மூர்க்கரோடு முயல்வோன்

அன்புள்ள ஜெ

ஒவ்வொரு முறை உங்கள் கட்டுரைகளை வாசிக்கையிலும் உங்களுக்கு வரும் மேலோட்டமான எதிர்க்குரல்கள், கருத்துத் திரிப்புகள் எரிச்சலை அளிக்கின்றன.  உங்கள் கட்டுரைகளைப் பற்றி தொடர்ந்து சிந்திப்பதையே இவை குலைத்துவிடுகின்றன. நீங்கள் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் வாசகர்களுக்குச் சிக்கல் இருக்கிறது. சனாதனம் பற்றிய கட்டுரைக்கு வந்த ஆங்கில எதிர்க்குரல்களை கவனித்தீர்களா?

ஶ்ரீனிவாஸ்

சனாதனம் சனாதன எதிர்ப்பு

Conflating Hinduism with Vedic religion is a dangerous distortion 

அன்புள்ள ஶ்ரீனிவாஸ்,

கவனத்துக்கு வரும், ஆனால் பெரும்பாலும் வாசிக்க மாட்டேன். என்ன உள்ளடக்கம் என்று மட்டும் கேட்டு தெரிந்துகொள்வேன். வாசிக்கத்தக்கது என என் நண்பர் எவரேனும் சொல்லவேண்டும். அவ்வாறு நிகழ்வது மிக அரிது.

ஏனென்றால் நம் சூழலில் அரசியல்தரப்புகளே உள்ளன. ஒற்றை வரிகளை பிடுங்கி இஷ்டப்படி பொருள் கொள்வது, மொத்தக் கருத்தையே வசதிப்படி திருப்பிக்கொண்டு விவாதிப்பது இரண்டும் அரசியல்தரப்பின் வழிமுறைகள். அவர்களிடம் நாம் பேசவே முடியாது. முன்பு பேசமுயன்றேன். இன்று அது மாபெரும் வெட்டிவேலை என நினைக்கிறேன். அதில் எந்த பயனும் இல்லை. தெரிந்தே ஆடும் விளையாட்டு. அரசியல்தரப்பினருக்கு அதில் அரசியல்பொருளியல் லாபம் உள்ளது.நமக்கென்ன?

தமிழகத்தில்ஒரு வைதிக எதிர்ப்புத்தரப்பு எப்போதுமே இருந்து வந்துள்ளது, சைவத்தின் 12 தரப்புகளில்  சிலதரப்புகள் அவைதிக தத்துவ அடிப்படை கொண்டவை. அவை முக்கியமான தரப்புகள். ஆகவே இந்துமதமே வைதிகம்தான் என்று கொள்வது\, வைதிகத்தின் மீதான தத்துவார்த்தமான எதிர்ப்பை இந்துமத எதிர்ப்பாக திரிப்பது  இரண்டுமே அடிப்படையில் இந்துமதத்துக்குள் நிகழ்ந்துவரும் பல நூற்றாண்டுக்கால தத்துவ விவாதத்தை இல்லாமலாக்குவதாகவே முடியும். அது இந்து மதத்தை அழிப்பதே ஆகும். இதுவே நான் சொன்னது. மிகத்தெளிவாக, மிக மிக விரிவாக. 

இந்தத் தெளிவான தரப்பு  எப்படியெல்லாம் திரிக்கப்படுகிறது என்று பாருங்கள். தமிழகமே வைதிகத்திற்கு எதிரானதாக இருந்தது என்று நான் சொல்வதாகத் திரித்துக்கொள்கிறார்கள் , அதன்பின் பழந்தமிழ் நூல்களிலுள்ள வேத ஆதரவு வரிகளை எடுத்துப் பரப்புகிறார்கள். சைவம் வேதங்களுக்கு எதிரானது என்று நான் சொல்வதாக திரித்துக்கொள்கிறார்கள், அதன்பின் பதில்சொல்வதாக  சைவஞானியர் வேதம் பற்றிச் சொன்ன வரிகளை கொட்டுகிறார்கள். எளிய வாசகரை குழப்பி வெல்வது மட்டுமே இதன் உத்தி.  

நான் என்னை வைதிக எதிர்ப்பாளன் என்றுகூட சொல்லவில்லை. வைதிகத்தை மறுப்பதல்ல என் தரப்பு, அதனுடன் விவாதித்து முன்செல்வது. நான் வேதங்களை என்றுமே போற்றி எழுதுபவன். பற்பல பக்கங்கள் எழுதிக் குவித்துள்ளேன். ஆனால் அவற்றை அழியாத கடவுளின் சொல் என்றோ ,சனாதனம் என்றோ நான் அணுகுவதில்லை. மாறாக இந்திய மெய்ஞானத்தின் ஊற்றுமுகம், அது உருவாகிவந்த விளைநிலம் என எண்ணுகிறேன். வைதிகம் என்பது வேதங்களை மறுக்கக்கூடாத, மறுக்க முடியாத நூல்களாக எண்ணுவதும் அதை அறிவார்ந்து அணுகாமல் சடங்குசார்ந்து அணுகுவதும்தான். அவற்றை அறிவார்ந்து அணுகி, விவாதித்து, உணர்ந்து முன்செல்வது வேதாந்தம். இதை அக்கட்டுரையிலேயே மிகத்தெளிவாக விளக்கியுள்ளேன்.

