ஓர் அமெரிக்கக் கனவு

அமெரிக்கா வந்து இருபத்தைந்து நாட்களாகின்றன. சென்ற ஆண்டும் ஒரு மாதம் இங்கிருந்தேன். மொத்தமாக அமெரிக்காவில் நான் இருந்த நாட்கள் இப்போதைய கணக்கின்படி நான்கு மாதங்களுக்கு மேல் வரும் என நினைக்கிறேன். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்களுக்குச் சென்றுவிட்டேன். அமெரிக்கா இரண்டாவது ஊர் எனவே ஆகிவிட்டிருக்கிறது.

அமெரிக்காவின் பெருநிலம் வழியாகச் சென்றுகொண்டே இருப்பதுதான் ஒவ்வொரு முறை நான் அமெரிக்கா கிளம்பும்போதும் இருக்கும் கனவு. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பருவம். சென்றமுறை கோடையின் தொடக்கம் – மே மாதம். அதற்கு முன் இலையுதிர்காலம். இலையுதிர்வைக் காண்பதற்கென்றே வந்து வைட்மௌண்டேன் பகுதிக்குச் சென்றோம். இம்முறையும் இலையுதிர்காலம். அருண்மொழி மரங்கள் தீத்தழல்களாக ஆகும் அமெரிக்க இலையுதிர்காலத்தைக் காண விரும்பினாள்.

கூடவே நிகழ்ச்சிகள். இங்கே பெரும்பாலும் எளிதாக, ஓய்வாக இருக்கவே விரும்புவேன். ஆனாலும் சந்திப்புகள் அமைந்துவிடும். பூன் முகாம், சியாட்டில் சந்திப்பு , டொரெண்டோ சந்திப்பு ஆகியவையே முன்னர் திட்டமிடப்பட்டவை. நண்பர் ரெமிதா (ராலே) இல்லத்தில் ஒரு சந்திப்பு,  நண்பர் சுஜாதா (சியாட்டில்) இல்லத்தில் ஒரு சந்திப்பு, நண்பர்  ஶ்ரீகாந்த் (போர்ட்லன்ட்) இல்லத்தில் ஒரு சந்திப்பு ஆகியவை இயல்பாக நிகழ்ந்தவை

ரெமிதா இல்லச் சந்திப்பு பெரும்பாலும் மலையாள வாசகர்களால் ஆனது. எங்கும் நட்புச்சுற்றம் வழியாகவே வந்துசேரும் இலக்கிய வாசகர்கள் இருந்தார்கள். தீவிரமான இலக்கிய விவாதங்களும் நிகழ்ந்தன.ரெமிதா நாகர்கோயிலைச் சேர்ந்தவர். தமிழ் மலையாளம் அறிந்தவர். இலக்கிய வாசகர், எழுத்தாளர், கவிஞர். ரெமிதா மொழியாக்கத்தில் என் கதைகள் அமெரிக்க பதிப்பகம் வழியாக வரவிருக்கின்றன

சியாட்டில் உரையை நண்பர் சங்கர் பிரதாப் ஏற்பாடு செய்திருந்தார். இந்திய தத்துவ இயல் பற்றிய அறிமுகம். ‘மூன்று அறிதல் முறைகள்’ அங்கே என் பணி கலவையான கேள்வியாளர்களுக்கு இந்திய தத்துவத்தின் சில அடிப்படைகளை அறிமுகம் செய்வது. இந்திய தத்துவத்தை கற்கும் முறை, இந்திய தத்துவத்தின் அடிப்படை உசாவல்கள் ஆகியவற்றைச் சொல்ல முயன்றேன். கூடுமானவரை சுவாரசியமாக. தத்துவத்திலேயே ஒரு சுவாரசியம் உண்டு, வேடிக்கை உண்டு, அவற்றை மட்டுமே முன்வைக்க முயன்ற உரை அது. அரங்கத்தின் அமைப்பும் ஒலியமைப்பும் மிகச்சிறப்பானவை. உரை அனைவருக்கும் பிடித்திருந்தது என்றனர். சியாட்டிலில் நண்பர் சுஜாதா இல்லத்தில் இன்னொரு நண்பர் சந்திப்பு. பெரும்பாலும் தத்துவம் சார்ந்தே உரையாடினோம்.

போர்ட்லண்ட் நித்ய சைதன்ய யதி பணியாற்றிய பல்கலைக் கழகம். நான் முதல்முறையாக வருகிறேன். அவர் தங்கியிருந்த இல்லத்தைப் பார்த்தபோது ஒரு நிறைவை அடைந்தேன். நித்யாவின் மாணவரான ஸ்காட் அங்கே நித்யா குருகுலத்தை தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். அவர் ஶ்ரீகாந்த் இல்லத்தில் நடந்த சந்திப்புக்கு வந்திருந்தார். ஶ்ரீகாந்தின் இரு மகன்களும் வீணைக்கலைஞர்கள். அவர் புல்லாங்குழல் கலைஞர், அவர் மனைவி பாடகி. மறுநாள் ஒரு சிறு இசைநிகழ்வும் இருந்தது.

