என் முதல் வெளிநாட்டுப் பயணம் 2001ல், கனடா இலக்கியத் தோட்டம் தொடங்கிய மறுஆண்டு. அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் சென்றிருந்தேன். அன்று பார்த்தவற்றில் இன்றும் கனவென நீடிப்பது அ.முத்துலிங்கம் என்னை அழைத்துச் சென்று காட்டிய இலையுதிர்வுகால மேப்பிள் காடு.
மாபெரும் அனல்வெளி என மலைகள் எழுந்து என்னைச் சூழ்ந்திருந்த காட்சியில் என் அகம் திடுக்கிட்டது, விந்தையான பரவசம் ஒன்றுக்குள் சென்றது. அன்றிருந்த நிலையை பின்னர் சொல்லாக்கிக் கொண்டதையே இன்று நினைவுகூர்கிறேன். அன்றிருந்தது ஒரு சொல்லற்ற நிலை. மெய்யான அனுபவங்களெல்லாமே திளைத்தல்தான். புழுவென்றாதல். தானிருக்கும் பரப்பை முழுமையாக உடலே பொறியென்றாகி அறிவது புழு மட்டுமே. சங்கசித்திரங்கள் நூலில் அந்த அனுபவத்தை எழுதியிருக்கிறேன்.
அந்த கண்மெய்யாகும் பேரனுனுபவம் என் கதைகளிலும் நாவல்களிலும் வந்துள்ளது. வெண்முரசில் உள்ளது. மலைபூத்தபோது போன்ற கதைகளிலுள்ளது. எழுதித் தீராதது அந்தக் காட்சி.
எந்த இயற்கைக்காட்சியும் எழுதிவிட முடியா அனுபவமே. ஆனால் இயற்கையை, புறவய உலகை எழுத முயல்வதன் வழியாகவே மொழி புதுமையடைகிறது. ஏனென்றால் அந்த முயற்சியில் அகம் தன்னை புதியதென கண்டுகொள்கிறது. அதற்குரிய நிகர்காட்சிகளை புறத்தே தொட்டு எடுக்கிறது. அவற்றையே படிமங்கள் என்கிறோம்.
எந்த எழுத்தாளனுக்கும் புறவய உலகைச் சொல்வதே மெய்யான அறைகூவல். அதற்கு முயலாதவன் ஆற்றலற்ற இரண்டாம்நிலைப் படைப்பாளி. ஓர் அன்றாட வண்ணத்தைக்கூட நாம் மொழியில் சொல்லிவிட முடியாது. அதற்கு இன்னொரு பொருளின் வண்ணத்தையே நிகர்வைக்க வேண்டும். கத்திரிப்பூ நிறம் என்றோ மாந்தளிர் நிறம் என்றோ சொல்கையில் நாம் செய்வது அதையே.
அதைச் சொல்வதென்பது மொழியை அளையும் பாழ்வேலை. ஆனால் அது ஒரு உச்சப்படைப்பூக்க நிலை. கண்வழி நாம் அறிவனவற்றை மலர்தொடுப்பது போல இணைத்து இணைத்து ஒன்றாக்கிக் கொள்கிறோம். அவ்வாறு நாம் நம் அகப்பொருட்கள் தொனியென அடித்தளம் அமைத்த ஒரு புறவுலகை உருவாக்கிக் கொள்கிறோம். அவ்வுலகம் மீண்டும் புறவுலகம் மீது படிகிறது. மானுடப்பிரக்ஞைக்கு அப்பால் திகைப்பூட்டும் ஆணவத்துடன் நின்றிருக்கும் இந்தப் பருப்பொருள்வெளி அவ்வாறு நாம் புழங்கும் ஒன்றாக மாறி நம்முடன் விளையாடத் தொடங்குகிறது. பழகிய பெருவிலங்கு களித்தோழனாகிறது.
