வாய்நோக்கியல்

பொதுவாக எல்லா போர்டுகளையும் வாசித்துவிடுவது என் வழக்கம். மின்னல்வேகக் காரிலேயே பெயர்ப்பலகைகளை வாசிப்பேன். விளம்பரங்களை கவனிப்பேன். எழுத்துப்பிழைகளும் வேடிக்கைகளும் கண்ணில் இருந்து தவறுவதில்லை. பயணங்களில் அவற்றை பெரும்பாலும் நான்தான் பிறருக்குச் சுட்டிக்காட்டுவேன். தேவையென்றால் நின்று சுவரொட்டிகளைப் பார்க்கும் வழக்கமும் எனக்குண்டு. அதைப்பற்றி நண்பர்கள் வியப்பதுண்டு.

சுந்தர ராமசாமிக்கும் இந்த வழக்கம் இருந்தது. “என்னை மாதிரியே ஒரு  வாய்நோக்கிதான் நீங்களும் என்பதில் சந்தோஷம்என ஒரு கடிதத்தில் எழுதியிருந்தார். பிதாமகன் படத்தின் போஸ்டரை வாய்பிளந்து பார்த்து நிற்கும் சு.ராவின் புகைப்படம் புகழ்பெற்றது. அவரது வாய்நோக்கித்தனத்தை கிண்டல்செய்து வெங்கடாசலம் என்பவர் ஒரு சிற்றிதழில் ஏதோ எழுத சு.ரா அதற்கு நக்கலாகப் பதிலளித்திருந்தார்.

சிறந்த வாய்நோக்கியாக ஆவது இலக்கியவாதிக்கு அவசியமான அடிப்படைப் பயிற்சி என நான் நினைக்கிறேன். க.நா.சுவே நல்ல வாய்நோக்கி என்று சு.ரா சொன்னார்.  என்னை முதலில் சந்தித்ததும் சுஜாதா கேட்ட கேள்வி “இப்ப ஆண்மை விருத்தி லேகிய விளம்பரம் என்னென்ன வருது?” நான் வரிசையாகச் சொன்னேன். அவருக்கு ஒரு தொடர்கதைக்காக தேவைப்பட்டது. குறித்துக்கொண்டு “எல்லா குப்பையையும் மேயறீங்க. நீங்க ஒரு அசல் ரைட்டர், என்னை மாதிரி…” என்று சான்றிதழ் வழங்கினார். எங்கோ எழுதியுமிருக்கிறார். ஆனால் எங்கள் வாய்நோக்கி மரபுக்கு பின்னர் வாரிசுகள் அமையவில்லை என்னும் வருத்தம் எனக்குண்டு.   

ஓர் அயலூரின் விளம்பரப்பலகைகள், பெயர்ப்பலகைகள் அங்குள்ள வாழ்க்கைமுறை, பொருளியல், பொதுவான மனநிலை ஆகிய அனைத்தையுமே ஒருவகையில் காட்டிவிடுபவை. ஆனால் அன்னியரின் கண் நமக்கு வேண்டும். உள்ளூரில் பயன்பாடாக, அன்றாடச்செய்தியாக இருப்பவை வெளியிலிருந்து வருபவர்களுக்கு பலவகையான நுண்ணிய அர்த்தங்கள் கொண்ட குறியீடுகளாக ஆகிவிடும். 

பொதுவாக, ஓர் ஊரின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் பற்றிய மொத்தச்சித்திரத்தை அன்னியர்களே அடையமுடியும். அன்னியமாக தன்னை நிறுத்திக்கொள்வதன் வழியாக புனைவுக்கலைஞன் அடைய முடியும். அவனுக்கு அயலானவை அங்குள்ள வாழ்க்கையின் அன்றாட நுண்செய்திகள் மட்டுமே. அல்லது அந்த ஊரை வெறும் செய்திக்குவையாகப் பார்க்கும் பொருளியல்கணக்கியல் வல்லுநர் அடையமுடியும்.

