புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்

[புலிநகக் கொன்றை என்ற நாவலின் ஆசிரியர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் ஜெயமோகன் நடத்திய மின்னஞ்சல் கடிதங்களில் தொகுப்பு இது. THE TIGERCLAW TREE என்ற பெயரில் பெங்குவின் வெளியீடாக வந்து பரவலாக கவனிக்கப்பட்ட இந்நூல் இப்போது தமிழில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது]

அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு ,

சுந்தர ராமசாமி வீட்டில் உங்கள் நாவலின் கைப்பிரதியைக் கண்ட நினைவு. பிறகு ஆங்கில நாவலை என் நண்பர் ஒருவரிடமிருந்து வாங்கி சில அத்தியாயங்கள் படித்தேன். என்னால் ஆங்கிலத்தமிழ் நாவலைப் படிக்க முடியவில்லை.

இப்போது உலகத்தமிழில் இரண்டு அத்தியாயங்களைப் படித்தபோதும் உள்ளே போக முடியவில்லை. முக்கியமான விஷயம் வயதான பாட்டி சாக கிடப்பது என்ற வழக்கமான துவக்கம். ஆனால் தமிழில் என்னால் நுட்பங்களை உணர முடிந்தது. முக்கியமான ஆக்கம் என்றும்.

இப்போது மணி இரவு இரண்டரை. . [அல்லது காலை.] இப்போதுதான் உங்கள் நாவலை படித்து முடித்தேன். தொடங்கிய மூச்சிலேயே முடித்துவிட்டேன்.

படித்து முடித்த உடனடி மனப்பதிவு எப்போதுமே இலக்கியம் சம்பந்தமானதல்ல, வாழ்க்கை சம்பந்தமானது. இலட்சியவாதத்துக்கும் அறிவுக்கர்வத்துக்கும் இடையேயான நுட்பமான உறவு என்னை எப்போதுமே ஆட்கொள்ளும் பிரச்சினை. நான் சுய கசப்புடனும் கோபத்துடனும் ஆவேசத்துடனும் உணரநேர்வது. என் சொந்த வாழ்வு சம்பந்தமானது. என் இரு பெரிய நாவல்களிலுமே அதைத்தான் வேறு வேறு விதங்களில் பேசியுள்ளேன் .

இந்நாவலில் என்னை மிகவும் பாதிப்பதும் அதுவே. இந்தக்கனவுகளை நாம் ஏன் காண்கிறோம் என மீண்டும் மீண்டும் என்னை யோசிக்கவைத்தது அது. நம்பி போன்ற கதாபாத்திரத்தை நானே ஆழமாக அவனது அகந்தைக்காக தேடிக் கொண்டிருந்தேன். அவன் வாய் வழியாக அது வெளிவரும் போது அதை அவன் சொல்லிவிட்டதற்காக எரிச்சல் ஏற்பட்டது . இலட்சியவாதம் பேசும்போதெல்லாம் ‘நாம் நாம் என தவளைகள் போல நம்பெயரையே சொல்லியபடி [ எமிலி டிக்கன்சனின் சொற்கள்] சொற்களை நமக்குள் நிரப்பிக் கொள்கிறோம். கண்ணன் முதல் பின்னகர்ந்து இந்நாவலில் இலட்சியவாதிகள் எல்லாரையுமே எனக்கு அப்படித்தான் காணமுடிகிறது… வருத்தமாகவும் கசப்பாகவும் இருக்கிறது— கசப்பு முக்கால்பாகம் என் மீதுதான்.

உங்கள் நாவல் கண்டிப்பாக ஒரு முக்கியமான இலக்கியப்படைப்பு. அதன் சரளம், மிதமான சித்தரிப்பு வடிவச்சமநிலை எல்லாமே அதை ஒரு கச்சிதமான நாவலாக்குகின்றன. முக்கியமாக இதன் நுண் சித்தரிப்புகள் — கதையோட்டத்துக்கு விளிம்புகளில் கூட சிதறிக்கிடக்கும் எண்ணற்ற முகங்கள் நிகழ்வுகள் — இதை ஒரு முக்கியமான கலையனுபவமாக ஆக்குகின்றன. வாழ்க்கை பற்றியும் மனிதர்கள் பற்றியும் குழந்தையின் ஆர்வத்துடன் பதிவுசெய்துகொள்ளும் ஓர் ஆழ்மனம் செயல்பட்டபடியே இருக்கும் ஒரு கலைஞன் தான் இதை சாத்தியமாக முடியும். என் கணிப்பில் இதுவே கலையில் ‘சதை ‘ . பிளாட் மையம் எல்லாமே ஒருவகையில் திட்டமிடக்கூடியவையே. இதுமட்டுமே எழுதும் கணங்களில் நிகழ வேண்டும். பல இடங்களில் உங்கள் மனம் ‘கண்ட’ படியே எழுதியுள்ளது. [விதிவிலக்கு நம்பி காவல்நிலையத்தில் அனுபவிக்கும் கொடுமைகள்] என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

குறை என சொல்ல ஒன்றே ஒன்றுதான், அது எழுத்தாளனாக என் சொந்த இயல்பு சம்பந்தமானது என்று சொல்லலாம்– இது ‘யானை பிழைத்த வேல் ‘ அல்ல என்பதே. இதுவரையிலான இலக்கிய ஆக்கங்களை ஏதாவது வகையில் தாண்டும் உச்சங்கள் கவித்துவமாகவும் சரி நாடகீயமாகவும் சரி நிகழவில்லை — ஆண்டாளின் அந்த இரவு , புலிநகக்கொன்றை பற்றிய வரிகள் தவிர. இது நான் உக்கிரப்படுத்துவதில் நம்பிக்கையுள்ளவன் என்பதனால் இருக்கலாம் .

ஆனால் மேலான நாவல் அறிவார்ந்ததாக செயல்பட்டு அறிவின் மீதான ஆழமான ஐயத்தை ஏற்படுத்துகிறது. தன்னையும் தானிருந்த இடத்தையும் அது காலிசெய்துவிடுகிறது. ஆன்மீகமான ஒரு Skepticism தான் மேலான நாவல்களின் சிருஷ்டி என்று சிலசமயம் படுகிறது. இந்நாவலைப் படித்து முடிக்கும்போதும் அதே வெற்றிடத்தை, கனத்த மெளனத்தை உணர்கிறேன். சமீபத்தில் இந்நாவல் அளவுக்கு கச்சிதமான , வெற்றிடத்தை விட்டுசெல்லக்கூடிய நாவலாக படித்தது Kōbō Abe எழுதிய The woman of the Dunes என்ற நாவல்தான் .