நண்பர் மகேந்திரராஜன் வான்கூவரில் ஒரு கம்யூனிட்டிஹால் ஏற்பாடு செய்து முறையான சந்திப்பாக ஆக்கியிருந்தார். முன்னர் திட்டமிடவில்லை. இணையத்தில் அறிவித்தோம். நிறைய வாசகர்கள் வெளியூரில் இருந்தும் வந்திருந்தார்கள். அது ஒரு கேள்வி பதில் நிகழ்வு. இலக்கியம், மதம், பண்பாடு பற்றிய கேள்விகள் மட்டும்தான். அவர் இல்லத்திலும் மேலும் வாசகநண்பர்கள் வந்திருந்தனர். அந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற்றது.

சியாட்டிலில் இருந்து போர்ட்லண்டுக்கு கார்ப்பயணம். அங்கிருந்து மீண்டும் சியாட்டில் வழியாக வான்கூவர் வரை கார்ப்பயணம். இலையுதிர்வு தொடங்கிய மேற்கு அமெரிக்கக் காடுகள் வழியாக நீண்டு எழுந்து அமைந்து செல்லும் மலைப்பாதையில் செல்வதென்பது ஒரு கனவுப்பயணம். குளிர்ந்த நகரங்களை அலைகளால் தட்டிக்கொண்டிருந்த கரிய கடல். கடற்பறவைகளின் ஓசைகள். எப்போதுமே அமெரிக்க நகரங்களின் மையப்பகுதிகள், டவுன்டவுன்கள் கேளிக்கையை முதன்மையாக்கியவை. உணவகங்களே மிகுதி. அங்கு தென்படும் எல்லா முகங்களிலும் கொண்டாட்டம் தெரியும். அங்கே அலைந்து திரிவது ஒரு பயணியின் கொண்டாட்டம். ஒவ்வொரு நகரிலும் பார்த்தவற்றைப் பற்றித் தனியாகவே எழுதிக்கொள்ளவேண்டும் – எனக்காக.

செல்வமும் அ.முத்துலிங்கமும்

டொரெண்டோவில் இரு நிகழ்வுகள். ராஜன் சோமசுந்தரம், ஆஸ்டின் சௌந்தர், ராதா  ,பழனிஜோதி மகேஸ்வரி ,வெங்கடப்பிரசாத் என நண்பர்கள் வந்து ஒரு வாடகைப் பங்களாவை எடுத்து அங்கே தங்கியிருந்தோம். மிக வசதியான அழகிய பங்களா. முத்துலிங்கமும் முரளியும் முன்னரே சென்று அது வசதியானதா என்று உறுதிசெய்துகொண்டனர் என்று அறிந்தேன். முத்துலிங்கம் மிக இளமையிலேயே உயர்நிர்வாகியாக ஆகி, அப்படியே பணியாற்றி உச்சநிலைகளில் இருந்து ஓய்வுபெற்றவர். மிகச்சிறந்த நிர்வாகி. (ஆனால் ஒரு சாதாரண ஊழியனாக வாழ்ந்த எனக்கு அவரை அப்படிப் பார்க்கையில் ஒரு நடுக்கம். நல்லவேளை நான் இவர் கீழே வேலைபார்க்கவில்லை என நினைத்துக்கொண்டேன்)

அ.முத்துலிங்கத்தையும் காலம் செல்வத்தையும் நீல்கிரீஸ் என்னும் உணவகத்தில் காலை சந்தித்தோம். முத்துலிங்கத்தைச் சந்திப்பது பற்றி எனக்கொரு கிளர்ச்சி இருந்துகொண்டே இருந்தது. நாங்கள் நேரில் சந்தித்து பல ஆண்டுகளாகிறது – எனக்கு இயல்விருது அளிக்கப்பட்டபோது. ஆனால் நேரில் சந்தித்தபோது என்னென்னவோ உணர்வுகள். நான் அவரை அடிக்கடிச் சந்தித்துக்கொண்டே இருப்பதுபோல. அவருடைய தோற்றம், பேச்சு எதுவுமே புதியதாக இல்லை. மானசீகமாக அவருடனேயே இருக்கிறேன் என உணர்ந்தேன்.

