வன்னி:கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன்,

உங்களின் ஈழப்பிரச்சினை குறித்த பதிவு – வன்னிபடித்தேன். மிகவும் சுருக்கமாக ஆனால் தெளிவாக எழுதியுள்ளீர்கள். இதைப் படிக்கும்போது நான் சில வருடங்களுக்கு முன்பு எழுதியது நினைவுக்கு வந்தது. இவ்வாறு எழுதியிருந்தேன்:

 

ஈழத்தமிழ் சகோதரர்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இப்படிப் பட்ட முதிர்ச்சியற்ற , இந்திய எதிர்ப்புபிராம்மண வெறுப்பு, இந்து எதிர்ப்பு அரைவேக்காட்டு இந்தியத் தமிழக் குழுக்களுடன் சேர்ந்து செயல்பட்டதால் தான் இன்று ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்பு செய்து வரும் சிங்கள பேரினவாத அரசு பற்றி தமிழ்நாட்டிலோ மத்தியிலோ பேசினால் கூட எம்மை தேசத்துரோகிகளைப் போன்று பார்க்கின்றார்கள். இவர்களெல்லாம் தமிழர்களுக்கு என்று சாதித்தது வெற்றுச் சவடால்கள் மட்டும்தான்…..ஈழத்தமிழர்களின் மீதமர்ந்து சவாரி போக நினைக்கும் மணல் குதிரைகள் இவர்கள். இவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஈட்டித்தந்தவைகளைக் காட்டிலும், நாசமாக்கியதே அதிகம். 

” 

http://nesamudan.blogspot.com/2007/04/blog-post_15.html 

 

நீங்கள் சொல்லியுள்ளபடி இன்று இந்த வெறுப்பாளர்களின் குழுக்கள் போடுகின்ற காட்டுக்கூச்சலில், எழுப்புகின்ற இரைச்சலில் இது போன்ற Sane (மன ஆரோக்கிய என்று தமிழில் சொல்லலாமா?) குரல்கள் கேட்காது என்றாலும், இதை சொல்வது நமது கடமை. எதிர்காலத்தில் யாராவது இதன் பின்னால் உள்ள உண்மையை, நேர்மையை உணரக்கூடும்.

 

எம்.கங்காதரனை சந்தித்து உரையாடி மனதில் மாற்றத்தை ஏற்படுத்திய சிங்கள பவுத்த துறவியர் குழுவைப் பற்றி எழுதியிருந்தவுடன் எனக்கு இன்னொன்று நினைவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு ராஜபக்ஷே இந்துத்துவ மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் உள்ள முக்கிய தலைவர்களை தமது விருந்தினராக அழைத்து அவர்களிடம் தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். அதில் ஒருவராக சென்று வந்த எனது நண்பர் (அவர் தமிழர்) முழுக்க முழுக்க எதிர்நிலைப்பாட்டை எடுத்திருப்பதைக் காணமுடிந்தது.


 

இலங்கை அரசின் உளவு அமைப்பும் தொடர்புடைய அமைப்புகளும்(பவுத்த சங்கம் உட்பட இதர அமைப்புகள்) மிகவும் ஆழமாக செயல்பட்டு எங்கெங்கெல்லாம் ஈழத்தமிழர் படுகொலைக்கெதிராக குரல் ஒலிக்கும் என்று அவதானித்து அவற்றை neutralise (தமிழில் உகந்த வார்த்தை உடனடியாக தென்படவில்லை, மன்னிக்கவும்) செய்துவிட்டார்கள்.

 

ஒருவகையில் இது எனக்கு இஸ்லாமிய சமூகத்தையே நினைவுபடுத்துகிறது. அங்கே எப்படி உணர்வலைகள் எழுப்பப்பட்டு நிதானம், நிதர்சனம், being sane எப்படி மதம் என்கிற குட்டைக்குள் அமுக்கப்படுகின்றதோ அதே போன்று தமிழ் என்ற பெயரில், தமிழ் உணர்வு என்ற பெயரில் எந்தவித நிதானமான குரலையும், நிதர்சனத்துடன் கூடிய செயல்பாட்டையும் இந்த இந்திய-இந்து-பிராம்மண எதிர்ப்பு குழுக்கள் அழுத்தி தமது கூச்சலின் மூலம், மிரட்டலின் மூலம் இல்லாமல் செய்துவிடுகின்றன. இதன் முடிவு – வேறென்ன பேரழிவுதான். அதுதான் ஈழத்தில் நடந்துகொண்டிருக்கிறது. நாம் மவுனமாக பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.

