வன்னி:கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

“LTTE ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு’ என்பதற்கு மேல் சிந்திக்க இயலாத என் வலது சாரி நண்பர்களுக்கும், ஈழம் பற்றி பேசினால் பிறர் மீது வெறுப்பை கக்கும் மற்றவர்களுக்கும்  இடையில் இருந்தேன்.  நான் படித்த வரை ஈழ பிரச்சனை பற்றிய உங்கள் கட்டுரையே முதல் முறையாக அறிவு சார்ந்த அணுகுமுறை கொண்டது.

தமிழ் படிக்க வராத என் நண்பர்களுக்கும் புலப்பட நான் தங்கள் கட்டுரையை மொழி மொழிபெயர்க்க முயற்சித்தேன்.  (இணையத்தில் எங்கும் இதை பயன்படுத்த மாட்டேன்). நீங்கள் உங்கள் கருத்துகளை நாடு முழுவதும் பல ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வீர் என்று நம்புகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

கோகுல்

 

அன்புடையீர்,

உலகெங்குமுள்ள தமிழர்களின் (பொங்கிப் பிரவகிக்கும்) பொது நீரோட்டத்திற்கு மாறாக, (அதாவது அவர்களுக்கெல்லாம் அருவருப்பும் திகைப்பும் ஆத்திரமும் ஏற்படுத்தக்கூடிய இன்னொரு சார்புநிலையில்), புலி எதிர்ப்புப் பத்திரிகையாக, இலங்கை அரசாங்கத்தின் தவறுகளை தாக்குதல்களைக் கண்டித்து முழக்கமிடாத நடுநிலைமை(?)ப் பிறழ்வுடன், (கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்துகொண்டிருக்கும் தமிழர்களுக்காகக் கண்ணீர்சிந்திப் பதறுவதை விட்டு, புலிகள் எனும் பாசிஸ ஆபத்தைப் பேசிக்கொண்டிருக்கும் துரோகத்தனத்துடனும்) கொழும்பிலிருந்து வெளிவரும் தினமுரசு வார இதழில் சுல்தான் என்பவர் இந்த வாரம் எழுதியிருப்பது இது:

தாருண்யன்.


அன்புள்ள தாருண்யன்,

தொடர்ச்சியாக இக்கட்டுரைகளை நீங்கள் அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். இவற்றின் தொனி கடுமையான புலி எதிர்ப்பு — அரசு ஆதரவு என்றுதான் எனக்குப் படுகிறது. எந்த தரப்பையும் நான் முற்றிலுமாக நிராகரிக்க விரும்பாத காரணத்தால் நான் உங்கள் கட்டுரைகளையும் வாசித்துக்கோண்டிருக்கிறேன். ஆனால் இக்கருத்துக்களை நான் இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையிலேயே வாசிக்க விரும்புகிறேன். ஒன்று, போர்க்காலத்தில் நமக்குக் கிடைக்கும் எல்லா தகவல்களும் ஏதேனும் ஒரு தரப்பின் பிரச்சாரங்களே. நடுநிலைக்குரல்களை இருதரப்பும்சேர்ந்து முதலிலேயே அழித்துவிடுவார்கள். இரண்டு, வன்முறை அமைப்புகள் அனைத்தும் அடக்குமுறையை ஆயுதமாகக் கொண்டவையே. ஆனால் முறைப்படுத்தப்பட்ட ராணுவம் வன்முறை அமைப்பு அல்ல என்று நம்புவது மிகப்பெரிய மடமை. அது மேலும் பலமடங்கு அடக்குமுறைத்தன்மை கொண்டது. 

ஓர் மானுட அழிவின் தருணத்தில்- விவாதம்– எந்தவகையான விவாதமாக இருந்தாலும் ஒருவகை அபத்தமாக ஆகிவிடுகிறது என்றுதான் எனக்குப்படுகிறது. ஆகவே உங்களுக்குச் சொல்ல என்னிடம் எதுவும் இல்லை

என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள், நண்பர்கள் பலர் கடற்கரைப்புதர்களுக்குள் தங்கியிருக்கிறார்கள். இந்த உண்மையிலிருந்துதானே நான் ஆரம்பிக்க முடியும்.

