வைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்

:

வைக்கம் முகமது பஷீரின் ஒரு கதாபாத்திரம் குழந்தையாக இருக்கும்போது பள்ளியில் ஆசிரியர் கேட்கிறார் “ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும்டா?” குழந்தை தன் ஊரில் குன்றுமேலேறி நின்று இரு ஆறுகள் இணைவதைப் பார்த்த ஞாபகத்தில், “இன்னொரு பெரிய ஒன்று’ என்று பதில் கூறுகிறது. அடிவிழுகிறது. எவ்வளவு சொல்லியும் குழந்தைக்குப் புரியவில்லை. இரண்டும் இணையாமலிருக்கும் போதுதான் இரண்டு. இணைந்துவிட்டால் எப்போதும் மிஞ்சுவது ஒன்றுதானே?

முதிர்ந்து பழுத்தபிறகு பஷீர் எழுதிய கதையில் ஒரு கதாபாத்திரம் அறிகிறது `நான் நீ என்ற இரட்டை நிலையிலிருந்து நீ மட்டும் எஞ்சுவதே மரணம்’. அவரது படைப்பிலக்கியத்தின் தொடக்கமும் முடிவும் இவ்விரு அறிதல்களில் உள்ளது. இவ்விரு அறிதல்களும் வேறுவேறு அல்ல. பஷீரின் உலகம் குழந்தைக் கண்களால் அறியபடும் வாழ்க்கைத் தரிசனங்களினால் ஆனது. பஷீர் தன் கடைசிநாள் வரை அந்த குழந்தைவிழிகளை தக்கவைத்துக் கொண்டார். ஆகவே வேடிக்கையும் வியப்பும் மட்டும் கொண்டதாக முற்றிலும் இனியதாக இருந்தது அவருடைய உலகம்.

பஷீரின் இலக்கிய உலகம் முற்றிலும் அவரை மையமாக்கி இயங்குவது. பஷீர் தான் நேரடியாகவும் வேறு பெயரிலும் அவருடைய படைப்புலகு முழுக்க நிரம்பியிருக்கிறார். மலையாள மொழியைக் கற்கத் தொடங்கும் வாசகன் முதலில் வாசிக்கக்கூடிய எழுத்து பஷீருடையது. மிகமிக எளிமையான நடை. அவருடைய மிக நீளமான நாவல்கூட அதிகபட்சம் 80 பக்கம் நீளம் உடையதுதான். மலையாளப் புத்திலக்கியத்தின் முழுமையை அறிந்த பிறகு ஒரு வாசகன் இறுதியில் பஷீரிடம் திரும்பிவந்து அவரே அதன் உச்சகட்ட சாதனை என்பதை அறிய நேரும். பஷீரில் தொடங்கி பஷீரில் முடியும் இந்தப் பயணம் போன்ற ஒன்றை பிறமொழி இலக்கியங்களில் அடையமுடியாது. இதுவே பஷீரின் சிறப்பம்சமாகும்.

கோட்டயம் அருகே தலையோலப் பறம்பு என்ற ஊரில் பிறந்த வைக்கம் முகமது பஷீர் வசதியான மரவியாபாரியின் மகன். வாப்பாவின் வியாபாரம் நொடித்து பரம ஏழையாக ஆகிறது குடும்பம். கோழிக்கோட்டுக்கு வரும் காந்தியை பார்க்கச் செல்கிறார் பள்ளி மாணவனாகிய பஷீர். நகரும் ரயிலுடன் ஓடி காந்தியின் கரத்தை பாய்ந்து தொட்டுவிடுகிறார். அந்த தொடுகை அவரை மாற்றுகிறது.அந்தக்கையை தூக்கியபடி வந்து அம்மாவிடம் ”உம்மா நான் காந்தியை தொட்டேன்!”என்று கூவுகிறார். உம்மாவுக்கு பயம். ‘தலை தெறித்த’ பையன் புதிதாக என்ன வம்பை தொட்டுவிட்டு வந்திருக்கிறானோ என்று.

