உலகின் மையத்தில்…

நியூயார்க் நகரின் டைம் ஸ்குயர் என்னும் உலகமையங்களில் ஒன்றில் நின்றிருந்தோம். முகங்களின் கொப்பளிப்பைப் பார்க்கவே அங்கே செல்வதுண்டு. அங்கே வெள்ளை முகங்களை விட சீன முகங்களே மிகுதி. ஒவ்வொரு முறையும் அங்கே செல்லும் போது என்னென்ன நிகழ்ந்துள்ளது என்று பார்ப்பேன். அது உலகையே நாடிபிடித்துப் பார்ப்பதற்கு நிகர்.

முன்பெல்லாம் அங்கே ஆணும்பெண்ணும் பொது இடங்களில் கொஞ்சிக்கொள்ளும் காட்சிகள் மிகுதி.  இன்று அது அமெரிக்காவிலேயே மிகவும் குறைந்துவிட்டது. ஆசிய மக்கள் வந்து பெருகும்தோறும் வெள்ளையரின் பொதுஇடம் சார்ந்த பழக்கங்கள் மாறுபடுகின்றன என நினைக்கிறேன். (அல்லது ஆசியர்கள் அதையெல்லாம் வேடிக்கைபார்க்கிறார்கள் என்பதனால் குறைத்துக்கொண்டிருக்கலாம். அதேசமயம் சென்ற ஆண்டு வந்தபோது ஏராளமான தன்பால் காமம் கொண்டவர்கள் வேண்டுமென்றே கொஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அது இயல்பாக இல்லாமல் ஓர் அரசியல்நடவடிக்கை போல, சவால்போல இருந்தது. இம்முறை அதுவும் குறைவு.

இம்முறை குறைந்திருந்த ஒன்று கிழிசல் ஜீன்ஸ். சென்றமுறை வந்தபோது எங்கும் கிழிசலாடைகள்தான். ஓரிரு கிழிசல்கள் இருப்பது பல ஆண்டுகள் முன்னரே தொடங்கியது. துப்பாக்கித் தோட்டாவின் துளைகூட இருந்தது. அது பெருகி  உநாய் குதறியதுபோல ஆகி ஜீன்ஸ் பரப்பை விட கிழிசல்பரப்பு மிகுதியாக ஆகும் நிலையை எட்டி சட்டென்று மறைந்துவிட்டிருக்கிறது. ஓரிரு கந்தலாடைகளையே கண்டேன்.

அதேபோல தலையில் ராமராஜன் நிறங்களை அடித்துக்கொள்வதும் , பசை தேய்த்து காண்டாமிருகக் கொம்பு போல ஆக்கிக்கொள்வதும் குறைந்துவிட்டது. நானே அப்படி சிகையலங்காரம் செய்துகொண்டு கிழிசல் ஜீன்ஸ் அணிந்துகொள்ளலாம் என நினைத்திருந்தேன். ஜஸ்ட் மிஸ். ப்ச்.

மகேஸ்வரியும் பழனிஜோதியும் நானும் அருண்மொழியும் நகர்மையம் சென்றிருந்தோம். எங்கள் அமெரிக்கப்பயணத்தின் இறுதிநாட்கள். 28 இங்கிருந்து கிளம்பி ஒருநாளை இழந்து 30 அன்று இந்தியா வந்துசேர்வோம். நியூயார்க்கின் இரட்டைக்கோபுர நினைவகத்திற்கு இம்முறையும் சென்றோம். ஓர் அழகிய கட்டிடம். நல்லவேளை பின்னவீனத்துவர் கையில் சிக்காமல் அந்த வரைவு உருவாக்கப்பட்டுவிட்டது. எழும்பறவையின் உள்ளே அதன் ஆன்மா என வெண்மை.

அருண்மொழி நியூயார்க்கில் மானசீகமாகப்பாடிக்கொண்டும் மெலிதாக நடனமாடிக்கொண்டும் இருப்பாள். அருகே ‘கட்டின புருசன்’ என ஓர் ஆத்மா நடமாடுவதே கண்ணுக்குத்தெரியாது. நியூயார்க் அவளுடைய வயதை, ஊரை, வேரை எல்லாம் மறக்கச்செய்து சிறுமியாக ஆக்கிவிடுகிறது.  அவளைப் பார்ப்பதே ஓர் ஆனந்தம். அதைவிட தெரியாமல் வீடியோ எடுப்பது பேரானந்தம். அதை வீட்டுக்குக் கொண்டுசென்று போட்டுக்காட்டி கேலிசெய்வது மானுட இன்பங்களில் உச்சமான ஒன்று.

