அனைவரிலுமுள்ள நஞ்சு – லோகமாதேவி

ஆலம் மின்னூல் வாங்க
ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

ஆலம் உங்களின் முந்தைய அனைத்துக் கதைகளையும் போலவே  மனதை பாதித்த மறக்கமுடியாத கதைகளிலொன்றுதான். எனினும் கதை வாசிப்பனுபவம் கதைக்குள் பல கதைகளை பல திருப்பங்களை நானும் எனக்குள் நிகழ்த்திக் கொண்ட வகையில்  மிகப் புதியதாக இருந்தது.

நெடுங்காலமாக என்னை  மானசீகமாக தொந்தரவு செய்துகொண்டிருந்த நினைவொன்றிற்கான நல்ல சிகிச்சையாகவும் ஆலம் வாசிப்பு இருந்தது. முதல் அத்தியாயத்தின் முதல் பத்தி இல்லாவிட்டால் இது ஒரு குற்றப்பின்னணி கொண்ட பெருந்தொற்றுக்கால கதைகளின் ஒளசேப்பச்சன்  பாணி கதைகளிலொன்றாக  நினைத்திருப்பேன். அந்த முதல்பத்தியின் வழக்கு  என்னும் சொல் ஃபங்கஸ் வைரஸ் நுண்ணுயிரிகள் குறித்த மிக விரிவான விளக்கம் எல்லாம் சேர்ந்து கதையை அறிவியல், பழி, வஞ்சம், குற்றம், நீதி, வழக்கு என்று சுவரஸ்யமான பலவற்றின் கலவையாக்கி கதையின் தொடர்ச்சி குறித்த   எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டிருந்தது

ஃபங்கஸ் குறித்து கதையில் நீங்கள் சொல்லி இருப்பதை நான் வைராலஜியில் குறிப்பாக ரேபிஸ்  நோயையும் வைரஸையும் குறித்து கற்பிக்கையில் சொல்வதுண்டு.

வைரஸ்களுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான உயிரினம் எப்போதும் தொடர்ந்து தேவை எனவேதான் வீட்டில் ஒருவருக்கு வைரஸ் தாக்கி நோய் முற்றி அவர் குணமான பின்னரே அடுத்தவருக்கு நோய் தொற்றும். ரேபிஸ்  வைரஸ்கள் ஒரு நாயின் உடல் முழுக்க பரவி முதுகெலும்பு வழியே அவற்றின் ஒரே இலக்கான  மூளையை அடைந்த பின்னர் பல லட்சம் எண்ணிக்கையில் உமிழ்நீரில் காத்திருந்து, மூளையில் யாரையேனும் கடிக்க வேண்டும் என்னும் வெறியை நாய்க்கு உண்டாக்கும். அக்கடியின் மூலம் எச்சிலில் இருக்கும் வைரஸ்கள் புதிய ஹோஸ்டை அடைந்து அவ்வுடலில் பல்கிப் பெருகும்.கடிக்கும் வெறிபிடித்த நாய்கள் ஆள் கிடைக்காமல் வெறும் காற்றை கடித்துக் கொண்டிருப்பதை  கோடைக்காலங்களில் பார்க்கலாம்.

நான் எப்போதும் மாணவர்களுக்கு சொல்வது நம் உலகில் நுண்னுயிர்கள் இல்லை ஒரு துளி நீரில் லட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன, நாம்  தான் அவற்றின் உலகின் சிறுபான்மையினராக இருக்கிறோம் என்றுதான்.

பழியெடுக்கும் வெறியான அந்த ஃபங்கஸ் கதை மாந்தர்களுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்களுக்கும் தொற்றியது.