பஷீர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தீவிரவாத அமைப்புகளை உருவாக்கினார். சிறை சென்றார். சூ·பி துறவியாக பிரிவுபடாத இந்தியாவில் அலைந்து திரிந்தார். பின்பு எழுத ஆரம்பித்தார். இறுதிவரை ஆழமான இஸ்லாமிய சூ·பி நம்பிக்கையும் காந்தியப் பற்றும் அவரிடம் இருந்தது. அவர் தேசப்பிரிவினை கடைசிக்காலம் வரை ஏற்கவேயில்லை

பஷீரின் எழுத்தை வெறும் சுவாரஸியத்திற்காக, நகைச்சுவைக்காக படிக்கலாம். [ஆரம்ப காலங்களில் பஷீர் தன் நூல்களை தானே சுமந்து சந்தைகளில் விற்பதுண்டு. தன் நூல்களை சிறியதாக எழுதுவதன் காரணத்தையும் அவரே சொல்லியிருக்கிறார். பேருந்து காக்குமிடத்தில் நூலை விற்றுவிட்டு அதை வாங்கியவன் வாசித்து முடிக்கும்வரை அருகேயே நின்று அவனிடம் பேசி அதை மீண்டும் அன்பளிப்பாக பெற்றுக்கொள்ளுதல். ஒரு நூலை குறைந்தது நான்குதடவை விற்றால்தான் வாழமுடியும்! ] ஆனால் கூர்ந்த இலக்கிய வாசகனின் பார்வையில் உள்வாசல்கள் திறக்க விரிவடைந்தபடியே செல்லும் உலகம் அது. திறனாய்வுகளின் மூலம் புதிய புதிய இலக்கிய முறைகளில் பஷீர் மலையாளத்தில் இன்று மீண்டும் மீண்டும் கண்டுபிடிக்கப்படுகிறார். எ.இ. ஆஷர் அவர்களின் மொழிபெயர்ப்பில் (My grandpa had an elephant and other stories.) ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தையும் ஈர்த்துள்ளது பஷீரின் படைப்புலகம்.

பஷீரின் இரண்டு சிறு நாவல்களின் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக தமிழில் குமாரி சி.எஸ். விஜயம் மொழிபெயர்ப்பில் தேசிய புத்தக நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. பஷீரை மொழிபெயர்ப்பது பெரிய சவால். கெ. விஜயம் மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்படியான வெற்றி பெறவில்லை என்றே கூறவேண்டும். பஷீர் கதை எழுதுபவரல்ல; அவர் கதை சொல்லி, அவ்வகையில் அவர் இ. ராஜ நாராயணனைப் போன்றவர். அவருடைய மொழியில் கோழிக்கோட்டுப் பகுதி முஸ்லீம் உரையாடல் மொழியின் அழகுகள் மிகுதி. குழந்தைகளின் மழலைப் பேச்சையும் பல்வேறுவிதமான கொச்சைகளையும் உபயோகிப்பதில் அவரது ரசனை வியப்பிற்குரியது.

வாசலில் வந்து நிற்கும் ஊதல் இசைக்கும் பக்கிரியைப்பார்த்துவிட்டு ஒருவயது ஷாஹினா வீட்டுக்குள் ஓடிவந்து கூவுகிறது ”பீப்ளி பீச்சண மிஸ்கீன்!” [பீப்பி ஊதும் சாமியார்] இதில் உள்ள சொற்கள் குழந்தையே உருவாக்கிக் கொண்டவை. இதில் குழந்தையின் கீச்சுக்குரலும் உள்ளது. இதை எப்படி தமிழாக்கம் செய்வது? ‘நான் பைசாவ எடுக்கலை இக்கா” என்று ஹனீபா சொல்ல கூடவே அப்பாவுக்கு நிரந்தர ‘கண்ணால் கண்ட சாட்சி ‘யான அபிபுல்லாவும் சொல்கிறான் ‘த்தா பறேணது பி ண்டு ‘ [அப்பா சொல்வதை அபி கண்டேன்] குழந்தைகளின் உலகில் பஷீர் குழந்தையாக சகஜமாக இறங்கிச்செல்கிறார். என் வாசிப்பில் உலக இலக்கியத்தில் மிகச்சிறந்த குழந்தையுலகை பஷீர் படைப்புகளில்தான் கண்டிருக்கிறேன். சகஜமான, நளினமான அவருடைய கதை கூறலை மொழிபெயர்க்கும்போது எப்போதுமே சற்று செயற்கைத்தன்மை வந்து விடுகிறது. இம்மொழிபெயர்ப்பிலும் அது உள்ளது.