ஜெ

****

அன்புள்ள ஜெ,

நீங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறீர்களா? உங்கள் குறிப்பில் அதைப்போன்ற தொனி இருந்தது. அது எனக்கும் உங்கள் பிற வாசகர்களுக்கும் மன வருத்தத்தை அளித்தது…

தி.ஸ்ரீனிவாசன்

அன்புள்ள தி ஸ்ரீனிவாசன்,

உங்கள் கடிதத்துக்கான பதில் ‘இப்போது இல்லை’ . மதம், இனம், மொழி அடிப்படையிலான எந்த ஒரு தேசியகற்பிதமும் மக்களைப் பிரிப்பதிலும் மக்களை ஒருவரோடொருவர் போராடச்செய்து அழிவதிலுமே சென்று சேர்க்கும். அத்தகைய அவநம்பிக்கைகளையும் வெறுப்புகளையும் தூண்டிவிட்டு வளர்க்க சர்வதேச ஆயுத வணிகர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். ஆசிய ஆப்ரிக்க நாடுகள் போரிட்டு அழியும்போதுதான் ஐரோப்பா வாழமுடியும் என்பதே இன்றைய நிலை. அப்போராட்டங்களில் மக்கள் அநாதரவாக அழியும்போது அந்த சர்வதேச சமூகம் எதுவுமே செய்வதில்லை.

நான் எப்போதுமே ஒரு நிலப்பகுதிக்குள் வாழும் மக்களை ஒருங்கிணைக்கும், பரஸ்பரம் இணைந்துவாழ வைக்கும் தேசிய கற்பிதங்களை மட்டுமே ஏற்கிறேன். அதற்கு எதிரான குரல்களை மாபெரும் நசிவு சக்திகளாக மட்டுமே காண்கிறேன்.  இந்தியாவில் இத்தகைய பிரிவினைக்குரல்களை முன்வைப்பவர்கள் எப்போதுமே ஆக்கப்பூர்வ சிந்தனை இல்லாதவர்களாகவும், மாற்றுக்கருத்தை வசைபாடும் ·பாஸிஸ்டுகளாகவும், வெறுப்பை மட்டுமே வளர்ப்பவர்களாகவும்தான் இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.

ரவாண்டாவில் இருந்தும் காங்கோவில் இருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால் இலங்கையில் இருந்தாவது பாடம் கற்றுக்கொண்டாகவேண்டும்.

 

 

 

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

எல்லோரும் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அபத்தம்தான் என்றாலும் மலையாளிகளின் தேங்காய் எண்ணைய் உபயோகிக்கும் வழக்கம் பற்றிக் கூட பதிவு எழுதும் ஜெயமோகன், அண்டை நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இன அழிப்பு பற்றின கொந்தளிப்பான பிரச்சினையைப் பற்றி சூசமாகக்கூட எதுவும் எழுதிவிடவில்லையே என்கிற நெருடல் என்னுள் இருந்தது.

தமிழகத்தில் நிலவும் எதற்குமே உதவாத கையாலாகாத உணர்ச்சிப் பிதற்றல்களுக்கிடையே நான் எதிர்பார்ப்பது இந்தப் பிரச்சினையை அறிவுப்பூர்வமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அணுகும் பதிவுகளைத்தான். உங்களின் இந்தப் பதிவு என்னுள்ளிருந்த நெருடலை மட்டுப்படுத்தியிருக்கிறது. இது குறித்து இன்னும் நீங்கள் விரிவாக எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

தோழமையுடன்
சுரேஷ் கண்ணன்

 
அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

நான் என் கருத்தை சொல்ல வேண்டியதில்லை என்றே எண்ணியிருந்தேன் — தமிழில். எனக்கு தினமும் பத்து மின்னஞ்சல்கள் வந்துகோண்டிருந்தன, ஏன் மௌனம் என்று வசைபாடி. இப்போது எழுதியபின் தினமும் முப்பது வசைக்கடிதங்கள் வருகின்றன. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

தமிழ்நாட்டில் இம்மி கூட மக்கள் பின்புலம் இல்லாத ஓர் அரசியல் தரப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அதை இடதுசாரி தீவிரவாத பாவனை என்று சொல்லலாம். எப்போதுமே இங்கே அதற்கு இரண்டாயிரம் ஆதரவாளர்களுக்கு மேல் கிடையாது. இதனாலேயே இவர்கள் முடிந்தவரை குரலெடுத்துக் கூவுவதையே தங்கள் அரசியலாகக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளை உருவகம்செய்து அவர்களை சகட்டுமேனிக்கு கீழிறங்கி வசைபாடுவது இவர்களின் முறை. தங்கள் சிறு குழு அன்றி பிற அனைவருமே அயோக்கியர்கள் என்பதே இவர்களின் தரப்பு

