மதுரை புத்தக கண்காட்சியின் 21 மற்றும் 22ம் தேதிகளில் அஜியுடன் விஷ்ணுபுரம் ஸடாலில் இருந்தேன். சனிக்கிழமை மாலை ‘கெலைடாஸ்கோப்’ இலக்கிய அமைப்பில், அஜி ‘இசையும் தத்துவமும்’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பேசினார். முக்கால் மணி நேரம் கேள்விகள் இருந்தது. மேலை இசையின் வரலாற்று பரிமாணம், இசை கட்டமைப்பில் நிகழ்ந்த மாற்றங்கள், தத்துவத்திலிருந்து இசைக்கும், இசையிலிருந்து தத்துவத்திற்கு நிகழ்ந்த பரிமாற்றங்கள், மேலை ஓவியத்தை போன்று ஏன் மேலை இசையில் புதுமை நிகழாமல் தேங்கியது என ஒரு சிறப்பான உரை.
30 நபர்கள் கூடியிருந்தனர். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் சார் வந்திருந்தார். உங்கள் தளத்தில் அறிவிப்பைபார்த்துவிட்டு நண்பர்கள் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்திருந்தனர்.
அடுத்த நாள் ஞாயிறு மாலை நானும், அஜியும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தோம். அதிக கூட்டம். அதனால் சுந்தரேஸ்வரர் சன்னிதி முன்னால் இருக்கும் நந்தி மணடபத்தில் உள்ள சிலைகளை பார்த்து கொண்டிருதோம். அப்போது ஒரு வெள்ளைகாரர் எங்களை நோக்கி வந்தார். சிலைகள் குறித்து சில ஐயங்களை கேட்டார். கால சம்கார மூர்த்தியில் இருக்கும் லிங்கத்தை கட்டியிருக்கும் பாசக்கயிறு, நடராஜர் சிலையில் இருக்கும் டமருகம், தீ. பிக்சாடனர் சிலை. அவர் சிவன் தீ என்றால் உங்களுக்கு நீருக்கான கடவுள் யார் என்று கேட்டார்? அஜி விஷ்ணுவை அவ்வாறு சொல்லலாம் என்று விளக்கினார்.
பின்னர் அவர் பெயர் ‘Bernhardt’, ஜெர்மனியை சேர்ந்த இயற்பியல் ஆசிரியர் என்றும் இந்தியாவிற்கு 30 முறைகளுக்கு மேல் தான் வந்திருப்பதாக கூறி தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அவருக்கு எப்படியும் 75 வயதிருக்கும். அதன்பிறகு நடராஜர் சிலையில் இருக்கும் டமருகம் பற்றி விளக்கும் போது, நான் அதை சத்தத்திலிருந்து தான் இந்த உலகம் பிறந்தது அதற்கான குறியீடு அது ‘like Big Bang’ என்று கூறிய போது அவர் மறித்து, நான் ஒரு இயற்பியல் ஆசிரியர் ஆனால் நான் இப்போது Big Bang-ஐ நம்பவில்லை. ஏனென்றால் முன்பு விஞ்ஞானிகள் ஒரு பொருள் வெடித்து விரியும்போது அது விரிய விரிய மெதுவாக செல்கிறது என்று கூறினார்கள் ஆனால் தற்போது விஞ்ஞானிகள் ஒரு பொருள் விரியும்போது அது வேகமாகிறது என்று கண்டு கொண்டுள்ளனர். அதனால் ‘Big Bang theory is no more correct’ என்றார்.
