மதுரை புத்தகக் கண்காட்சியில்…

மதுரையில் புத்தகக் கண்காட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. விஷ்ணுபுரம் அரங்கு அங்கே உள்ளது (எண் 1)  விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடுகளான நூல்கள் அரங்கில் கிடைக்கின்றன. பொதுவாக மதுரை, தஞ்சைப்பக்கம் எனக்கு வாசகர்கள் மிகக்குறைவு. அங்கே நான் செல்வதும் மிகக்குறைவு. இருந்தும் இந்த அரங்கு நிகழ்கிறது. ஒரு நம்பிக்கைதான். நாலைந்துபேர் எங்கோ கண்காணாமல் இருக்கலாமென்னும் எதிர்பார்ப்பு.

இந்த அரங்கில் என் புனைவுக்களியாட்டுச் சிறுகதைத் தொகுதிகள் அனைத்தும் கிடைக்கும் (மொத்தம் 14 நூல்கள்) காடு, ஏழாம் உலகம், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், ரப்பர், கன்யாகுமரி, கன்னிநிலம், அந்த முகில் இந்த முகில், அனல் காற்று, கதாநாயகி உட்பட என் நாவல்கள் எல்லாமே புதிய பதிப்புகளாகக் கிடைக்கும். சர்வதேச அளவில் கவனம் பெற்றுவரும் அறம் தொகுதி உட்பட பழைய நூல்கள் எல்லாமே கிடைக்கின்றன. அஜிதனின் மைத்ரி, அல்கிஸா போன்ற நாவல்கள், விஷல்ராஜாவின் திருவருட்செல்வி தொகுதி, அருண்மொழி நங்கை எழுதிய பெருந்தேன் நட்பு, பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலெனும் கலை என்னும் அரிய நூல் உள்ளிட்ட நூல்கள் கிடைக்கும்

மதுரை புத்தகக் கண்காட்சியில் பொதுவாகவே கூட்டம், விற்பனை இரண்டும் குறைவு என்று சொன்னார்கள். பல காரணங்களில் ஒன்று, இன்று வெவ்வேறு சிறு நகர்களில் நிகழும் புத்தகக் கண்காட்சிகள். இந்த முறை சரியா என்பது ஐயமாகவே உள்ளது. சிறுநகர்களின் புத்தகக் கண்காட்சிகளில் பொதுவாக இலக்கியப் பதிப்பகங்கள் கலந்துகொள்ள முடியாது. அதற்கான முதலீடு திரும்பக்கிடைக்கும் அளவு விற்பனை இருக்காது. அதற்கான ஆள்பலமும் இருக்காது. அங்கே பெரிய புத்தக விற்பனையகங்களும் பதிப்பகங்களுமே கலந்துகொள்ள முடியும். அல்லது உள்ளூர் நூல்விற்பனையாளர்கள் மற்றும் உள்ளூர் நூல்வெளியீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த வகை பதிப்பாளர்களிடம் நல்ல வாசகர்கள் வாசிக்கத்தக்க நல்ல நூல்கள் இருப்பது அரிதினும் அரிது. இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்கள் பதிப்புரிமை அற்ற நூல்களை பெரிய எண்ணிக்கையில் குறைந்த தரத்தில் வெளியிட்டு லாபம் பார்க்க விரும்புவார்கள். பெருமளவில் அச்சிட்டு ‘தள்ளிவிட்டு’ விற்பனைசெய்வதே அவர்களுக்கு நல்லது. இரண்டு,  அவர்கள் தொடக்கநிலை எழுத்துக்கள், பயிற்சி இல்லாத உள்ளூர் எழுத்தாளர்களிடமே பணம் வாங்கிக்கொண்டு வெளியிட்டு லாபம் பார்ப்பார்கள். அத்துடன் மிகப்பெரிய அளவில் விற்கும் ‘ஜனரஞ்சக’ நூல்கள் அவர்களிடமிருக்கும். சுயமுன்னேற்றம், மதம், சோதிடம் ஆகியவற்றுடன் அரசியல் பிரச்சார நூல்கள் அவர்களிடமிருக்கும். தரமான இலக்கிய நூல்களோ, அறிவியக்க நூல்களோ இருப்பது வாய்ப்பே இல்லை.

சிறுநகர் புத்தகக் கண்காட்சிகளின் வாசகர்கள் கண்காட்சிக்கு வந்தமையாலேயே கிடைப்பதை வாங்கவேண்டியவர்களாகிறார்கள். அவர்கள் அந்த நூல்களை வாங்குவதனால் நல்ல நூல்களை அவர்கள் வாங்கும் வாய்ப்பு குறைகிறது. அத்துடன் கண்காட்சிகளிலுள்ள நூல்விற்பனையில் கல்விநிறுவனங்கள் வாங்கும் நூல்களின் எண்ணிக்கை மிகுதி. அவர்கள் இந்த ‘கிடைக்கும் நூல்களை’ வாங்கிவிடுவதனால் நல்ல நூல்களை வெளியிடும் பதிப்பகங்களின் வாய்ப்புகள் இல்லாமலாகின்றன.