ஒரு டிஸ்னி கதாபாத்திரம் சிரிப்பில் இளித்த முகத்துடன் வந்து அருகே நின்று அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சியது. மிக்கி மௌஸ். அதன்பின் தலையை கழற்றியது. நொந்துபோன ஒரு மத்திய ஆசியக் கிழவி. “தயவு செய் குழந்தை, தயவுசெய்” என்று அருண்மொழியிடம் கேட்டாள். துயரே உருவான கண்கள். அருண்மொழியும் மகேஸ்வரியும் ஐந்து டாலர் கொடுத்து புகைப்படம் எடுத்தனர். பாட்டி அந்த மிக்கி மௌஸ் முகத்தை அணிந்துகொண்டாள். சிரிப்பில் விரிந்த குழந்தை முகம். என்றும் அழியாத குழந்தமையின் நவீனத் தொன்மம்.

அங்கே அமர்ந்திருந்து நிகழ்வனவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். புகைப்படம் எடுக்கும் பையன்கள் அலைந்து திரிந்து ஒவ்வொருவரிடமாக கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவர் இரு நிர்வாணநங்கையரின் பின்னழகுகள் நடுவே தன் முகம் கவ்வப்பட்டு வரும்படி அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர் மனைவி புகைப்படம் எடுத்தார். என்ன ஒரு பரந்தமனம். நவீன நளாயினிகள்.

நியூயார்க் சந்திப்பு முனையின் முதன்மைக்குடிமகன்கள் அங்குள்ள சில்லறைக்காரர்கள்தான். விதவிதமான சந்தேகத்துக்குரிய பொருட்களை விற்பவர்கள். அல்லது விற்க முனைபவர்கள். எவரும் எதையும் வாங்கி நான் பார்த்ததே இல்லை. ஆனால் வாங்கப்படாவிட்டால் இத்தனை தீவிரமாக விற்க மாட்டார்கள். மெல்லிய மரியுவானா வாசனை கொண்ட இளைஞர்களின் ஆடும் நடை. மிதக்கும் கண்கள். உடல் உடல் உடல் என கூவும் விளம்பரங்களில் கன்னியரும் காளையரும். ஆனால் அமெரிக்கர்களில் வடிவான உடல்கொண்ட பெண்டிர் அரிய உயிரினங்கள். அங்குள்ள சுவை என்பதே சீஸ் எனும் பாலாடைக்கட்டியும் கராமல் எனும் காய்ச்சிய சீனியும்தான்

பெரும்பாலும் நியூயார்க்கின் சில்லறை வித்தைக்காரர்கள் கருப்பினத்தவர். அவர்களின் உலகம் அது. நியூயார்க் மையமே அவர்களுடையது. வீடிலிகளிலும் அவர்களே மிகுதி. வெள்ளை வீடிலிகள் பலவகை. போதையர்கள் பெரும்பாலும். ஓவியர்கள், இசைக்கலைஞர்கள் உண்டு.  ஒரு வீடிலி ‘உதவுங்கள்’ என்னும் அட்டையுடன் அமர்ந்து மக்கியவல்லியின் அரசியல் சிந்தனைகள் என்னும் தடிநூலை கூர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். மீசை வளர்ந்த வெள்ளை இளைஞன். உலகுக்கு என்ன சொல்ல வருகிறான் என தெரியவில்லை. நியூயார்க் சித்தனாக இருந்தாலும் இருப்பான்.

ஓர் இந்திய புகைப்படக்காரனைப் பார்த்தேன். அல்லது பாக்கிஸ்தானி அல்லது வங்காளத்தேசி. ஆனால் பாவனைகள் எல்லாமே இந்தியம். அவனும் தெருப்புகைப்படக்காரன். இளைஞன். இன்னொரு இளைஞனான  கருப்பினப் புகைப்படக்காரன் வந்து அவனிடம் சண்டைபோட்டான். இவனும் நின்று சண்டையிட்டான். அடிதடி இல்லை. மாறிமாறி உந்திக்கொண்டார்கள், கூச்சலிட்டார்கள். எல்லைச்சண்டை போல. இன்னொரு கருப்பின இளைஞன் ஓடிவந்தான். அடிக்கப்போகிறான் என நினைத்தால் அவன் இந்த இந்தியனுக்கு ஆதரவாக பேசி நெட்டை இளைஞனை தள்ளிவிட்டான். சமாதானம் உருவானது. ஆனால் எவருக்கும் கிராக்கி அமையவில்லை.