அதன்பிறகு அஜியின் மூன்று ஜெர்மானிய ஆசிரியர்கள் பற்றி சொன்னேன். அஜி மூவர் பற்றியும் உரையாடினார். அவர் பிரமித்துவிட்டார். ஜெர்மனியில் எந்த இளைஞர்களுக்கும் தற்போது இவர்கள் பற்றி எதுவும் தெரியாது. யாருக்கும் வரலாறு, தத்துவம், இசை குறித்து எந்த மதிப்பும் இல்லை. அனைவரும் செல்போனுக்குள் வாழ்கின்றனர். ஆனால் நீங்கள்(அஜி) சராசரி ஜெர்மானிய இளைஞரை விட அதிகமாக இவர்கள் குறித்து தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
அஜி ஒரு எழுத்தாளர் என்றும் அவர் புத்தக கண்காட்சியில் தன் வாசகர்களுடன் உரையாடவும், கையெழுத்திடவும் வந்திருக்கிறார் என்று சொன்னேன். அஜியின் அப்பா (நீங்கள்) இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர் என்றும் தற்போது அமெரிக்காவில் இலக்கிய நிகழ்ச்சிகளில் இருக்கிறீர்கள் என்றும், உலகின் மிக நீண்ட நாவலை எழுதியவர் என்றும் சொன்னபோது அவர் கண்கள் விரிய முகம் மலர எங்களை பார்த்து இன்னும் தீவிரமாக பேச ஆரம்பித்துவிட்டார். கிட்டதட்ட ஒரு மணி நேரம் பேசி கொண்டிருந்தோம். அனைவரும் எங்களையே பார்த்து கொண்டிருந்தனர்
புத்தக கண்காட்சியின் இறுதி நாள் என்பதால் பேக்கிங் செய்ய வருவதாக சொல்லிவிட்டு தான் வந்திருந்தோம். அதனால் நான் அவரிடம் அவர் தங்கியிருக்கும் விடுதியை கேட்டு கொண்டு நாளை ஒரு மணிக்கு நீங்கள் எழுதிய ‘Stories of the true’ புத்தகத்துடன் அங்கு வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன். அவர் சந்தோசமாக வரச் சொன்னார். அஜியையும் கூப்பிட்டார். அஜி இன்று இரவு ஊருக்கு கிளம்புகிறார் என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம். நான் விஷ்ணுபுரம் ஸ்டாலில் வாங்கிய ‘Stories of the true’ புத்தகத்துடன் அவர் தங்கியிருந்த ‘Prem Nivas’ ஓட்டலுக்கு சென்று அவரை சந்தித்தேன்.
அவர் அருகிலிருக்கும் காலேஜ் ஹவுஸ் காபி ஷாப்பிற்கு கூட்டி சென்றார். அங்கு காபி ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தோம். அவர்கள் சிறிது நேரத்திற்கு பிறகு எங்களை கோபமாக கிளம்பச் சொல்லிவிட்டனர். அவருக்கு அது புரியவில்லை. ஜெர்மனியில் இப்படி யாரும் செய்ய மாட்டார்கள். அவர் எங்களை கிளம்பச் சொன்னவருடன் சென்று சண்டையிட்டுவிட்டு வெளியே வந்தார். அதன் பிறகு இன்னொரு ஹோட்டலுக்கு சென்றோம், அங்கோயும் கிளம்ப சொன்னார்கள். அங்கு இருந்தவர் மரியாதையாக சொன்னதால், அவர் கோபப்படவில்லை. அதற்கு பிறகு ‘British Bakery’ சென்று 1:30 லிருந்து 6 மணி வரை பேசி கொண்டிருந்தோம்.
அதன் ஒட்டுமொத்தம், அவர் பென்ஸ் காரின் தலைமையிடம் இருக்கும் ஸ்டட்ஹார்டை சேர்ந்தவர். ஆறடி உயரம் இருப்பார். வலுவான உடல். குழந்தையின் ஆர்வம் பொங்கும் பழுப்பு நிற கண்கள் அதில் எப்போதும் நீர்மை படர்ந்திருந்தது. மொத்த உடலையும் அசைத்து பேசினார். அவரது கைகளை வேறு எங்கோ பார்த்தது போல இருந்தது, பிறகு தான் நினைவுக்கு வந்தது. கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன் பாட்டியின் கைககள் அவை, மேலும் அ.முத்துலிங்கம் அவர்களின் கைகளும் கூட. அவர்களின் வயது கைகளுக்கு கிடையாது. அவை மென்குருத்துகளை போன்று இளமையானவை. நான் பேசுவதை ஆமோதித்தால் கண்களை மலர்த்தி, உதடு குவிய இரு கைளையும் விரித்து ம்ம்ம்ம் என்பார்.