எந்த புலன்வய அனுபவத்தையும் நம்மால் சொல்லிவிட முடியாது. அதற்கு இன்னொரு புலன் அனுபவமே சொல்லப்படும். பாடல் இனிப்பதும், சிந்தனை சுடர்வதும் அவ்வாறே. கம்பனும் காளிதாசனும் கூட அதையே செய்தனர். சொல்ல இயலாமை கண்முன் பிரம்மம் என நின்று சொல் சொல் என ஆணையிடுகிறது. சொல்ல முயல்வதனூடாகவே அதை அணுகமுடியும். சொல்லமுடியாமை என அறிந்தமைய முடியும். சொல்லிச் சொல்லி எஞ்சுவதென்னவோ அதுவே அது என்று தெளியமுடியும்.
மீண்டும் மீண்டும் நான் அமெரிக்க உதிர்வுப்பருவத்தை தேடிச்செல்கிறேன். 2019ல் நானும் நண்பர் ராலே ராஜன் சோமசுந்தரமும் வெள்ளைமலையில் உதிர்வுப்பருவம் காணச்சென்றோம். மலையே செண்டென்று ஆகி பேருருக் கை ஒன்றால் வான்கீழ் வைக்கப்பட்டிருந்தது. அந்த வர்ணனைகளை கேட்டு பரவசமுற்ற அருண்மொழி இம்முறை உதிர்வுப்பருவம் என தியானித்துக் கொண்டே இருந்தாள்.
அமெரிக்காவின் உதிர்வுப்பருவம் இடத்துக்கு இடம் மாறுபடுவது. பாஸ்டன், அல்லது சியாட்டில் போல வடக்கு பகுதிகளில் மேப்பிள் மரங்கள் மிகுதி. அவை குருதிநிறமாக இலைசிவந்து எரிவதெனப்பொலிந்து உதிர்ந்தணைபவை. கீழே வருந்தோறும் இலையுதிர்வு அற்ற பைன், சைப்ரஸ், போன்ற மரங்களும் ஊடாடுகின்றன. அவை வண்ணக்கலவையாகத் தெரிகின்றன. ஓவியனின் வண்ணத்தட்டில் தூரிகையால் குழப்பப்பட்ட வண்ணங்கள்போல.
ஹூஸ்டனில் அக்டோபர் 1 அன்று வந்திறங்கி வெளியே வந்து காரில் ஏறிக்கொண்டதுமே முதல்மரம் தழல் கொண்டிருப்பதைக் கண்டுவிட்டேன். மிக மிக அந்தரங்கமான ஒன்றை நிகழ்த்திக்கொண்டு தியானத்தில் அமர்ந்திருப்பதுபோல. முட்டைகளை அடைகாக்கும் கோழிகள் அவ்வண்ணம் சிறகு தழைத்து விழிமூடி அமர்ந்திருப்பதுண்டு. அவற்றுக்குள் ஓடும் உயிர்நீர் ஒவ்வொரு இலையாக விடுவித்துக் கொள்கிறது. மெல்ல மெல்ல. மாற்று அற்ற உறுதியுடன். இயற்கையின் மீறமுடியாத ஆணையொன்றுக்கு தன்னை அளித்து.
இலைகள் பசுமை என தங்களிடம் வைத்துக்கொண்டிருந்தது வேருடனும் கிளையுடனுமான உறவைத்தான். அவை விடுதலை கொள்கின்றன. இனி உணவு சமைக்கும் பணி இல்லை. இனி வெயிலுக்காகவும் மழைக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. வான் வான் எனக் கைநீட்டி ஏங்கவேண்டியதில்லை. காற்று காற்று என அலைபாய வேண்டியதில்லை. அவை தங்கள் குருத்து நிறத்திற்கு மீள்கின்றன. பொன்னிறமும் செந்நிறமும் கொள்கின்றன. பின் ஏதோ ஒரு கணத்தில் மரங்களிலிருந்து விடுவித்துக் கொள்கின்றன
உதிரும் சருகின் அமைதியை பார்ப்பது ஆழ்ந்த நிலை ஒன்றை அளிக்கிறது. மெல்லச்சுழன்று காற்றில் மிதந்து சென்று இடம் தேடி நிலத்தில் படிகின்றது. முன்னர் எப்போதோ அதன் ஊழ் தெரிவுசெய்து வைத்திருந்த இடம் அது. மேலும் மேலும் இலைகள். மட்கி நரம்புப்படலமாகி மறைகின்றன. கரிய மண்ணில் உப்பாகின்றன. பனிவெளியின் அடியில் மண்ணில் ஊறுகின்றன. வசந்தம் வரும்போது வேர்களால் உறிஞ்சப்பட்டு அந்த உப்பு மீண்டும் தளிர்த்தெழும்.