நம்பியின் மரணம் ஒரு குரூரமான திருப்தியை எனக்கு அளித்தது . ஒரு விதமான சுயவதை போல. அப்படி மூர்க்கமாக ஒரு இலட்சியவாதம் நொறுக்கப்படும்போது பிடிவாதமாக தக்கவைத்துக் கொள்ளும் கடைசி நாணயத்தையும் இழந்து அறியாத ஊரில் நிற்கும் அனாதைத்தனத்தின் நிம்மதி ஏற்பட்டது. இந்நாவலில் மிக முக்கியமான அனுபவங்களில் ஒன்று அது.

மறுபடி என் வாழ்த்துக்கள். நிதானமாக மீண்டும் விரிவாக எழுதுகிறேன். இதற்குமேல் எழுதினால் உளற ஆரம்பித்துவிடுவேன். நாளை அலுவலகம் உள்ளது.

ஜெயமோகன்

அன்பிற்குரிய கிருஷ்ணன் அவர்களுக்கு ,

நலமா ?

இப்போதுதான் தூங்கி விழித்தேன். உங்கள் நாவலை இரவில் நெடுநேரம் நினைத்துக் கொண்டிருந்தேன். பலநூறு நாவல்களைப் படித்து நாய்க்குண வயதை அடைந்துவிட்டபிறகும் கூட என்னால் நாவல்கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாகவே எண்ண முடிகிறது. சில நாட்களுக்கு முன் காஸ்ட்நாடாவின் சே குவேரா வாழ்வும் மரணமும் [தமிழக்கம் பால சந்திரன்] படித்தேன். அத்துடன் இரு நாவல்கள் என் நினைவில் மீண்டும் மீண்டும் வந்தன. ஒன்று காக்கநாடன் எழுதிய ‘ உஷ்ண மேகல’, இன்னொன்று யூ ஆர். அனந்தமூர்த்தியின் ‘அவஸ்தெ’. இரு நாவல்களுமே அக்காலத்தில் என்னை மிகவும் பாதித்தன. உஷ்ணமேகலையில் ஒரு இடம் இலட்சியவாதி கதாநாயகன் கட்சிக்கு பணியாற்றி ஒரு கட்டத்தில் தப்பியோடி ஐ ஏ எஸ் ஆகி பலவருடங்கள் கழித்து முழு பியூரோ கிராட் ஆக மாறியபிறகு டெல்லி வரும் இ எம் எஸை கண்டு பழைய நினைவுகளுக்கு ஆளாகி உருகி அவரை சந்தித்து பேசுவான். அவர் அவனை கண்டுகொள்ளவே மாட்டார் .

அறுபதுகளின் இடதுசாரி இலட்சியவாதவேகங்கள் அடங்கியபிறகுதான் நான் படிக்கவே ஆரம்பித்தேன். கேரளத்தில் எனது முன்னோடிகள் [கெ ஜி சங்கர பிள்ளை, பாலசந்திரன் சுள்ளிக்காடு ] இலட்சியவேகத்தின் அனைத்து வேகங்களையும் இழப்புகளையும் அடைந்தவர்கள். ஆகவே அந்த மனஉத்வேகங்கள் மீது ஓர் ஐயத்துடந்தான் நான் அவற்றை எப்போதுமே அணுகிவந்துள்ளேன். அந்த அடிப்படை மனநிலை மீது கவர்ச்சியும் சந்தேகமும் என்னை எப்போதுமே ஆட்டிப்படைத்தன. பிறகு அடுத்த கட்டத்தில் வேறு வழியில் நானும் அதேபோன்ற ஒரு உத்வேகத்தால் அடித்து செல்லப்பட்டு சிராய்ப்புகளுடன் மீண்ட பிறகு அதன் உள்ளோட்டங்கள் பலவற்றைத் திறந்து பார்க்க முடிந்தது. சாகச உணர்வு, நான் அசாதாராணமானவன் என்ற நினைப்பு வரலாறு வந்து அள்ளிக்கொண்டுபோய் சிகரத்தில் அமரச்செய்யப்போகிறது என்ற எண்ணம் என பலவகையான சுயபாவனைகள் கலந்த ஒன்றே ‘புரட்சி மனநிலை’ என்று படுகிறது. கூடவே தார்மீக ஆவேசமும் கோபங்களும் கருணையும் இருக்கலாம். ஆனால் புரட்சிக்காரர்கள் அனைவருமே அகங்காரம் வீங்கிப்போனவர்கள். ஆம், ஆன்மீகத் தேடல் என்ற பாவனையிலும் இதெல்லாமே உள்ளது. விஷ்ணுபுரத்தில் அதன் பலவேறு சாத்தியங்களை நான் எழுதிப்பார்த்தேன். மூன்றாம் பாகத்தில் வரும் கதாபாத்திரமொன்று தன்னுடைய மொத்த வாழ்வுமே வாழ்வின் அன்றாட அலுப்பிலிருந்து விடுபடும்பொருட்டு உத்வேகமான ஒரு புனைவாக வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் பணிதான் என உணர்கிறது. புனைவின் உச்சத்தை நிகழ்த்தி செத்துப்போவதே பிறகு செய்வதற்கு மீதி இருப்பது எனக் கண்டுகொண்டு அதைச் செய்கிறது. அப்புனைவை எவருமே அறியப்போவதில்லை என்றாலும் தனக்காகவே அதைச் செய்யவேண்டியுள்ளது அதற்கு.

