அஞ்சலி: ஜான் ஐசக்

நான் 1984ல் எத்தியோப்பிய பஞ்சத்தை புகைப்படம் எடுக்கும்போதுஒரு பெண் தன் குழந்தையை சாலையோரத்திலேயே பிரசவித்ததையும்குழந்தையின் தொப்புள்கொடி இன்னும் அவளுடன் இணைந்திருப்பதையும் நேரில் பார்த்தேன். அரைமயக்கத்தில் இருந்த அவளை அவளுடைய ஆடைகளால் மூடிபக்கத்தில் முகாமில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியரை அழைத்தேன். அப்பொழுதுஒரு தொலைக்காட்சிக் குழுவினர் இதைப் பார்த்தார்கள். அவர்கள் ஜீப்பில் சென்று கேமராவை எடுத்துவந்துநிர்வாணமாகச் சாலையில் கிடந்த நிலையில் அவளைப் படம்பிடித்தனர். நான் அவளுக்கு ஆடை அணிவிப்பதைப் பார்த்த கேமரா மேன் மிகவும் எரிச்சலடைந்தார். அவருடைய புகைப்படத் தருணத்தை கெடுத்ததற்காக என்னை ஓங்கிக் குத்தினார்.

அதே பயணத்தின்போதுஒரு பெண் இறந்துகொண்டிருக்கும் தன் குழந்தையை என் கையில் கொடுத்து வைத்திருக்கச் சொன்னாள். அவளுடைய எல்லா குழந்தைகளும் அவள் கையில் ஒவ்வொன்றாக இறந்ததால், “என் கடைசிக் குழந்தையை என் கைகளில் வைத்திருக்கும் அவமானத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அவள் என்னிடம் சொன்னாள். எனவேநான் குழந்தையை என் கைகளில் வைத்திருந்தேன். குழந்தை இறந்ததுஅந்தத் தாயும் எதுவும் சொல்லாமல் வெளியேறினாள். எனது ஓட்டுநர் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அந்தச் சிறிய குழந்தையை நானே அடக்கம் செய்ய வேண்டியிருந்தது

1988ம் ஆண்டில் நான் மீண்டும் எத்தியோப்பியாவில் இருந்தேன். குப்பைகளை அகற்றிகுப்பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்து அதன்வழி வாழ்கிற ஏழ்மையான மக்களைப்பற்றி ஒரு புகைப்படக்கதை உருவாக்கினேன். அப்போதுஒரு கண் குருடாக இருந்த ஒரு வயதான பெண்ணை நான் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில்எத்தியோப்பியா நிறைய அமைதியின்மையில் இருந்ததுஅங்கு புரட்சி நடந்துகொண்டிருந்ததால் நான் ஹோட்டலுக்கு திரும்பிச்செல்கிற அவசரத்தில் இருந்தேன்.

நான் தங்கியிருந்த இடத்துக்கு என்னை அழைத்துச்செல்ல ஹெலிகாப்டர் காத்திருந்தது. மாலை 6.00 மணிக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு இருந்தது. அந்தப் பெண்மணி தன்னைப்பற்றி என்னிடமும் என் மொழிபெயர்ப்பாளரிடமும் சொல்லிக்கொண்டிருந்ததால் நான் இன்னும் சிறிதுநேரம் அங்கு இருக்கவேண்டும் என அவள் விரும்பினாள். எங்களுக்கு ஏதாவது கையில் கொடுத்துவிட வேண்டுமென அவள் நினைத்திருந்தாள். உண்மையில் அவள்ஒரு கோழி முட்டையிடுவதற்காகக் காத்திருந்தாள். கோழி முட்டையிட்டது. கடைசியில் அவள் அந்த முட்டையை எடுத்து என்னிடம் கொடுத்துஅதை ஹோட்டலுக்கு எடுத்துச்சென்று சாப்பிடச் சொன்னாள். கொடுப்பதுதான் மிகப்பெரிய மகிழ்ச்சி. அந்தப் பெண் எனக்கு அதை கற்றுக் கொடுத்தாள். நான் வாழும்வரை அந்த சந்திப்பை ஒருபோதும் மறக்க மாட்டேன்