பொற்தகடுகள், செம்புத்தகடுகள். மஞ்சள் இதழ்கள், செந்நிறக் கொத்துக்கள். காற்றில் அலைகொள்கின்றன. கொப்பளித்து உலைகின்றன. வீசிக்கொள்கின்றன. குமிழியின் மென்பரப்பென இதோ இதோ என விம்மி விம்மி உடையாமல் தவிக்கின்றன. உருகிச் சொட்டிய உலோகத் துளி. ஊதி நிறுத்திய கண்ணாடிக்குமிழி. இலைகளின் சிலுசிலுப்பில் சிலசமயம் எதிர்க்காற்றில் சிறகு உலைய அமர்ந்திருக்கும் கொண்டைச்சேவல் என்றாகின்றன மரங்கள்
எத்தனை உவமைகள். செந்நிறத்து புரவி வால் இந்த மரம். இது கோல்டன் ரெட்ரீவர் நாய். இது அழகிய செம்போத்துப் பறவை. மரம் எவ்வண்ணம் தன்னை மரமல்லாத ஒன்றாக ஆக்கிக்கொள்கிறது. மலர்ச்செண்டு என ஆன மரம் மரத்தின் எவ்வியல்பை கொண்டிருக்கிறது. இன்னொன்றென ஆகாமல் இருப்பிலிருந்து விடுதலை இல்லையா என்ன? மீட்பென்பது ஒன்று பிறிதொன்றாவது மட்டும்தானா?
மீட்பென்பது இது. அந்திவெயிலில் பொன்னென்றாகி நிற்றல். பொன்மேல் என்று வந்தது மானுடனின் பித்து? உதயமும் அந்தியும் பொன்னென்றிருக்கையில், உழுதிட்ட மண் பொன்னென்றிருக்கையில், முதல்தளிர் பொன்னென்றிருக்கையில், அனல்வண்ணம் அதுவென்றிருக்கையில் மானுடன் வேறெவ்வாறு இருக்க முடியும்? மண்ணிலுள்ள எல்லாமே ஏதோ ஒரு தருணத்தில் போன்னாகக்கூடுமென உணர்ந்தவன் மெய்மையின் ரசவாதி.
பொன் எரிந்தெழுந்த காடுகள் இருபுறமும் பெருகிப்பெருகி அலையடிக்க சியாட்டிலில் இருந்து வான்கூவர் சென்றோம். சற்றே கண்மயங்கினால், மூக்குக்கண்ணாடியை கழற்றிவிட்டுப் பார்த்தால்கூட இம்ப்ரெஷனிஸ ஓவியங்கள். ஒவ்வொரு மலையும் ஓர் அலை. ஒவ்வொரு மரமும் அந்த அலையிலொரு அலை. எரிநிறம் என ஒன்றுண்டா? இக்கணம் அது குருதி. மறுகணம் அது பொன்னகை. பொலன், பொலிவு, பொலி. பொலியோ பொலி என கொண்டாடுகின்றன ஓணப்பாட்டுகள். பொலிந்து பொலிந்து எழுக இப்புவி என வேண்டுகின்றன.
மீண்டும் ஒரு நீண்ட கார்ப்பயணம், டொரெண்டோவில் இருந்து நியூஜெர்ஸிக்கு. பழனி ஜோதி, மகேஸ்வரி, ராஜன் சோமசுந்தரம் மூவரும் உடனிருந்தனர். மலைகளின் மேல் செம்பொன்னிற நுரைப்படிவுபோல மரங்கள். கார் மெல்லத் திரும்பும்போது அவற்றில் ஒரு தனிமரம் பிரிந்து வந்து கண்முன் தன்னைக்காட்டி பின்னகர்கிறது. பொன்னலைகளில் அமிழ்ந்து அமிழ்ந்து மீள்கையில் இங்கே இருத்தல் என்பதே செல்தலும் எய்தலும் ஆகக்கூடுமென்று தோன்றிவிட்டது.