கடந்த முப்பது வருடங்களில் இவர்களின்  அரசியல் எபப்டி எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்பது வேடிக்கையான ஆய்வுப்பொருள். சோவியத் ருஷ்யாவின் உடைவுவரை சர்வதேசியம் பேசி மொழி-இன தேசியங்களை ·பாசிஸங்களாக வசைபாடிவ்ந்தவர்கள் சட்டென்று மொழி-இன தேசியவாதத்துக்குள் குதித்தார்கள். இவர்களுக்குள்ளேயே ‘விவாதித்து’ [மேலும் குழுக்களாக உடைந்து] தெளிவுபெற்று அந்த நிலைபபட்டை இவர்கள் அடைந்தார்கள் என்கிறார்கள். எளிய உண்மை இதுவே , இங்கே ஏற்கனவே மொழி-இன வாதம் பேசிவரும் உதிரி பிற்போக்குக் குழுக்களை தங்களுடன் சேர்த்துக்கொள்வதுதான் நோக்கம். மொழி-இன அடிப்படைவாதம் தமிழ்நாட்டில் முற்போக்காக ஆனது இப்படித்தான்.

மொழி-இன அடிப்படைவாதம் எல்லா இடத்திலும் ஓரளவு இருக்கிறது. அதன் பின்புலத்தை இவர்களுக்கு எங்கிருந்து நிதி அவ்ருகிறது என்ற இடத்தில் தேடவேண்டும். ஆனால் வாட்டாள் நாகராஜை கர்நாடகத்தில் எவரும் முற்போக்கு சக்தியாக கருதபப்டுவதில்லை. தெளிவாகச் சொல்லப்போனால் இங்குள்ள இந்த கும்பலை இலங்கையின் ஜனதா விமுக்தி பெருமுனெயுடன் மட்டும்தான் ஒப்பிட வேண்டும்.  ஈழத்துப் போராட்டத்தை இந்த இன-மொழி அடிப்படைவாதிகள் இங்கே கையில் எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள். அத்துடன் இங்கே அதற்கான பொதுமக்கள் ஆதரவு முற்றாக இல்லாமலாயிற்று.

இப்போது கிட்டத்தட்ட இவர்கள்  ஈழத்தின் மனித அவலத்தை தங்களுக்கான விஷயமாக மேலே கொண்டு செல்கிறார்கள். இவர்களின் இனவாத- மொழிவெறி வெறுப்பரசியலை ஏற்காத எவருமே ஈழ அவலத்தைப்பற்றி பேசக்கூடாது என்ற புள்ளியை நோக்கி இன்றைய விவாதத்தை தள்ளிக்கொண்டு செல்கிறார்கள்.அதற்கு வசையையே ஆயுதமாக கையாள்கிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலான எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் அமைதியாகிவிட்டிருப்பது இவர்களின் வெறுப்பரசியலை கூசித்தான்.

ஈழத்தில் இன்னும் கொஞ்சம் அவலம் நிகழ்ந்தால் தமிழ்நாட்டில் இன்னும் கொஞ்சம் வெறுப்பரசியலை வளர்க்கலாமே என எண்ணும் இந்த வசைபாடிகள் இனி கொஞ்ச நாள் இணையத்தில் ஆட்டம் போடுவார்கள். இவர்களுக்கு வாய்க்கு அவல் ஏன் கொடுக்க வேண்டும், ஈழத்தின் அவலத்தை இந்த வசைகள் மூலம் ஏன் மறைக்க வேண்டும் என்றே நான் பேசாமலிருந்தேன். இருக்கிறேன்.


ஜெ

 

 ஜெயமோகன், 

நான் எதிர்பார்த்திருந்த பதிவு. 

இதே எண்ணம். எப்படி எழுதுவது என்பதிலான பயம். என்ன மாதிரி லேபின் குத்தப்படுவோம் என்கிற பதற்றம் எல்லா முன்னிலை எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. இன்னும் இருந்துகொண்டிருக்கிறது. வெற்றுப்பானையாய் இருப்பதால் எல்லோரும் சிறுநீர் கழித்துவிட்டு போகிறார்கள்.