இந்த உணர்வு அறிவியக்கத்தில், கலையில் எப்போதுமே முக்கியமானது. பிற எல்லா தளங்களிலும் முந்தைய தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரிடமிருந்து விலகிச் செல்கின்றனர். பெற்றோர் கூட பிள்ளைகளிடமிருந்து விலகியே ஆகவேண்டும். அது இயற்கைநெறி. ஆனால் கலை, அறிவுத்தளங்களில் நம் உள்ளம் முந்தைய தலைமுறையினரிடம் மிகுந்த தீவிரத்துடன் இணைகிறது. அவர்களையே எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவர்கள்மேல் பெருங்காதல் கொண்டிருக்கிறோம். அவர்களை பெரும் பரவசத்துடன் தியானிக்கிறோம். ஏனென்றால் அதுவும் இயற்கைநெறியே. கலையிலக்கியம் வழியாகவே தலைமுறைகளின் தொடர்ச்சி நிகழ்கிறது. தனித்தனி நபர்களால் இயற்றப்பட்டாலும் கலையிலக்கியம் என்பது ஒரே ஒழுக்குதான். அதில்தான் நானும் அ.முத்துலிங்கமும், ஷேக்ஸ்பியரும், கம்பனும் எல்லாம் இருக்கிறோம்.

அ.முத்துலிங்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். கண்களையே எடுக்க முடியவில்லை. அவர் தலைசீவியிருந்த விதம்கூட நன்கு தெரிந்ததாக இருந்தது. அவருடைய சிரிப்பு மிகமிக தெரிந்ததாக இருந்தது. நாகர்கோயிலில் பார்வதிபுரத்தில் இருந்து வடிவீஸ்வரம் சென்று அவரைச் சந்தித்ததுபோல. அத்துடன் 2001ல் அவரை முதலில் சந்தித்த நினைவுகள். ஆனால் அவையும்கூட மிகமிக அண்மையில், சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்ததுபோல இருந்தன. அந்த பிரமையில் இருந்து வெளியேற முடியவே இல்லை. ஆனால் டொரெண்டோவில் இருந்து கிளம்பும்போது சட்டென்று அவரை எண்ணி ஓர் ஏக்கம் உருவானது. உடனே அடுத்த ஆண்டே திரும்ப வரவேண்டும் என்னும் எண்ணமும்.

கனடா இலக்கியத் தோட்டம் ஒருங்கிணைத்த உரை அக்டோபர் 21 ஆம் தேதி. டொரெண்டோவில் உரைக்கு கட்டணம் வைத்தது இதுவே முதல்முறை என்றனர். டொரெண்டோ மாநகராட்சிக் கூட்டம் நடைபெறும் சிட்டி கௌன்ஸில் சேம்பர்ஸ் அரங்கம். மிகச்சிறந்த ஒலி- ஒளி அமைப்பு, இருக்கையமைப்பு. அரங்கு நிறைந்திருந்தது. மேடையில் எழுந்து நின்றபோது ஒரு கலவையான புலம்பெயர்ந்த தமிழ்ச்சூழலை பார்க்கும் உணர்வு உருவானது.

நான் ஒருமணிநேரம் பேசினேன். அரைமணிநேரம் கேள்விகள். உரை இயல்பாக, உற்சாகமாக ஒரு பண்பாட்டுச் சித்திரத்தை முன்வைப்பதாக இருந்தது. என் உரைகள் கேட்பவர் எழுந்துசெல்லும்போது கொஞ்சம் குழம்பி, கொஞ்சம் ‘சரிதானே’ என எண்ணி, கொஞ்சம் ‘அப்படி இருக்குமா’ என ஐயுற்று தனக்குள் உசாவிக்கொள்ளும்படி அமையவேண்டும் என எண்ணுவேன். நான் முன்வைப்பது என் அறுதியான கருத்தை அல்ல, என் சிந்தனையின் ஓட்டங்களை. நான் அழைப்பது என்னுடன் இணைந்து சிந்திக்க.

விற்பனைக்கு வைக்கப்பட்ட எல்லா நூல்களுமே விற்றுத்தீர்ந்தன என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்கள்.  நீண்ட வரிசையில் நின்று நூல்களை வாங்கி, கையொப்பம் பெற்றுக்கொண்டார்கள். அதுவும் ஓர் அரிய காட்சி என்று அ.முத்துலிங்கம் சொன்னார். தேவகாந்தனைப் பார்த்தேன். துணைவியின் மறைவு அவரை கொஞ்சம் சோர்வுறச் செய்திருந்தது. அவருடைய கனவுச்சிறை நாவல் தனிநாவல்களாக ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருக்கிறது.

