தியானம், உளக்குவிப்புப் பயிற்சி முகாம்

சென்ற ஆண்டு முழுக்க நடைபெற்ற குரு தில்லை செந்தில் பிரபு நடத்திய தியானம் மற்றும் உளக்குவிப்புப் பயிற்சி முகாம்கள் மிகப்பெரிய அளவில் பயனுள்ளவையாக அமைந்தன என்று பங்கேற்றவர்கள் கூறினார்கள். இன்றைய வாழ்க்கையின் அடிப்படைச் சிக்கல்கள் சில உள்ளன. ஒன்று, துயிலின்மை. இரண்டு, கவனம் குவியாமை. மூன்று, உளச்சோர்வு. மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை.  அவற்றைக் கருத்தில்கொண்டு அமைக்கப்பட்ட பயிற்சி முறை இது.

நம் உள்ளத்தை நம்மால் கையாள முடியாத நிலையில் நம்மிடம் எப்போதும் ஒரு சலிப்பு உள்ளது. அதை வெல்ல நம் உள்ளத்தை தொடர்ந்து எதிலாவது ஈடுபடுத்தியாகவேண்டியுள்ளது. உள்ளம் தீவிரமாக ஈடுபடுவது எதிர்மறையான விஷயங்களில்தான். அதையே நாம் ‘திரில்’ என்கிறோம். வன்முறை, காமம் ஓங்கிய சினிமாக்கள். அல்லது வம்புகள், சச்சரவுகள். இவை உடனடியாக நம்மை துயிலின்மைக்கும் சோர்வுக்கும் இட்டுச்செல்கின்றன.  எதையும் தொடர்ச்சியாக கவனிக்க முடியாதவர்களாக ஆகிறோம்.

கவனிக்கமுடியாத காரணத்தால் நாம் துளித்துளியாக கருத்துக்களையும், செய்திகளையும், காணொளிகளை பார்க்கவும் வாசிக்கவும் ஆரம்பிக்கிறோம். நூறு சொற்களுக்குள் அமைந்த முகநூல்பதிவுகள், ஐந்து நிமிடக் காணொளிகள் பெருகுவது இதனால்தான். உண்மையில் இவை நம்மை மேலும் சிதறடிக்கின்றன. தொகுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு செய்திகளை கொண்டுவந்து நம்முள் கொட்டி நம் உள்ளத்தை பெரிய குப்பைக் கிடங்காக ஆக்குகின்றன. ஆகவே நம் கவனிக்கும் திறன் மேலும் குறைகிறது. ஒரு நூலை கூர்ந்து பயில்வது கடினமாகிறது. ஒரு தொழில்முறை பயிற்சியை மேற்கொள்வது, ஒரு தேர்வுக்காக பயில்வது இயல்வதில்லை.

இந்த நச்சுச்சூழலுக்கு எதிராகவே இந்த தியானப் பயிற்சிகளை தொடங்கினோம். ஒரு பாதை இருக்கவேண்டும், அதை தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்காக. இது மதம் சார்ந்ததாகவோ, தனிநபர் வழிபாட்டுத்தன்மை கொண்டதாகவோ இருக்கலாகாது என்பதை முதன்மைப்படுத்தினோம். நான் பரிந்துரைக்கும் ஆசிரியர்களில் ஒருவர் தில்லை செந்தில் பிரபு

வரும் அக்டோபர் 27 ,28, 29  (வெள்ளி சனி ஞாயிறு) தினங்களில் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் இந்த முகாம் நிகழும். ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளலாம்

[email protected]

முந்தைய கட்டுரைமூன்று அறிதல்முறைகள்
அடுத்த கட்டுரைபுதியவானம்