வேடிக்கையாக இருந்தது. நம்மவர்கள் எங்கெல்லாம் வருகிறார்கள், என்னென்ன வேலையெல்லாம் செய்கிறார்கள். அபுதாபி பாலைவனத்தில் கோழிக்கோடுக்காரி சுஹரா கைகளில் மெகந்தி போடும் வேலை செய்வதைக் கண்டேன். இவன் ஒரு தமிழனாக இருந்தால்?

ஆவேசம்

நானே ஒரு கதையை சமைக்க தொடங்கினேன். அவன் பெயர் செந்தில். ஊர் குளித்தலை. அமெரிக்காவில் வேலை செய்கிறான். நியூயார்க்கில் கருப்பினப் பையன்களுடனும் வீடிலிகளுடனும் மோதி தொழிலை கண்டடைந்துள்ளான். அங்கேயே அடித்தளங்களில் அமைந்த கூட்டுத்தங்குமிடங்களிலோ அல்லது அப்பால் ஹார்லம் போன்ற இடங்களிலோ கருப்பினத்தாருடன் தங்குகிறான். தானாகவே ஒருவேளை சமைத்துக்கொள்கிறான். தயிர்சாதம், ஆம்லேட். மற்றவேளைகளில் நியூயார்க் தெருக்களில் கிடைக்கும் ஹாட்டாக்  அல்லது சாண்ட்விச்.

அட அட, என்ன ஒரு கதை. எனக்கே குஷியாகிவிட்டது. அவனுடைய காதலி அங்கேயேதான். அவள் மெக்ஸிகோவிலிருந்து வந்து அங்கே நிர்வாணமாக படங்களுக்கு போஸ் கொடுப்பவள். உலகின் மையத்தில் நிர்வாணமாக நிற்கும் தொழில். பெயர் ஜோனா. அவள் அதை ஹோனா என்கிறாள். அவளுக்கு துணை குன்றா இளமைகொண்ட மொரோக்காக்காரக் கிழவியான ஐஷா.போலிப்பொருட்களை தெருவில்போட்டு விற்கும் ஐசக், ஹாட்டாக் கடை வைத்திருக்கும் ஜான், புகைப்படக்காரர்களான சாம், மார்க், வாஷிங்டன் என பல தோழர்கள். போராட்டம்தான், ஆனால் கூடவே குன்றாத கொண்டாட்டம் கொண்ட வாழ்க்கை.

அமைதி

சட்டென்று, நம்மூர்க்காரர்களின் சாஃப்ட்வேர் வாழ்க்கையை விட கொஞ்சம் மேலானதா என்று தோன்றிவிட்டது. செந்தில் ஊருக்கு வருகிறான். அங்கே அவன் அப்பா அம்மாவுக்கு பெருமை, அவன் அமெரிக்க ரிட்டர்ன்ட். நியூயார்க் தெருவில் வாங்கப்பட்ட மலிவான செண்ட், எலக்ட்ரானிக் பொருட்களை தாராளமாக வினியோகம் செய்கிறான். ஊரில் இன்னொரு அமெரிக்க ரிட்டர்ன்ட்  சந்துரு. அவனும் இவனும் அவரவர் பெற்றோர் முன் சந்திக்கிறார்கள்.

“நீங்க எந்த கம்பெனியிலே வேலை பாக்கிறீங்க?” என்ற கேள்விக்கு செந்தில் கொஞ்சமும் கூசாமல் “ஸ்ட்ரீட் ஒண்டர்ஸ்னு ஒரு கம்பெனி…. நியூயார்க்லே மான்ஹாட்டன்லேயே எங்க ஆபீஸ் இருக்கு…” கூடவே அடுத்தடுத்த வரிகள். “நாலாயிரம் பேரு வரை வேலைபாக்கிறாங்க. எல்லா இனத்திலேயும் ஆட்கள் உண்டு. தினசரி ஃபுட்பால்னா ஒரு அம்பதாயிரம் முதல் ஒரு லெட்சம் வரை இருக்கும்…” பேசத்தெரியாதவன் நியூயார்க்கில் வாழமுடியுமா என்ன?

சிரித்துக்கொண்டேன். கதை அழிந்துவிட்டது. அப்படி கற்பனைசெய்து எழுதாமல்போகும் ஆயிரம் கதைகளில் ஒன்று.

முந்தைய கட்டுரைநீலக்குயில்
அடுத்த கட்டுரைநவீன ஓவியக்கலையை அறிய