இளங்கோ (டி.செ.தமிழன்) வந்திருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பின் மைக்கேலை (மான்ட்ரியல்) பார்த்தேன். தீவிரமாக எழுத தொடங்கி பின் நின்றுவிட்ட நண்பர்களில் ஒருவர் அவர். 2001ல் மான்ட்ரியல் சென்று அவர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன். சிவதாசன் (யாழ்நூலை பதிப்பித்தவர்) வ.ந.கிரிதரன் (பதிவுகள் இணையதளம்) ஆகியோரைச் சந்தித்தேன்.நண்பர் சுமதி ரூபன் வருவார் என எதிர்பார்த்தேன். அவர் நகருக்கு வெளியே சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அன்று மாலை வழக்கறிஞர் மனுவேல் ஜேசுதாசன்  வீட்டில் ஒரு சந்திப்பு.

மறுநாள் , அக்டோபர் 22 அன்று டொரெண்டோவில் அதர் ஸ்டோரீஸ் என்னும் புத்தகக் கடையில்  அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True ஒரு சந்திப்பு. அந்தக்கடையின் வாடிக்கையாளர்களை உத்தேசித்தது. கனடிய எழுத்தாளர் நேட்ரா ரோட்ரிகோ ஒருங்கிணைத்தார். அறுபதுபேர் வரை வந்திருந்தனர். சிற்றரங்கம் நிறைந்த கூட்டம்.

கவிஞர் சேரன், நண்பர் வெங்கட்ரமணனின் மகன் வருண், கனடிய எழுத்தாளர் கூம் ஆகியோர் தொகுப்பு பற்றிப் பேசினர். நான் ஒருமணி நேரம் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். என் உரையாடல் மிகச்சிறப்பாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள். அ.முத்துலிங்கமும் டிவிட்டரில் சொல்லியிருந்தார்.

எனக்கு தமிழன்றி எந்த மொழியிலும் பேசுவது கடினம். ஆனால் இன்று தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருக்கிறேன். இலக்கியவிழாக்களில் வேறுவழியில்லை. இதுவரை எல்லா உரையாடல்களும் மிகச்சிறப்பாக அமைந்திருப்பதாகவே சொல்லப்படுகிறது — நாளிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதியுள்ளனர். ஆனால் எனக்கு இப்போதும் உதறல்தான். ஒருவழியாக சந்திப்பு முடிந்ததும் நீள்மூச்சு விட்டேன். உடனே இனி நவம்பர் 15 ஷில்லாங் விழாவில் பேசவேண்டுமே என்னும் படபடப்பு வந்துவிட்டது.

என்ன சிக்கலென்றால் நான் தமிழில் யோசித்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து பேசுகிறேன். ஒரு மொழியிலேயே சிந்தித்தால், அந்த மொழிச் சொற்றொடர்களை அப்படியே சொற்றொடர்களாக எடுத்துப் பயன்படுத்தினால் மட்டுமே இயல்பாக அமையும். அகமொழியாக்கம் என்றால் சொற்றொடர்களில் மூலமொழியின் தன்மை வந்துவிடும். அது பிழையான சொற்தேர்வு, சிறு சிறு இலக்கணச்சிக்கல்கள என நிகழும். எங்காவது சிக்கிக்கொண்டால் அவ்வளவுதான், மொத்தமும் குழம்பிவிடும்.

நான் 30 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் தொடங்கியவன். சுந்தர ராமசாமி, ஆற்றூர் இருவரும் என்னிடம் அதை தவிர்க்கும்படிச் சொன்னார்கள். தமிழின் அக ஒலியிசைவை இழந்துவிடுவேன் என்றனர்.  பிரிட்டிஷ் கௌன்ஸிலில் ஒரு சிறு உரைக்குப்பின் அசோகமித்திரனும் அதைச் சொன்னார். ஆற்றூருன் நித்யாவும் மலையாளத்தில் எழுதுவதையும் பேசுவதையும் தவிர்க்கும்படிச் சொன்னார்கள்.

நீ கிளாஸிஸத்தை இலக்கிய அழகியலாகக் கொண்டவன். அது ஒரு மொழியின் ஒலியையே பிற அனைத்தையும் விட முதன்மையாகக் கருதுவது. செவ்வியல் எழுத்தாளன் ஒரு மொழியின் பகுதி. அந்நிலத்திலுள்ள மலைகளைப் போலஎன்றார் நித்யா. நான் அதன்பின் மலையாளத்தையே தவிர்த்துவிட்டேன். இன்றும், தமிழில் எனக்கிருக்கும் வரவேற்பு, அங்கீகாரத்தை விட பலமடங்கு மலையாளத்தில் உண்டு என்றாலும். ஆனால் இது எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய நெறி அல்ல என்றே சொல்வேன்.

