அறியப்படாத தத்துவசிந்தனையாளர் – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நீலி நவம்பர் 2023 இதழில் சைதன்யா எழுதியவேர்கள்கட்டுரை மிகச் சிறப்பாக வந்துள்ளது. சிமோன் வெயில் என்ற சிந்தனையாளரை இக்கட்டுரை அறிமுகப்படுத்துகிறது.

ஏற்கனவே பரிச்சயமான காந்தியின் வழிமுறையுடன் பொருத்தி சிமோன் வெயிலின் அணுகுமுறை சொல்லப்பட்டிருப்பதால் அணுக்கமானதாக தோன்றியதுகாந்திய வழியை பகவத்கீதையின் சில ஸ்லோகங்களுக்குள்ளும் புத்த சமண மதங்களில் உள்ள அகிம்சை கொள்கையிலும் இணைத்து விளக்கலாம். ஆனால் காந்திய வழியின் முக்கிய அம்சம் என்பது உறைந்த சொற்றொடர்களை உதிர்க்காமல் செயல் மூலமாக அது ஏற்படுத்திய தாக்கம் மூலமாக நடைமுறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

 ‘அளவற்ற சுதந்திரம் மனிதர்களை சர்வாதிகாரம் நோக்கி தள்ளும்‘,  ‘தனிமனிதர்களுக்கு தான் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும். அமைப்புகளுக்கு கட்டுப்பாடுகள் மட்டும் தான் இருக்க வேண்டும்‘, உரிமைக்கு மேலாக கடமையை முன்வைப்பது போன்றவற்றை சொற்றொடர்களாக இருந்தால் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் கூட கடந்து போகலாம். ஆனால் இவையெல்லாம் ஹிட்லரின் உருவாக்கம்உலகப்போரின் விளைவுகள், சிமோன் வெயிலின் நேரடி அனுபவம் மற்றும் அதன் விளைவாக அவர் வந்தடைந்த பாதையுடன் இணைத்து சொல்லப்படும் போது கொஞ்சம் அதிர்ச்சியுடன் கவனிக்க வைக்கிறது.

ஒரு சிந்தனையாளர் அவர் பின்னணி, அவரது வழிமுறைகள், இன்று நாம் அவரிடம் பெற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது போன்ற அனைத்துடன் அறிமுகப்படும் போதே முழுமையாக இருக்கும். அது இந்த கட்டுரையில் உள்ளது. ஒரு மனிதன் ஒரு மதத்தையோ அமைப்பையோ வரலாற்று நிகழ்வையோ தன் வேராக கொண்டால் அவன் பாதை அழிவு நோக்கியே இருக்கும். தான் சகமனிதர்களுக்கு(அல்லது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கோ இந்த சுழற்சிக்கோ தன் பங்கை ஆற்றுவது என்று நான் எடுத்து கொண்டேன்) ஆற்ற வேண்டிய கடமையை மட்டுமே வேராக கொள்ள வேண்டும் என்று சிமோன் வெயில் சொன்னதாக கட்டுரையில் சொல்லப்பட்டதை சாரமாக எடுத்துக் கொண்டேன். ஆனால் தன் பங்கை ஆற்றுவதற்கு மதத்தை, அமைப்பை, வரலாற்றில் இருந்து கிடைக்கும் அனுபவங்களை எல்லாம் ஊடகமாக பயன்படுத்தி கொள்ளலாம். அந்த தெளிவு இல்லாத போது தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன என்று நினைக்கிறேன்.

ஜெயராம்

அன்புள்ள ஜெயராம்

வேர்கள் முக்கியமான ஒரு கட்டுரை. அண்மையில் அமெரிக்காவில் பெண்களுடனான ஓர் உரையாடலில் ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. “பெண் தத்துவஞானிகள் என எவரும் இல்லையா?” என்னால் நினைவுகூர முடிந்தவரை மேலைச்சிந்தனையில் பேசப்படும் அசல் தத்துவசிந்தனையாளர்கள் சிமோங் த பூவா, அயன் ராண்ட் இருவரும்தான் என்று சொன்னேன்.  சிமோன் வெயில் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. தமிழுக்கு ஒரு முக்கியமான அறிமுகம்.

வேர்கள் – சைதன்யா

முந்தைய கட்டுரைALTA விருது வியட்நாம் நாவலுக்கு…
அடுத்த கட்டுரைமலைகளில் நிகழ்வது -கடிதம்