யுவன் நாவல்கள் – தன்யா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

யுவன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவருடைய படைப்புகளை ஒரு வருடமாகவே நான் படிக்க முயற்சித்து வருகிறேன். இப்போதும் நான் ‘தலைப்பில்லாதவை’ குறுங்கதை தொகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன்.

Bynge செயலியில் வந்த ‘எண்கோண மனிதன்’ தான் முதலில் படித்தேன். அத்தனை சுவாரசியமாக இருந்தது. அதன் பிறகு ‘நினைவுதிர் காலம்’. அந்த நாவலில் சில ஹிந்தி பாடல்கள் பற்றி குறிப்புகள் வரும். அதை என் அம்மாவிடம் காண்பித்து ‘இந்த பாட்டு தெரியுமா?’ என்று கேட்க ‘இதெல்லாமா இந்த புஸ்தகத்துல இருக்கு…நீ படிச்சதுக்கப்புறம் நானும் படிக்கிறேன்’ என்று கூறி தான் சிறுவயதில் ரேடியோவில் கேட்ட பாடல்கள், அந்த காலகட்டத்து நினைவுகள் என்று பேச ஆரம்பித்து விட்டார். அத்தகைய இனிமையான நினைவை எனக்களித்தது.

அதை தொடர்ந்து ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ படித்தேன். முதலில் நிச்சயம் நான் புரிந்து கொள்ள சற்று தடுமாறினேன். ஆனால் நூறு பக்கங்கள் வரை படித்ததும் கதையின் போக்கு துலங்க துவங்கியது. பல்வேறு காலகட்டம், பல்வேறு கதாபாத்திரங்கள் இவை அனைத்தும் ஒரு சரடு போல பின்னி  இணைந்து  தரும் உணர்வு மிகவும் அளப்பரியதாக இருந்தது. கதாபாத்திரங்கள் அனைத்தும் அவர்களின் மொழி மற்றும் பாவனைகள் வழியாக நமக்கு தெரிந்தவர்களாக மாறுவதாக தோன்றும்.  வாழ்க்கையை அப்படியே நிகழ்வுகளின், எண்ணங்களின் தொகுப்பாக்கி கையில் அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. நாவலின் இறுதி வரிகள் அந்த நாவலை எனக்கு மிகவும் பிடித்ததாக மாற்றிவிட்டது. ‘சிகப்பி’ நீண்ட வருட காத்திருப்பின் பிறகு கருவுற்றிருப்பாள். பழனியப்பன் அவளுடன் வெளியில் அன்று செல்லும் போது, மழை தூறலும் குளிர் காற்றும் நிரம்பியிருக்கும். பக்கத்துக்கு வீடு ஆச்சி எப்போதும் போல் அல்லாமல் அன்று இருவரையும் பார்த்து சிரிப்பாள். சிகப்பியும் குழந்தையின் உற்சாகத்துடன் நடந்து வருவாள்.

‘இந்தக் கணம். குளிர்ச்சியில் கணம். இந்த ஒரு கணத்தில் வாழ்க்கை உறைந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டார் பழனியப்பன்.’

நாவலில் வரும் அத்தனை சம்பவங்களும் இந்த கனத்தை நோக்கி வந்ததாக நான் எண்ணிக்கொண்டேன்.இதையெல்லாம் கூட கதைகளில் கொண்டு வந்து விட முடியுமா என்று தோன்றும் அளவிற்கு பல விதமான மனிதர்கள், நிகழ்வுகள் அவரது கதைகளில் வருவது பிடிக்கும். உதாரணமாக, நான் பத்தாவது படிக்கும் போது தான் முதல் முறையாக சென்னைக்கு சென்றிருந்தேன். அப்போது என்னை மிகவும் கவர்ந்த ஒன்று மின்சார ரயில். இத்தனை விரைவாக பெரிதும் சத்தமில்லாமல் ஒரு ரயில் நின்று பிறகு சட்டென்று புறப்பட முடியுமா என்று நினைத்தேன். யுவன் அவர்களின் கதைகளில் மட்டுமே இது வரை நான் மின்சார ரயில் பற்றி படித்திருக்கிறேன். ஒரு சில வரிகள்:

சென்னையில் வேணுவை மிகவும் கவர்ந்த அம்சம், மின்சார ரயில். மனித உடலில் மேற்பெருஞ்சிரை கீழ்ப்பெருஞ்சிரைபோல போகவும் வரவுமாக இருக்கும் மின் ரயில் தண்டவாளங்களை பார்க்கும்போதெல்லாம் தனக்குள் கிளர்ச்சி பெருகுவதாகச் சொல்வான். அது ஒரு தனி உலகம் என்றும், எண்பது ஆண்டுகளுக்கு மேலாகப் புழக்கத்தில் இருக்கும் போக்குவரத்து சாதனம், தமிழ் வெகுஜனக் காலையிலும் சரி, சீரிய காலையிலும் சரி தனக்குரிய முக்கியத்துவதைப் பெறவேயில்லை என்பான்.’

இப்போதுவரையிலும் இந்தக் குழப்பம் நீடிக்கிறது. கொஞ்சம்கூட உத்தேசித்தே இராத வேலைகளைக் கனநீர் முடிவில் செய்து ஆறாத் தழும்புகளை உருவாக்கிக்கொள்ளும் வழக்கம் என் மரணத்தோடுதான் நிற்கும் என்றேபடுகிறது.

பின்னே, மின் ரயில் புறப்படும்வரை காத்திருந்துவிட்டு, புறப்பட்ட நொடியில் ஏற்பட்ட திடிர்த் தீர்மானத்தில் இறங்க  முடிவெடுத்து, நாலைந்து பேரை முழங்கைகளால் இடித்து அகற்றி, வேகமெடுக்க முனைகிற ரயிலிலிருந்து குதித்து இறங்கி, கால் இடறி நடைமேடையில் விழுந்து, முன்பின் தெரியாத சகலரிடமிருந்தும் ஏச்சுக்களையும் அறிவுரைகளையும் ததும்பத்ததும்ப வாங்கிக்கொண்டு தலைகுனிந்து நடை மேம்பாலம் நோக்கி நடப்பதையெல்லாம் எந்தக் கணக்கில் வைப்பது?’

அவரது சிறுகதைகளில் இதுவரை நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது ‘அடையாளம்’. அந்த கதையில் நாம் சுமந்து கொண்டிருக்கும் அடையாளங்கள் அனைத்தையும் சுட்டிக்காட்டி இருப்பார். வேலை, நாடு, மதம், சாதி, ஊர், பாலினம், தீவிரவாதம் என்று பலவற்றையும் இயல்பான பேச்சுத்தொனியில் கதை சொல்லும் விதமாக கூறியிருப்பார். படித்து முடித்தபின், அடையாளங்கள் மட்டுமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறதா; அதை எடுத்துவிட்டு பார்த்தால் ஒன்றுமே மிஞ்சவில்லையோ என்று தோன்றியது.

அவரது படைப்புகள் அனைத்தையும் படித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அந்த முயற்சிக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த விஷ்ணுபுரம் விருது அறிவிப்பும் இருக்கிறது.

மிக்க நன்றி.

அன்புடன்,
தன்யா

(மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் நவம்பர் 1 )

அஜிதனின் காதல்

முந்தைய கட்டுரைஅஜிதனின் காதல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், இன்னொரு ஐயம்