சினிமாப்பாடல்களுக்கு எப்போதுமே இசையமைத்தபின்னரே வரிகள் எழுதப்படுகின்றன. மெட்டுக்கு எழுதுவதே இசைப்பாடலென ஆகிவிட்டிருக்கிறது. ஆனால் முக்கியமான மலையாள பாடலாசிரியர்கள் பலர் பாடலையே முதலில் எழுதியிருக்கிறார்கள். இசை பின்னர் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகுமாரன் தம்பி தன்னுடைய பெரும்பாலான பாடல்களை முதலில் எழுதிவிட்டு பின்னர்தான் அவை இசையமைக்கப்பட்டன என்றார். இப்பாடல் அத்தகையது. தம்பி எழுதிய வரிகளுக்கு தட்சிணாமூர்த்தி இசையமைத்தார். தம்பியே எழுதி இயக்கிய படம்.
பாடல் முன்னரே எழுதப்படும்போது அதில் கவித்துவம் அதிகமாக உள்ளது. வரிகள் வழியாக ஒரு தொடர்ச்சி உள்ளது. இசைப்பாடலுக்குரிய நெகிழ்வும் ஒழுக்கும் அமையும்போதே கவிதைக்குரிய பூடகத்தன்மையும் நிகழ்கிறது.
காதல் தோல்வியின் ஏக்கம் கொண்ட பாடல் இது. ஆனால் வரிகளில் எங்கும் நேரடியாக அது இல்லை. வைரங்கள் கரியாகும், கனவுகள் உடையும் ஒரு யதார்த்தத்தை பெருமூச்சுடன் எண்ணிக்கொள்கிறது. அந்தி திருடிக்கொண்ட அக்கனவு எத்தனை பவன் என்று அக்கனவுகளைச் சமைத்த காதலெனும் சிற்பியிடம் கேட்டுக்கொள்கிறது.
பகல் ஸ்வப்னத்தின் பவனுருக்கும்
ப்ரணய ராஜசில்பீ
இந்நு சந்திய கவர்ந்நு எடுத்த
ஸ்வப்னம் எந்து பவன்?
ஹ்ருதயமெந்ந கனியில் பதினாயிரம் அறகள்
கனகமுண்டு ரத்னமுண்டு கல்கரியுண்டு
ஸ்வர்ணம் கொண்டு நீ சில்பம் தீர்த்து
அதில் ரத்னங்கள் பதிக்கும்
இரவில் துக்கமாம் க்ரூர நிரூபகன்
கரியாணு எந்நு ஓதும்
அது கரியாணு எந்நு ஓதும்
காலமெந்ந தெய்வம் ஒரு ஃப்ராந்தன் ராஜாவு
நின்ற வர்ண சில்பங்களே அவன் தழுகி தாலோலிக்கும்
உறஞ்ஞு துள்ளியால் ஒந்நில்லாதே அவன்
தாழே எறிஞ்ஞு உடைக்கும்
(தமிழில்)
பகல்கனவின் பொன்னுருக்கும் காதலெனும் ராஜசிற்பி
இன்று அந்தி திருடிக்கொண்ட கனவு எத்தனை பவன்?
இதயமெனும் கனிமச்சுரங்கத்தில் பத்தாயிரம் அறைகள்
வைரமுண்டு மணிகள் உண்டு நிலக்கரியுமுண்டு
பொன்னால் நீ சிற்பம் செய்து அதில் வைரங்கள் பதிப்பாய்
துயரமெனும் குரூர விமர்சகன் கரியே என்று சொல்வான்
அவை கரியே என்று சொல்வான்
காலமெனும் தெய்வம் ஒரு பைத்தியக்கார அரசன்
உன் வண்ணச்சிற்பங்களை அவன் தழுவிக் கொஞ்சுவான்
வெறியேறுகையில் ஒன்றும் எஞ்சாமல் அவன்
கீழே வீசி உடைப்பான்.