 

அன்புடன்,

நேசகுமார்.

 

8888

 

அன்புள்ள ஜெ.,

உங்கள் துயரத்தைப் புரிந்து கொள்கிறேன்.

ஆனால், இதில் தவறு இப்போது நடப்பதல்ல; ஜனநாயகத்தில் சிறிதும் நம்பிக்கை இல்லாத, மூடத்தனமான வன்முறையை மட்டுமே வழிமுறையாகக் கொண்ட ஒரு இயக்கத்தை எப்போது ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளா ஏற்றுக்கொண்டோமோ, அப்போதே இந்தப் புள்ளியும் தீர்மானிக்கப்பட்டு விட்டது…  போரிடும் இரு தரப்பில், நல்லவர்கள் என்று எந்தத் தரப்பையுமே சொல்ல முடியாத நிலை இப்போது… இந்தியத் தமிழர்களின் மெத்தனப்போக்குக்கு இது ஒரு முக்கியக் காரணம்…

ஈழத்தமிழர்களின் துயரத்திற்கு இறுதி அத்தியாயமாக தற்போதைய நிகழ்வுகள் அமைய வேண்டுவதைத் தவிர வேறு வழியில்லை…

அன்புடன்
ரத்தன்

88

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு,

கடந்த சில மாதங்களாக தங்களின் இணைய தளத்தைப் பார்வையிட்டும், ருசிகரமான சில சம்பங்கள், விமர்சனங்கள், கேள்வி பதில் பிரிவுகளைப் படித்தும் வருகிறேன்.

இலங்கையின் தற்போதைய நிலை குறித்தும், அதைப்பற்றிய தங்களின் புரிதல்களைக் குறித்தும் தங்களின் பாணியில் விளக்கினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.  குறைந்த பட்சம் இந்த மடலுக்கு ஒரு சிறிய மறுமொழியையாவது எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

இரா. கோபிநாத்.

அன்புள்ள கோபிநாத்,

 

நான் அரசியல் விமரிசகன் அல்ல. அரசியல் ஆய்வாளனும் அல்ல. தகவல்களை திரட்டுவதும் உலகச்சூழல் சார்ந்து அவற்றை ஆராய்வதும் என் இயல்பும் அல்ல. ஓர் எழுத்தாளனாக நான் என் மனப்பதிவுகளையே அதிகமும் சொல்லி வருகிறேன். இன்றைய சூழலில் அபத்தமான வெறுப்பு கக்கும் விவாதங்களையே நாம் ஈழம் சார்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதனால் எந்த பயனும் இல்லை. அம்மக்கலுக்கு உதவ ஒரே வழிதான் உள்ளது, தொழிற்சங்கங்கள் பண்பாட்டு அமைப்புகள் போன்ற  அமைப்புகள் சார்ந்து குரல் கொடுப்பது. மற்றபடி மௌனமாக இருப்பது
ஜெ

 

888

 

 

Dear JM,

 

ஆர்குட்டில் நடந்த விவாதங்களில் யாம் எழுதியது :

 

//சகோதர யுத்தம் பற்றி கருணானிதி சொன்னது மிகவும் சரியே.

கருத்து வேறுபாடு அல்லது ஈகோ கிளாஸ் அல்லது அதிகார மோதல் காரணமாக‌ பல ஆயிரம் ஆயிரம் இதர தமிழ் போரளிகள் / தலைவர்கள் / சிவிலியன்கள் / சிங்கள் தலைவர்களை கொன்ற ஒரு இயக்கத்தின் தலைமையை கண் முடித்தனமாக‌ உங்களைப் போல் நாங்கள் ஆதரிக்கவில்லை. பகுத்தறிவு கொண்டு பார்க்க வேண்டும். வெறும் உணார்சி வேகம், பயனில்லை.

 

 

சிறீ சபாரத்தினத்தை நான் 80களில் சந்தித்திருக்கிறேன். அமிர்தலிங்கம் கரூரில் ஒரு கூட்டத்தில் பேசினார். அவர்களை எல்லாம் துரோகிகள்” என்று ஈவிரக்கமில்லாமல் கொன்ற ஒருவரை நீங்க வேண்டுமானாலும் மகத்தான‌ தலைவர் என்று கொண்டாடலாம். பழைய ஆட்க்கள் பல்ரும் இன்று வாயையும், “அதையும்” பொத்திக்கொண்டு, ஈழப்பிரச்சனை பற்றி எதுவும் வெளிப்படையாக் பேசாமல், பொழைப்ப பார்க்கிறார்கள். அது ஏன் என்று, உமக்கு சொன்னால் புரியாது.

