21 அக்டோபர் 2023ல் கனடா டொரெண்டோ நகரில் என் கட்டண உரை நிகழ்ந்தது. என் கட்டண உரைகள் எல்லாமே தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களிடம் என்னுடைய சிந்தனையை, தேடலை பகிர்பவை மட்டுமே. உரையாடல், கேள்விபதில் என நிகழ்ந்த அந்த அரங்கைப் பற்றி அதில் பங்குகொண்டவரான ஆஸ்டின் சௌந்தர் எழுதிய பதிவு.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். புலம்பெயர்ந்த தமிழ்ப் பெற்றோர்களின் மனதில் இருப்பது, தமது குழந்தைகள் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும். இட்லி தோசை வகையறாக்கள் பிடித்த உணவாக இருக்கவேண்டும். தீபாவளி பொங்கல் பண்டிகைகளை முழு மனதுடன் கொண்டாட வேண்டும். இப்படி ஆசைப்படுவதற்கு காரணம் தமிழும் பண்பாடும் தொடரவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல, தங்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு எதிர்காலத்தில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் என்று வரையறுத்து, அதற்குப் பதிலாக சென்ற வருட அமெரிக்கப் பயணத்தின் முடிவாக ஒரு கட்டுரை எழுதியிருந்தீர்கள். வேறு பண்பாட்டில் வளரும் குழந்தைகளுக்கு, தமிழ்ப் பண்பாட்டை கையளிக்க அமெரிக்க தமிழ்ப் பெற்றோர்கள் என்ன செய்யலாம் என நீங்கள் எழுதிய அமெரிக்ககுழந்தைகள் கட்டுரை நண்பர்களால் விரும்பி வாசிக்கப்பட்டது சஹா அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய குழந்தைகளும் வாசித்தார்கள். அது ஒரு reference-ஆக இப்பொழுது உள்ளது.
இந்த வருடப் பயணத்தில் , அக்டோபர் 21 அன்று, தமிழ் இலக்கியத்தோட்டம் , கனடா, நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட நீங்கள், 10 முதல் 15 வரையுள்ள நண்பர்களின் குழந்தைகள் கேட்ட கேள்விகளையே உளப்பதிவாக எடுத்துச் செல்வதாக கூறி, தமிழ் இலக்கியத்தில் அறம் என்ற தலைப்பில் அந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் விவாதத்திற்கும், சிந்திக்கவுமான எண்ணங்களையும் முன்வைத்தீர்கள்.சங்க காலத்தில்/கம்பராமாயணத்தில் ஜாதி இருந்ததா? திருக்குறளில் பெண்களை இழிவாகச் சொல்கிறார்களே ? அப்படியென்றால், அவைகளைப்படித்துக் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்கும் குழந்தைகள். ஆம் அல்லது இல்லை என ஆதாரமற்ற பதில்களைக் கூறாமல், உண்மையென்ன என விளக்கங்களுடனும் உதாரணங்களுடனும் பெற்றோர்கள் எப்படி பதில் சொல்லலாம் என உரை தொடர்ந்தது.
நடந்து முடிந்த சரித்திர காலத்தை பொற்காலம் என்று சொல்வதை மனச்சிக்கல் என்று சொல்லும் நீங்கள், முதல் கட்டமாக சங்ககாலத்தை எடுத்துக்கொண்டு அறத்திற்கான நாற்றாங்கால் அங்கு இருந்து விளைந்ததை குறிப்பிட்டீர்கள். முசிறியிலிருந்து தஞ்சாவூர் சென்று கைப்பற்றி, ஊற்றுகளில் உப்பு போட்டு, வீடுகளுக்கு தீ வைத்து வயல்களில் யானைகட்டி உழுது களையை விதைத்து, அந்தப் பெண்களின் தாலிகளை எடுத்து மலைபோல் குவித்து வாகைசூடி திரும்பி வந்து , வெற்றி என்று சொல்வதுதான் சங்ககாலத்தின அறம். இப்படி போர் நடந்த காலத்தை பொற்காலம் என்று எப்படிசொல்வது என்றீர்கள்.
வீரம் என்ற பெயரில் இறந்த குழந்தையைக்கூடவாளால் வெட்டிவிட்டுப் புதைக்கும் சங்ககாலத்தின் அறத்தை முன்வைத்தால், சிந்திக்கும் அமெரிக்க குழந்தைகள் கேள்விகள் கேட்காதா என்று வினவினீர்கள். இழிசினன் , புலையன், வண்ணாத்தி என்று ஜாதிகளை குறிப்பிடும் சொற்கள், தொளும்பர் எனும் அடிமையை குறிக்கும் சொற்கள் வரும் ஐந்து அல்லது ஆறு சங்கப்பாடல்களை உதாரணமாகச் சொன்னீர்கள் என் நினைவில் இருப்பது என்னவோ – எரிகோல் கொள்ளும் இழிசனன் – தான். பழங்குடி வாழ்க்கையிலிருந்து மேல் எழுவதில் இது பரிணாமம் என்றீர்கள். யாயும் யாயும் யாராகியிரோ என்ற இலட்சியத்தை முன்வைத்த காலம், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று விதைகள் முளைத்த காலம் என்றீர்கள். அதை தொல் அறம் என்று வகைப்படுத்தினீர்கள்.
