நாலாயிரம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

நாலாயிர திவ்ய பிரபந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் நல் வாய்ப்பு அமைந்தது.

சென்ற முறை யோகா வகுப்பில் கலந்து கொண்ட அனுபவம் இருந்ததாலும் இந்த முறை நண்பர் பாலமுருகன் அவர்களிடம் வழி கேட்க போய் நானும் அவருமாக சேர்ந்தே வர நேர்ந்தது, சென்ற முறை எந்த குளிர் ஆடைகளுமற்று ஈரோடு வந்து சேர்ந்ததும் கடும் குளிரோடு அந்தியூர் வந்து சேர்ந்ததும் முதல் ஆளாக பேருந்து நிறுத்தத்தில் குளிராடை வாங்கியதும் அந்தியூரிலிருந்து வெள்ளி மலை பயணத்தில் விரியும் அழகிய நிலக்காட்சிகள் என  பேசிக் கொண்டே பயணம் செய்து மடத்தை வந்தடைந்தோம்.

திரு ராஜகோபாலன் அவர்கள் வகுப்பின் முன்னுரையிலேயே எங்கள் அனைவரிடமும் பிரபந்த அறிமுகம் குறித்தும் எங்களின் பின்னணி குறித்தும் அறிந்து கொண்டார், மிக தெளிவான ஒரு அறிமுகத்தை அளித்தார் பிரபந்தம் ஒரு பேரிலக்கியம் அதை அருளிய ஆழ்வார்கள் பெரும் கவிஞர்கள் எனவே நம்முடைய அகம் திறந்திருப்பதன் வழியாக தான் அதை நெருங்க முடியும் என்கிற அவரின் துவக்க உரை ஒரு வெளிச்சம்.

 பக்தி இலக்கியத்தின் இயங்கு முறை பாசுரங்களை அணுகுவதற்கு ஏற்ற மனநிலை குறித்து விளக்கிய  பிறகு பெரியாழ்வாரின் பாசுரங்களை அனைவருமாக அறிய தொடங்கினோம் ஒவ்வொரு பாசுரத்தில் பின்னும் உள்ள நாடகீய தருணம் பின்னர் அந்த தருணத்தை மொழியால் காட்சி படுத்தும் திறன் அது வைணவ சித்தாந்தமாக இறுதியில் பொலிவது என ஒவ்வொரு பாடலையும் சொல் சொல்லாக விளக்கவும் அவற்றில் உறையும் அழகு மற்றும் தத்துவத்தை   சுட்டிக் கட்டவும் அவரால் இயன்றது.

அவர் ஒரு சிறந்த உரையாடல்காரர் என தெரியும் இந்த வகுப்பு அதன் உச்சம், நவீன இலக்கிய தேர்ச்சி, மரபு இலக்கிய பயிற்சி, தத்துவங்களை உள்வாங்கி அதை அவையில் முன்வைக்கும் திறன் என மிக சரியான இணைவு அவரது உரை, ஒரு சமயத்தில் பெரும் அறிஞராகவும் பின்னர் ரசிகனாகவும் அவர் கொண்ட தோற்றங்கள் பேரழகு.

குறிப்பாக பெரியாழ்வாரின் 

புட்டியில் சோறும் புழுதியும் கொண்டு வந்து 

ஆட்டி புக்கி அகம் புக்கு அறியாமே

இந்த பாசுரத்துக்கு அவரளித்த விளக்கத்துக்கு அவையே சொக்கி நின்றது.

குழந்தை ஒன்று பரம்பொருளாகி பின்னர் மீண்டும் குழந்தையாகி காட்டும் மாயத்தை பெரியாழ்வாரிலிருந்து பெற்றுக் கொண்டோம் கனிந்த மனத்தின் காதலுக்கு பெரியாழ்வார், பின்பு  ஆண்டாள் எனும் மதவேழத்தை எதிர் கொண்டோம் ஒவ்வொரு சொல்லும் எரியாக, தீப்பற்றிக் கொள்ளும் காதல்  அவளுடையது.

ஊனிடை ஆழி வெண் சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் 

மானிடர் கென்று பேச்சு படின் வாழ்கிலேன் கண்டாய் மன்மதனே

பரம்பொருளையே ஆணையிட்டு அன்பு செய்யும் பெரும் காதல் பேரருவி அவளின் சொற்கள்.