வைதிகத் தரப்பு இருக்கலாகாது என்றோ, பிழையானது என்றோகூட நான் சொல்லவில்லை. அதற்கு இந்திய சிந்தனையில் முக்கியமான இடமுண்டு என்றே என்றும் சொல்லிவருகிறேன். அது மொழியியலில் பல சாதனைகள் செய்தது. மூலநூல்களை பேணியதும், பல அடிப்படை உருவகங்களை அழியாது காத்ததும் அதுவே. ஆனால் அது மறுக்கப்பட்டும் வந்துள்ளது. அப்படி மறுக்கும் தரப்புகள் என்றும் இருக்கவேண்டும்.  இந்துமதமும் வைதிகமும் ஒன்றே என ஆக்க முயல்பவர்கள் மற்ற தரப்புகளை அழிப்பவர்கள்.  அது இந்து மதத்தின் அழிவு.இதுவே நான் சொல்வது.

ஆனால் என்னை வேதவிரோதி என்றும் ஆகவே இந்து விரோதி என்றும் முத்திரை குத்தியே இவர்களால் பேசமுடிகிறது.இந்த திரிக்கும் புத்தி, இந்த வன்முறைப் போக்குதான் மிகமிகமிக ஆபத்தானது. அறிவுடையோர் மிகுந்த  எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது. எல்லா மத அடிப்படைவாதமும் இந்தப்போக்கின் விளைவே. இது உருவான எச்சூழலிலும் சிந்தனை என்பதே காலப்போக்கில் அழிந்துவிடும். முப்பதாண்டுகளாக இதை திரும்பத் திரும்ப எழுதி வருகிறேன். என் இணையப்பக்கத்திலேயே நூறுக்கும் மேல் கட்டுரைகள் உள்ளன. 

அடிப்படைவாதம் எங்கும் உள்ளது. இன்னொரு பக்கம் பாருங்கள். ராஜாஜி எனக்கு ஏற்புடையவர் அல்ல. அவர் ஜனநாயகவாதி அல்ல என்பது என் எண்ணம். அவருடைய இலக்கியப்பார்வை ஏமாற்றம் அளிப்பது. அவருடைய அரசியல் ஒருவகை அதிகாரச் சதிவேலை. இந்தியா முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க அரசியல்வாதி அல்ல அவர். அதேசமயம் அவர் சோஷலிசப் பொருளியல்க் கொள்கை மேல் முன்வைத்த ஐயங்கள் அழுத்தமானவை. சரி என பின்னர் நிரூபணமானவை. இவற்றை பல கட்டுரைகளில் எழுதியுள்ளேன்.

ராஜாஜி குலக்கல்வியை கொண்டுவரவில்லை. அப்படி அவர் சொல்லவில்லை. அவர் உருவாக்கியது ஒரு ‘ஷிப்ட்’ முறை. அது அவர் கல்விநிலையங்களின் எண்ணிக்கையை பெருக்கமுடியாத சூழலில், கூடுதல் குழந்தைகள் கல்விகற்க அவர் கண்டடைந்த வழி. அவர் குழந்தைகள் குலத்தொழிலை செய்தால்போதும் என நினைத்திருந்தால் கல்விநிலையங்களையே நடத்தியிருக்கவேண்டாம். அவர் என்றுமே கல்வியை வலியுறுத்தியவர்.  

அவருடைய ஒரு சொல்லை திரித்து அத்திட்டத்துக்கு  எதிர்க்கட்சிகள் அதற்கு இட்ட வசைப்பெயர் குலக்கல்வி என்பது. ஷிப்ட் முறை ஆசிரியர்களை கூடுதல் வேலைவாங்குவதாகையால் அந்த வசை புகழ்பெற்றது. அது அன்றைய எதிர்க்கட்சி அரசியல். ஆனால் ஒருவரின் திட்டத்தை அவரை எதிர்த்தவர்கள் இட்ட பெயரால் வரலாற்றில் சுட்டுவது மோசடி. இதுவே நான் சொன்னது. ஆனால் நான் குலக்கல்வியை ஆதரிப்பதாக நான்கு வரிகளை பிய்த்து எடுத்து  பிரச்சாரம் செய்கிறார்கள்.

நான் இந்த மூர்க்கர்களிடம் தனிமனிதனாக போரிட முடியாது. அவர்கள் எதையும் வாசிப்பவர்களோ கவனிப்பவர்களோ அல்ல. இவை எல்லாமே அடிப்படைவாதம்தான்.

நான் வாசிப்பவர்களான, சிந்தனையின் சிக்கலான பரப்பை புரிந்துகொள்ள கொஞ்சமேனும் முயல்பவர்களான, சிலரிடமே பேசிக்கொண்டிருக்கிறேன். ஆம், அவர்கள் இருக்கிறார்கள்.

ஜெ 

முந்தைய கட்டுரைதூ.சு.கந்தசாமி முதலியார்
அடுத்த கட்டுரைஆலம் – கடிதங்கள்