ஆலம் வாசிக்கையில் நெட்ஃபிளிக்ஸில் காலாபானி என்னும் சமீபத்தில் வெளியான  மிகச்சிறந்த தொடரொன்றை பார்த்துக்கொண்டிருந்தேன் ஆலம் முடியும் தருவாயில் வைரஸ் காய்ச்சலால் மருத்துவமனையில்  சிகிச்சையில் இருந்தேன்

காலாபானி  2027ல் அந்தமானில் நிகழும் ஒரு ஆண்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் கொண்ட சூப்பர் பக் பாக்டீரியாவினால் மாசடைந்த நீரினால் உண்டாகும் பேரழிவு, அந்தமானின் தொல்குடிகளின் தொல்லறிவு, மருத்துவ அறிவியல் என பல சுவாரஸ்யங்களை தீவிரமாக சொல்லும் தொடர், தசரா விடுமுறையில்  வீட்டுக்கு வந்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக வைரஸ் தொற்றுக்குள்ளாகி இறுதியாக நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெறவேண்டி வந்தது

ஆலம், காலாபானி என் வைரஸ் காய்ச்சல் மூன்றையும்  இணைத்துக் கொண்டதில் ஆலம் வாசிப்பனுபவம் எனக்கு மிக நெருக்கமானதாக மிக அந்தரங்கமானதாக்கி விட்டிருந்தது

ஒரு எளிய கிராமத்து பெண்ணாக, ஆசிரியையாக என் வாழ்வின் மிக சொற்பமான  உச்சதருணங்களில் ஒன்று என் குழந்தைகளை போல பலவருடங்கள் விதையிலிருந்து உருவாக்கி பராமரித்து வளர்த்தி வலிதாக்கிய  பெருமரங்கள்வெட்டப்பட்டபோது அதனை தடுக்கும் பொருட்டான என் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து நான் காவல்துறையினராலும் குடிகாரகளாலும் அவமானப்படுத்தப் பட்டதுதான்

அந்த  இழிவை என்னால்  மறக்கவே முடியவில்லை. சம்பந்தப்பட்ட எவரும் தண்டிக்கப்படவோ கண்டிக்கப்படவோ ஒரு கண் துடைப்பிற்காக அறிவுறுத்தப்படவோ கூட இல்லை.

//இந்த வாத்திகளே இப்டித்தான். திருக்குறள், நாலடியாரு, இண்டியன் பீனல்கோடு, காந்தி, நேரு, பெரியாரு, அண்ணாத்தொரைன்னு நம்பி நாசமா போவானுக…//

ஆலம் கதையில் வாத்தியார்களை குறித்து இப்படி சொல்லபட்டவற்றையெல்லாம் நான் எனக்கானதாகவே எடுத்துக்கொண்டேன். நானும் காவல் நீதி நேர்மை  என் படிப்பு அரசு உத்தியோகம் அதுவும் பேராசிரியை என்பதிலெல்லாம் நம்பிக்கை கொண்டுதான் காவல்துறையை அணுகினேன். ஆனால் இறுதியில் சீருடையில் ஒரு காவல் உயரதிகாரி மரங்களை என் கண்முன்னே வெட்டி லாரியில் எடுத்துக் கொண்டு போனார்.

வெட்டப்பட்ட மரங்களின் அடிப்பகுதி என்னை பல வருடங்கள் இம்சை செய்து கொண்டு இருந்தது. அந்த காவலதிகாரி மாற்றலாகிப்போன சேலம் என்னும் ஊரின் பெயரே என்னை வெகுவாக தொந்தரவு செய்யும். சேலம் வழியாக செல்ல வேண்டிய சமயங்களில் எல்லாம்  பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவேன்

ஆலம் கதையின் அந்த கொலைவெறியும் பழிதீர்க்கும் எண்ணமும் பகையும் எப்படி ஃபங்கஸ் போல  ஒவ்வொருவருக்குமாக பரவிக்கொண்டே இருந்ததோ அப்படி கதை வாசிப்பனுபவம் எனக்குள் முன்பே இருந்த ஃபங்கஸின் ஸ்போர்களை முளைக்க செய்தது. ஆலம் கதையை நான் வேறு விதமாக எனக்குள்ளும் நிகழ்த்திக்கொண்டேன்