தீவிரமான பயணிகளுக்கான பேரார்வமும், களங்கமின்மையும் அவரிடம் இருந்தது. அவருக்கு வருடத்தில் ஆறு வாரங்கள் விடுமுறை. அதில் அதிகமாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்கிறார்.ஜெர்மனியிலிருந்து காரில், சைக்கிளில் பல முறை இந்தியா வந்துள்ளார். சென்ற வருடம் இந்தியாவிற்குள் பைக்கில் சுற்றியுள்ளார். ஒரு வேளை மட்டுமே உணவு உண்கிறார். அவர் ஒரு சாதரண ‘Huwaei’ மொபைல் வைத்துள்ளார். வாங்கி 14 வருடங்கள் ஆகிறதாம். சோசியல் மீடியாக்களில் இல்லை. கல்யாணம் செய்து கொள்வதில்லை. பல பெண்களுடன் ‘Live in relationship’-ல் வாழ்ந்திருக்கிறார். தற்போது அவர் வாழும் பெண்ணுடன் கடந்த் 14 வருடங்களாக வாழ்கிறார். அவரது புகைப்படத்தை காண்பித்தார். அவள் Bach- ன் ரசிகை. 90 வயதான அவள் தந்தையை பார்த்து கொள்கிறாள்.
ஒன்றாக இனைந்து சந்தோஷமாக வாழ கல்யாணம் செய்து கொள்ள அவசியமில்லை என்றார். குழந்தைகள் கிடையாது. இந்தியாவில் யார் கேட்டாலும் மனைவி ஊரில் இருப்பதாகவும், இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் தான் சொல்வேன் என்றார். இங்கு கல்யாணம் என்பது ஆழ வேரூன்றியது அதனால் நான் இப்படி பொய் சொல்லிவிடுவேன் என்றார். அவருக்கு இந்தியா மீதும், மக்கள் மீதும், கலாச்சாரம் மீதும் பெரும் நாட்டம் உள்ளது. ஆனால் இந்த ஹார்ன் சத்தம் மற்றும் வாகனங்கள் ஓட்டும் விதத்தை தான் தன்னால் சகிக்க முடியவில்லை என்றார். அதை குறையாக வெளிப்படுத்தவில்லை. ஒரு நகைச்சுவை உணர்வுடன் மட்டுமே நாங்கள் சாலையை கடக்கும்போதும், நடந்து செல்லும் போதும் அதை வெளிப்படுத்தினார்.
நான் 15 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த இந்தியா இப்போது இல்லை. எங்கு பார்த்தாலும் வாகனங்கள். அனைவரும் சாப்பிட்டு கொண்டே இருக்கின்றனர். ‘Pleasure of Eating’ தான் எங்கும் உள்ளது. ஆண்களும், பெண்களும் தொப்பையுடன் குண்டாக இருக்கிறார்கள். பிச்சைகாரர்கள் கூட தொப்பையுடன் இருக்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்கு பின்பு மக்கள் பஞ்சம் பசியில் இருந்தனர். அதற்கு பிறகு பொருளாதாரம் சீரடைந்த பிறகு அனைவரும் முதலில் கிடைப்பதை எல்லாம் வாங்கி உண்டு தொப்பையை வளர்த்தனர். ஒரு கட்டத்தில் அதன் ஆபத்தை உணர்ந்து மீண்டு விட்டனர். இங்கு அப்படி ஆகுமா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மக்கள் கூட்டமாக, சகிப்புதன்மையோடு இருக்கிறார்கள் என்றார்.