எனவே எனது செயல்களால்குறிப்பாக எனது புகைப்படங்களால் ஒருவரின் கண்ணியத்தை சிறிதுகூட பறித்துவிடக்கூடாது என்பதில் நான் அதீத கவனமாக இருக்கிறேன். நான் நன்கறிந்த மற்றும் நான் பணிபுரிந்த மூன்றுபேர் இந்த விஷயத்தில் என்னைப் பெரிதும் பாதித்தனர். என் அம்மாநடிகை ஆட்ரி ஹெப்பர்ன் மற்றும் அன்னை தெரசா. அவர்கள் அனைவரும் மனித கண்ணியத்தை வலியுறுத்தினர். முதலில் நான் ஒரு மனிதன்அதன் பின்னரே நான் ஒரு புகைப்படக்காரன். புகைப்படம் என்பது என் வாழ்வின்வழி என்றே உணர்கிறேன். ஏன்னெனில்அதில் ஈடுபடும்போதே என் ஆன்மாவரை மகிழ்வையும் நிறைவையும் உணர்கிறேன்.

 –ஜான் ஐசக் (புகைப்படப் பத்திரிக்கையாளர்)

ஜான் ஐசக்உலகின் பலமுக்கிய விருதுகளைப் பெற்ற புகைப்படப் பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் தற்போது நியூயார்க் நகரில் வாழ்ந்து வருகிறார். மாறிவரும் இப்பேருலகில் நிகழ்கிற மானுடப் போராட்டங்களையும் வெற்றிகளையும் புகைப்படக்கதைகளாகப் பதிவுசெய்வதற்காக இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்துள்ளார். ஜான் ஐசக்மெட்ராஸ் பல்கலைக்கழக புதுக்கல்லூரியில் (The New College, Madras University) விலங்கியலில் இளங்கலைப்பட்டம் பெற்றவர்.

வியட்நாமிய படகு மக்கள்எத்தியோப்பியன் பஞ்சம்கம்போடிய கொலைக்களங்கள்ஈரானியப் புரட்சிபாரசீக வளைகுடா போர்லெபனான்போஸ்னியாகுவைத்ஈரான்ஈராக்ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் போர்கள் மற்றும் ருவாண்டன் இனப்படுகொலை ஆகியவைகளை ஜான் ஐசக் புகைப்பட ஆவணங்களாகப் பதிவுசெய்துள்ளார். 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இந்த ஆவணப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த படங்களை ஐக்கிய நாடுகள் சபைதன்னுடைய ஏராளமான வெளியீடுகளிலும் பலவிதமான அமைதி முயற்சிகளுக்கும் பயன்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல்ஜான் ஐசக் உலகின் மிகச்சிறந்த வனவிலங்குப் புகைப்பட ஆசான்களில் ஒருவர். இந்தியாவின் தேசிய பூங்காக்களில் ஆபத்தான நிலையிலுள்ள புலிகள்நியூ மெக்ஸிகோவின் இடம்பெயர்ந்த கொக்குகள்அலாஸ்காவின் காட்மாய் தீபகற்பத்தின் கரடுமுரடான கரடிகள்மேய்ன் மச்சியாஸ் சீல் தீவின் பஃபின் பறவைகள் மற்றும் ஆப்பிரிக்காவின் நமீபியாவின் தேசிய பூங்காக்கள் ஆகியவைகளை இவர் ஆவணப்படுத்தியுள்ளார். சுற்றுச்சூழலியல் தொடர்பான பல்வேறு உலகளாவிய இதழ்களில் இவருடைய புகைபடத்தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