சில அத்தியாயங்களுக்குப்பிறகு ஒவ்வொரு நாளும் இரவு மனம் இரண்டாக பிரிந்து ஒன்றில் ஆலம் அடுத்து எப்படி செல்லும் என்று யூகங்கள் நிகழ்த்திக்கொள்ளும். மற்றொரு புறம் எளிய ஆசிரியையான நான் யாருக்கும் தெரியாமல் அன்று அந்த குற்றச்செயலில் ( ஆம் எனக்கு அது படுகொலைதான் குற்றம்தான்) ஈடுபட்டவர்களை ரகசியமாக  பல விதங்களில் பழிதீர்க்கும் வழிகளை கண்டுபிடித்து அதை நிகழ்த்திக் கொண்டிருக்கும்.  கற்பனைதான் நானேதான் செய்துகொண்டேன் எனினும் என்னமுயன்றும் என்னால்  கொலை செய்யுமளவுக்கு துணிய முடியவில்லை  ஆனால் விபத்துக்களை உண்டுபண்ணினேன் ஒவ்வொருவருக்காக

அதில் மிகவும் நிறைவும் அடைந்தேன். நேரடியாக என்னாலவற்றைச் செய்ய முடியாதென்பதால் உண்மையிலேயே  அச்சமயத்தில் அந்த அதிகரிக்கு ஜீப் ஓட்டுநராக இருந்த நடந்த அனைததையும் கைகளை கட்டிக்கொண்டு தலையை குனிந்தபடி கவனித்துகொண்டிருந்த என் மாணவனைக்கொண்டு அவற்றை செய்தேன்.

அந்த தெருவின் கடைசியில் இருந்த என்வீட்டுவாசலில் எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காமல் அப்போதுதான்  காபிக்கொட்டை நிறத்தில் மலர்களை கொடுக்க துவங்கி இருந்த 6  இளம் புங்கை மரங்களை வாழைப்பழங்களை போல சீவி எறிந்தவனின் கைகளை விபத்தில் துண்டித்தேன்

வீட்டு வாசலில் குடித்துவிட்டு வந்து கையிலொரு அரிவாளையும் வைத்துக்கொண்டு என்னை மிக இழிவாக பேசி காலால் கேட்டை எட்டிஎட்டி உதைத்தவனை வீட்டுலிருந்து புறப்படும் கிளைச்சாலை சந்திக்கும் பெருவழிச்சாலையில் பைக் விபத்தில் காலை முறித்தேன்,  காவலர்களுக்கு மது வாங்கிக்கொடுத்து அவர்களை கைக்குள் போட்டுகொண்ட அடாவடித்தனம் செய்த லாரி ஓட்டுநராயிருந்த ஒருவனுக்கு கணுக்காலை இனி எந்த வண்டியும் ஓட்ட முடியாதபடிக்கு ஒடித்தேன்.  இன்னொருவரை அவர் குடும்பம் இன்னும் தேடிக்கொண்டிருக்கும்படி காணாமலாக்கினேன்.

என்னை நானே இலைதழைகளை அணைத்துக்கொண்டு வகுப்பிற்கு செல்லும் சாதாரண ஆசிரியராகவும், தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கும் தானடைந்த இழிவிற்கும் ரகசியமாய் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் பழிதீர்க்கும் ஒருத்தியாகவும் கற்பனை செய்துகொண்டது எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இல்லை என்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது.

அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். நம்புவீர்களா என்று தெரியவில்லை அந்த நிகழ்வின், இழிவின் கனம் குறைந்து போய் மனம் லேசானதுபோலிருக்கிறது இந்த கற்பனைகளுகுப் பிறகு.

நெருக்கமான தோழமைகளுடன் ஆலம் குறித்த  விவாதங்கள் தினமும் நடத்தினேன். அடுத்தநாள் கதை எப்படிப்போகும் என்று மிக தீவிரமாக பேசிக்கொண்டோம்.சமயங்களில் நான் வாய்விட்டே ’’வக்கீல்தான் சொல்றாருன்னு வீரலச்சுமி, நீ பாட்டுக்கு தனியா பெங்களூரு புறப்பட்டு வந்துராதே , அப்படியே வந்தாலும் மகனை கூப்பிட்டுக்காதே’’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன்