நான் ஹெர்மன் ஹெஸ்ஸே–வின் சித்தார்த்தா பற்றி பேசினேன். அந்த நாவலை நான் ஒரு மாதத்திற்கு முன்னால் தான் படித்தேன். அந்த நாவல் எனக்கான நாவல் என்றேன். படகோட்டியிடம் சித்தார்த்தா அடையும் ஞானம் பற்றி பேசினோம். அவருக்கும் பிடித்த நாவல் என்றார். ஹெஸ்ஸே இந்தியாவிற்குள் கடைசி வரை வரை வரவில்லை. கடைசியில் சுவிச்சர்லாந்தில் வாழ்ந்தார் என்றார். அவர் தனது வீட்டில் பெரிய நடராஜர் சிலை வைத்திருப்பதாக கூறினார். நான் ஆனந்த் குமாரசாமியின் ‘The Dance of Shiva’ கட்டுரை பற்றி கூறினேன். அதன் Iconography பற்றி விளக்கினேன். கீழை மரபை அறிய அவரது புத்தகங்களை படிக்க சொன்னேன். ஓசோ பற்றி பேசினோம். காந்தி பற்றி பேசினோம். ஹம்பி பற்றி பேசினோம். இந்து கலாச்சாரம் மூன்று அடுக்கில்(Folk gods-Almighty gods-philosophical gods) எப்படி இயங்குகிறது என்று கூறினேன்.
நான் அவரிடம் பேசும் போது ஒன்று கவனித்தேன். இந்த எல்லாவற்றையும் பற்றி வரலாற்றுடன் இனைத்து ஒரு சமநிலையுடன் அவரிடம் பேசினேன். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. நான் நீங்கள் சொல்வதாகவே(என் ஆசிரியர்) இவ்வாறு கூறுகிறார் என்றே அனைத்தையும் கூறினேன்.
அவர் சில இந்தியர்கள் ஹிட்லர் ஒரு ஹீரோ என்பது போல என்னிடம் சொல்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவர் BJP பற்றிய என் கருத்தை கேட்டார். அவருக்கு BJP மீது நல்ல கருத்து இருந்தது. நான் அரசியலுக்கும் இந்திய பண்பாட்டிற்கும் எந்த தொடர்பும் கிடையாது, எந்த அரசியலும் அதிகாரத்தை மையமாக வைத்தே இயங்க முடியும், இந்தியப் பண்பாட்டின் சாரம் ஆன்மீகம். அவற்றின் முகங்கள் ரமணர், பரமஹம்ஸர், நாரயண குரு போன்றவர்கள் தானே ஒழிய BJP அல்ல என்றேன். இந்து மதம் ஒரு நீரின் ஒழுக்கை போன்றது. அதை நிறுவனப்படுத்த முயல்கிறது BJP. அது இந்து மதத்தின் ஆன்மாவை சிதைக்குமே தவிர பேணாது. நிறுவனப்படுத்தப்பட்ட எதுவும் அதிகாரம் நோக்கியே நகரும். அதனால் நான் BJP-யை இந்து பண்பாட்டிற்கு எதிரான ஒரு அழிவு சக்தியாகவே பார்க்கிறேன் என்றேன். அவர் அமைதியாக கேட்டு கொண்டார்.