அன்றாடத்தில் உழன்று தசைகள் இறுகிய தலை என்னுடையது  அவை மெல்ல இளகுவதை  என்னால் உணர முடிந்தது அது  ஆழ்வார்களின் அருள் என்று எண்ணிக் கொள்கிறேன்.

நாளின் இறுதியில் மீண்டும் வைணவத்தின் இறை கட்டுமானம் குறித்து மீண்டும் விளக்கினார் ராஜகோபாலன் (நாடகீயம்,சொல்லழகு, தத்துவம் அல்லது சித்தாந்தம்) பரம், வியூகம்,வைபவம்,அந்தர்யாமி,அர்ச்சை என இறைவனின் தோற்ற நிலைகள் குறித்தும் விளக்கினார்.

அவருக்கு அறிவின் மீது இருக்கும் கட்டுப்பாடு வியப்பிற்குரியது, இலக்கணம் அல்லது தத்துவம் என ஒன்றை ஆழமாக பயின்றதாக நான் நினைக்கும் போதெல்லாம் என் மனம்  அதை உதறி விடுகிறது கவிதை தருணங்களை மட்டும் தான் மீள மீள மீட்டிக் கொள்கிறது.

உள்ளிருந்து பெரியாழ்வாரும் ஆண்டாளின் குரலும் உழற்றுவதில் வைணவத்தின் கட்டுமான அமைப்பை  இந்த அளவுக்கு தான் என்னால் உள்வாங்க முடிந்தது,பெருமளவுக்கு இணை மனங்களாக பலரும் பங்கேற்றதனால் கல்வி என ஒன்று நிகழ்ந்தது, சமீப காலத்தில் எனக்கென அமைந்த நாட்களாக இந்த மூன்று நாட்களை சொல்ல முடியும் இனிமை இனிமை என மனம் நிறைகிறது ,கல்வி எவ்வளவு பெரிய கொண்டாட்டம் என நிரூபித்து கட்டிய நிகழ்வு இது.

இரண்டாவது மூன்றாவது நாளில் தானாகவே  சீர் பிரிக்கவும் பொருளை குறிப்பிட்ட அளவு நெருங்கவும் முடிந்தது.

நண்பகல் வெளிச்சமும் கூரிருளும் குளிரும்,நண்பர்களின் முகங்களும்,குரலும் மாலை நடைகளும் தேநீர் மற்றும் உணவு இடைவேளைகளும் இந்த கொண்டாட்ட மனநிலையை கட்டமைப்பைத்தில் பெரும் பங்கு வகித்தது.

 இந்த மூன்று நாட்களில் எங்களுக்குள் ஆழ விதைக்கப்பட்ட விதை விருட்சமாக வளர்வதற்காக  பேரருளை இறைஞ்சுகிறேன்.

நாளை விலங்கு பூட்டிக் கொள்ளும் முன்பு இதை எழுதி விட தோன்றியது ராஜகோபாலன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி உங்களுக்கு எப்போதும் போல் மனம் நிறைந்த வணக்கம்.

அன்புடன் 

சந்தோஷ் 

அன்புள்ள சந்தோஷ்,

இத்தகைய வகுப்புகளை நான் மிகவும் திட்டமிட்டே அமைக்கிறேன். கற்பிக்கும் திறன் கொண்டவர்கள் மட்டுமே கற்பிக்க முடியும் – விஷயமறிந்தோர் , சாதனையாளர் அனைவரும் கற்பிப்பவர்கள் அல்ல. அத்துடன் மரபான முறையில் கற்பதற்கு இன்றைய நவீனக்கல்வி கற்றவர்களால் இயலாது. அக்கல்வி பழைய தலைமுறையின் மனநிலை கொண்டவர்களுக்குரியது. ஆகவேதான்  ராஜகோபாலன் போன்ற ஒருவரை கற்பிக்க அழைக்கிறேன். உடன் மரபான கல்வி கொண்டவரையும் இணைத்துக்கொள்கிறேன். ஆலயக்கலை (ஜெயக்குமார்) ஓவியக்கலை (ஏ.வி.மணிகண்டன்) ஆகியோரும் நவீன மனதுக்கு மரபுக்கலையை விளக்கும் ஆற்றல் கொண்டவர்களே

ஜெ

முந்தைய கட்டுரைஆதிநஞ்சின் கதை
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனின் மூன்று கதைகள் – முரளி