பூன் முகாம் ,கடிதம்: ராஜேஷ் கிருஷ்ணசாமி

பூன் கூடுகைக்கு அனுமதி கிடைத்தவுடன் எனக்குள் தொடங்கிய பரவசநிலை அது முடிந்த பின்னும் பெருகி பித்தாக வழிவது எனக்கே ஆச்சர்யம். என் வாழ்வில் நடந்த முக்கியமான தருணங்கள் எதுவும் முழுமையாக நினைவில் நிற்பது இல்லை, ஒரு கலங்கிய உணர்வாகவே மிஞ்சும், பூன் நாட்களும் அவ்வாறே நின்றது மகிழ்ச்சியே.

அப்பலேச்சியனியலில் இருக்கும் அனைத்து மலை கிராமங்களையும் போல பூனும் அழகானதே, அதிலும் முகாம் நடந்த ரிசார்டை முதலில் பார்த்தபோது  ப்ரூகலின் ஓவியத்திற்குள் வந்துவிட்ட உணர்வு.இளவெயிலில், முடிவில்லா மரவேலியின்அருகில் நின்றுகொண்டு மலைச்சரிவில் நடப்பட்டிருந்த கிறிஸ் மஸ் மரங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

தானியக்களஞ்சியம் போல கட்டப்பட்ட கொட்டகையில் தான் அனைத்து பகல்நேர அமர்வுகளும் நிகழ்ந்தன. சிறு மேடையும் அதற்கு முன் போடப்பட்டிருந்த நாற்காலிகளுமாக அந்தக் கொட்டகை கச்சிதமாக இருந்தது. கழிப்பறை எங்கே என்று கண்களால் துழாவியபோது ஒரு மெலிதான அதிர்ச்சி, மேடைக்கு வெகு அருகில் இடப்புறமாக இருந்தது. போக வேண்டும் என்றால் எல்லோரும் பார்க்கும்படியும், கேட்டுக்கும்படியும் செய்யவேண்டும்.அளவோடு சாப்பிடவும், அருந்தவும் அப்போதே முடிவெடுத்தேன்நன்றே விளைந்தது; மூன்று நாளில் நாலு பவுண்ட் எடை குறைந்து வீட்டிருந்தேன்

இரண்டு நாள் அமர்வுகளும் இராணுவ ஒழுங்குடன் காலை 9 மணிக்கு துவங்கி அந்திவரை நடந்தது.வீட்டில் இருந்து வேலை செய்து,ஹாலுக்கும் சமையலறைக்கும் அடிக்கடி நடந்த பழகிய என்னைப்  போல சிலருக்கு ஒரே இடத்தில் அமர்ந்து முன்னால் இருப்பவர் தலை மறைக்காமல் இருக்க முதுகெலும்பை நேராக்கி குண்டலினி யோகம் செய்யும் பாவத்துடன் அமர்ந்து இருப்பது கடினமாக இருந்தது. நாங்கள் அறையின் கடைசியில் சுவற்றை ஒட்டி நின்று கொண்டும்,உயரமான நாற்காலியில் அமர்ந்து கொண்டும் ஏதேச்சையாக பார்க்கும்போது மெலிதாக புன்முறுவலிக்க பழகிவிட்டிருந்தோம்.

அது நிகழ்ந்தே விட்டது, மனதில் பல தடவை ஒட்டிப் பார்த்தது நிகழ்ந்தே விட்டது. வெளிறிய சட்டை, வெள்ளை வேஷ்டியில் ஜெ, மருங்கிய பெரிய விழிகளுடன் அருண்மொழி, சௌந்த௫டன் உள்ளே நுழைந்தனர். முன்னே சொன்னது போல அடுத்த பத்து நிமிடங்களில் நடந்தது எதுவும் நினைவில் இல்லை. தெளிந்த போது, தன்னார்வு இலக்கிய விசைகள் பற்றியும்,அதுதொடர்பான சந்திப்புக்களின் தேவையை பற்றியும் சீராண இடைவெளியில், சந்தம் தவறாது செறிவாக பேசினார். இத்தனை சொற்களும் அவர் மனதில் எங்கு ஒளிந்து இருக்கின்றன என்று பிரமிப்பாக இருந்தது.

அன்றும், அதன் மறுநாளும் நடந்த நிகழ்வுகள் அதீத தீவிரத்துடன், விவாதங்களுடன் நடந்தன. இலக்கியத்தில் மிகுந்த பிரேமையும், உழைப்பும் கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு இருக்க முடியும் என்று தோன்றியது.

அவர்கள் தங்கள் தன் இயல்புகளோடு படைப்பாளிகள் ஆக சக்தியை வேண்டிக் கொள்கிறேன். ஜெ ஒ௫ ஆசானின் அக்கரையோடு தேவையான போது குறுக்கிட்டு விளக்கமளித்தார். ஆதிவகை, படிமநிலை, குறுக்குவெட்டுத் தோற்றம், வளைந்து பார்ப்பது போன்ற பாவனைகள் இல்லாமல், மனதால் நுகரும் போது பூப்பதே கவிதை என்று விளக்கியதும், தத்துவம் பற்றிய அவரது உரையும் ஒரு Masterclass.

இரவு உணவிற்குப் பின் ஜெவை சுற்றி அமர்ந்து, அவர் பேச்சைக் கேட்பதே இந்த நிகழ்வின் உச்சம் என்று வெள்ளி இரவு தான் உணர்ந்தேன். ஒரு மூன்றாம் மனிதன் போல தனது ஜோக்கை தானே முதன்முறை கேட்பது போல வாய்விட்டு சிரிப்பதும், பேய்க் கதைகள் சொல்லுவதுமாக இருந்தாலும் அடிக்கொரு முறை தனது பால்யகால வாழ்க்கையை, தாய் தந்தையை நினைவு கூர்வது, எண்பதுகளின் தொடக்கத்தில் ஊரைவிட்டு சென்ற இளைஞன் இன்னும் ஊர் திரும்பவில்லை என்றே உணர்கிறேன், அவனை பூனில் சந்தித்தது நமது நல்லூழ்.

ராஜேஷ் கிருஷ்ணசாமி

முந்தைய கட்டுரைதுளிகளின் அழகு- கடிதம்
அடுத்த கட்டுரைகு.சின்னப்ப பாரதி