அமெரிக்காவில் பாஸ்டன் பகுதியின் அறிவிப்புப் பலகைகள் சுவாரசியமானவை.  “Caution!!! over passionate dog!” என்னும் அறிவிப்பின் கீழ்  ஒரு வாய்திறந்த உற்சாகமான லாப்ரடார் நாயின் படம்.  ஒரு பூடில் நாயின் படம் போட்டு அதன் பெயர். Hot licker .பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியரான பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் பதவியிலிருந்த நாட்களில் அவர் படத்தைப் போட்டு “Yes, He is our (German) shepperd!” என ஒரு கத்தோலிக்க அமைப்பின் போஸ்டர். அதைப்போன்ற ஒன்றை  வேறெங்கும் பார்க்க முடியாது. “This house owner is not believing in violence though he have two shotguns and a pistolஎன ஓர் அகிம்சைவாதி அறிவித்திருந்தார். அவநம்பிக்கையால்கூட சுடலாமே.

பாஸ்டனுக்குப் பின் சுவாரசியமான சிறு அறிவிப்புகள் போர்ட்லண்டில் உண்டு. “Avoid sales calls . Bone-tired housewife” என்ற அறிவிப்பை இம்முறை  கண்டேன்.  அப்போது செல்போன் எடுத்துச் சென்றிருக்கவில்லை. எடுத்துச் சென்றாலும்கூட தனியார் வீடுகளை புகைப்படம் எடுக்கலாமா என்னும் ஐயம் எனக்குண்டு. தொலைந்துபோன நாய்களை மீட்டுக்கொடுக்கும் சேவைத் தொழிலைச் செய்யும் ஒருவரின் அறிவிப்பை போர்ட்லண்டில் கண்டேன். பூனைகளை தொலைத்தவர்கள் அணுகவேண்டாம் என்னும் சிறு அடிக்குறிப்புடன். அவை கூரைகள் வழியாக பயணம் செய்பவை. அவர் என்ன செய்வார்? 

எங்கும் ஒரு புன்னகை தேவை என்ற எண்ணம் அமெரிக்காவிலுண்டு. அது வணிக உத்தியும்கூட. குழாய் சீரமைப்பவரின் பெயர்ப்பலகையில் இதயத்தின் படத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன். “We ensure free Flow”. நகைச்சுவை நல்ல வணிகமுறை என அறிந்தவர் வீடிலிகளிலும் உண்டு. “Help a dollar! The Gospel promises heaven!“ என  ஓர் அட்டையுடன் ஒருவர் சாலையில் வைக்கப்பட்ட தொப்பியுடன் அமர்ந்திருந்தார்.  “Atleast I am not lying. Gimme a buck for next dope” என ஒரு வீடிலா அரிச்சந்திரன்.

பனியனின் சொற்களை படிக்காமலிருப்பது என்னைப்போன்ற அறுபது கடந்த செம்மைநடையருக்கு நன்று. ஆனால் முடியாது. ஒரு வளப்பமான கருப்பினப் பெண்மணியின் முன்பக்க வரி. “Offcourse I fuck!”. யார் அவளிடம் “சேச்சே, அதெல்லாம் உனக்கு சரிவராது” என்று  மறுத்தது என்று தெரியவில்லை. “Dont fuck while dancing” நிஜம்மாகவே அமெரிக்காவில் அப்படியெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்களா என்ன? “Freedom and pursuit of fuckiness” தாமஸ் ஜெஃபர்ஸன் கல்லறைக்குள் புரண்டு படுத்திருப்பார், சிரிப்பை அடக்கியபடி.