அந்த வாட்ச் கட்டின  ராமசுப்பு அவர் மீதான பிரியம் அவர் கொல்லப்பட்டது கோவிலில் அந்த கை சுற்றப்பட்டிருந்த துணி பிரிக்கப்பட்ட காட்சி அந்த பெண்ணின் முதலிரவு இவற்றையெல்லாம் வாசிக்கையில் அத்தனை வன்முறையை முன்பு  கேள்விப்பட்டிருக்காததால் படபடப்பாக இருந்தது

கோமதியின் பிறப்பு அவனுக்காக அவர்கள் தவமாக தவமிருந்தது கோமதியை தொட்டுக் கூட தூக்காத அவன் அப்பாவின் அன்பு வரும் அத்தியாயங்களில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை அவர் பள்ளியில் இருந்து பதறிக்கொண்டு ஓடிவரும் காட்சியும் கோமதியின் அம்மா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் நேரில் பார்ப்பது போலவே மனதில் பதிவாகி விட்டிருக்கிறது.அந்த சமையலுக்கு உதவும் 8 லட்சம் பணம் பெற்றுக்கொண்ட அம்மாளின் பாத்திரமும் அபாரமாக இருந்தது அவர் பார்வையில் சொல்லப்பட்ட விஷயங்கள் மிக அழுத்தமாக பதிவாகிவிட்டது மனதில்.

அந்த ஃபங்கஸ்தான் எத்தனை பேருக்கு தொற்றுகிறது சம்பந்தமே இல்லாத வக்கீல்களுக்கு சந்தானம் வாத்தியாரின் நண்பருக்கு என்று.

ஆலம் காட்டும் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவருமே மிக தனித்தன்மையுடன் இருந்தார்கள் அறிமுக காட்சியில் பரிதாபமாகவும் பின்னர் தனதுவீட்டில் ஒரு அரசி போலவும் கடைசிப்பகுதிகளில் மருந்தடிமையாகவும் வீரலட்சுமி,  ரத்த வாசனை தேவைப்படும் அந்த பாட்டிம்மா,தான் சார்ந்திருக்கும் துறையில் வல்லுநரும் கண்டிப்பானவரும் தேவைப்படுவோருக்கு மனமகிழ்ந்து ஆசியளித்து உதவும் கோப்ரா,  நாய்க்குட்டிகளுடன் வாழும் சரளா. பளிங்கு கண்களால் பார்க்கும் எருமை, ரெஞ்சி,  வெட்னரி மருத்துவர், அரிவாளால் நகம் சீவும் அடியாள், வீரலட்சுமியின் உறவினர்கள் என்று ஒவ்வொருவரும் அத்தனை தனித்துவமாக அத்தனை சிறப்பாக மறக்கமுடியாத படிக்கு உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்

வக்கீல் கிருஷ்ணசாமி பாத்திரம் மிக வலுவாக அறிமுகமாகி சட்டென்று மையக்கதையிலிருந்து விலகியது போலிருந்தது. அவருக்கு பிற்பாடு நிச்சயம் முக்கியமான ஒரு இடம் வரும் என்று ஆலம் கடைசி அத்தியாயம் வரைக்குமே எதிர்பார்த்திருந்தேன்.

ஒருவேலை ஆலம் பகுதி 2 என்று ஒன்று வந்தால் அதில் வருவாராக இருக்கும் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன் நானே.

// “ஒவ்வொண்ணுக்குள்ளயும் அதுக்கு அழிவக்கொண்டார நஞ்சு இருக்கு… கிரியேட்டிவ் ஃபோர்ஸஸ் அந்த நஞ்சை கட்டுப்படுத்தி வைச்சிருக்கு. அந்த கட்டுப்பாடு கொஞ்சம் தளர்ந்தா அந்த நஞ்சு மேலே வந்து அதை அழிச்சிரும்…”

ஆலம் என் ஆழ்மன நஞ்சை மேலே கொண்டுவந்து விட்டிருக்கிறது.ஆலம் போல இப்படி மனதில் நுழைந்து பேயாட்டம் போட்ட கதையை இனி வாசிக்கப்போவதில்லை

அன்புடன்

லோகமாதேவி

ஸாகே போதையின் கதை – லோகமாதேவி
முந்தைய கட்டுரைநாலாயிரம் கடிதம்
அடுத்த கட்டுரைகீதை உரை, கடிதங்கள்