நல்ல நூல்களின் வெளியீட்டாளர்கள் இந்தச் சிறுநகர் புத்தகக் கண்காட்சிகளில் கடைவைக்கும் இரண்டாம்நிலை விற்பனையாளார்களுக்கு நூல்களை கொடுக்கலாம். ஆனால் அவற்றை விற்பதனால் அந்த விற்பனையாளர்களுக்கு பெரிய லாபம் இல்லை. பெரும்பதிப்பகத்தின் பதிப்புரிமை அற்ற நூல்களை விற்பதனால்தான் லாபவிகிதம் அதிகம். ஆகவே ஒருசிலர் தவிர பிறர் ஆர்வம் காட்டுவதில்லை.  நல்லநூல் வெளியீட்டாளர்களுக்கும்கூட இந்த இரண்டாம்நிலை, மூன்றாம் நிலை விற்பனையாளர்களுக்கு பெரும் கழிவுகளுடன் நூல்களை கொடுக்க நேர்வதனால் பெரிய லாபம் இல்லை. கடனில் கொடுத்தால் நிகர நஷ்டமே வரும். அதாவது குடியாத்தம் அல்லது கோயில்பட்டியில் நிகழும் புத்தகக் கண்காட்சிகளால் இலக்கியநூல் வெளியீட்டாளர்களுக்கு எந்த லாபமும் இல்லை. நஷ்டமே உருவாகும். எல்லா வகையிலும்.

கூடவே நல்ல நூல் வெளியீட்டாளர்களுக்கு மதுரை போன்ற பெரியநகர்களின் புத்தகக் கண்காட்சி அரங்குகளும் நஷ்டமளிப்பவையாக ஆகிவருகின்றன. ஏனென்றால் சிறுநகர்களிலேயே புத்தகக் கண்காட்சிகள் நிகழ்வதனால் மதுரை போன்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு இருந்த கொண்டாட்ட மனநிலை இல்லாமலாகிவிட்டது. இலக்கியப் பதிப்புகளுக்கு வாசகர்கள் வருவது குறைந்து விற்பனையும் குறைந்து பங்குபெறுவதே நஷ்டமளிப்பதாக ஆகிவிடுகிறது.

அதாவது புத்தகக் கண்காட்சிகள் பெருகுவதனாலேயே நல்லநூல்கள் விற்பனையாகும் வாய்ப்பு குறைகிறது.  தாளில் அச்சுக்கறை என்று மட்டுமே சொல்லத்தக்க நூல்கள் பெருகுகின்றன.  ஈரோட்டிலேயே நல்லநூல்  விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இந்த சூழலைச் சொல்லி புலம்பினார்கள். மதுரையில் இன்னும் அதிக புலம்பல் கேட்கிறது. தொடர்ந்து புத்தகக் கண்காட்சி நடத்தத்தான் வேண்டுமா என்னும் குரல் எழுகிறது. பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் கண்காட்சிகளில் பங்கேற்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

விஷ்ணுபுரம் பதிப்பகம் ஈரோட்டில் புத்தகவிழாவில் கலந்துகொள்ளவில்லை. ஒரு புத்தகவிழாவில் எத்தனை கடைகள் நம் நூல்களை வைத்திருந்து விற்றாலும் நாமே கலந்துகொள்வதுபோல ஆவதில்லை. ஏனென்றால் இன்று நூல்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம். எந்த நூலும் கடலில் ஒரு குமிழிதான். ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குச் சென்றபோது நானே என் நூல்களை தேடித்தேடி கண்டடைய வேண்டியிருந்தது. பதிப்புரிமை இல்லாத மதநூல்கள், பொதுவான வாசிப்புக்குரிய எளிய நூல்கள், கோலம் சோதிடம் தன்னம்பிக்கை நூல்கள்  மட்டுமே கண்ணுக்குப்பட்டன. ஓரிரு கடைகளில் குவிந்திருந்த நூல்களின் அடுக்குகளில் ஓரமாக என் நூல்கள் இருந்தன. முந்நூறு நூல்கள் எழுதிய எனக்கே இதுதான் நிலைமை. அதற்காக புத்தகக் கண்காட்சிகளில் கடைபோடலாமென்றால் அது இழப்பு அளிக்கும் செயல். இதுதான் நிலைமை.

என் நூல்களுக்கு என எனக்கான வாசகர்கள் உள்ளனர். ஆகவே அவை சிறப்பாகவே விற்கின்றன.அவற்றை எப்படியும் வாசகர்கள் வாங்கிவிடுவார்கள். 90 சதவீதம் இணையம் வழியாக விற்கும் நூல்களே எங்கள் வணிகம். ஆனால் புத்தகக் கண்காட்சி வழியாக அறிவுலகத்திற்கு வந்துசேரும்  புதிய வாசகர்களிடம், நூலகங்களிடம் சென்றுசேர்வதுதான் பெரும் சிக்கலாக உள்ளது. ஒரு கணக்கில் பார்த்தால் இலக்கியத்தைப் பொறுத்தவரை புத்தகக் கண்காட்சிகளின் காலம் முடிந்துவிட்டது என தோன்றுகிறது. உழவர்சந்தைகளில் காய்கறி மொத்தவணிகர்கள் ஆக்ரமித்துக்கொண்டதுபோன்ற சூழல் உருவாகியுள்ளது. அதை கடந்து, தேடிவாங்கும் நல்ல வாசகர்களை நம்பியே இங்கே நல்லநூல் வெளியீடும் வாசிப்பும் நிகழமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைசினிமா உலகம்
அடுத்த கட்டுரைபூன் முகாம், கடிதங்கள்