இருப்பினும் இவ்விரு நாவல்களின் வழியாக பஷீரின் உலகு குறித்து ஒரு நுட்பமான புரிதல் வாசகனில் ஏற்பட முடியும். `இளம் பருவத்துத் தோழி’ ஒரு எளிய காதல் கதை. கதாநாயகன், பஷீர் போன்ற, மஜித். கதாநாயகி சுஹாரா. அவர்களுடைய காதல் பிள்ளைப்பிராயத்தின் தூய்மையில் பிறந்து மலர்ந்தது. வாழ்வின் கொடுந்துயரங்களினால் நசுக்கி அழிக்கப்பட்டது. இவ்வெளிய கதை ஒருவேளை இன்றைய வாசகனுக்கு உவப்பின்றிப் போகலாம். ஆனால் கதை நகர்வினூடாக பற்பல நுண்ணியத் தருணங்கள் நிகழ்கின்றன.

ஓர் உதாரணம். நொடித்துப் போன தந்தை மகன் வெற்றிகரமான வியாபாரியாக வேண்டும் என்று விரும்பும்போது மஜீத் வாழ்வில் தோல்வியுற்று அலைந்து திரும்பி வந்து ரோஜாத் தோட்டம் அமைக்கிறான். அது அவனுடைய ஆத்மாவின், நுண்ணுனர்வுகளின் மலரல். அதை தனக்கெதிரான ஒரு கேலியாகவே அவர் தந்தையால் பார்க்க முடிகிறது. ‘ நீ என்ன சம்பாதித்தாய்?’ என்கிறார் அவர். மஜீத் சம்பாதித்தது வானம் போல விரியும் பூக்களை மட்டுமே. அபத்தமாக உலகில் மலர்ந்து நிற்கும் அழகுகளை.

மஜீத் வெகுகாலம் கழித்து வந்து பார்க்கும்போது நோயுற்று மறையும் சுஹாரா சொல்ல வந்து சொல்லாமல் உதட்டில் உறையவிட்டுப் போன ஒன்று – அது என்ன எனும் வினாவுடன் முடிகிறது இந்நாவல். மலையாள விமரிசகர் ஒருவர் எழுதினார்; `குமாரன் ஆசானின் அமரகாவியம் `உதிர்ந்த மலரி’ல் உதிர்ந்து விழுந்த மலர் கண்டு கவிஞன் மனம் விரிகிறது. உயிரின் நிலைமையில் தொடங்கி பிரபஞ்சத்தின் நித்தியத்துவம்வரை அது தொட்டுச் செல்கிறது. ஒவ்வொரு உதிர்ந்த மலரிலும் பிரபஞ்ச இயக்கத்தின் மாபெரும் ரகசியம் பொதிந்துள்ளது. சுஹரா ஓர் உதிர்ந்த மலர்.’

`பாத்துமாவின் ஆடு’ உற்சாகமான ஒரு குடும்பசித்திரம். மனநிலை பிறழ்ந்து, சிகிச்சைக்குப்பிறகு, ஓய்வெடுக்கும் பொருட்டு தன் குடும்ப வீட்டுக்கு வந்து தங்குகிறார் பஷீர். அங்கு அவருடைய உம்மா, தம்பி ஹனீபா, அவர் மனைவி, தங்கை, அவள் கணவன் இவர்களுடைய குழந்தைகள் மற்றும் உம்மாவின் வளர்ப்புக் கோழிகள் உள்ளனர். பக்கத்தில் தங்கை பாத்துமாவும் அவள் குழந்தைகளும் கணவனும் அவளுடைய செல்ல ஆடும் வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதிசயம். ஒவ்வொருவரும் ஒருவரையருவர் சார்ந்திருக்கிறார்கள். ஏமாற்றுகிறார்கள். ஏமாறுகிறார்கள். அன்பு செலுத்துகிறார்கள். இந்த குடும்ப நாடகத்தை அற்புதமான நகைச்சுவையுடன் கூறுகிறார் பஷீர். இந்நாடகத்தில் மையக்கதாபாத்திரம் பாத்துமாவின் ஆடுதான்.

