பெண்கள் யோகம்- கடிதம்

அன்புள்ள ஜெ,

நலம் தானே?

சமீபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான யோக முகாமில் கலந்து கொண்டேன். குருகுல சூழலில், ஆசிரியரிடமிருந்து நேரடியாக யோக பயிற்சி கற்றது யோக சாதகராக எனக்கு பல திறப்புகளை தந்தது. பல தருணங்களில் குருஜியுடன் நடந்த உரையாடல்களின் தொகுப்பாக இந்த முகாம் அமைந்தது. கடந்த ஓர் ஆண்டின் அலைக்கழிப்புகள், கேள்விகள் எல்லாம் உருமாறியிருப்பதை உள்நோக்கமுடிந்தது.

குருஜி இந்த முகாமை “Making of Yoginis” என்று சொன்னார். இதன் பாடத்திட்டம் பெண்களுக்கு தங்களை அறிந்துகொள்வதற்கான பயிற்சிகளை அளிப்பது போக, ஒட்டுமொத்தமாக யோக முறைப்படி ஆண்கள் மற்றும் பெண்களின் இடையில் இருக்கும் உடல் மற்றும் உள்ள வேறுபாட்டின் சித்திரத்தை அளிப்பது. இவை அனைத்தும் மரபு தொடர்ச்சியுடனும், அறிவியல் ஆய்வுகளை ஒட்டியும் அமைக்கபட்ட விதம், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தது

பொதுவாக, உடல் சார்ந்த எந்த பயிற்சி கற்றாலும்உணவு பழக்கத்தையும், வாழ்க்கை பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதே முதல் படிஅதை தாண்டி செல்வது பலருக்கு கடினம். இந்த முகாமில் குருஜி  “இப்போதிருக்கும் எந்த பழக்கங்களையும் மாற்ற வேண்டாம். யோக பயிற்சிகளை சரியாக செய்தாலே போதும்என அறிவுறுத்தினார். இரண்டு நாட்கள் மனதிலிருந்த குடும்ப சுமை, கவலைகள் நீங்கி அனைவரும் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார்கள்நித்தியவனம் பூத்திருந்தது

குருஜி தன் புன்னகை மொழி கொண்டே பல கற்றல்களை அளித்தார். பெண்கள் முதலில் அடையவேண்டியதுசித்ரா நிவேஷன் சே திருஷ்டா பாவம்என்றார். அதாவது சுற்றி இருக்கும் அனைத்தில் இருக்கும் குறைகளை பார்ப்பதிலிருந்து அனைத்தையும் வெறுமனே கவனிக்கும் நிலைக்கு மாறுவதுபொதுவாக பெண்களுக்கு நிறைகளை விட குறைகள் அதிகமாக கண்ணில் படுவது இயல்பு தான், ஒரு வகையில் அப்படி குறைகளை அடையாளம் காண்பது தேவையும் கூட. ஆனால் அந்த இயல்பு அதிகமாகும் பொது அதுவே ஓர் குறையாக மாறக்கூடும். அதை கவனிக்கையிலே, அதிலிருந்து விடுபடமுடியும் என்றார்

ஊட்டி குருகுலத்தில் வியாஸா மாஸ்டரின் வகுப்புகள் சாந்தி மந்திரத்துடன் துவங்கி பூர்ண மந்திரத்தில் முடிவடையும். யோக வகுப்புகளும் சாந்தி மந்திரத்துடன் துவங்கியதுமந்திரத்தின் சாரத்தை குருஜி அனைவர்க்கும் புரியும்படி விளக்கினார். பல யுகங்களாக அறுபடாமல் தொடர்ந்து வரும் கற்றல் முறைகளின்  தொடர்ச்சியில் ஈடுபட்டு கற்பது நல்லூழ் என எண்ணிக்கொண்டேன்

மரங்களின் வேர்கள் மண்ணுக்கு அடியில் பின்னி இணைந்து அதன் மூலம் நீர் மற்றும் உணவை பரிமாறி கொள்வதுடன், எதிர் வரும் வறட்சி அல்லது நோய் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும். இந்த தகவல்களை வைத்து மற்ற மரங்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும். ஒட்டுமொத்த காடே வெளி தாக்குதலுக்கு தயார் நிலையில் இருப்பதனால் சேதம் மிக குறைவாக இருக்கும். பெண்களுக்கு இடையிலும் அப்படிப்பட்ட ஒரு திடமான நெட்வொர்க் உண்டு. அதன் மூலம் யோகம் மேலும் பரவி பலருக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்

இந்த முகாமை கலந்துகொண்ட அனைவர்க்கும் சிறப்பானதாக மாற்றிய குருஜிக்கு நன்றி. எப்போதும் போல் அனைத்தையும் நன்றாக ஒருங்கமைத்த அந்தியூர் மணி அண்ணாக்கும் சுவையான உணவளித்த சரஸ்வதி அம்மாக்கும் நன்றி. இவை அனைத்தின் பின், அனைவரின் பின் இருக்கும் உங்களுக்கு என் அன்பு

நன்றி,

நிக்கிதா

முந்தைய கட்டுரைபகற்கனவின் பொன்
அடுத்த கட்டுரைஆலயங்களின் அழகில்- கடிதம்