நாலாயிரம், கடிதம்

நாலாயிர திவ்ய பிரபந்த வகுப்பில் கலந்து கொண்டது ஒரு நல்லூழ். இவ்வகுப்பின் சிறப்பம்சம் ஜாஜா வகுத்திருந்த பாடத்திட்டம் மற்றும் அதை வழங்கிய விதம்.

திவ்ய பிரபந்த பாடல்களுக்கு செல்லும் முன், எங்களுக்கு பக்தி இயக்கத்தை பற்றிய ஒரு அறிமுகம், அதன் இயல்முறைகள், அதன் கட்டமைப்பு, மற்றும் அதற்கும் சங்க இலக்கியத்திற்குமான ஒப்பீடு என ஒரு விரிவான தொடக்கத்தை கொடுத்து திவ்ய பிரபந்த பாடல்களை உள்வாங்குவதற்க்கு சரியான பாதையை ஜாஜா அமைத்து இருந்தார்.

முதல் இரண்டு அமர்வுகளில் எளிதான (!) பாடல்களை தேர்ந்தெடுத்து அதன் சாரங்களை கருத்துகளை நுணுக்கங்களுடன் விளக்கம் கொடுத்து ஜாஜா எங்களை திவ்ய பிரபந்த்திற்குள் அழைத்து சென்றார். பாடல்கள் எவ்வாறு கவிதை ஆகிறது என்றும் அதை தெரிந்துகொள்வது, புரிந்துகொள்வது மற்றும் உணர்ந்துகொள்வது என்று மூன்று தளங்குகளில் விளக்கி, அதன் தத்துவ பரிமாணத்தை புரிந்துகொள்வதற்காக அடுத்த அமர்வில் வைஷ்ணவ மரபை பற்றிய விளக்கங்களை கொடுத்தது எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம்.

மூன்று நாட்களின் அமர்வுகளில் 4000 பாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 160 பாடல்களை 8 தொகுதிகளாக வகைப்படுத்தி வாசிக்கப்பட்ட ஒவ்வொரு பாடல்களுக்கும் கூர்மையான விளக்கங்ளையும், பாடப்பட்ட ஸ்தல சிறப்பையும், புராண தொடர்புகளையும் மற்றும் ஆழ்வார்களைப்பற்றியும்  ஜாஜா மிக அருமையாக விளக்கினார்.

தொகுத்துப்பார்க்கையில் திவ்ய பிரபந்ததின் முழுமையான சாரத்தை இந்த மூன்று நாட்களில் எங்களுக்கு ஜாஜா அளித்தது ஒரு வரப்பிரசாதம். ஜாஜா அழைத்து வந்துதிருந்த மாலோலன் (மனித கணிப்பொறி) ஒவொரு பாடலையும் சந்தத்துடன் அற்புதமாக பாடியது ஒரு ஆன்மீக அனுபவம். அவ்வப்போது அந்தியூர் மணி தாமாக (!) சைவ சித்தாந்த மேற்கோள்களுடன் பங்கு பெறவேண்டி இருந்தது இந்நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு.

திவ்ய பிரபந்த வகுப்பு நித்யவனத்தின் மற்றுமொரு Master Class நிகழ்ச்சி. ஒவ்வொரு முறையும் எங்கள் அனைவருக்கும் சிறந்ததை அறிமுகப்படுத்தும் உங்களுக்கு நன்றி.

அன்புடன்
ஆனந்த், திருப்பூர்

முந்தைய கட்டுரைஆலம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைதூ.சு.கந்தசாமி முதலியார்