அழியா நஞ்சு- இ.ஆர்.சங்கரன்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

ஜெ,

வாழ்க்கையைப் பற்றி மிக எழுதியவனும் வாழ்க்கையைப் பற்றி உறுதியாக ஒன்றுமே சொல்ல முடியாது என சொன்னவனும் வியாசனே என்று சுந்தர ராமசாமி சொன்னதாக நீங்கள் எழுதியதை  வாசித்த ஞாபகம். என்ன ஏதேன்றே தெரியாமல்  வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருகணம் நின்றால் இதெல்லாம் என்ன என்று தோன்ற ஆரம்பிக்கும். ஏன் ஓடுகிறோம், இப்படி ஓட வைப்பது யார் என்று கேள்வியும் எழும். பிறகு கணந்தோறும் அந்த கேள்வியின் எடை மிகும். எடை தாங்கமுடியாமலாகும் போது மீண்டும் ஓட ஆரம்பிப்போம்.   மரணம் வரை இந்த சுழற்சி தொடரும்.

பூஞ்சை , வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் இந்த பூமியில் மனிதனை விட பலகோடி மடங்கு அதிகமாக இருக்கின்றன. அதன் ஒருங்கிணைந்த அறிவு என்பது மனிதனுடையதை விட மிக அதிகமானதுஃபங்கஸ் தொற்று வந்த நாய் தானாக வெயிலில் சென்று படுத்துக் கொள்ளும். ஏனெனில் அவ்வாறு பூஞ்சை அதனிடம் ஆணையிடுகிறது.அதை மீற நாயினால் முடியாது என்று கென்னடி டாக்டர் சொல்லுகிறார்வைரஸ் தான் வாழ மனிதனை தன் விருப்பப்படி வாழ வைக்கிறது என சரளாவின் பேராசிரியர் சொல்கிறார். ஒவ்வொரு உயிரிலும் உள்ளே நஞ்சொன்று உறைகிறது. உயிரின் வாழ்வாசை தளர்கையில் அந்நஞ்சு வெளிவருகிறது என்பது கதை நாயகனின் கூற்று.

இந்த எலிப்பத்தாய வாழ்க்கையில் ஆலகாலத்தின் தாண்டவமே ஆலம். ஒவ்வொருவரும் விழிப்பு நிலையில் அழுதும் வருந்தியும் விலகியோட முயற்சி செய்தும், பிறகு உணர்வற்ற நிலையில் குரோதமாகிய ஆலத்தின் ஆணைப்படி இயங்குகிறார்கள்அதிர்ந்து பேசாத மென்மையான சந்தானம் பெருவஞ்சம் கொண்டு ஒரு வம்சத்தையே கருவறுக்கிறார். அதில் தப்பிய இறுதித்துளியான கதிர் சந்தானத்தை கொன்று தன் வஞ்சத்தை ஆரம்பிக்கிறான். ஆலம் பழைய புரவலர்கள் அழிந்த பிறகு புதியவர்களை கண்டடைந்து தன் ஆடலை நிகழ்த்துகிறது. அதன் கவர்ச்சி தவிர்க்க முடியாதது.

 “புண்ணியம் செய்து மூன்று தலைமுறையாக பட்டினி இருந்தது போதும். பாவம் செய்து சிறிது சாப்பிட்டுக் கொள்ளலாம்என்று கிருஷ்ணசாமி சொல்வது,மாணிக்கவேல் கொலைக் குற்றவாளிகள் கதிரையும் கிருஷ்ணசாமியையும் நீதிமன்ற வாசலிலேயே சீண்டுவது , பேருந்து வாயிலில் வீராச்சாமி தலை துண்டிக்கப்பட்டு பாதி தொங்கியதை கண்டபின்னரே  அந்த வழக்கை எடுத்து நடத்த முடிவெடுக்கும் கதாநாயகன் , ஒவ்வொரு முத்தத்திற்கு ஒரு சீக்கு என்பது சொரிமுத்தையனின் கணக்கு என்று மீனாட்சியம்மாள் சொல்வதுஎன ஆலம் தன் வேலையை தொடங்கும் தருணங்களின் சித்தரிப்பு அற்புதமானது.

நேற்று இரவு கிண்டிலில் நூலை வாங்கி ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். தமயந்தி தனது கதையை சொல்லிய நிகழ்வை வாசித்து முடித்த கணம் நிறுத்தி சுற்றிலும் நோக்கினேன் . அறையின் அடர் இருட்டு ஒரு கணம் மென்மையாக என்னை உலுக்கியது ‌. பிறகு மீண்டும் வாசிக்க ஆரம்பித்து முடித்தேன்இன்று காலை எழுந்த போது என்னதென்றறியாத செயலின்மை பற்றிக் கொண்டதுமாலை மீண்டு வந்த பின் இந்த கடிதத்தை எழுதுகிறேன்

காளஹஸ்தியில் இருட்தாண்டவத்தை கண்டு மீண்ட இளநாகனை நினைத்துக் கொள்கிறேன்

சங்கரன் 

முந்தைய கட்டுரைடொரெண்டோ உரை – நேர்ப்பதிவு – ஆஸ்டின் சௌந்தர்
அடுத்த கட்டுரைஉஷாதீபன்