சே-யின் வரலாறும் அதேபோல நிகழ்வதைக் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது . சே-யை நான் ஏற்கனவே படித்திருந்தாலும் கூட இந்நூல் அளிக்கும் முழுமையான சித்திரம் பிரமிக்கச் செய்வது  சே வாழ்நாள் முழுக்க ஒரு நாடகத்தில்தான் நடித்தபடியே இருந்தார். அதைப் பதிவும் செய்துவைத்தார். அவருக்கு அதிருஷ்டம், பல விஷயங்கள் வரலாற்றில் சாதகமாக இருதந்தன. கியூப புரட்சி தோல்வியடைந்திருந்தால் 60 களில் கொல்லப்பட்ட எண்ணற்ற இடதுசாரி இளைஞர்களில் ஒருவராக இருந்திருப்பார். [கல்கத்தாவிலிருந்து வெளிவந்த நக்சலைட் கவிதை என்ற நூலை நான் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன், பெரும்பாலான கவிஞர்கள் ‘வரலாற்றுக்காக ‘ பதிவு செய்கிறார்கள் என்பதைக் கண்டேன் . சே-யைப்போல]

‘புலிநகக் கொன்றை’-யில் முக்கியமான கதாபாத்திரங்கள் இவ்வாறு ‘தேடி வெளியே’ ஓடும் பல தலைமுறைகளைச் சேர்ந்த இளைஞர்கள்தான். அவர்கள் ‘விட்டுப்போகும்’ வீடாக மாற்றமே இல்லாமல் பொன்னா பாட்டி [மாக்யூஸின் உர்சுலா நினைவுக்கு வருகிறாள்]. இந்த முரண்பாட்டியக்கம் நாவலுக்கு ஒரு ஒழுங்கையும் ஒட்டுமொத்தமான தேடலையும் அளிக்கிறது. போகிறவர்கள் அனைவருக்குமே வெளியே ஒன்றுதான் அவர்களுக்குரியதாக இருக்கிறது. அங்கு போனால் அவர்கள் வெற்றி அடைந்துவிடுவார்கள். அவர்கள் சரித்திரம் முழுக்க அப்படி சென்றபடியே இருந்திருக்கிறார்கள் என்ற சித்திரத்தை நாவல் அளிக்கிறது. அதுதான் இந்நாவலின் வெற்றி என்றுபடுகிறது.

அன்புடன்

ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய வேகம் என்னை வியக்க வைக்கிறது. ஒரே இரவில் படித்து நாவலின் ஆத்மாவை உங்களால் தொட முடிந்திருக்கிறது.

நானும் One Hundred Years of Solitude ஐ நிறையத் தரம் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு இந்த நாவலை எழுதும் போதோ அல்லது முடித்த அப்புறமோ அந்த நாவலின் கிழவிக்கும் என்னுடைய கிழவிக்கும் உள்ள ஒற்றுமைகள் தோன்றவேயில்லை. ஆனால் ஆங்கிலத்தில் மதிப்புரை எழுதியிருந்தவர்கள் இதைக் குறிப்பிட்டு எழுதியிருந்த போது ஆச்சரியமாகஇருந்தது. இப்போது நீங்கள் சொல்கிறீர்கள்.

கவித்துவத்தின் மற்றும் நாடகீயத்தின் உச்சங்களைத் தாண்டுவது இயல்பாக நடக்க வேண்டியது. அது ஓரிரு இடங்களில் நடந்திருப்பதாக நீங்கள் கூறுவது ஆறுதலாக இருக்கிறது. In any case I don’t want the readers to be in a permanent state of orgasm!

தன்னை வியந்து தருக்காத அறிவாளிகளே இல்லை என்பதுதான் சரியாக இருக்கலாம். பணிவின் மறு உருவாக இருக்கும் அறிவாளிகள் கூட (மேற்கில் இத்தகையவர்கள் அதிகம் என்று நம்புகிறேன்) ஒரு வேளை மனதிற்குள் தங்களை வியந்து கொண்டேருப்பார்கள் என்ற ஐயம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் அக்குற்றத்திற்கு மரண தண்டனை அதிகம் என்றே படுகிறது. சேயின் மரணம் அத்தகைய ஒன்று.

புரட்சியாளர்களைப் பற்றி நீங்கள் கூறுவது ஓரளவுதான் சரி என்று தோன்றுகிறது.. சில புரட்சிக்காரர்கள் அசாதாரணமானவர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. (புரட்சி என்று நான் இங்கு சொல்வது வெறும் அரசியல் புரட்சியை மட்டும் அல்ல) எல்லா புரட்சிக்காரர்களும் அசாதாரணமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பதும் உண்மை. ஆனால் வரலாறு சமயங்களில் விளிம்பில் நிற்பவர்களையும் உள்ளே இழுத்து கபளீகரம் செய்து விடுகிறது. நானும் விளிம்பில் நின்று வேடிக்கைப் பார்த்தவன். அதனால் என்னால் வரலாற்றால் விழுங்கப் பட்டவர்களைப் பற்றி உக்கிரமாக பேச முடிவதில்லை. என்னுடைய சமநிலை அவர்களை நினைக்கும் போது செத்து விடுகிறது.

பின் தொடரும் நிழலின் குரல் எனக்குப் பிடிக்கவில்லை என்று நான் உங்களிடம் தொலைபேசியில் சொன்னேன். (நான் இப்போது எழுதுவது நினைவிலிருந்து எழுதுவது) அதன் ஆரம்பம் மிக அருமையாக இருந்தது. உங்களுடைய திறமையின் மீது எனக்கு ஒரு சந்தேகமும் கிடையாது. ஆனால் புகாரினைப் பற்றி எழுதியது வலிந்து ஏதோ ஒரு காரணம் கூற முடியாத கோபத்திலும் பச்சாதாபத்திலும் எழுதிய மாதிரி தோன்றியது. புகாரின் ஒரு பழைய போல்ஷிவிக். அவர் அப்படி ஒரு ‘நாடக’த்தை மாஸ்கோ வழக்குகளின் போது நடத்த வேண்டிய காரணம் எளிமையாக இருந்திருக்க நியாயம் இல்லை. அந்த வழக்குகளை பற்றி Fischer, Ambassador Davies போன்றவர்களும் பல பிரிட்டிஷ் பத்திரிகைகளும் எழுதியவற்றை நாம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. முப்பதுகள் மிகக் குழப்பமான ஆணடுகள். ஸ்டானினைப் பற்றியும் அவருடைய கொடுங்கோன்மையினால் இறந்தவர்களைப் பற்றியும் பல வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. நான் ஸ்டானின் செய்ததை நியாயப் படுத்த நினைக்கவில்லை. ஆனால் அவரை எம்ஜியார் படத்து வில்லனைப் போல சித்தரிப்பதும் சரியல்ல. புதிதாக Oxford பதித்துள்ள ரஷ்ய வரலாற்று புத்தகத்தில் அவரைப் பற்றி ஓரளவு சரியாக கூறப் பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். உக்ரேனியப் பஞ்சத்தைப் பற்றியும் பலதரப் பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. ‘போகும் பழியெல்லாம் அமணன் தலையோடே போம்’ என்பது போல எல்லாப் பழிகளையும் ஸ்டாலின் மீது போடுவது சரி என்று தோன்றவில்லை. உலகத்தை பாசிசத்திலிருந்து காப்பாற்றிக் கொடுத்த முக்கியமானவர்களில் முதல்வர் ஸ்டாலின் என்பதில் எனக்கு சந்தேகம் கிடையாது. ஸ்டாலினியம் இலக்கியத்தின் மூச்சை நிறுத்தும் விஷம் என்பதிலும் எனக்கு ஐயம் கிடையாது.