பொதுவாக அமெரிக்கர்களுக்கு ‘விஷயத்துக்கு வரும்போது’ டிரம்ப் போன்ற ஆங்கிலேய ஆசாமிகள்தான் சரிவருவார்கள் என்னும் நினைப்பு உண்டு என தோன்றுகிறது. டிரம்ப் ஒரு ஜேம்ஸ்பாண்ட் தானே. மூளையை இடுப்புக்கு கீழே வைத்திருக்கும் நெட்டை வெள்ளையன். நெடுஞ்சாலை முழுக்க வழக்கறிஞர்களின் விளம்பரங்கள். “என்னது,விபத்தா? யோவ்!,  காசய்யா காசு…எங்கிட்ட வாங்க .வாங்கித்தர நானாச்சு.” என்னும் அறைகூவல்கள். காப்பீட்டில் நம்பிக்கை இல்லா எனக்கே விபத்துக்கான ஆசை வந்துவிட்டது. அந்த வக்கீல் முகங்களிலெல்லாம் டிரம்புத்தனம் இருந்தது.

“Ya, we serve hot coffee” என ஓர் அறிவிப்பு. காபி சூடாக இல்லை என எவரோ ஏற்கனவே மறுத்திருக்கிறார்கள். “We count you too”  என்ற வரியால் உத்தேசிப்பதென்ன என்று தெரியவில்லை. அது ஒரு Hootters கடையின் விளம்பரம். சாண்டில்யத்தனமான அழகிகள் மட்டுமே பரிமாறும் அந்த விடுதிக்குள் ஒருமுறை சென்றுள்ளேன். காளைச்சந்தையில் நுழைந்த அனுபவம். சென்னையில் கடை தொடங்கினால் ‘திமில்கள்’ என வைக்கலாம்.

ஒருமுறை பாரீஸ் அருகே தங்குமிடம் ஒரு ஹூட்டர்ஸ் விடுதிக்கு நேர் மேலே. காலையில் கிளம்பி காரிலேறப்போன அருண்மொழி சரசரவென உள்ளே நுழைந்து அங்குள்ள கழிப்பறைக்குச் சென்று மீண்டாள். பாரீஸ் பற்றி எரியப்போகிறது என நான் நான் திகிலுடன் நிற்க நண்பர் ஆறுதல் படுத்தினார்அந்தக்கடை பகலில் செயல்படுவதில்லை. நான் அதன்பின் பார்த்தேன். அக்கடையின் அடையாளமே ஆந்தைதான். ஆண்மையின் முதல்சிறப்பே முழிதானே? ஆமாம், ஆங்கிலத்தில் கூட வாயர்தானே அதற்கான சொல்?  தமிழில் வாய்நோக்கியர் என்று சொல்லலாம். 

எல்லா பொருட்களுக்கும் விளம்பரம் கண்ணுக்குப்படுகிறது. சவப்பெட்டிகளுக்கெல்லாம்கூட. தனியர்களான துரைகள் செத்தால் கறுப்புக்கோட்டுடன் சோகமாக நல்லடக்கத்துக்கு வரும் ஆட்கள்கூட நியாயமான ஊதியத்துக்கு கிடைப்பார்கள் என்று நண்பர் சொன்னார். செத்தவரே முன்பதிவு செய்து பணம் கட்டியிருக்கவேண்டும். தன்னைப்பற்றி என்னென்ன புகழ்மொழிகள், இரங்கலுரைகள் சொல்லவேண்டும் என்றுகூட அவர் தேர்வு செய்யலாமோ என்னவோ.

“Selling cigars is divine” என ஒரு கடை உணர்வது நியாயம். ஆனால்  “Even mountains are smoky!”என்னும் வரியை அது சட்டபூர்வமாக கஞ்சாவும் மரியுவானாவாவும் விற்கும் கடை என உணர்ந்தபின்  ஸ்மோக்கி மலையை நேரில் பார்த்த என்னால் ரசிக்க முடியவில்லை. மயாமியில் இன்னொரு கடையின் பெயர் “The weed”. களையான இளைஞர்கள் நால்வர் முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.  

கனடா டொரெண்டோவில் ஸ்கங்கின் வீச்சத்தை கார்களில் இருந்து தூய்மை செய்து தரப்படும் என்னும் ஒரு பெயர்ப்பலகையை கண்டு .முத்துலிங்கத்திடம் ஒருமுறை கேட்டேன். “அது சர்ர்ரியான கஸ்டம். அதுக்கு பூர்வஜென்ம பாவத்தைக்கூட தூய்மை செய்துபோடலாம்என்று ஸ்கங்க் பற்றிச் சொன்னார். அதைச் சீண்டி, அது பின்பக்கம் வழியாகச் சீறினால் அது ஒரு மாமுனிவரின் சாபத்துக்கு நிகரானது. காரின் ஏழுபிறவிக்கும் தொடரும் அதன் விளைவு. ஆயிரம் கரப்பாம்பூச்சிகளுக்கு நிகர் என கற்பனைசெய்துகொண்டேன்.

ஹூஸ்டன்,டாலஸ் பகுதிகளில் நகைச்சுவை கம்மி. ஆனால் அவர்களின்சீரியஸ்தனமே நகைச்சுவையானது. பல இடங்களில் அமெரிக்காவின் முதன்மை அறிவுஜீவியும், மனிதநேயரும், சிறந்த நிர்வாகியுமான டொனால்ட் டிரம்ப்பை அமெரிக்கா தூக்கி வீசியமைக்கு கடும் வருத்தம் தெரிவிக்கும் சுவர்வாசகங்கள் இருந்தன. இம்முறை தவறே செய்யாதீர்கள் என்னும் மன்றாட்டுகளை இந்தப்பயணத்தில் கண்டேன். ஒரே ஓர் இல்லத்தின் முகப்பில் ஹாலோவீன் பேய்ப்பொம்மைகள் நடுவே டிரம்ப் பொம்மை. ஒரு கார் மேல் “I am a Trump hater!”  என்னும் சுயப்பிரகடனத்தை நண்பர் ராஜன் சோமசுந்தரம் சுட்டிக்காட்டினார்.

ஒரு டிரம்ப் பொம்மை காற்றிலாடியபடி, பெரிய சிரிப்புடன். “Missing me?” என கட்டைவிரல் காட்டி கேட்டது. “பின்னே அல்லாம?” என்று நான் நாரோயில் மொழியில் பதில் சொன்னேன். “சாயிப்பு போன பிறவு ஜீவிதம் உப்பில்லா கஞ்சிவெள்ளமாட்டுல்லா இருக்கு?” என்னைவிட  சைதன்யாதான் அவரை நினைத்து வருந்துபவள். டிரம்ப் இருந்தவரை நாள்தோறும் அமெரிக்க அரசியலை சுவாரசியமாக வாசித்து வந்தாள். அவர் போனதும் அமெரிக்க அரசியலில் ஆர்வம் போய்விட்டது. “யாரோ ஒரு ஞாபகமறதித் தாத்தா அமெரிக்காவிலே பிரசிடெண்டா இருக்கார்…” என்ற அளவில் இன்றைய ஈடுபாடு.

போர்ட்லண்டில் ஒரு விடுதியின் அறிவிப்பு இனவாதத்தை அவர்கள் குறிப்பிட்ட அடி தொலைவுக்கு இப்பால் அனுமதிப்பதில்லை என்று சொன்னது. ஒரு கடையில் அது ஒரு பெண் அவரே நடத்தும் கடை என்னும் அறிவிப்பு. நான் பார்த்தவரை ஆந்திரத்தில் எல்லா சின்ன உணவகங்களும் அம்மகாருகள் மட்டுமே முழுப்பொறுப்பில், பதினாறு கைகள் கொண்ட விசையுடன், நடத்துபவை. ஆந்திரத்தில் ஆண் கடை நடத்தினால் அறிவிப்பு போடலாம்.

அமெரிக்கா சிரித்துக்கொண்டே இருக்கிறதென்று தோன்றும். ஆனால் அந்தச்சிரிப்பின் அடியிலிருப்பது ஒரு சலிப்புதானே என்றும் எண்ணிக்கொள்வேன்.   

முந்தைய கட்டுரைஉஷாதீபன்
அடுத்த கட்டுரைகூவுதலின் அழகியல் -கடிதம்