அதற்கு பிறகு என்னிடம் நமது விவாதத்தில் அரசியல் பற்றி பேசுவதற்கு மன்னிக்கவும் என்று சொல்லிவிட்டு. ஜெர்மனியின் தற்போதைய அரசியல் நிலைமையை விரிவாக பேசினார். ஜெர்மானிய மக்கள் அவர்கள் கலாச்சாரத்தை அறவே இழந்து விட்டனர். முழுக்க நுகர்வு கலாச்சாரத்திற்குள் சென்றுவிட்டனர். அவர்கள் தங்களுக்கு மதம், பழைய பண்பாடு எதுவும் தேவையில்லை என்கின்றனர். அதற்கு மாறாக அவர்களிடம் கொடுக்க நுகர்வு பண்டங்களை தவிர வேறு எதுவுமே இல்லை. இன்று நான்கில் ஒரு ஜெர்மானியர் குண்டாக இருக்கிறார். மன நல மருத்துவமனைகளில் தான் மொத்த மக்களும் உள்ளனர். இன்று பதிவு செய்தால் ஒரு வருடம் கழித்து தான் மருத்துவரை சந்திக்க முடியும். ஒரு பெரிய ‘வெற்றிடம்’ தான் உள்ளது. அதிலிருந்து மீட்க BJP போன்ற அரசியல் கட்சிகள் எங்களுக்கு தேவை என்றார். IFT என்ற ஒரு கட்சி இப்போது வந்துள்ளது. அது ஜெர்மனியின் BJP என்றார். இன்னும் சில அரசியல் காரணங்களை சொன்னார். எனக்கும் அவர்கள் நாட்டிற்கு அப்படி ஒரு கட்சி தேவைதான் என பட்டது.
நான் நித்தியவனத்தை பற்றி கூறினேன். நான் உங்களிடம் பேசியவை எல்லாம் எனக்கு அங்கு நிகழ்ந்த வகுப்புகளின் மூலமும், ஆசிரியர்களின் மூலமும் தான் கிடைத்தது. நாங்களும் அந்த வெற்றிடம் நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம் ஆனால் அதை பார்க்க முடிந்த ஒரு சிறு வட்டம் தான் இப்படி பண்பாட்டு அமைப்புகளை அமைத்து காப்பாற்ற முடியும். அப்படி ஒரு சிறு வட்டம் தான் உங்களுக்கும் தேவை. ஒரு ஜெயமோகன் உங்களுக்கு வேண்டும் என்றேன். அப்படி நேரம் போவது தெரியாமல் பேசினோம். அவர் பேச பேச உணர்ச்சிவச பட்டு கொண்டிருந்தார்.
‘Stories of the true’ கதைகளை பற்றி சொன்னேன். அவர் ‘God of Small things’ பற்றி சொன்னார். நான் இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினேன். அறம் கதைகள் யாரையும் உத்தேசித்து எழுதவில்லை, அது ஒரு ஆசிரியனின் ஆழ்மன வெளிப்பாடு. ஒரு சுய கணடடைவு இதில் உள்ளது. இதுவே இலக்கியம். எங்கள் ஊரில் அதிகம் விற்ற சிறுகதை தொகுப்பு இது தான். இதில் தான் நீங்கள் எங்கள்(இந்தியாவின்) ஆன்மாவை உணர முடியும் என்றேன். கண்டிப்பாக படித்துவிட்டு மெயில் அனுப்புகிறேன் என்றார்.
நான் குலசை தசரா விழாவுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னேன். நான் அவரிடம் நீங்கள் இழந்திருப்பது இது போன்ற ஒன்றை தான். உங்களிடம் இப்படி சில அறிவார்ந்த விசயங்களை பேசிவிட்டு, இதோ திரும்பி உச்சகட்ட உணர்வெழுச்சிகள் நிகழும் இடத்திற்கு செல்ல போகிறேன். லட்சம் மக்களுக்கிடையில் முட்டி மோதி வெறும் ஆதி உணர்ச்சி நின்றாடும் இடத்திற்கு அனைத்தையும் கழட்டி வைத்துவிட்டு செல்கிறேன். ஆனால் வளர்ந்த நாடுகள் எல்லாம் இதை அழித்துவிட்டு வேறு ஒன்றை கட்டமைத்துள்ளது. நீங்கள் இப்போது உங்கள் ரூமிற்குள் மட்டும் தான் செல்ல முடியும். உங்கள் நாட்டிலும் இதே தான்.