இனி என்னுடைய நாவலுக்கு திரும்ப வருவோம். சில கேள்விகள்.

தமிழக வரலாற்றின் நிகழ்வுகளோடு அது ஒருங்கியைந்து போகிறதா ? ஐயங்கார் உலகத்தின் ஒரு ஓரத்தில் நிகழ்வதையாவது அது காட்டுவதாக நினைக்கிறீர்களா ? ஐயங்கார் உலகத்தில் சாக்கடைகள் அதிகம். அவற்றை என்நாவல் பக்கம் திருப்பி விட நான் விரும்பவில்லை. ஆனால் சித்தரிக்கப்பட்ட மனிதர்களில் சிலர் உண்மையானவர்கள். அவர்களைப் பற்றி என் மனம் எண்ணியதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். குழந்தைகளின் உலகம் ? அது எப்படிச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது ? சில இடங்களில் – நாவலின் ஓட்டம் தடைபடும் என்று நான் எண்ணிய இடங்களில் – ஆங்கிலத்தை அப்படியே விட்டிருக்கிறேன். அது சரி என்று நினைக்கிறீர்களா ? மொழிபெயர்ப்பைப் பிற்சேர்க்கையாகக் கொடுக்கலாமா ?

உங்கள் மனைவியிடம் நான் மன்னிப்புக் கேட்கக் கடமைப் பட்டவன். உங்கள் தூக்கத்தைக் கலைத்ததற்காக.

அன்புடன்

கிருஷ்ணன்

அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் கிடைத்தது.

ஒரு நல்ல இலக்கியப்படைப்பை தூக்கம் விழித்து படிப்பதென்பது ஒரு பேரனுபவம். அருண்மொழி நங்கை அவ்வனுபவதை அறியக்கூடியவள்தான். ஆனால் அவள் இப்போதும் முக்கியமான் நூல்களை படித்தால் அழுதுவிடுவாள். ‘குற்றமும் தண்டனையும் ‘ நாவலை அவள் படிக்கும்போது தாள் மீது கண்ணீர் துளிகள் சொட்டுவதை கண்டு நான் ஏங்கியிருக்கிறேன், என்னால் அப்படி எந்த மகத்தான நூலையும் படித்து அழ முடியாது. அப்படி அழும் அனுபவம் இனி சாத்தியமே இல்லை. உங்கள் நாவலை அருண்மொழி படிக்கத் துவங்கியிருக்கிறாள்.

*

முதலில் பின் தொடரும் நிழலின் குரல் பற்றி. அந்நாவலில் ருஷ்யா பற்றிய மிக ஆதாரமாக உள்ள/ மிக வெளிப்படையான தகவல்களை மட்டுமே கணக்கில் கொண்டிருக்கிறேன். வரலாற்றை தகவல்கள் மூலம் உண்மையை அறியப்புகுந்தால் அதற்கு முடிவேயில்லை. என் பிரச்சினை வரலாற்றில் ‘இல்லாமல் ஆவது’ பற்றியது. என் அம்மாவின் சேமிப்பில் [வீரபத்ரபிள்ளையின் மூல வடிவமாக இருந்த] அந்த கவிஞனின் நூலை கண்டேன். அவனை அவர்கள் மறக்கவில்லை – அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் அம்மா ஆழமான நம்பிக்கை கொண்ட கம்யூனிஸ்டாகவே உள்ளூர இருந்தார்கள். அது அவர்கள் தன் அண்ணாவிடமும் அந்த பொற்காலத்துடனும் கொண்ட உறவின் விசுவாசம் மட்டும்தான். ஆனால் அக்கவிஞன் அப்படியே காணாமலாகிவிட்டான். அப்படி காணாமலாவது என்பதே ஒரு பொதுப்பணியாளனின் நரகம். என்றாவது சரித்திரத்தால் கண்டடையப்படுவேன் என்ற சொல்லே அவனது ஆதார மந்திரம்.

1988ல் புகாரின் பற்றிய கோவை ஞானியின் நூலைபடித்துவிட்டு அன்று நான் சார்ந்திருந்த இடதுசாரி கட்சியின் தலைவரிடம் கேட்டபோது அப்படி எவருமே இல்லை, அது ஒரு கற்பனை மட்டுமே என்றார். ஏகாதிபத்தியவாதிகள் சொல்லும் பொய்! அப்படி ஆவது சாத்தியம் என்ற நிலை அளித்த அதிர்ச்சியே புகாரினை தெரிவு செய்ய காரணம். தெரிவல்ல, இயல்பாகவே அவரது நினைவு வந்து ஒட்டிக் கொண்டது. இல்லாமலாவது பற்றிய அச்சம் எப்போதுமே அகங்காரம் கொண்டவனை அச்சுறுத்துகிறது. அறிவுஜீவிகள் இலட்சியவாதிகள் போன்றவர்கள் அகங்காரம் மிக்கவர்கள். இருத்தலே அவர்களது முதல் பிரச்சினை. தியாகியின் நரகம் என்பது மறக்கப்படுவதுதான்.