பஷீரின் படைப்பியக்கத்தின் சிறப்பான இடங்கள் குழந்தைகளையும் மிருகங்களையும் அவர் காட்டுமிடங்கள்தான். இந்நாவல் அதற்கு சிறந்த உதாரணம். விமரிசகர் கல்பற்றா நாராயணன் எழுதுகிறார் “அபாரமான பசியுள்ளது பாத்துமாவின் ஆடு. பசியில் அதற்கு ருசி வளர்கிறது. எல்லா இலையும் தித்திக்கும் பெருங்காடு அதன்முன் விரிந்து நிற்கிறது. பலா இலை, சாம்ப மரச்சருகுகள், பஷீரின் புத்தகங்கள், அபியின் சட்டை எல்லாமே அதற்கு இனிய உணவுதான்” [ ஏதிலையும் மதுரிக்குந்ந காடுகளில்] அந்த அற்புதமான ஆடு வேறு ஏதுமல்ல, பஷீரின் கனிந்த ஆன்மாதான். மானுடம் மீதான அளவிறந்த அன்பே பஷீரின் தரிசனம். மனிதனின் குரூரத்தை, சுயநலத்தை, அற்பத்தனத்தை அது முடிவின்றி மன்னிக்கிறது. உளம் திறந்து நேசிக்கிறது. அந்தப் பிரியத்தின் ஒளியில் குரூரமான வாழ்வுநாடகம் இனிய நகைச்சுவை அரங்காக மாறிவிடுகிறது. பஷீரின் மொத்த படைப்புலகிலும் தீமையின் துளிகூட இல்லை. கசப்போ கோபமோ எங்கும் இல்லை. தேவர்களின் பார்வையில் மானுட வாழ்வு இப்படித்தான் இருக்கும் போலும்.

ஆனால் இந்த அன்பும் கனிவும் மனித வாழ்க்கையின் குரூரங்களைக் காணாத மழுங்கிய தன்மையின் விளைவா? சுய ஏமாற்றா? இல்லை. பஷீர் அளவுக்கு மானுடக்குரூரத்தைக் கண்டவர் குறைவே. அவருடைய ‘சப்தங்கள்’ போன்ற ஆக்கங்கள் குரூரத்தையே சித்தரிக்கின்றன. அதிலிருந்து தாண்டிவந்து அனைத்தையும் எல்லையில்லாது மன்னிக்கும் மார்போடணைத்து நேசிக்கும் மனவிரிவை அவர் அடைந்தார். பாத்தும்மாவின் ஆடு நாவலில் கூட பஷீரின் குடும்பம் எப்படி இருக்கிறது? அவர் நோயுற்று [எனக்கு நல்ல சுகமில்லை. கொஞ்சம் பைத்தியம். வேறொன்றுமில்லை] வந்து தங்கியிருக்க அவரது மொத்த குடும்பமே அவரைத்தேடிவந்து காசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ‘இத்தா பெரிய எழுத்தாளர். புத்தகமெல்லாம் அச்சிட்டு விற்கிறார். அப்படியானால் பூத்த பணம் கைவசமிருக்கும். பிள்ளையா குட்டியா, கொடுத்தால் என்ன?’ என்பது அவர்களின் நினைப்பு.

எந்தக் கதாபாத்திரமும் பஷீரைக் காணும்போது பேச்சின் முடிவில் ‘ இத்தா எனக்கு ஒரு அம்பது ரூபா தா’ என்றுதான் சொல்கிறார்கள். அம்மா சொல்கிறாள் ” நீ எனக்கு ஒரு அம்பது ரூபா கொடு. பாத்தும்மா அறிய வேண்டாம். அபுபக்கர் அறியவேண்டாம். ஹனீபா அறியவேண்டாம்…” கொடுத்த பணம் சுடச்சுட பாத்துமாவால் கண்டுபிடிக்கப்பட்டு கொள்முதல் பண்ணப்பட்டுவிடும். இந்த அம்மாதான் தலைமறைவாக திரியும் மகன் பசித்து வருவான் என சோறு வைத்துக் கொண்டு ஒருநாள் தவறாமல் வருடக்கணக்காக இரவெல்லாம் காத்திருந்தவள்!