 

மெளனம் தேசிய சிந்தனை, அபிமானம் கொண்டோரின் மெளனம் இன்னும் வளர்நிலத்தை தரிசாக்கும்.

 

 

ஈழ ஆதரவின் பேரில் நடைபெறுகிற கருத்து வன்முறை, ரொம்பவே அதீதம். அதுவும் இந்திய இறையாண்மைக்கு எதிரான மிகப்பெரிய யுத்தக்கருவியாகத்தான் அது கையாளப்பட்டிருக்கிறது. அப்பாவி மக்களின் இழப்பு எவ்வளவு வலிக்கிறதோ அவ்வளவு வலியை இவர்களின் கருத்தும் தருகிறது.

 

இந்த உணர்வை பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு திராவிட உணர்வை தேசியத்திற்கு எதிரான உணர்ச்சியை தூண்டி கொள்ள முயல்கின்றன எல்லா கட்சிகளும், கருத்தியல் கூடாரங்களும்.

 

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதான செயல்முறை. இது ஏற்படுத்தப்போகிற பக்கவிளைவுகள் வெறும் அரசியல் கட்சி மாற்றத்தோடு மட்டும் நின்றுவிடப்போவதில்லை. 

 

முடிவு தெரிந்த நாடகம்தான். ஆனாலும் பார்வையாளர்கள் அவர்களுக்குள்ளேயே கல்லெறிந்து கொள்கிறார்கள். அறிவு ஜீவிகளுக்கும், மாற்றுக் கருத்துள்ளவர்களுக்கும் எந்த ஊடகமுமில்லை.

 

 

 

ஏன் உங்கள் தளத்தில், எழுத்தாளர்கள், வாசகர்கள் அவர்களது கருத்தை தைரியமாக சொல்ல அநுமதிக்க கூடாது. யாரையும் புண்படுத்தாமல், காழ்ப்புணர்ச்சியின்றி, அவர்களின் நிலை பிறழாமல் அவர்கள் விரும்புவதை சொல்ல அனுமதிக்கலாம்.

 

மணி.

அன்புள்ள மணி,

உங்கள் கருத்துக்கள் என்னுடையவையே.

கடிதங்களை அனுமதித்தால் எனக்கு வந்துகொன்டிருக்கும் வெறுப்பையும் வசைகளையும் கக்கும் கடிதங்களே அதில் இடம்பெறும். என் இணையதளமே கசப்பும் வெறுப்பும் பொங்குவதாக ஆகிவிடும்.

 

திருவாளர் செயமோகன்

………..உன்….. அரசியலை வெளிப்படுத்தும் கட்டுரையைப் படித்தேன். உங்களைப்போன்ற மாமாப்பயல்கள் இருப்பதனால்தான் என் இனத்தை சிங்களக் காடையர்கள் அழிக்கிறார்கள். எம் இனம் சிந்தும் ஒரு துளி ரத்ததுக்கும் நாங்கள் பதில் கொடுப்போம். அந்த ரத்தத்தில் உன்னைப்போன்ற …..களின் கெட்ட ரத்தமும் இருக்கும்………….

புதுயுகன்

அன்புள்ள புதுயுகன்,

நன்றி…ஓர் உதாரணமாக உங்கள் கடிதத்தின் சில வரிகளை பிரசுரிக்கிறேன். நீங்கள் உங்கள் வழியில் செல்வதை நான் தடுக்கவில்லை. இந்திய இறையாண்மைக்கு எதிராக மக்களை திரட்டி, இந்திய மைய அரசுடன் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு, வென்று, தனித்தமிழகத்தை அமைத்து, அதில் அரசுப்பொறுப்பு ஏற்று, அதற்கு எதிராக இருந்த என்னைப்போன்ற எதிரிகளை எல்லாம் கொன்று குவித்துவிட்டு நீங்கள் சென்று வன்னியில் அழியும் தமிழ் மக்களைக் காப்பாற்றலாம்… அதுவரை பிற எவரும் வன்னியின் தமிழ் மக்களைப்பற்றி அனுதாபமோ ஆதரவோ தெரிவிக்காமலும் பார்த்துக்கொள்ளலாம். வாழ்க

ஜெ

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 3
அடுத்த கட்டுரைநாக்கு ஒரு கடிதம்