ஸ்டாலினை மதிப்பிடுவதல்ல என் நோக்கம். அது எப்போதுமே மறுபக்கங்களாக மடங்கி மடங்கிச் செல்லக்கூடியது. எனக்கு ஸ்டாலின் கூட அதில் ஒரு குறியீடுதான். போல்பாட், இட்லர் , நெப்போலியன், ஹானிபால் எல்லாருமே இணையும் ஒரு புள்ளி. உங்கள் தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு ஸ்டாலின் மீது ஒரு பரிவு மிச்சமிருக்கும், அம்மா இருந்திந்தால் ஸ்டாலின் பற்றி இப்படி எழுதியதற்கு என்னை மன்னிக்கவே மாட்டாள். எனக்கு அப்படியல்ல. அப்பெயர் அம்முகம் என் இளமை நினைவுகளில் இல்லை. அது அம்மாவின் அண்ணாவுடன் சம்பந்தப்பட்ட ஒரு பெயர்மட்டுமே.

என் பிரச்சினை அம்மா மாதிரி ஒருத்தி, இ.எம்.எஸ் மாதிரி ஒரு மாமனிதர் கூட மாபெரும் மானுடக் கொடுமையை நியாயப்படுத்தும் இடத்துக்கு கருத்தியல் விசுவாசம் இட்டுவருகிறதே என்பதே. உரிய முறையில் வலிமையான கொள்கையால் சித்தாந்தத்தால் நியாயப்படுத்தப்பட்டால் நாம் எதையுமே செய்யத்துணிவோம் என்பதில் உள்ள பயமுறுத்தும் சுயதரிசனம்தான் அது. அதுதான் பின்தொடரும் நிழலின் குரலின் சாரம். இந்த உண்மையை நான் கற்றது ருஷ்யவரலாற்றில் இருந்தல்ல, இலங்கையில் இருந்து. உண்மையில் என்னைப்பொறுத்தவரை ருஷ்யா ஸ்டாலின் எல்லாமே ஒரு புனைவு முகாந்திரம் மட்டுமே. தெளிவாகவே நாவலை ஐம்பதுகளின் அறிதல்களின் எல்லைக்குள் நின்று எழுதியதும் அதனால்தான்.

*

தமிழக வரலாற்றுடன் ஓர் எல்லையில் உங்கள் நாவல் அழுத்தமாக இயைந்து போகிறது. பிராமணர்கள் பல காலகட்டங்களில் சம்பந்தப்பட்ட அரசியலியக்கங்களின் பலதளங்கள் நுட்பமாகவும் சகஜமாகவும் நாவலினூடாக வருகின்றன. ஆனால் அரசியல் நிகழ்வுகளுக்கு சமானமாக நடந்த சில சமூக மாற்றங்கள் போதுமான அளவுக்கு தொடப்படவில்லை. நான் இரண்டாவதற்குத்தான் முக்கியத்துவமளிப்பேன்.

திருநெல்வெலி மாவட்டத்தைப் பொறுத்தவரை இக்காலகட்டத்தின் முக்கியமான சமூக நிகழ்வு நாடார் சாதிமேலெழுந்து வந்தது. 1980கள் வரைக்கூட உங்களூர் பக்கம் ‘நாடார் X தேவர் ‘ மோதல் அன்றாட நிகழ்வாக இருந்தது. தேவர்கள் கீழே இருந்த நாடார்கள் மெல்ல மேலெழுந்து சென்றபிறகு தேவர்கள் இப்போது கீழேயுள்ள தேவேந்திரகுல வேளாளர் [மள்ளர்] பக்கமாக திரும்பியுள்ளார்கள். முத்துராமலிங்கதேவர் காமராஜ் மோதல் நெல்லை மாவட்டத்தில் மிக முக்கியமான சரித்திர நிகழ்வு. அது இநாவலில் விடுபட்டுள்ளது .தேவர்களின் வீழ்ச்சி மறைமுகமாக பிராமண ஆதிக்க வீழ்ச்சியும்கூட எனும்போது இது மிக முக்கியமானது.

இரண்டு குத்தகை விவசாயத்தில் ஏற்பட்ட சரிவு. அதன் மூலம் பிராமணர், பிள்ளை முதலிய உயர்சாதியினரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. நெல்லை தஞ்சையின் அடிப்படையான மாற்றங்களுக்கு இதெல்லாம் காரணம். நிலமிழப்பு என்பது புதுமைப்பித்தன் கதைகளின் ஆதாரசுருதி. மெளனி கதைகளில் கூட அதன் ரேகை ஓடுகிறது. அந்ததளங்கள் எங்காவது இந்நாவலிலும் இருந்திருக்கவேண்டும். மடத்துக்கும் உண்டியல்கார குடும்பத்துக்கும் கண்டிப்பாக இது ஒரு முக்கியமான பிரச்சினையாக இருந்திருக்கும். அவர்கள் அடுத்தகட்டத்துக்கு படிப்பு வேலை என நகர அது ஒரு கட்டாயத்தை அளித்தது.

மட்டுமல்ல கம்யூனிசம் இங்கு எதிர்கொண்ட பிரச்சினையும் அதுவே. பல்வேறு வகையில் குடியானவ சாதிகள் [வேளாளர்களிடமிருந்து தஞ்சையில் வேளாளர்களும் கள்ளர்களும், நாயுடு மற்றும் மராட்டிய ராவ்களிடமிருந்து வன்னியர் வடமாவட்டங்களில், தேவர் மறவர் நாடார் தென்மாவட்டங்களில்] நிலத்தை கைவசப்படுத்த இக்காலகட்டத்தில் முடிந்தது. அதை அவர்கள் கொண்டாடினார்கள் ,அவர்களை கம்யூனிசம் கவரவில்லை. கவரப்பட்டவர்கள் நிலமற்று படித்து வேலை கிடைக்காத உயர்குடி இளைஞர்கள் பலவகை கைத்தொழில் சாதிகள் மற்றும் தலித்துக்களின் ஒரு பகுதியினர். இவ்விடுபடல் ஒரு குறைபாடேயாகும்.

உங்கள் நாவல் மேல்தளத்தை — தலைவர்களை சார்ந்த அரசியல் நிகழ்வுகளை — சார்ந்து காலகட்டத்தை காட்ட கவனம் கொள்கிறது. வரலாற்றில் இடமில்லாத அடியோட்டங்கள் சித்தரிக்கப்படுதலே வரலாறு இலக்கியப்படைப்பில் வருவதை நியாயப் படுத்துகின்றது. இச்சித்திரங்களை நீங்கள் அதிகமாக நூல்களிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாலும் அவற்றின் தலைவர்களை மனிதர்களாக்வும் சரித்திர நிகழ்வுகளை அன்றாட தளத்திலும் வைத்து பார்த்திருப்பதனால் புனைவின் மீது அவை அழுத்தமாக அமர்ந்து அதற்குரிய நம்பகமான சூழலையும் வரலாற்றுப் பொருத்தத்தையும் அளிக்கின்றன.அவ்வகையில் இதை வெற்றி என்றே சொல்லவேண்டும். வரலாறு குறித்த முதிர்ந்த பார்வை மூலம் உருவாகும் பல நுட்பமான அங்கதங்களை உங்கள் நாவலில் காணமுடிகிறது. ஆயுதப்புரட்சி குறித்த நமது கற்பனைகளில் பல நூற்றாண்டுகளாக பெரும் போரையே கண்டிராத சமூகத்தின் அபத்தம் நிழலாடுவதை அழகாக கூறியிருக்கிறீர்கள்.

[ அச்சுத மேனோனின் சுயவரலாற்றில் ஒர் இடம். கல்கத்தா தீஸிஸ் காலகட்டம். தலைமறைவாக இருக்கும் கட்சித்தலைவர்களூக்கு ஸ்டாலின் செய்தி அனுப்புகிறார் — பார்ட்டிசான் முறையில் தெருவில் காப்பரண்கள் ஏற்படுத்தி போராடுவதற்கு. இ.எம்.எஸ் கோபத்துடன் ‘ பார்ட்டிசான் யுத்தமோ ? இயாள்கெந்தா பிராந்துண்டோ ? ‘ என்கிறார் ]

எனக்கு தலைவர்கள் நிகழ்வுகள் உடனடியாக பிம்பங்களும் ஐதீகங்களும் ஆக மாறுவது பற்றிய ஓர் ஆர்வம் எப்போதுமுண்டு. நாவல் அதைக் காட்ட ஒரு சிறந்த ஊடகம். என் பெரியப்பா சொல்வார் அந்தக்கால மேடைகளில் முத்துராமலிங்கதேவர் காமராஜரை எப்படி சாதிப்பெயர் சொல்லி ஆபாசமாக வைவார் என்று. இன்று அதை பதிவுசெய்வதே கஷ்டம் . ஜீவாவுக்கு ஓரினச்சேர்க்கை ஆர்வமுண்டு என ஒருவர் இலேசாக சொல்லியிருக்கிறார் [ நீங்கள் ஊகிப்பவரே]. பாரதி அயோத்திதாச பண்டிதரை ‘பட்லர் பறையர் ‘ என மறைமுகமாக வைதது உங்களுக்கு தெரியுமா ? வரலாற்றுக்கு அடியில் மனிதர்கள்.அவர்களுக்கு அடியில் ஆசாபாசங்கள். அடிப்படை மனித இயல்புகள். அதிலிருந்து வரலாறு விக்கிரகங்களை உருவாக்குகிறது. இந்த ஆக்கத்தை உங்கள் நாவலில் காணமுடியவில்லை. நீங்கள் விக்கிரகங்களை அடையாளக் கற்களாக பயன்படுத்தி கால ஓட்டத்தை நம்பகமாகச் சித்திரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறீர்கள்.

*

உங்கள் நாவலில் எல்லா கதாபாத்திரங்களும் அசலாக உள்ளனர். விதிவிலக்கான வித்தியாசமான ஆளுமைகள் –ஆங்கிலேய கல்லூரி முதல்வர் , கோபால பிள்ளை முதலியவர்கள் — மேலும் உயிர்துடிப்போடு உள்ளனர். இது ஒரு வெற்றிதான், சாதாரணமாக நிகழாதது. எழுத்தாளர்கள் இம்மாதிரி இடங்களை எழுதியபிறகு முதுகில் தட்டிக் கொள்ள அனுமதி உண்டு. பெண்களில் பொன்னா ஆண்டாள் இருவருமே மிக அழுத்தமாக உள்ளனர்.

ஆனால் பல கதாபாத்திரங்கள் நகர்வின்றி உள்ளனர். அதற்கான அவகாசம் அவர்களுக்கு இல்லை. ரோசா கூட ஒரு உறைந்த குணச்சித்திரம்தான். நாவல் தொட்டுத்தொட்டு செல்லவேண்டிய வடிவக் கட்டாயம் இருக்கிறது . இதை நாவலின் ஒர் இயல்பு என்று சொல்லலாம். புத்தாநத்தத்தில் கல்கி பிறந்த வீட்டிற்கு போனேன். அங்கே சுவரில் மாட்டப்பட்ட நூறு வருட வரலாறுள்ள புகைப்படங்களில் மூன்று தலைமுறைகளைக் கண்டு கற்பனையில் சில கணங்களில் காலம் ஒரு அருவி போல விழுவதை உணர்ந்தேன். வெயிலுக்கு சுருங்கிய கண்கள் அன்னை உற்றுபார்த்தன. வெட்கி உறைந்த பெண்முகங்கள். உடைகள். ஸ்டுடியோ துணிகள். ஓட்டுகட்டிடப் பிண்ணணி. அம்முகங்கள் போல உள்ளன பல கதாபாத்திரங்கள். நினைவுகளையும் கற்பனையையும் கிளப்பும் உயிருள்ள முகங்கள்.

நாவலின் இவ்வியல்பே பெரிய மோதல்கள் நிகழாமல் நிறுத்தியும்விடுகிறது. நகர்வுகள் தானே மோதிக்கொள்கின்றன இல்லையா ? நினைவில் முட்டி மோதி வரும் முகங்கள் போல உள்ளன இவை. பொன்னாப்பாட்டியின் கதை மட்டுமே முழுமையான நகர்வுடன் இருக்கிறது. மற்றபடி கதாபாத்திரங்கள் சிறப்புறவே சித்தரிக்கப்பட்டுள்ளன. நம்பி ரோசா கதாபாத்திரங்களும் சிறப்பாகவே இருக்கின்றன.

அய்யங்கார்களின் உலகம் நுட்பமாகவே இருக்கிறது, அவர்கள் உலகத்தின் நாவல் கணக்கில் கொண்ட ஒரு பகுதி மட்டும். அவர்கள் மதநம்பிக்கை, அவர்களுடைய சடங்குகள், அவர்களுடைய வரலாற்றுப் பின்னணி போன்ற பலவிஷயங்களை நாவல் கருத்தில் கொள்ளவில்லை, காரணம் இது உண்டியல்கடைவீட்டின் கதை மட்டுமே.

குழந்தைகளின் உலகமும் என் பார்வையில் சிறப்பாகவே இருக்கிறது, அது மையப்படுத்தப்படவில்லை. பொதுவாக பிராமணக்குழந்தைகளின் உலகில் மரம் காடு கரை என அதிகமிருப்பதில்லை போலிருக்கிறது. ஆனால் அவ்வுலகின் கற்பனை சஞ்சாரம் பெரியவர்கள் மீதான வியப்புகலந்த ஆர்வம் போன்றவை அழகாக வந்துள்ளன. ஆகவே அதிகமான கவனம் அதன்மீது விழவில்லை. பலவிதமான சித்தரிப்புகளின் ஒரு பகுதியாக வரும்போதும் அதில் ஒரு முழுமை இருக்கிறது. இதை நான் சொல்வதற்கு ஆதாரம் எல்லா குழந்தைகளும் குழந்தை அடையாளம் மாறாமல் இயல்பாகவே வருகிறார்கள். ஆனால் எதுவுமே வெறும் ‘குழந்தை ‘ அல்ல, தனி ஆளுமையாகவே இருக்கிறது. இது ஒரு வெற்றிதான்.

நாவலின் பிரதானமான குறை இது இடங்களைப்பற்றிய ஒரு சித்திரத்தை கண்முன் எழுப்பவில்லை என்பதே. அதில் உங்களுக்கு ஆர்வமில்லையோ என்றுகூட பட்டது. அந்த ஊர், தெருக்கள்,வீடுகளின் இருளும் மனித வாடையும் படிந்த வீடுகள், கோயில் எதுவுமே போதிய அளவுக்கு சித்திரப்படுத்தப்படவில்லை. துல்லியமான சித்திரமாக இருப்பது குளம் மட்டுமே [பொதுவாக நீர்நிலைகள் நன்றாக சொல்லப்பட்டுள்ளன]. இடம் பற்றிய சித்திரம் சற்று ‘ மனிதமயமா ‘கும் போது அது படிமம் image ஆகிவிடுகிறது. அப்போது அதன் அர்த்தங்கள் பலவிதமாக விரிந்து செல்கின்றன. பொன்னாவும் ஆண்டாளும் உடலின் வதையுடன் நிற்கும் கோயில்வாசலை அந்த கோபுரத்தின் கம்பீரத்துடன் சொல்லியிருந்தால் அக்கோபுரம் பலவகையான அர்த்தங்களை உற்பத்திசெய்யும் ஒரு படிமமாக ஆகி அக்காட்சியின் ஆழம் பெருமளவுக்கு அதிகரித்திருக்கும். நாவல் அதிகமும் மனிதர்களீலேயே குவிகிறது. இடத்திலிருந்து பிரிக்கமுடியாத ஒரு நாவலை இடம் கண்ணில் விரியாதபடி எழுதியிருப்பதன் குறை முக்கியமான் கலைக்குறைபாடுதான்.

குழந்தைச்சித்தரிப்பிலும் இவ்விடைவெளி விழுகிறது. உதாரணமாக குழந்தைகளுக்கு காட்சி உலகம் முக்கியமானது. கோயில் சப்பரம், கோயில்பிராகாரத்து சிலைகள் வவ்வால் என அதற்கென ஒரு நுட்பமான காடி உலகம் உள்ளது. அது சமையலறையைப்பற்றியதும் ஆகலாம். அவ்விஷயம் இந்நாவலில் இல்லை என்பதனால் குழந்தை உலகம் அவ்வளவில் குறைப்பட்டதாகவே இருக்கிறது.

இந்நாவலின் முக்கியமான வெற்றி இதன் நடைதான். ஆங்கிலம் அதில் சற்று கலந்தாலும் ஏதும் குறைவுபடுவதில்லை. மிகை இல்லாத கச்சிதத்துடன் வருணனைகள் நிகழ்ச்சி சித்தரிப்புகளை சொல்ல முடிந்துள்ளது. நாவல் முழுக்க மென்மையான ஒரு புன்னகை [ சிலசமயம் கசப்பான புன்னகை ] இருந்துகொண்டே இருக்கிறது. பல்வேறு மொழிகளின் சாயல்கள் கலந்த உரைநடைதான் இதன் வெற்றிக்கு முக்கியமான காரணம். உதாரணங்களை நிறைய தொகுத்துவைத்திருந்தேன். சொல்லாவிட்டாலும் சாதிகளின் தனித்தனி வழக்குகளைக்கூட உங்களால் கொண்டுவர முடிகிறது. உரையாடல்களில் பலபகுதிகள் துடிப்பாக இருக்கின்றன. அதன் ஒருபகுதியே ஆங்கிலம். அது இருக்கலாம் என்றே படுகிறது.

பொதுவாக நாவலை வாசித்து சிலநாட்கள் அதைப்பற்றிய உதிரி எண்ணங்கள்தான் மனதில் இருக்கும். இது நன்றாக இருக்கிறது இது நன்றாக இல்லை என. சில வரிகள் தடாரென நினைவு வரும். சில முகங்கள் விடாது தொடர்ந்துவரும் சில கருத்துக்களைப்பற்றி யோசிப்போம். அதைமுழுமை செய்துகொள்ள சில நாட்கள் தேவை. அதன் பிறகே நாவலைப் பற்றித் தொகுத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஏதேனும் சொல்ல முடியும். இச்சிலநாட்களின் மனமீட்டலில்தான் நாவலின் அனுபவமே இருக்கிறது.