இரண்டாவதாக , திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் வழியாக இலட்சிய அறம் உருவாகிய காலகட்டத்தை எடுத்துரைத்தீர்கள். தூய்மையான உள்ளம் கொண்டு இருத்தலையும், ஒழுக்கத்தையும், கள்ளமற்ற தனத்தையும் முன்வைக்கும் குறள்களையும், முடிவாகச் சொல்லாமல் வாசகனின் சிந்தனைக்கு விட்டு வைக்கும் குறள்களையும் சுட்டிக்காட்டினீர்கள். கம்பராமாயணத்தில் தம்பியின் அறம் என்றால், லட்சுமணன் , பரதன், கும்பகர்ணன் அறமாக இருக்கலாம். அண்ணனை போரில் தனியாக விடக்கூடாது என்று நினைக்கும் தம்பி கும்பகர்ணனின் அறம் ஒன்று. தீய எண்ணத்தில் போர் புரியும் அண்ணனுடன் கலந்துகொள்வது சரியல்ல என்று நினைத்த விபூஷணன் சொல்வது மானுட அறம். எது சரியான அறம் என்று முன்வைக்காமல் விவாதத்தை முன்வைக்கிறது கம்பராமாயணம். சரிக்கும் சரிக்குமான சங்கடங்களை விவாதிக்கும்கம்பராமாயணத்தின் பெருமையை நீங்கள் விளக்க கேட்க இனிமையாக இருந்தது. அது விட்டுப்போகாமல் இருக்க வீட்டிற்கு வந்ததும், “தீயுள் என்று நீ துறந்த என் தெயவமும் மகனும், தாயும் தம்பியும் ஆம் வரம் தருக” செய்யுளை வாசித்துப் பார்த்தேன்.
பக்தியின் அறம் , தியாகத்தின் அறம், பாமரனுக்கான அறம் பிறந்த பக்தி காலகட்டத்தை வேடன் சிவனுக்கு கண்கொடுத்தது போன்ற பாடல்களைச் சொல்லி உங்களது நிலைப்பாட்டை மூன்றாவது கட்டமாக சொன்னீர்கள். நான்காவதாக, நவீனச்சிறுகதைகள் முன்வைக்கும் அறத்தை எடுத்துரைத்தீர்கள். புதுமைப்பித்தனின் , அகலிகை மீண்டும் கல்லான சாபவிமோசனம், கு.ப. ராஜகோபலனின் , பண்ணையார் விற்கவிருக்கும் தனது நிலத்தை நீண்டகாலமாக பார்த்துக்கொண்ட செங்கானுக்கே கொடுக்கும் கதைகளை சொல்லி, கம்பனுக்கே அந்த நவீன காலத்தின் அறம் புரியாது என்றீர்கள். கு. அழகிரிசாமியின் , ராஜா வந்திருந்தார் கதையை கேட்ட வாசகர்களின் புன்னகை, நாஞ்சில் நாடனின் , யாம் உண்பேம் கதைகேட்டு நெகிழ்வில் மறைந்துவிட்டது. நல்லவேளை அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் கதை சொல்லி எல்லோரையும் கலகலவென்று சிரிக்கவைத்து நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தீர்கள்.
உரையைத் தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களிலும் வாசகர்களுக்கு மேலும் அறம் பற்றிய சிந்தனைக்கான தூண்டுதல் கிடைத்தது. நிகழ்விற்கு வரமுடியாத நண்பர்களுக்காக, இதனுடன் பதிவு செய்த உரையை இணைத்துள்ளேன். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அ. முத்துலிங்கம் அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய டாக்டர் ரகுராமன் அவர்களுக்கும், நன்றியுரை கூறிய காலம் செல்வம் அவர்களுக்கும், தமிழ் இலக்கியத்தோட்ட நண்பர்களுக்கும் நன்றி. அறம் பற்றிய உரை முடிந்ததும், அறம் கொண்டு வாழ்ந்த நாயகர்களின் கதை சொல்லும் , Stories of The True நூல்களில் தாங்கள் கையெழுத்திட வாசகர்கள் வரிசையில் நின்று வாங்குவது பொருத்தமாக இருந்தது. அறம் வளரும், தொடரும் காட்சியென அதைக் கண்டேன்.
அன்புடன்,
சௌந்தர்