சேரன் , கிம் எக்ளின்

ஆனால் இந்தியாவில் , குறிப்பாக டெல்லியில் எல்லாம் உள்ள ஒரு பாவனை அமெரிக்காவிலோ கனடாவிலோ தேவையில்லை. இங்கே ஆங்கிலமே அறிவுத்தகுதியாக கருதப்ப்படுகிறது. கருத்தைவிட உச்சரிப்பும், வேகமுமே மதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுபவர்கள் பலர் வெள்ளையர் உச்சரிப்பை நகலெடுக்கும் நடிகர்கள், முற்றிலும் உள்ளீடற்ற பேச்சை முன்வைப்பவர்கள். இலக்கியவிழாக்களில் ‘அடித்து ஆடுபவர்கள்’ அவர்களே. அத்தகைய உரைகளில் குவிந்திருக்கும் தேய்வழக்குகள் எனக்கு எப்போதுமே கூச்சத்தையே அளிக்கின்றன.

ஆனால் அமெரிக்காவிலோ கனடாவிலோ நம் உச்சரிப்பும், மொழியும் இன்னொரு நிலத்தைச் சார்ந்தவை என அவர்கள் எண்ணுவதனால் நம்மை அவர்களைப்போல பேசவேண்டுமென எதிர்பார்ப்பதில்லை. நம் எண்ணங்களே முக்கியம். சொல்லப்போனால் அவர்களை நாம் நகலெடுத்தால் ஒவ்வாமை அடைகிறார்கள். ஏனென்றால் நாம் நகலெடுக்கையில் அவர்களின் மோசமான , வெளிப்படையான தேய்வழக்குகளையே நகலெடுக்கிறோம். அத்துடன் இன்னொரு மொழியில் இருந்து ஆங்கிலம் உருவாகி வருகையில் அவர்கள் எண்ணியிராத ஓர் அழகும் அதில் உருவாகிறது. அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது.

ஆங்கிலத்தில் பேசும்போது என்னால் என்னைமீறிய ஒழுக்குடன் பேசமுடிவதில்லை. ஆகவே சுருக்கமான, செறிவான சொற்றொடர்களை உருவாக்க முயல்கிறேன். அசல் கருத்துக்களை தீவிரமாகச் சொல்ல முயல்கிறேன். அதுதான் பலருக்கும் பிடித்திருக்கிறதென நினைக்கிறேன். பல இலக்கிய விழாக்கள் முடிந்தபின் வெளிவந்திருக்கும் நாளிதழ்ச்செய்திகளில் முதன்மையாக என் உரை இடம்பெற்றிருப்பதை காணும்போது இதுதான் காரணம் என தோன்றும். பெரும்பாலானவர்கள் வழக்கமான சொற்றொடர்களைச் சொல்கையில் நான் சொல்வதில் செய்திக்குரிய கருத்துக்கள் ‘பிடி’கள் உள்ளன போலும்.

டொரெண்டோ பேச்சுக்குப்பின் இளைஞர்கள் வந்து ஆர்வமுடன் பேசினர். குறிப்பாக நான்கு வங்கதேச இளம்பெண்கள் அவர்கள் கேட்டவற்றிலேயே சிறந்த இலக்கிய உரையாடல் என்றார்கள். இத்தகைய பக்கவாட்டுத் திறப்புகளை இலக்கிய உரைகளில் அரிதாகவே கேட்டிருக்கிறோம் என்றனர். அவர்கள் டொரெண்டோவில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்களின் பெற்றோர் நாற்பதாண்டுக்காலம் முன்பு, வங்கம் எர்ஷாதின் சர்வாதிகார ஆட்சியில் இருந்தபோது நாடுவிட்டவர்கள். டொரெண்டோ பல்கலையில் இலக்கியம், சமூகவியல் பயில்பவர்கள். வங்க முஸ்லீம்கள், ஆனால் பெயர் உட்பட எதிலும் முஸ்லீம் சாயல் இல்லாமல் வெள்ளையர்களாகவே தெரிந்தனர். அவர்கள் வங்கம் சென்றதே இல்லை. ஆகவே இந்தியா மீது ஆர்வம். என்  Stories Of the True வாசித்திருந்தனர். கீழையியல் பற்றிய கருத்துக்களை விட அங்கிருந்து வரும் மனநிலைகளே எங்களுக்கு முக்கியம் என்று ஒரு பெண் சொன்னார்.