மைத்துனன் ஹனீபா மைத்துனர்களுக்கே உரிய மனோபாவத்தின்படி பஷீருக்கு உரிய எல்லா பொருளும் தனக்கு உரியதே என எண்ணுகிறான். கேட்டால் மொத்தமாக ஒரே பதிலைச் சொல்கிறான் ”என்னை உங்களுக்கு வேண்டாமென்றால் நான் பட்டாளத்துக்கு போறேன். இந்திய அரசாங்கத்துக்கு என்னோட தேவை இருக்கு” அவன் மனைவி சொல்கிறாள் ”நானும் பட்டாளத்துக்குபோய் கஞ்சி காய்ச்சிக் கொடுக்கிறேன்.” அபியும் ஆமோதித்துச் சொல்கிறான் ”அபியும் பட்டாளத்துக்கு போரேன்!”

பாத்துமா மொத்தமாகவே பிறந்த வீட்டை சுரண்டிக் கொண்டிருக்கிறாள். ஆடு காலையிலேயே இங்கே வந்துவிடும். கஞ்சித்தண்ணி, உதிரும் இலைகள் ,சப்தங்கள் புத்தகத்தின் பிரதிகள் முதலியவற்றை தின்னும். பால் கறக்க பாத்துமா கூட்டிப்போய்விடுவாள். அதைறைங்கேயே ரகசியமாகக் மடக்கி கறந்து குழந்தைகளுக்கு பால்காப்பி போடப்படுகிறது. பாத்தும்மா கண்ணிருடன் சொல்கிறாள். ”இந்த அநியாயம் உண்டா? இப்படி சொந்த ஆட்டிலேயே திருடுவார்களா?” அதன் பின் குழந்தைகல் நேரடியாகவே ஆட்டுபபல் அருந்துகின்றன. பாத்தும்மா அண்ணாவை கூட்டிக் கொண்டுபோய் சாப்பாடு போடுவது கூட காசுக்காகவே. இந்த மொத்த சுயநலப்போராட்ட்டத்தையும் நன் பிரியம் மூலம் ஒரு வேடிக்கை நாடகமாக மாற்றிக் கொள்கிறார் பஷீர்.

மார்போடு அணைக்கத் துடிக்கும் கரங்களுடன் பார்க்கும் பார்வையில் சித்தரிக்கப்பட்டவை பஷீரின் குழந்தைகள். அவர்களுடைய மன இயக்கங்களை பஷீர் சித்திரிக்கும் விதமே அலாதி. வீட்டின் குழந்தைகளை பட்டாளமாகக் கூட்டிக்கொண்டு பஷீர் குளிக்கச்செல்கிறார். எல்லாருமே முழு நிர்வாணம். ஆற்றில் குளித்து முடித்து கரையில் நிற்கும் போது அபிக்கு வெட்கம். ” பெரிய வாப்பா எனக்கு வேட்டி வேணும்” ஏன்? காரணம் அபியின் சமவயது குழந்தை இடுப்பில் துணி அணிந்து சற்று தள்ளி நிற்கிறது. பஷீர் ஒரு துண்டை அவனுக்கு உடுக்க வைக்கிறார். உடனே மற்ற குழந்தைகளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்கிறது. ஒவ்வொன்றுக்காக துண்டு பனியன் என உடுக்க வைத்தால் கடைசியில் எஞ்சுவது பஷீருக்கு இடுப்பிலிருப்பது மட்டுமே

ஆனால் தூய்மை நிரம்பிய குட்டி தேவதைகளாக குழந்தைகளை பஷீர் காட்டவில்லை என்பது மிக முக்கியமான விஷயம். குழந்தைகள் மனிதகுலத்தின் தீமைகளும் பாவங்களும், பாவனைகளும் விதை நிலையில் உறங்கும் நிலங்களாகவே அவர் படைப்புலகில் வருகிறார்கள். நுணுக்கமாக பெரியவர்களின் இருட்டுக்களை அவர்கள் பிரதியெடுக்கிறார்கள். அபி ஹனீ·பாவின் நடமாடும் சாட்சியாக ஆக்கப்பட்டிருக்கிறான். இயற்கையான மிருக இயல்புகளை செய்முறைகளாக மாற்றிக் கொள்ள பயிற்சி எடுக்கிறார்கள் குழந்தைகள்.

