கனடா உரையாடல், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். டொராண்டாவில் தமிழ் இலக்கியத் தோட்டம்  நடத்திய Stories of The True நூலை முன்வைத்து தங்களுடன் நடத்திய உரையாடலை, நானும், ராதாவும் நண்பர்கள் ராஜன் சோமசுந்தரம், பழனி ஜோதி, மகேஸ்வரி, அருண்மொழி நங்கை மற்றும் வெங்கட்பிரசாத் அவர்கள் சகிதமாக வந்திருந்து நேரில் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்திருந்தோம். இங்கு வருவதற்கு முன்னர்  நம்மை வரவழைத்து மதிய உணவு அளித்து உபசரித்த தோழி இந்துமதியும், அவரது கணவர் சதீஸ், மகள் வானதியும்  நிகழ்வுக்கு வந்திருந்தனர்.

டொராண்டோவின் டவுன்டவுனில்  புத்தகம் விற்கும் ‘Another Story Bookshop’-ல் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தகம் சூழ அனைவரும் அமர்ந்திருக்க புத்தகம் பற்றிய உரையாடல். புத்தகக் கடையின் பெயரிலும் ஸ்டோரி இருந்ததைப் பார்த்தாலே இது ஒரு கதைசொல்லியின் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று எவரும் ஊகித்திருப்பார்கள்உலகக்கதை சொல்லும் அ.முத்துலிங்கம், உங்களைப் பற்றியும்கேள்விகள் கேட்கவிருக்கும் நேத்ரா ரொட்ரிகோ அவர்கள் பற்றியும் அறிமுகம் செய்து , இது ஒரு சரித்திர நிகழ்வு என்றார்.

நிகழ்வின் உரையாடல் ஒருங்கமைப்பாளர் நேத்ரா ரொட்ரிகோ ஒரு மொழியாக்க வல்லுனர், யார்க் பல்கலைக்கழகத்தில் இதைப் போன்ற விவாதங்களை நடத்துபவர் என்று அறிந்துகொண்டோம். முதலில் புத்தகங்களிலிருந்து சில முக்கிய பக்கங்களை, கஸ்தூரி சவுரியப்பன் , வாசித்தார். அவர் , காலம் செல்வம் அண்ணனின் மகள் என்று கொஞ்ச நேரம் கழித்துத்தான் எனக்கு உரைத்தது. அவர் நாடகக்கலையை தொழிலாக கொண்டவர். அவர், ஆச்சி வெய்யிலில் அமர்ந்து நியாயம் கேட்பதும், தீர்ப்பை மாற்றி எழுது என்று அறம் நாயகனிடம் மன்றாடுவதையும் அவர் ஆங்கிலத்தில் வாசிக்கக் கேட்க உணர்வுப்பூர்வமாக இருந்தது. பெருவலியின் அவர் வாசித்த பக்கங்கள் ஒரு தேர்ந்த வாசகரால் மட்டும்தான் சரியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.

