வி.எஸ்.

வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் எனும் வி.எஸ்.அச்சுதானந்தன் என் இளமை முதலே வி.எஸ். என்று அறிமுகமானவர். இன்றுடன் அவருக்கு நூறுவயது.  என் அம்மா அவரைப்பற்றிச் சொன்னார். அதன்பின் வெவ்வேறு அண்ணன்கள் சொன்னார்கள். கேரள வரலாற்றின் ஒரு நூற்றாண்டின் அடையாளமாக அவர் நின்றிருக்கிறார்.

வி.எஸ். மார்க்ஸிய முன்னோடிகளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர். கிருஷ்ணபிள்ளை, இ.எம்.எஸ்.சங்கரன் நம்பூதிரிப்பாடு,சி. அச்சுத மேனன் ஏ.கே.கோபாலன் ஆகியோரின் இளவல். இ.கே.நாயனாரின் இணைத்தோழர். ஆனால் அவர்களைப் போல அறிவுஜீவி அல்ல. அவர்கள் அனைவருமே பெரும் வாசகர்கள். நூல்களை எழுதியவர்கள். வி.எஸ் நல்ல பேச்சாளர்கூட அல்ல. நாளிதழ்களுக்கு அப்பால் எதையும் வாசிப்பவரும் அல்ல. மிக அடித்தளத்தில் இருந்து வந்தவர். முறையான கல்வி இல்லாதவர்.

ஆயினும் வி.எஸ். கேரள இடதுசாரி இயக்கத்தின் ஒளிரும் முகங்களில் ஒன்று. காரணம், கேரள இடதுசாரி இயக்கத்தில் அடித்தளத்து உழைப்பாளியின் குரலாக, அடையாளமாக இருந்தவர் அவர். பண்படாதவர், சமரசமற்றவர், பலவற்றை புரிந்துகொள்ளாதவர், ஆனால் கேரளத்தின் அடித்தள மக்களை புரிந்துகொண்டவர். எந்நிலையிலும் தளராத அவர்களின் ஆற்றலின் சின்னம் வி.எஸ்.

பழைய மலையாளப் படங்கள் பார்ப்பவர்களுக்கு ஒன்று தெரியும். 1950 வாக்கில் மலையாள சினிமாவில் ஒரு முக்கியமான மாறுதல் உருவானது. அழகான, பண்பான, மென்மையான கதைநாயகன் என்னும் உருவகம் உடைந்தது. முரட்டுத்தனமான, ஆண்மை மிக்க கதைநாயகன் உருவானான். அவன் பெரும்பாலும் கம்யூனிஸ்டு. எஞ்சிய பீடியை ஆழ இழுத்து கீழே போட்டுவிட்டு முதலாளியிடம் நியாயம் பேசப்போகும் முகம். பிறப்பால் தமிழரான நடிகர் சத்யன் அந்த கதாபாத்திரங்களை ஏற்றார். இன்றும் மலையாளி கொண்டாடும் நட்சத்திரம் அவர். தோற்றம் ,நடிப்புமுறை ,வசன உச்சரிப்பு ஆகியவற்றில் மம்மூட்டி சத்யனை நினைவூட்டியமையால்தான் நட்சத்திரம் ஆனார். வி.எஸ். கம்யூனிஸ்டு இயக்கத்தின் சத்யன். சத்யனே வி.எஸ்ஸை கொஞ்சம் நகலெடுத்தார் என்று ஒரு பேச்சு உண்டு.

நூறாண்டு ஆகும் பிரியத்துக்குரிய வி.எஸ்.ஸுக்கு வணக்கம்

முந்தைய கட்டுரைஆ. சதாசிவம்
அடுத்த கட்டுரைடொரெண்டோ சந்திப்பு