உண்மையில் பஷீரின் குழந்தைகளைக் கூர்ந்து பார்க்கும்போது அவர் மனித குலம் மீது கொண்டிருந்த கணிப்பு என்ன என்ற வினா எழுந்து நம்மை துணுக்குற வைக்கக்கூடும். மனிதனின் அடிப்படையான இருண்மை குறித்து இந்த அளவுக்குப் புரிதல் கொண்ட ஒரு படைப்பாளியை ஐம்பதுகளின் நவீனத்துவர்களிலேயே தேட முடியும். ஆனால் இந்த தரிசனத்திலிருந்து இருண்மை நிரம்பிய பார்வைக்கு பதிலாக பிரகாசம் கொப்பளிக்கும் இனிய நோக்கு ஒன்று பிறந்து வருவதன் ரசவாதமே படைப்பிலக்கியச் செயல்பாட்டின் நீங்காத மர்மம்.

‘பாத்தும்மாவின் ஆடி’ல் கதை என ஏதுமில்லை. பஷீரின் குடும்ப அனுபவங்கள் தன்னிலையாகச் சொல்லப்படுகின்றன. உறவுகள் வழியாக பஷீர் அவரை அலைக்கழித்த தரிசனங்களின் பைத்தியவெளியில் இருந்து மீண்டு வருகிறார். உறவுகளை பஷீர் ஒரு மனிதனை அணைத்துப் புகலிடம் கொடுக்கும் மரநிழலாக காண்கிறார் என இந்நாவல் காட்டுகிறது. மனிதன் தனியாக இருக்க முடியாதவன் என, பிரியததை கொண்டும் கொடுத்தும்தான் அவனால் வழ்ழ முடியும் என. இதுதான் பஷீரின் வாழ்க்கை நோக்கா?

பஷீரின் படைப்புலகு குறித்து அப்படி எளிதான முடிவுகளுக்கு வந்து விடமுடியாது. அவர் வாழ்வை நேசித்தாரா என்றுகூட திட்டவட்டமாக கூறிவிட முடியாது. ஒருவேளை ஒரு மேற்கத்தியமனம் பஷீரை நெருங்கவே முடியாது போகக்கூடும். ஏனெனில் பஷீர் சூ·பிமரபில் வந்தவர். சூனியப் பெருவெளியின் தரிசனத்தை சில தருணங்களிலேனும் அறிந்தவர். பாலைவனவெளியில் தகதகத்துச் சுழலும் மாபெரும் நிலவைக் கண்டு, “அல்லா! உனது மகத்துவம் என்னை கூச வைக்கிறது. அதை தாங்கும் சக்தி எனக்கில்லை” என்று கூவியபடி கதையன்றில் நகரின் சந்துகளுக்குள் ஓடுகிறார் பஷீர்.

ஆம், வெறுமையில் மகத்துவத்தையும் மகத்துவத்தில் வெறுமையையும் கண்டு தெளிந்த சூபிதரிசனத்தின் பின்னணியில்தான் பஷீரை புரிந்து கொள்ளமுடியும். எந்த நவீனப் படைப்பாளியையும் விட பஷீருடன் ஒப்பிடத்தக்கவர்கள் குணங்குடி மஸ்தான் சாகிப் முதலிய சூ·பி துறவியர்தாம். ஆன்மிகம் உயரிய அங்கதத்தைச் சந்திக்கும் இடம் இதில் முக்கியமானதாகும். பஷீரின் சிரிப்பு ஆயிரம் வருடங்களாக கீழை ஞனமரபில் இருந்து வரும் சிரிப்பு. ஜென் கதைகளிலும் சித்தர் பாடல்களிலும் மீண்டும் மீண்டும் தென்படுவது அது. அற்பத்தனத்திலும் குரூரத்திலும் அகங்காரத்திலும் மூழ்கிய மானுடத்தைக் கண்டு பிரியத்துடன் புன்னகைத்துச் சென்ற சூபி பஷீர்.

[பாத்தும்மாவுடைய ஆடும் இளம் பருவத்துத்தோழியும் : வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் குமாரி கெ.விஜயம். நேஷனல் புக் டிரஸ்ட்

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jan 29, 2007

தனிமையின் முடிவில்லாத கரையில்…

பஷீர் : மொழியின் புன்னகை

பஷீர் ஆவணப்படம்

பஷீர் காணொளி

 

முந்தைய கட்டுரைசர்வ ஃபூதேஷு கடிதங்கள்- 3
அடுத்த கட்டுரைகோடையின் சுவை