தொடர்ந்து பேசிய வருண், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். மொழியாக்க நூல்களை, 15 வயது முதல் 35 வயதுக்குள் உள்ள வாசிப்பவர்களின் விகிதச்சாரத்தைச் சொல்லி Stories of the True போன்ற நூல்களுக்கான வரவேற்பு உலகச்சந்தையில் இருக்கும் என்றார். தங்களைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களைப் புரிந்துகொள்ளவும் வாசிப்பதாகச் சொன்ன அவரின் உரை செறிவாக இருந்தது. , முத்துலிங்கம் அவர்களே வியப்புறும் இரு நூல்களை எழுதிய கிம் கங்கேஷன் , Stories of The True நூல் முன்வைக்கும் உண்மை வாழ்க்கை கதாநாயகர்களை வியந்தும், அவருக்குப் பிடித்த பக்கங்களை வாசித்தும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அடுத்துப் பேசிய கவிஞர், சேரன், தான் எவ்வாறு உங்கள் வாசகர் ஆனார் என்று திசைகளின் நடுவே கதையை படித்துவிட்டு மெய்மறந்ததை நேற்றுத்தான் நடந்தது போல அதே மயக்கத்தில் சொன்னார். ‘அறம்கதை வரிசையில்சோற்றுக்கணக்குவாசித்தவர்கள் மேலும் 100 கெத்தேல் ஷாஹிப்பை தங்களுக்கு அறிமுகப்படுத்தியதாக  நீங்கள் குறிப்பிடுவீர்கள். சேரன் தனது உரையில் , காஜா போர்முனையில் பசியில் வாடுபவர்களுக்கு சமைக்கும் சமீரா அபு அம்ரா மற்றும் ஸ்ரீலங்கா போராட்டத்தின்போது உணவளித்து உதவிய ஒரு பெண்மணியையும் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து வந்தது, நேத்ராவின் கேள்விகள். ஆங்கிலத்தில் பேசுவதற்குத் தயங்கி , I will try என்று பேச ஆரம்பித்தீர்கள். ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் இதயப்பூர்வமாக, உண்மையாக பதில் சொன்னீர்கள். எழுதியதன் காரணம் அம்மாதான்நேசித்தவரைக் கல்யாணம் செய்ய எட்டுக் கதைகள் எழுதி சம்பாரித்தேன் என்று சொல்லி எதிரில் அமர்ந்தவர்களின் உள்ளத்தில் அமர்ந்துவிட்டீர்கள். ஒரு மொழி சார்ந்த எழுத்தாளனாக இல்லாமல், உலகை நேசிக்கும், அறம் வழி நடக்கும், ஒரு மானுடனாக பதில் சொன்னீர்கள். மேடையில் பேசும் உரையானாலும் சரி, நேர்முகம் ஆனாலும் சரி, நீங்கள் உங்கள் ஆசிரியர்களின் பெயர்களை சொல்லாமல் இருப்பதில்லை. சுந்தர ராமசாமி, நித்யா, .நா.சு , கி.ரா. ஆற்றூர் ரவிவர்மா என எல்லோரையும் நினைவு கூர்ந்தீர்கள். அரசாங்கத்திற்கு எதிரானவன் என்று அறைகூவுவதிலும் நீங்களாக இருந்தீர்கள். உரையாடல் முடிந்து தங்களுடன் வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் ஒருவரான, கனடா மொழியாக்க வல்லுனரும், எழுத்தாளருமான கிம் எக்லின். அவர் தாங்கள் ஆங்கிலத்தில் அளித்த எல்லா பதில்களும் புரியக்கூடியதாகவும் , தெளிவாகவும் இருந்ததாக கூறினார். நான் சொல்லாமல் விட்டதை இணைத்திருக்கும் மூன்று காணோளிகளில் வாசகர்கள் கேட்டுக்கொள்ளலாம்

செல்லும் புத்தகக்கடைகளில் எல்லாம், ஏர்போர்ட் கடைகளில் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களில் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட தங்களின் புத்தகங்கள் இருக்காதா என்று ஏங்குவேன்.    கடையில் நுழையும் முன்னர், அடுக்கியிருந்த Stories of The True புத்தகங்களை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். இதற்குத்தானே ஆசைப்பட்டேன்.

ரசிகர்கள் சூழ, நீங்கள் கையெழுத்துப்பொடும் காட்சியை நான் உடனே உடனே போட்டோ எடுக்கவில்லை என்று அ.மு ஐயாவிற்கு கோபம்எங்கள் அன்புச் சண்டையும் சவால்களூம், நீங்கள் மேலும் மேலும் கையெழுத்துக்கள் போடத்  தொடரும். ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் கையெழுத்துப்போட்ட உங்கள் கை, ஆயிரக்கணக்கில் கையெழுத்துப்போட தயாராகட்டும்.

அன்புடன்,

சௌந்தர்

முந்தைய கட்டுரைஒரு தந்தையானையும் குட்டியானையும்
அடுத்த கட்டுரைஒரு தொடக்கம்