வருண்

இந்த அமெரிக்கப் பயணத்தில் முதல்முறையாக நான் உணர்ந்த ஒன்றுண்டு, முந்தைய பயணங்களுக்கு பின் ஆதங்கமாக சொன்ன ஒன்று இப்போது ஒரு நம்பிக்கையாக ஆகியுள்ளது. இதைப்பற்றி முன்னர் எழுதியுள்ளேன். ( நமது அமெரிக்கக் குழந்தைகள். ஆர்.எஸ்.சகா இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்)

அமெரிக்காவில் பிறந்த தமிழ்க்குழந்தைகள் பெரும்பாலும் முற்றிலும் தமிழ்ச்சாயலே அற்றவர்களாக, தமிழிலக்கியம் பண்பாடு ஆகியவற்றில் ஆர்வமே அற்றவர்களாக, தமிழே பேசாதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் பெற்றோர் , பலசமயம் தாத்தாபாட்டிகள் அதனால் ஓர் ஆதங்கம் அடைகிறார்கள். தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள். திருக்குறள் மனப்பாடம் செய்யவைக்கிறார்கள். வேட்டி கட்டி பொங்கலுக்கு ஆடவைக்கிறார்கள். எல்லாம் அவர்கள் இளைஞர்களாகும் வரைத்தான். அதன்பின் அவர்கள் நேர் எதிராகத் திரும்பிவிடுவார்கள்.

கஸ்தூரி

அமெரிக்காவில் நான் சந்திக்கும் பல தமிழர்கள் இரண்டு வகையில் பேசுபவர்கள். அவர்களின் குழந்தைகள் சிறுவர்கள் என்றால் ஒரு வகை பாமரப்பெருமிதத்துடன் “பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கிறோம் சார். அம்பது திருக்குறள் வரை மனப்பாடமாச் சொல்லுவான்” என்பார்கள்.  இளைஞர்கள் என்றால் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியவில்லை என்பதை ஒருவகையான சங்கடத்துடன் சொல்வார்கள். குறிப்பாகத் தமிழ்ச்சங்கங்களில் இது நிகழும்.

நான் அவர்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லும் ஒன்றுண்டு. உங்கள் குழந்தைகளுக்கு தமிழின் எந்தப்பக்கத்தை அறிமுகம் செய்கிறீர்கள்? அறிமுகம் செய்ய உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் அறிந்த தமிழ்ப்பண்பாடு உங்கள் குழந்தைகளிடம் எந்த மதிப்பையும் உருவாக்கவில்லை என்றால் சிக்கல் எங்குள்ளது? தன் பண்பாடு பற்றி ஓர் அமெரிக்கனிடம் அவனால் பெருமிதமாகச் சொல்லமுடியவில்லை என்றால் நீங்கள் அளிப்பது என்ன?

இந்தியாவில் இன்று தொழிற்கல்வி மட்டுமே உள்ளது. எங்கும் எந்த பண்பாட்டு அறிமுகமும் இல்லை. தொழில்நுட்பம் மட்டுமே கற்று வேலைக்கு வந்துவிட்டவர்கள் நம்மவர். அவர்கள் அறிந்ததெல்லாம் தமிழ் சினிமா, தமிழகத்தின் கட்சியரசியல், முகநூல் சண்டைகள் மட்டுமே. அதையொட்டியே தங்கள் பண்பாட்டுச் சிந்தனைகளை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்மொழியின் மகத்தான இலக்கியவாதிகளைக்கூட அவர்களுக்குத் தெரியாது. தெரிந்தாலும் அவர்களைப் புரிந்துகொள்ளும் நுண்ணுணர்வோ பயிற்சியோ இல்லை. முச்சந்தி அரசியலாளர்கள் இலக்கியவாதிகளையும் அறிஞர்களையும் வசைபாடுவதை மட்டுமே கேட்டு அதை நம்பி சிந்தனையாளர்களாக எண்ணிக்கொண்டு வாழ்பவர்களே நம்மில் பெரும்பாலானவர்கள்.

போலிப்பெருமிதம் மற்றும் சதிக்கோட்பாடுகளைச் சொல்லும் சில்லறை வசைபாடிகளையே அறிஞர் என நம்புபவர்களும் உண்டு. முகநூல் வழியாக உதிரிவரிகளை அறிந்திருப்பார்கள். சாதிப்பெருமிதத்தை, இனவாதத்தை அரசியலாளர் திரித்துச் சொல்வதை கருத்துக்களாக உள்வாங்கியிருப்பார்கள்.   மற்றபடி தமிழ்ப்பண்பாடோ வரலாறோ தெரியாது. தமிழகத்தில் இருந்து ஒயாமல் எழும் கட்சியரசியலின் காழ்ப்புகளையும் சினிமா வம்புகளையும் உண்டு திளைப்பார்கள்.