என்னுடைய ஆசான் சொல்வார் கடந்த 400-500 வருடங்களாக ரிஷிகள் இந்தியாவில் பிறக்கவில்லை, மாறாக ஐரோப்பாவில் தான் பிறக்கிறார்கள். எங்களுக்கு ஹெர்மன் ஹெஸ்ஸே, சோப்பனோவர், பீத்தோவன், மார்க்ஸ் அனைவருமே ரிஷிகள் தான். உங்கள் பண்பாட்டின் வேரை மீட்டெடுக்க இன்னொரு ரிஷி வரலாம். இந்தியாவில் எப்போதும் அப்படித் தான் நடக்கிறது என்றேன். அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, நான் நேரம் போவது தெரியாமல் ஒருவருடன் போசி வெகு நாட்கள் ஆகிவிட்டது. என்றும் இதை மறக்க மாட்டேன் என்றார். என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அவரை ஹோட்டல் வரை சென்று வழியனுப்பி விட்டு ‘Stories of the true’ புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தேன். அவர் ‘We don’t choose book, Book chooses us’ என்றார். கட்டியணைத்து விடைபெற்று கொண்டோம்.
குலசைக்கு இரவு 12 மணிக்கு வந்து சேர்ந்தேன். பத்ர காளிகளும், மாடன்களும், ருத்ரர்களும் வெறியாட்டெழுந்து ஆடிக் கொண்டிருந்தனர். கீழே குட்டி கிருஷ்ணர்களும், அனுமன்களும், விநாயக, முருகன்களும் கண் விரிய பார்த்து கொண்டிருந்தனர். காளிகள், ருத்ரன்கள் ஆடி கொண்டிருக்க, சரஸ்வதி ராஜ அலங்காரத்தில் வீனையை ஏந்தி ஆகம முறைப்படி அழைத்து வரப்பட தீச்சட்டி வைத்து ஆடிய பெண்கள் அவளை பார்த்து அம்மே என்று அலறினர்.
என் எதிரே ஒரு காளி, சிவனிடம் யோவ்! இங்க பாருய்யா உன் புள்ள பிள்ளையார என்னமோ கட்ட பிரம்மச்சாரின்னு பீத்துற, பொட்டப்புள்ள முடியபிடிச்சு இழுக்கிறான். உடனே பார்வதி நானும் சொல்றேன் ஒரு கல்யாணத்த பண்ணலாம்னு, இந்தாலு கேக்கல, உடனே அருகே நின்ற முருகன் ஒக்காளி! இவனுக்கு கல்யாணம் ஆக விட்டிருவனோ, தக்காளி என்ன ஏமாத்தி ஏன் பழத்தையும் பிடுங்கி தின்னுபுட்டு, நீயும் சைசா அவனுக்கிட்ட பழத்தை குடுத்துபுட்டு. இப்ப கல்யாணமா பேசுற! கொலை விழும் என்று அரட்ட. பக்தர் ஒருவர் ஆமா நீ இப்ப நல்லா வீராப்பா பேசுவ அப்றம் கோவனத்த கட்டிகிட்டு மலை ஏறி நின்னுகிடுவ நாங்க கொட்டை தொங்க ஒன்னை கும்புட மேல ஏறி வரனும் என்று முருகனை பார்த்து கத்த, கூட்டத்தில் ஒரே சிரிப்பு.
கடற்கரை வரை நடந்து சென்றேன். வழி நெடுக பல நூறு பேர் தரையில் படுத்து கிடந்தனர். எத்தனை முகங்கள், நிறங்கள், அமைப்புகள். நானும் சென்று கடல் மணலில் படுத்துக் கொண்டேன். காலையில் கண் விழித்தபோது எதிரே ஆகாசம் தொட்டு நிற்கும் கடல் என்னை சுற்றி பத்தாயிரம் பேர் தூங்கியும், எழுந்தும், வேடமிட்டும், ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருந்தனர். எனக்கு எனது நண்பர் ‘Bernhardt’-ன் நீர்மை படர்ந்த கண்கள் நினைவுக்கு வந்தது. நான் எனக்குள் மந்திரம் போல சொல்லி கொண்டேன். “வேறு எதற்காகவும் இதை நான் இழக்க போவதில்லை” என்று.
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி.