருந்தது.
அமெரிக்காவின் அழகென்று நான் நினைப்பவை மாபெரும் மரங்களும்கூட. வெள்ளையர் அங்கே வருவதற்கு முன்பிருந்த மரங்களே கூட அங்குள்ளன. மூர்க்கமான உயிரோங்குதல்கள். அடிமரம் பெருத்து வானுக்கு விரிந்து நிற்பவை. பூமியின் அறைகூவல் போன்றவை. அவற்றுடன் உடலொட்டி நின்று ‘ஆம், நானும் ஓர் உயிர்’ என்று பேருருக்கொள்ளும் அனுபவம் அலாதியானது
அமெரிக்கா என்றில்லை, எந்த ஊரிலும் நம்மைச்சுற்றிச் சிறு உயிர்கள் உள்ளன. நாம் விந்தையானவற்றை கவனிக்கிறோம். வேண்டுமென்றே கவனித்தால் எல்லாமே விந்தையானவைதான். நாம் நினைப்பதைவிட அவற்றுக்கு நம்மைப்பற்றித் தெரியும். கனடாவில் என்னை கவர்ந்தவற்றில் ஸ்கங்க் தவிர ஒன்று கறுப்பு அணில். (அ.முத்துலிங்கம் கறுப்பு அணில் என்னும் ஒரு நல்ல கதை எழுதியுள்ளார்) அமெரிக்காவில் ஃப்ளாரிடாவில் நான் பார்த்தது குட்டிப்பூனை அளவுள்ள ஓர் அணில். பெரிய கண்களுடன் எங்களை மிரண்டு பார்த்தது. ஆனால் நாங்கள் வேட்டையர்கள் அல்ல என அறிந்திருந்தது.
ப்ளோரிடாவில் டாக்டர் ரஜினிகாந்த், அவர் மனைவி அபி, சௌந்தர், ராதா, நான், அருண்மொழி ஆகியோர் அங்குள்ள ஓர் ஊற்றுக்குச் சென்றிருந்தோம். அது ஊற்று அல்ல, மண்ணுக்குள் ஓடும் நதி. அந்நிலம் பலகோடி ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் இருந்தது. ஆகவே அதன் அடிப்பாறை என்பது சுண்ணக்கல். சுண்ணக்கல் எங்கிருந்தாலும் அதில் பிற உப்புத்தாதுக்கள் காலத்தால் அரிக்கப்பட்டு மாபெரும் நிலத்தடிக்குகைகள்- அதாவது பிலங்கள் உருவாகும். அத்தகைய பெரும் பிலங்கள் வழியாக நிலத்தடி நீர் ஆறுகள் போல ஓடிக்கொண்டிருக்கிறது. நேரடியாக கடலில் கலக்கிறது. பல பாதாளகங்கைகளுக்கு ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுகூட உண்டு.
அந்த பாதாள நதிகளில் இருந்து நீர் மண்ணை உடைத்து மேலே வந்து ஊற்றாகி பெருகி ஆறாகி ஓடுவதுண்டு. அத்தகைய ஓர் இடத்துக்குச் சென்றிருந்தோம். அவற்றில் குளிப்பதென்பது ஒரு பெருங்கொண்டாட்டமாக இருந்து வருகிறது. நாங்கள் செல்லும்போது சீசன் இல்லை. ஆகவே கூட்டமே இல்லை. ஓரிரு வெள்ளையர் மட்டும் சோம்பலாக அமர்ந்திருந்தனர். குளிர்நீரில் குளித்த ஒரு வெள்ளைக்காரச் சிறுவன் குருதிச்சிலை போல சிவந்திருந்தான். திரும்பி வரும்போது அந்த அணில்களைப் பார்த்தேன். ஒன்று அருகே வந்து மணிக்கண்களால் என்னை பார்த்தது.
கண்ணோடு கண். ஆனால் என்ன அறிந்தது? நான் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பாலிருந்து, கடல்கடந்து அந்த மண்ணுக்கு வந்த அன்னியன் என்று அதற்கு தெரியுமா? அந்தச் சந்திப்பில் நான் கொல்பவனல்ல என்று அதுவும், அது இனியது என நானும் உணர்ந்தோம். நீயும் இப்புவியின் உயிர்க்குலங்களில் ஒருதுளி, என்னைப்போலவே என்று இருவரும் சொல்லிக்கொண்டோம்.