அழியாவினாக்களின் கதைகள்

மண் சிறுகதைத்தொகுப்பு மின்னூல் வாங்க

மண் சிறுகதைத்தொகுப்பு வாங்க

என் முதல் சிறுகதைத் தொகுதி திசைகளின் நடுவே, பவா செல்லத்துரை முயற்சியால் அன்னம்- அகரம் வழியாக 1992ல் திருவண்ணாமலை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கலையிலக்கிய இரவில் வெளியிடப்பட்டது. அத்தொகுதிக்காக நானும் என் மைத்துனர் லெனின் கண்ணனும் இணைந்து கதைகளை தெரிவுசெய்தோம். அதில் திசைகளின் நடுவே, மாடன் மோட்சம், ஜகன்மித்யை, போதி உள்ளிட்ட சில கதைகள் ஏற்கனவே பிரசுரமாகி புகழ்பெற்றவை. சிலகதைகள் கைப்பிரதியாகவே இருந்தவை. அவற்றை லெனின் கண்ணன் அழகிய கையெழுத்தில் பிரதி எடுத்து உதவினார்.

அத்தொகுதிக்கு 200 பக்கம் அளவுதான் என அன்னம் – அகரம் உரிமையாளர் கவிஞர் மீரா சொல்லியிருந்தார். ஆகவே நீளமான கதைகளை தவிர்த்தோம். எல்லா வகைமையிலும் கதைகள் தேவை என்பதனால் சில கதைகளைச் சேர்த்தோம். எஞ்சிய கதைகள் கைவசம் இருந்தன. பொதுவாக அன்றைய வழக்கத்திற்கு மாறாக திசைகளின் நடுவே தொகுதி வெளியான ஆண்டே விற்றுத்தீர்ந்தது. சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி என பல முன்னோடிப்படைப்பாளிகள் சிறந்த மதிப்புரைகள் எழுதியிருந்தனர். அவ்வாண்டின் சிறந்த நூல்களிலொன்றாகப் பேசப்பட்டது. ஆகவே அடுத்த தொகுதி ஒன்றை கொண்டுவரலாமென்னும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் நான் விஷ்ணுபுரம் நாவல் எழுதிக்கொண்டிருந்தேன். 1997 டிசம்பரில் விஷ்ணுபுரம் நாவலை அன்னம் அகரம் வெளியிட்டது. அது அன்றைய இலக்கியச் சூழலில் ஓர் அலை என நிகழ்ந்த படைப்பு.

1995 வாக்கில் என்னுடைய ரப்பர் நாவல், திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுதி, நாவல் கோட்பாடு நூல் ஆகியவை வெளிவந்து பரவலாகப் பேசப்பட்டுவிட்டன. நான் அடிக்கடிச் சென்னை சென்று வந்தேன். திருவல்லிக்கேணியில் அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனின் நாகராஜ் மேன்ஷன் அறையில் தங்குவேன். சென்னையில் அப்போது சில நெல்லை நண்பர்கள் சென்னையில் இருந்து ஸ்நேகா பதிப்பகம் என்னும் நிறுவனத்தை நடத்திவந்தனர். அவர்களை நான் ஒருமுறை அண்ணாச்சி ராஜமார்த்தாண்டனுடன் சென்று சந்தித்தேன். அப்போது சுபமங்களாவில் மண் என்னும் நீள்கதை பிரசுரமாகி பரவலாகப் பேசப்பட்டது. ராஜமார்த்தாண்டன் அந்தக்கதையை உள்ளடக்கி ஒரு தொகுதி வெளியிடலாம் என ஸ்நேகா பதிப்பகத்தாரிடம் சொன்னார். அவர்களுக்கும் ஆர்வமிருந்தது.

அன்று, ஸ்நேகா பதிப்பகத்தில் நான் வசந்தகுமாரைச் சந்தித்தேன்.  அதற்கு முன் சுந்தர ராமசாமி இல்லத்தில் அவரை ஒருமுறை சந்தித்திருந்தேன். அசைட் இதழுக்காக குமரிக் கடற்கரை வாழ்க்கையைப் புகைப்படங்கள் எடுக்க வந்திருந்தார். அப்புகைப்படங்களின் இன்னொரு தொகுதி பின்னர் வசந்தகுமார் நடத்திய புதுயுகம் பிறக்கிறது என்னும் மாத இதழில் வலைகளில் சிக்காத வாழ்க்கை என்னும் தலைப்பில் வெளியாகியது. புதுயுகம் பிறக்கிறது இதழில் நான் சில கவிதைகள் எழுதினேன். மூன்றாவது இதழுடன் அது நின்றுவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவுடன் நடந்த இதழ் அது. அரசுக்கெடுபிடிகளால் இதழ் நின்றுவிட்டது. அதன்பின் வசந்தகுமாரை ஸ்நேகாவில் சந்தித்தேன். அப்போது நான் எழுத்தாளராக ஆகிவிட்டேன், என் மேல் வசந்தகுமார் பெருமதிப்பு கொண்டிருந்தார். ஸ்நேகாவில் நான் தொகுதி ஒன்றை வெளியிடவேண்டும் என்றார் வசந்தகுமார்.