 

யாழ்பாணத் முன்னாள் எம்.பி சிவதம்பி அவர்கள் (இன்று முதியவர்) சென்னை வரும் போதும், ஈழபிரச்சனை பற்றி பேசுவதில்லை. தமிழ் மொழி மற்றும் இதர விசியங்கள் பற்றி மட்டும் தான் விவாதிப்பார். Disillusionment என்றால் என்ன என்று இன்னும் ஒரு 15 ஆண்டுகளில் உமக்கு புரியலாம்.   வாழ்க்கை பாடம் என்பது வேறுதான். ///

 

 

//80களில் பல உதவிகள் செய்து, அதன் பலனைஅடைந்த எம் போன்றவர்களையும்  சந்தேகிகாதீர்கள். மாற்று கருத்து சொன்னதற்காக, உணார்சிவசப்பட்டு பொதுபடுத்தும்  செயல் பகுத்தறிவல்ல. புலிக‌ள் என்ன‌ செய்தாலும் அதை ஆத‌ரிப்ப‌து, எதிரிக‌ள் என்ன‌  செய்தாலும் அதை எதிர்ப்ப‌து என்ற‌ பிளாக் அண்ட் ஒயிட் ம‌னோபாவ‌ம் எம‌க்கும் இல்லை.  ஆனால் உங்க‌ளை போன்ற‌ புல‌ம் பெய‌ன்ற‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு இருப்ப‌து இய‌ற்க்கைதான்…

 

 

இன்னும் சில மாதங்களில் முழு அமைதி திரும்பும் என்றே நம்புகிறேன். கரும்புலிகளின் தாக்குதல் / அச்சுருத்தல் கொழும்பு போன்ற தெற்க்கு குதிகளில் அறவே இல்லாத சூழல் உருவாகும் போது, கொழும்புவில் தற்போது இருக்கும் கெடுபிடிகள் நின்று, பிற நாடுகள் போல் சாதாரண  நிலை உருவாகும்.

இன்னும் சில ஆண்டுகளில், ஈழப்பகுதியும், இலங்கையும் தமிழகம் போல் சாதாரண நிலைக்கு திரும்பி, இயல்பு வாழ்க்கை உருவாகும் என்றே அனுமானிக்கிறேன்.////



/ அன்புடன்

 

K.R.அதியமான்

Chennai – 96

http://nellikkani.blogspot.com  

http://athiyamaan.blogspot.com

http://athiyaman.blogspot.com

 

அன்புள்ள அதியமான்

 

 

நீங்கள் முன்வைக்கும் அரசியல் விவாதங்களில் ஈடுபட இது தருணம் அல்ல என்று நினைக்கிறேன். எப்போதும் மாற்றுத்தரப்புகள் நிறைந்த உரையாடலாகவே அரசியல் இருக்க வேண்டும் என எண்ணுகிறவன் என்பதனால் ஈழ மக்களின் தரப்பைப் பேச வன்முறை நம்பிக்கை இல்லாத அரசியல் தரப்புகள் அழிக்கப்பட்டமை மிகப்பெரிய இழப்பு என்று  எண்ணுகிறேன். ஜனநாயக உலகை நோக்கி பேச ஒரு குரலே இல்லாமலாகிவிட்டது இன்று.

 

 

ஆனால் ஒரு நம்பிக்கை இப்போது பரவலாக இருப்பதை என்னால் ஏற்கவே முடியவில்லை. ஒருவேளை போர்க்குழுக்கள் அழிக்கபப்ட்டு போர் முடிந்தால் ஈழம் என்ன ஆகும்? இனப்பிரச்சினை பேசித்தீர்க்கப்பட்டு ஈழம் ஜனநாயகப் பாதைக்குச் செல்லுமா? அதற்கான வாய்ப்பே இல்லை என்பதே உலக வரலாறு காட்டுகிறது.

 

 

ஒரு போரின்போது திட்டமிட்டு வளர்க்கபப்டும் வெறுப்புகள் போர் முடிந்ததும் அப்படியே அணைந்துவிடாது. மாறாக அவை ஒரு வலுவான சக்தியாக அப்படியே நீடிக்கும். அந்த  அரசியல் சக்தியை பல்வேறு அதிகாரவிரும்பிகள் பயன்படுத்திக் கொள்வார்கள். தமிழ் வெறுப்பும் இந்திய வெறுப்பும் இன்னும் 50 வருடங்கள் இலங்கையில் நீடிக்கும். வெறுப்பரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கக் கூடியது. 