ஆனால் அமெரிக்காவிலோ கனடாவிலோ அவர்களின் பிள்ளைகள் முதன்மையான கலாச்சாரக் கல்வியை அடைகிறார்கள். அவர்களிடம் இவர்கள் அறிமுகம் செய்வது தமிழகத்தின் மிக மேலோட்டமான, அபத்தமான சினிமாவையும் அங்குள்ள அரசியலையும். இவர்களால் அக்குழந்தைகளிடம் உரையாடவே முடிவதில்லை. இதுதான் உண்மை நிலை. எண்ணிப்பாருங்கள், திண்டுக்கல் லியோனியோ , எஸ்.வி.சேகரோ, கரு.பழனியப்பனோ,  திரைநடிகர்களோ, தொலைக்காட்சி நகைச்சுவையாளர்களோதா உங்கள் பண்பாட்டின் முகம் என்றால் அதை அடுத்த தலைமுறை எப்படி பொருட்படுத்தும்? அவர்களுக்குகு நிகரானவர்களைத்தான் பிற இனத்தவர் தங்கள் பண்பாட்டு முகங்களாக கொண்டுவருகிறார்களா? 

அதைக்கடக்கும் வழி, நீங்கள் கற்பதே. நவீனத்தமிழிலக்கியம் இன்று உலகில் எங்கும் எழுதப்படும் சிறந்த இலக்கியத்துக்கு நிகரானது. நீங்கள் கற்றால் உங்களிடமிருந்து இயல்பாக அடுத்த தலைமுறைக்குச் செல்லும். தமிழின் மரபை மட்டும் நவீனத்தலைமுறைக்குக் கையளிக்க முடியாது, அதன் நவீன வடிவையே கையளிக்க முடியும். இதைச் சொன்னால் நம்மில் மிகப்பெரும்பாலானவர்களின் தன்முனைப்பும், காழ்ப்புகளும் அதைப் புரிந்துகொள்ளத் தடையாக உள்ளன.

தமிழகத்தின் அரசியலாளர்களும் இங்குள்ளவர்களை சிந்திக்கவே விடாமல் அங்குள்ள காழ்ப்புகளை ஏற்றுமதி செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். நம் திராவிட – இந்துத்துவக்   கட்சிகளின் இணைய அணி மிகமிகப்பெரியது. ஒரு கணமும் ஓயாமல் முழங்கி நம் மண்டையை நிரப்புவது. எதையும் தங்கள் தரப்பு அல்லது எதிர்த்தரப்பு என பிரித்துக்கொள்வார்கள். வசைபாடுவார்கள், திரிப்பார்கள், ஏளனம் செய்வார்கள், சலிக்காமல் கூவுவார்கள். அது அவர்களின் அதிகார அரசியல். அந்தச் செல்வாக்கை கடந்து சிந்திப்பதென்பது இன்று மிகப்பெரிய சவால்.ஆனால் அதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

தமிழகத்தின் திராவிட அரசியல், இந்தியாவின் இந்துத்துவ அரசியல் இரண்டிலிருந்தும் முழுமையாக விலகிக்கொள்ளுங்கள் என்றே அமெரிக்கத் தமிழர்களிடம் சொல்கிறேன். நீங்கள் அங்குள்ள கருத்தியலில், அரசியலில் செய்ய ஒன்றுமில்லை. உங்கள் தலைமுறைகளை கவனியுங்கள். அதற்கு நம் மெய்யான வெற்றிகளை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். அவற்றை முன்வையுங்கள். அவற்றுக்காக நிலைகொள்ளுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு அளியுங்கள்

அடுத்த தலைமுறையில் அனைவரும் உடனே வந்துவிடமாட்டார்கள், பெரும்பாலானவர்கள் தொழில் – நுகர்வு இரண்டுக்குமே செல்வார்கள். ஆனால் சிறந்த உள்ளங்கள் வந்துசேரும். அது மிகப்பெரும் வெற்றியென அமையும். அதுவே யூதர்களால், ஜப்பானியரால், துருக்கியரால் இங்கே சாதிக்கப்பட்டது. நைஜீரியர்களும் கொரியர்களும் இங்கே சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவே ஒரே வழி. கொஞ்சமேனும் அவர்களை கவனியுங்கள். ஓர் ஆண்டில் இங்கே எத்தனை துருக்கிய, கொரிய, ஜப்பானிய நவீன இலக்கிய விழாக்கள் நிகழ்கின்றன என்றாவது கவனியுங்கள். அவற்றில் எவரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்று பாருங்கள்.