மண் உட்பட நீள்கதைகளை சேர்த்து ஒரு தொகுதியாக்கினேன். அப்போதே ஆயிரங்கால் மண்டபம், மூன்று சரித்திரக்கதைகள் உள்ளிட்ட சில புகழ்பெற்ற சிறியகதைகள் வெளிவந்துவிட்டிருந்தன. அவற்றை தவிர்த்து நீள்கதைகள் மட்டுமே அடங்கியதாக தொகுதியை அமைக்கலாமென எண்ணினேன். மடம் கைப்பிரதியாக நீண்டநாள் என்னிடமிருந்த கதை. மலம் இத்தொகுதிக்காக எழுதப்பட்ட கதை. அப்போதுகூட கதைகளை எழுத போதிய அச்சிதழ்கள் தமிழில் இல்லை. சுபமங்களாவில்தான் பல கதைகள் வெளியாயின. இதிலுள்ள டார்த்தீனியம், கிளிக்காலம் ஆகியவை குறுநாவல்களாக கணையாழி தி.ஜானகிராமன் நினைவு குறுநாவல்போட்டியில் பரிசுபெற்று வெளியானவை.

தொகுப்புக்கான அட்டையை வசந்தகுமார் வடிவமைத்தார். அன்று மிக அரிதாக இருந்த அட்டை அது. ஓர் இலையின் ஓவியம், அதை வேறொரு பின்னணியில் பொருத்தி உருவாக்கப்பட்டிருந்தது அட்டைச்சித்திரம். தொகுதியை நான் கோமல் சுவாமிநாதனுக்கு படையலாக்கியிருந்தேன். கோமலிடம் அதைச் சொல்லியிருந்தேன். ஆனால் நூல் வெளியாகும்போது கோமல் இல்லை. அக்டோபர் 28, 1995ல் என் நண்பர் காஞ்சீபுரம் வெ.நாராயணன் அழைப்பின்பேரில் நான் காஞ்சி சென்று ஒரு கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது கோமல் மறைவுச்செய்தி வந்தது. அக்கூட்டத்தையே அஞ்சலிநிகழ்வாக ஆக்கிக்கொண்டோம்.

1995 டிசம்பரில் மண் தொகுப்பு ஸ்நேகா பதிப்பக வெளியீடாக வந்தது. அத்தொகுதி மீதும் பெரும் எதிர்பார்ப்பு அன்று இருந்தது. வெங்கட் சாமிநாதன் மிகச்சிறப்பான ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். சுஜாதா பாராட்டி எழுதியிருந்தார். நான் அப்போது விஷ்ணுபுரம் நாவலை கிட்டத்தட்ட முடித்திருந்தேன். என் உள்ளம் அந்த தொகுதியில் இருந்த கதைகளில் இருந்து வெகுவாக விலகத் தொடங்கிவிட்டிருந்தது.

இன்று வாசிக்கையில் மண் தொகுதியின் கதைகள் பல இன்று எழுதப்பட்டவைபோல புதியவையாக உள்ளன. நடையின் சிறிய மாறுதல்களை தவிர்த்தால் இவற்றில் காலமே இல்லை.ஏனென்றால் நான் அந்தந்தக் காலத்திற்குரிய அரசியல் பிரச்சினைகளையோ, சமூகச்சிக்கல்களையோ எழுதவில்லை. நான் எழுதியவை எல்லாமே என்றைக்குமான வினாக்களையும் தேடல்களையும்தான். அத்துடன் கதைக்கட்டமைப்பில் எனக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது. ஆகவே வலுவான கதைகளையே நான் எழுதினேன். அவை காலம் கடக்கையில் தொன்மங்கள் போல மாறிவிட்டிருக்கின்றன. மண், மடம், மலம், டார்த்தீனியம் எல்லாமே அத்தகையவை. வலுவான திரைப்பட இயக்கம் இருக்கும் மொழியில் என்றால் மண், மடம், நிழலாட்டம், டார்த்தீனியம் எல்லாமே திரைப்படங்களாக ஆகியிருந்திருக்கும்.

இன்று இக்கதைகளை தீவிரமான நிகர்வாழ்வனுபவத்தை அளிக்கும் புனைவுகள் என்றும், எப்போதுமே அறுதியாக வகுத்துவிடமுடியாத மானுடக்கேள்விகளை மீண்டும் மீண்டும் வாசகன் முன் எழுப்பும் வல்லமை கொண்டவை என்றும் என்னால் சொல்லமுடிகிறது. மலம், நிழலாட்டம் போன்ற போன்றவை இன்று நன்றாக மொழியாக்கம் செய்தால் உலகின் எந்தச் சிறந்த இலக்கிய இதழிலும் வெளியாகக்கூடியவை. என் கதைகளை நானே வாசகனாக நின்று வாசிக்க எனக்கு இத்தனை ஆண்டுகள் இடைவெளி தேவையாக இருந்துள்ளது.

இக்கதைகளில் பல கோமல் நடத்திய சுபமங்களா இதழில் வெளியானவை. என்னிடம் கதைகளை கேட்டு வெளியிட்டவர். ஒவ்வொரு கதைக்கும் பெருக்களிப்புடன் எதிர்வினை ஆற்றி என்னை ஊக்கப்படுத்திய முன்னோடி. அவரை என்றும் நன்றியுடன் வணக்கத்துடன் மட்டுமே நினைத்துக்கொள்கிறேன்.

ஜெ

கோமல் சுவாமிநாதன்

  • குறிச்சொற்கள்
  • மண்
முந்தைய கட்டுரைபி.வி.ஆர்
அடுத்த கட்டுரைA Surgical Knife.