அறம் தொகுதியை என் முதல்நூலாக ஆங்கிலத்தில் ‘லாஞ்ச்’ செய்ய (ஏவ?) முடிவுசெய்தபோது முதன்மை எதிர்ப்பு பதிப்பகங்களிடமிருந்து வந்தது. அது ஆங்கிலத்தில் போணியாகாது, ஒரு சிறுநாவலை கொண்டுவாருங்கள் என்றனர். திரும்பத் திரும்ப நிராகரிப்புகள். பல பதிப்பகங்களில் இருந்து இன்னொரு காரணத்துக்காக நிராகரிப்பு. அவர்கள் இணையத்தில் என்னைப் பற்றி தேடினர். கிடைத்தவை எல்லாமே ஆங்கிலத்தில் என்னைப் பற்றி எழுதப்பட்ட வசைகள். ஆணாதிக்க வெறியன் என.
என் இலக்கிய முகவர் நல்ல வாசகர். அவர் இத்தொகுதிமேல் நம்பிக்கையுடன் இருந்தார். தொடர்ச்சியாக முயன்றார். ஒரு வழியாக ஒரு பதிப்பகத்தின் ஆசிரியர் தொகுப்பை வாசிக்க ஒப்புக்கொண்டார். வாசித்துவிட்டு மிகுந்த மன எழுச்சியுடன் பதிப்பிக்க ஒப்புதல் அளித்து எழுதினார். ஆனால் அடுத்த மாதமே மனமாற்றம். அவர் தமிழில் சிலரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் என்னைப் பற்றி அளித்த சித்திரம் கொடூரமானது. (எவர் அளித்த சித்திரம் என்றும் சொன்னார்).
ஒருவழியாக எங்கள் முகவர் பதிப்பகத்தை கண்டடைந்தார். ஜக்கர்நாட் இலக்கிய முக்கியத்துவம் கொண்ட பதிப்பகம். அதன் பொறுப்பாளர் சிக்கி சர்க்கார் மேல் இத்தொகுதி செலுத்திய மிகத்தீவிரமான செல்வாக்கே இது இத்தனை வெற்றி பெறக்காரணம் எனலாம். இந்நூலை அவர்களின் முதன்மை வெளியீடாகவே முன்னிறுத்தினர். பேட்டிகள், மதிப்புரைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. நூல் தென்னாசிய நூல்சந்தையில் மிகவும் கவனிக்கப்படும் படைப்பாக ஆகியது.அதன்பின் மற்ற பதிப்பகங்கள் ஆர்வம் காட்டின. நிராகரித்தவர்களே இன்று நூல்களை கேட்டுக் கேட்டு மின்னஞ்சல் விடுக்கிறார்கள். நேரிலும் கேட்கிறார்கள்.
Stories of the True மிகுந்த வரவேற்பைப்பெறும் என நான் அறிந்திருந்தேன். ஏனென்றால் மானுடமனம் ஒன்றே. ஆனால் இன்று பெற்றுள்ள வரவேற்பு அசாதாரணமானது. இது எந்த விதமான அரசியல் பரபரப்பாலும் அடையப்பட்டது அல்ல. அதன் வாசிப்புத்தன்மையாலெயே வந்தமைந்தது. தமிழில் என்னை வாசகர்களிடம் கொண்டுசென்று சேர்ப்பது அறம்தான். ஆங்கிலத்திலும் அதுவே.