1969 முதல் 1998 வரை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுத்தகவல் துறையில் (Public Information Department) புகைப்படக்கலைஞராகப் பணியாற்றியுள்ளார். ஒரு இருளறை தொழில்நுட்ப வல்லுநராக (Darkroom Technician) அங்கு தனது பணியைத் துவங்கிய இவர் நாளடைவில் புகைப்படப் பத்திரிகையாளராக (photojournalist) மாறினார். 1978ம் ஆண்டில்.நா சபை இவரை தலைமைப் புகைப்படக்கலைஞராக உயர்பொறுப்பு வழங்கியதுஅவர் 1998ல் ஐ.நா சபையின் புகைப்படப்பிரிவுத் தலைவராக உயர்பதவியில் பணிவகித்து ஓய்வுபெற்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் போட்டோ ஜர்னலிஸ்டாக பணியாற்றியதற்காக அறியப்பட்டதோடு மட்டுமல்லாமல்மைக்கேல் ஜாக்சன் (Michael Jackson) மற்றும் ஆட்ரி ஹெப்பர்ன் (Audrey Hepburn) உள்ளிட்ட பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் சுயாதீனமான பணிகளுக்காகவும் இவர் உலகளவில் அறியப்பட்டவர். ( ஆட்ரி ஹெப்பர்ன் ஒரு மேற்கத்திய நடிகைஇவர் ஆஸ்கர்கோல்டன் குளோப் மற்றும் BAFTA ஆகிய விருதுகளை ஒருசேர முதன்முதலில் வென்ற பெண்நடிகை ஆவார்.)

குழந்தைகள் நெருக்கடிச்சூழலை விவரிக்கும் Children in Crisis என்ற புகைப்படத்தொடர் உட்பட பல புத்தகங்களை ஜான் ஐசக் எழுதியுள்ளார். இந்தத் புகைப்படத்தொடரின் மூலம்உலகெங்கிலும் உள்ள அச்சுறுத்தலான பிராந்தியங்களில் வசிக்கிற குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைப்பற்றிய உயிரோட்டமான முதலறிக்கையை  இவர் நமக்குத் தருகிறார்.

மேலும்ஆர்ட் டேவிட்சன் (Art Davidson) மற்றும் ஆர்ட் வோல்ஃப் (Art Wolff) போன்ற சர்வதேச ஆளுமைகளுடன் இணைந்து அமெரிக்கச் சுற்றுச்சூழல் நிறுவனமான Sierra Clubக்காக Endangered Peoples என்ற ஆய்வுப் புத்தகத்தினை எழுதினார். மேலும்தன்னுடைய மனைவி ஜென்னேட்டுடன் இணைந்து ‘Coorg, Land of the Kodavas’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். 2008ம் ஆண்டில்காஷ்மீரின் மக்கள் மற்றும் அதன் நிலப்பரப்பு பற்றி இவர் எழுதிய The Vale of Kashmir புகைப்படப் புத்தகம் மிகுந்த வரவேற்பை பெற்றது. The Endangered Tigers of India, A Day in the Life of Africa, Photojournalist: In the Middle of Disaster, Visions: Fifty Years of the United Nations ஆகியவையும் இவருடைய புகைப்படப்புத்தக படைப்புகள் ஆகும்.

2002ல் The Washington Post பத்திரிக்கை நிறுவனம்இவர் ஆப்ரிக்காவில் எடுத்த புகைப்படங்களை தனது அச்சுநாளிதழிலும் இணைய நாளிதழிலும் பிரசுரித்தது. இலண்டனிலிருந்து வெளிவரும் Outdoor Photographer magazine, 2009ம் ஆண்டில்ஜான் ஐசக் பற்றிய ஒரு சிறப்புக்கதையை வெளியிட்டது. Maine Media Workshops எனும் அமைப்பு நிகழ்த்தும் ஆண்டுப் பட்டறைகளில் பயிற்றுநராகவும், Adobe, Lexar Media, Olympus Visionaries,  American Museum of Natural History Expeditions உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களில் புகைப்படக்கலை வழிகாட்டியாகவும்துறைவல்லுனராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

தனது வாழ்க்கை முழுதிலும்ஜான் ஐசக் தன்னுடைய புகைப்படப் படைப்புகளுக்காக ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும்நிகான் சர்வதேச புகைப்பட போட்டிகளிலிருந்து (Nikon International Photo Contests)13 விருதுகளையும் பெற்றுள்ளார். 2000ம் ஆண்டில்சர்வதேச புகைப்படக் கவுன்சில் (International Photographic Council) இவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’ வழங்கியுள்ளது. ஜான் ஐசக்வனவிலங்கு புகைப்படவியல் மற்றும் பயணம்சார் புகைப்படவியல் ஆகிய துறைகளில் தற்சமயங்களில் மிகத் தீவிரமாக இயங்கிவருகிறார்.

