பூன் முகாம், கடிதம்

ஆசானுக்கு வணக்கம்,

கோயில்களுக்கு செல்லும் போதும் நான் வழக்கமாக கடவுளிடம் கேள்விகளோ, வேண்டுதல்களோ வைப்பதில்லை கண்களிலே கடவுளை நிரப்பிக்கொள்வதிலேயே சிரத்தையாக இருப்பேன். அதே பழக்கம் பூன் முகாமிலும் தொடர்ந்தது.உங்களை சுற்றி கேள்விகள் இருந்துக்கொண்டே இருந்தது தூரத்தில் இருந்து கவனித்துக்கொண்டே இருந்தேன் இசை, தத்துவம், திரைப்படம், அரசியல், ஓவியம், இலக்கியம் என்று அனைத்து துறையிலும் ஆழ்ந்த புரிதல் கொண்டவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது

எனக்கு படித்தவற்றைப் பகிரும்போது அந்த உரை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது மிகவும் முக்கிய பாடம்.ஏழு நிமிட உரை கேட்பவர் மனதில் பதியும்படி தெளிவாக தயார் செய்வதற்கான அட்டவனையை கூறினீர்கள்.தொடர்ந்து வாசிப்பதால் என்ன கிடைக்கும்? பயன் என்ன? என்றெல்லாம் நான் யோசித்தது இல்லை. ஆனால், அந்த வாசிப்பு நான் எதிர்பார்க்காவிட்டாலும் அள்ளி கொடுக்கிறது. இலக்கியமே பல நேரங்களில் நட்பாகவும் சில நேரங்களில் நட்பின் பாலமாகவும் மாறுகிறது. எப்போதும் பேச தயங்கி யோசித்துப் பேசும் நான், பூனில் தயக்கமின்றி பலருடன் புத்தகங்களை பற்றி பேசி நட்பானது ஆச்சரியம்.

நம் தேசத்தைவிட்டு தூர இருந்தாலும் இங்கிருந்தே எவற்றையெல்லாம் எழுதலாம்,இங்கிருப்பதால்  சிலவற்றை இழந்தாலும் செய்யகூடிய பல இருப்பதை சுட்டிக்காட்டி எழுத ஊக்கமளித்தீர்கள். தத்துவத்தைப் பற்றி பேசும் போது ஒவ்வொருவருடைய உலகமும் தனித்துவமானது என்றும் சில விலங்குகளும் பறவைகளும் வரிசைப்படுத்தி ஒரே காட்சியைப் பார்த்தாலும் அவை காணும் காட்சியின் நிறமும், அளவும், தெளிவும் வேறுபடும் என்று கூறியது  எனது சிந்தனையில் வெகுநேரம் ஒலித்துக் கொண்டு இருந்தது.

கல்வியும் மமகாரத்தை அளிக்க கூடியதுதான், உங்களை பார்க்கும் போது அது இருந்த இடம் இல்லாமல் போய்விடும். இலக்கியவாதிகளுக்கு சோர்வு சில நேரங்களில் ஏற்படுவது இயற்கை. இந்த மாதிரியான இலக்கிய முகாம் கண்டிப்பாக தொடர் வாசிப்பிற்கான உந்துதலை கொடுக்கிறது.உங்களை சந்தித்திதல் மிக்க மகிழ்ச்சி !

அன்புடன்,

மதுநிகா.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா நன்கொடை
அடுத்த கட்டுரைவிடைபெற்ற வாசகி- கடலூர் சீனு