நான் கடுமையாக, சிலசமயம் எரிச்சலுடன், சிலசமயம் சீற்றத்துடன் முன்வைத்தவை இந்தக் கருத்துக்கள். பொதுவாக நம்பிக்கையிழந்தும் இருந்தேன். ஆனால் இம்முறை பெரும் நம்பிக்கையை அடைந்தேன். எல்லா இடங்களிலும் நான் சந்தித்தவர்கள் இளையதலைமுறையினர். இங்கே பிறந்து வளர்ந்து, இங்குள்ள மிகச்சிறந்த கல்வியை அடைந்தவர்கள்.  தமிழிலக்கியத்தை ஆங்கிலம் வழியாகப் படிக்கிறார்கள்.

Stories of the True மிகப்பெரும்பாலானவர்களிடம் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியிருப்பது எனக்கே திகைப்பூட்டுவது. இது நிகழுமென நான் அறிவேன், ஆனால் இத்தனை தீவிரமாக நிகழுமென எண்ணியிருக்கவே இல்லை. ஒரே ஒரு நல்ல மொழியாக்கத்துக்கே இத்தகைய அபாரமான ஆற்றல் இருக்கிறது எனும்போது இத்தனைநாள் நாம் செய்துகொண்டிருந்ததுதான் என்ன? பலகோடி ரூபாய் செலவில் தமிழ்விழா என்னும் பேரில்  இங்கே குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களின் பங்களிப்புதான் என்ன?

ஆர்.எஸ்.சஹா தன் தாத்தா வரதப்பனுடன்

இம்முறை நான் நிகழ்த்திய மிகச்சிறந்த உரையாடல்கள் எல்லாமே இங்கே பிறந்து வளர்ந்தவர்களுடன்தான். ஆஸ்டின் சௌந்தரின் மகன் ஆர்.எஸ்.சஹா ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கும் எழுத்தாளர். அபாரமான அழகியலுணர்வு கொண்டவர், மிகச்சிறந்த இலக்கிய அறிமுகம் இங்கே அவருக்குக் கிடைத்துள்ளது. தன் பெற்றோரை தமிழ் வாசிக்கவைத்து கேட்டு கி.ராஜநாராயணன் உட்பட தமிழிலக்கியங்களில் பலவற்றை வாசித்துள்ளார். எதிர்காலத்தில் நாம் பெருமைகொள்ளும் படைப்பாளிகளில் ஒருவர். அவர் இந்திய இதழ்களிலும் எழுதவேண்டும் என்பது என் விருப்பம். அவருடைய நடையில் இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதுவோர் குறைவு. இந்திய நிலத்தில், இந்தியப் பண்பாட்டில் காலூன்றி எழுதும் அமெரிக்க எழுத்தாளராக அவர் ஆகவேண்டும்.

நண்பர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் மிகத்தீவிரமான இளம் வாசகர்களைக் கண்டேன், 18 வயதுக்கு உட்பட்டவர்கள். தீவிரமான விவாதங்கள் நிகழ்ந்தன. உண்மையில் இந்த வருகையில் நான் பல அடிப்படை அழகியல் – பண்பாட்டுச் சிக்கல்களை விவாதித்ததே சிறுவர்கள் எனத்தக்க இந்த வாசகர்களிடம்தான். பல கேள்விகள் சுவாரசியமானவை. ஒரு கேள்வி, ஓர் இலக்கியப்படைப்பு சற்று பின்தங்கிய ஓர் அற மதிப்பீட்டை கொண்டிருக்கிறது, ஆனால் நுண்ணிய வாழ்க்கைச் சித்திரமும் உள்ளது என்றால் அதன் இலக்கிய மதிப்பு என்ன? அதை இன்னும் முற்போக்கான அறம்கொண்ட சமூகம் ஏன் மொழியாக்கம் செய்துகொள்ளவேண்டும்? ஒரு நைஜீரியநாவலை முன்வைத்து ஒரு சிறுமி கேட்ட வினா இது.  மேலும் மேலும் அவர்களிடம் உரையாடவேண்டும் என்னும் பெருவிழைவு உருவாகிறது.

இது ஒரு தொடக்கம் என்றால் இதைப்போல மகத்தான ஒன்றில்லை. இன்னும் அறியப்படாத எத்தனையோ இளைஞர்கள் இருக்கலாம். தங்கள் பெற்றோர் முன்வைக்கும் அசட்டுத்தனங்களால் சலிப்புற்று தமிழ்மேலேயே ஒவ்வாமை கொண்டவர்கள். அவர்களைச் சென்றடையவேண்டும். அவர்களிடம் உரையாடவேண்டும். டொரெண்டோவில் வங்காளதேசத்து இளைஞர்களுடன் பேசியபோதே அந்த உள எழுச்சி உருவானது. மிகப்பெரிய ஒரு கனவும்.

முந்தைய கட்டுரை மு.முத்துசீனிவாசன்
அடுத்த கட்டுரைதிருவருட்செல்வியும் யோவானும்