மனிதர்கள்இடங்கள் மற்றும் வனவிலங்குகளின் அற்புதமான மற்றும் வண்ணமயமான வகைகள் ஆகியவைகளை தேடித்தேடித் பயணித்து புகைப்படங்களாக ஆவணப்படுத்தும் ஒரு வாழ்க்கையை தற்போது தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறார். தனக்குக் கிடைக்கவிருந்த புலிட்சர் விருதுக்கான பல்வேறு வாய்ப்புகளைதான் கைவிடாது பின்பற்றுகிற கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக  நிராகரித்தவர் ஜான் ஐசக்.

குறிப்பாக ஒரு சம்பவம்உலகத்தை மாற்றும் மோதல்களை புகைப்படங்களை எடுப்பதிலிருந்து இயற்கையை மையமாகக் கொண்டு புகைப்படங்கள் எடுப்பதற்காக இவரது முடிவைத் தூண்டியது. தனது தந்தையை கொலைசெய்த போட்டிப் பழங்குடியினரிடமிருந்து தப்பித்துவந்த ஒரு சிறுவனை ஜான் ஐசக் சந்திக்க நேர்ந்தது. “என் அப்பாவைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள்” என அச்சிறுவன் ஜான் ஐசக்கிடம் சொல்லியிருக்கிறான். “நான் உன்னைப் போலவே ஒரு மகனைப் பெற விரும்புகிறேன்” என்று அவர் பதிலளித்து ஆறுதல் கூறியபோதுஅச்சிறுவன் மனம் மகிழ்ந்து, “என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடியுமா?” என்று கேட்டிருக்கிறான். ஆனால் ஜான் ஐசக்கால் அது முடியவில்லை. ஹெலிகாப்டர் தனக்காகக் காத்திருக்கிறது என்பதைக் காரணம்காட்டி அவர் வெளியேற வேண்டியிருந்தது.

மீண்டும் அவர் நியூயார்க் திரும்பியபோது அந்த இயலாமை அவரை வாட்டிஎடுத்துள்ளது. அவரது வார்த்தைகளிலேயே அதைச் சொல்வதானால், “நான் மிகவும் உதவியற்றவனாக என்னை உணர்ந்தேன்அது எனக்குள் ஏதோவொரு முறிவை உண்டாக்கியது. ஒருநாள் காலையில் என் பக்கத்துவீட்டு கொல்லைப்புறத்தில் ஒரு சூரியகாந்தி இருப்பதைக் கண்டேன்ஒரு பட்டாம்பூச்சி வந்து அதன்மீது அமர்ந்தது. அக்கணம் நான் குணமடைந்தேன். அப்போதுதான் இயற்கையின் இறைதரிசனத்தை  புகைப்படங்களாக எடுக்க முடிவுசெய்தேன்”.

கடந்த 2020ம் ஆண்டு நோயச்சகால சூழ்நிலையில்குக்கூ இணையவழி உரையாடல்நிகழ்வில் ஒளிப்படக்கலைஞர் ஜான் ஐசக் அவர்கள் பங்கேற்று உரையாடிய ஆசிரியச் சொற்கள் அகத்தில் நினைவெழுகிறது. தன்னுடைய வாழ்வனுபவத்தின் ஒளிபொருந்திய கதைகளையும் தகவல்களையும் அவ்வுரையாடலில் அவர் பகிர்ந்துகொண்டார். சமகாலத்தில்ஒளிப்படத்துறையின் இன்றியமையாத மூத்த முன்னோடி மனிதர் ஜான் ஐசக். எதிர்வரும்காலத்தில் எத்தனையோ ஒளிக்கண்களுக்கு மானசீக ஆசானாக மாறப்போகிற பேருள்ளம். ஒளிப்படக்கலை குறித்தும் வாழ்வு குறித்தும் அவருடன் நிகழ்ந்த நல்லுரையாடல் நமது வாழ்வின் தரிசனப்பக்கங்களில் ஒன்றெனஅகத்தின் அழியாநினைவெனப் பதியும். இயற்கை எய்திய கானுயிர் ஒளிப்படக்கலைஞர் ஜான் ஐசக் அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.

காணொளி உரையாடல் இணைப்புhttps://www.youtube.com/watch?v=9n5A69-dyDs&ab_channel=CuckooMovementforChildren

~

நினைவுகளுடன்,

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைவல்லினம், யுவன் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைமு.மேத்தா