 

 

போருக்கு முன் இலங்கையின் ராணுவம் சில ஆயிரங்கள். இப்போது கிட்டத்தட்ட 2 லட்சம். அந்நாட்டின் மக்கள் அளவைப் பார்க்க அது மிகபபெரிய எண்ணிக்கை. அவர்கள் போர்க்காலத்தில் கிடைத்த அளவிலா அதிகாரத்தைச் சுவைத்தவர்கள். கட்டற்ற– தணிக்கை இல்லாத– நிதியாதாரங்களை பெற்றவர்கள். அதிகாரத்தின் சுவை அறிந்த, அளவுக்கு மீறி பெருத்த, ராணுவம் ஒருபோதும் பாசறைகளுக்குள் ஒடுங்கி நிற்காது. போர் வெற்றிக்குப் பின் அவ்வெற்றியை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்த பின் ராணுவம் பேசாமல் கைகட்டி நிற்குமா என்ன?

 

மேலும் இன்று இலங்கைக்கு நிதியுதவிசெய்த நாடுகள் சுளுவில் அந்நாட்டின் செல்வங்களை சுரண்டும் வழியை நாடும். அதற்கு ஜனநாயகத்தைவிட சர்வாதிகாரமே வசதியானது. எல்லா நாடுகளிலும் போருக்குப் பின் வெறுப்பரசியலை கையாண்டு ராணுவ ஆட்சி உருவாகி அது அந்நாட்டுக்கு நிதியுதவிசெய்த நாடுகளுக்கு கைபபவையாக இருப்பதே நிகழ்ந்துள்ளது. வேறுவகையில் நிகழ்ந்தால் ஆச்சரியம்தான்.

 

இலங்கையில் தமிழர்களுக்கு அது இன்னும் மோசமான காலமாகவே அமையும். இந்தியாவுக்குக் கீழே இன்னொரு பர்மா. இந்தியா என்ன செய்யும் என்று கேட்கலாம். இந்தியா பர்மாவில் அழியும் தமிழர்களுக்கு என்ன செய்கிறது?

 

பிறர் எதுவுமே செய்ய முடியாது. நீடித்த விடாப்பபிடியான  ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் அம்மக்கள் தங்கள் விடுதலையை அடைய முடியும் . அது ஒன்றே சாத்தியமானது

 

ஜெ

 

 

 

அன்புள்ள ஜெ,

 

 ஈழப்பிரச்சினையைப் பற்றி நீங்கள் இன்னும் பல கோணங்களில் எழுத வேண்டும் என நினைக்கிறேன். நான் இணையத்தில் நிறைய கட்டுரைகளை கண்டுவருகிறேன். எல்லாமே தன்னை ஒருவகையில் காட்டுவதற்காக சிலர் செய்யும் முயற்சிகள். பெரிய புரட்சிக்காரர்களாக குரல் கொடுக்கிறார்கள். இதில் என்ன சிக்கல் என்றால் இவர்களில் பெரும்பாலானவர்கள் புனைபெயர்களில் எழுதுகிறார்கள்.

 

இணையத்தில் தீவிரமாக கருத்துக்களை எழுதும் ஒரு தீவிர இடதுசாரி வலைப்பதிவாளர் என்னுடைய  நண்பர். அரசு வேலையில் இருக்கிறார். ஆகவே புனைபெயரில் எழுதுகிறார். உங்களுக்குக் கூட கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லாரையும் கோழை என்று திட்டுவார்.

 

ஈழப்பிரச்சினையில் இன்று போராடுபவர்கள்வக்கீல்கள் மட்டும்தான். ஏனென்றால் அவர்களுக்கு வேலைக்கு போகாவிட்டாலும் வருமானம் பாதிக்காது. டிரா·ப்ட் எழுதி கட்சிக்காரன் கையில் கொடுத்து நீதிமன்றத்தில் கொடுக்கச் சொல்லி ·பீஸ் வாங்கிவிடுவார்கள். வாய்தா வாங்கி வழக்கை நீட்டியவர்கள் இப்போது இதை பயன்படுத்தி வழக்கை நீட்டுக்கொள்கிறார்கள்

 

ரவி
மதுரை

 

ரவி

 

 

இந்த விவாதங்களை இங்கே முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். அரசியல் சார்ந்த விஷாயங்களைப் பேச ஆரம்பித்தால் அது ஒரு போதை போல இட்டுச்செல்கிறது. எங்கோ அதிலிருந்து மனித சோகம் கழன்றுவிழுந்துவிடுகிறது

 

முந்தைய கட்டுரைஊமைச்செந்நாய், கடிதங்கள் மீண்டும்
அடுத்த கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 4