அன்புடன்

ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய வேகத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.எனக்கு இன்றும் விடுதலைப் போர் வீரர்களின் பழைய படச்சுருள்களைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வந்துவிடும். பின்தொடரும் நிழல் பற்றி பின்பு விரிவாகப் பேசலாம். நான் அதைத்திரும்பப் படிக்க வேண்டும். மனிதர்களை கொடுமைப் படுத்துவதை நான்ஒருபோதும் நியாயப்படுத்த மாட்டேன்.

சமூக மாற்றங்கள் உண்டியல்கடைக் குடும்பத்தை நினைவில் வைக்கும்படித்தொடுவதற்கு சாத்தியக் கூறுகள் குறைவு. என்னுடைய குடும்பத்திலேயே நிலத்தை சார்ந்திருந்தலிருந்து மாத வருமானத்தை சார்ந்திருப்பது மூன்று நான்கு தலைமுறைகளுக்கு முன்னாலேயே நிகழ்ந்து விட்டது. உதாரணமாக என் குடும்பத்துக்கு இன்னும் நாங்குனேரியில் சிறிது நிலம் இருக்கிறது. குத்தகைக்காரர் தலித். ஆனால் பல ஆண்டுகளாக நாங்கள் குத்தகைப்பணத்தை கேட்டது கிடையாது. அது வந்து காலம் தள்ள அவசியமே ஏற்பட்டத்தில்லை. பிராமண சமுதாயத்தின் ‘வீழ்ச்சி’ மேல்தட்டுவர்க்க பிராமணர்களை அதிகம் பாதித்ததே இல்லை. என்னைப்போன்றவர்களின் தில்லி வருகை இயல்பாகவே நிகழ்ந்தது. என்னுடைய தாத்தா காலத்திலும் அத்தகைய வருகைகள் கிட்டத்தட்ட இயல்பாகவேநிகழ்ந்தன. என்னுடைய நாவல் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிராமணர்களைப்பற்றி அல்ல.

விக்கிரகங்களின் வக்கிரங்களைப் பற்றி எனக்கும் தெரியும். ஆனால் அவர்களின்- குறிப்பாக விடுதலைப் போராட்ட வீரர்களின் – வக்கிரங்களை வெளியிட எனது நாவலை ஒரு கருவியாகப் பயன்படுத்த நான் விரும்பவில்லை. ஆனாலும் பாரதியைப் பற்றி நான் எழுதியிருப்பதை திரும்பப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பாரதி அயோத்திதாசரைப் பற்றிச் சொன்னது எனக்கு புதிய செய்தி. எங்கு அவ்வாறு சொல்லியிருக்கிறார் ?

நினைவோடு முட்டி மோதிக் கொள்வதே வாழ்வின் ஒரு முக்கியமான அம்சம் இல்லையா ? என்னுடைய வாழ்க்கையில் நான் மிக முக்கியமான மோதல் என்று ஒரு காலகட்டத்தில் நம்பியதெல்லாம் இப்போது நினைவுக்கே வருவதில்லை. உப்பு பெறாதது என்று அன்று நினைத்தது திரும்பத் திரும்ப வட்டம் இடுகிறது.

எழுதும் போது இடங்களைப் பற்றி அதிகம் எழுதத் தோன்றவில்லை. அது குறையாக இருக்கலாம். ஆனாலும் வண்ணாரப் பேட்டை வீடு உமாவன் வீடு, நாங்குனேரித் தோட்டம் போன்ற பல இடங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். அவை அழுத்தமாக பதிவு பெறாதிருக்கலாம். கோபுரத்தைப் பற்றி எழுதவில்லை. யாளியைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

நாவலைப் பற்றி இவ்வளவு அழுத்தமான கருத்துக்களைத் தெரிவித்தது பற்றி நன்றி. சுந்தர ராமசாமி ஆங்கில நாவலைப் படித்துவிட்டு, அதை நான் வெளிப்படையான தளத்தில் அமைத்திருப்பதாகச் சொன்னார். தமிழ் நாவலைப் படித்துவிட்டு நீங்கள் அவ்வாறு சொல்லாதது மகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் மனைவியாரின் கருத்துக்கள் என்ன என்பதையும் பின்னால் நேரம் கிடைத்தால் எழுதுங்கள்.

அன்புடன்

கிருஷ்ணன்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கிருஷ்ணன் அவர்களுக்கு,

ஒரு இலக்கியப்படைப்பில் ஒரு குறிப்பிட்ட விஷயம் ஏன் இல்லை என்பதற்கு காரணத்தை அப்படைப்பாளியின் ஆழ்மனத்தில்தான் தேடவேண்டும் என்பார்கள். புதுமைப்பித்தன் கதைகளில் அவருக்கு சுதந்திர போராட்டத்தில் இருந்த ஆர்வம் தெரிகிறது. ஆனால் கதைகளில் அது இல்லை. கேரளத்தில் ஒரு வேடிக்கை சொல்வார்கள். கதகளிக்காக 30 வருடம் போராடி அதை மீட்டெடுத்து புதுமைப்படுத்தி கேரளாகலாமண்டலம் என்ற அமைப்பை நிறுவிய வள்ளத்தோளின் கவிதைகளில் கதகளி சார்ந்த ஒரு படிமம் கூட இல்லை. கடற்கரையில் பிறந்து கடற்கரையில் வாழ்ந்த குமாரனாசான் கடல் பற்றி ஒரு வரிகூட எழுதவில்லை. இம்மாதிரி மர்மங்களில்தான் கலை இருக்கிறது [துப்பமுடியாத யாளியின் உருண்டை கவித்துவமிக்கது].

உங்கள் ஆங்கில நாவல் பத்தி சற்று வேறுமாதிரி இருக்கிறது. ஒரு ரிப்போர்ட்டிங் நடையின் சாயலுடன்.ஆர்வமூட்டக் கூடியதாக உள்ளது.

சுரா சொன்ன கருத்து அவர் பலதடவை என்னிடமும் சொன்னதுதான். உங்கள் நாவல் பற்றி நிறையவே பேசியுள்ளேன். வரலாற்றுத்தகவல்கள் செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளன என்றார். நான் பொதுவாக நாவலின் எலும்புச் சட்டகம் வரலாற்றை மாதிரியாக கொண்டு எழுத்தாளனின் கருத்தியலால்/ தத்துவத்தால் உண்டுபண்ணப்படுவதாகவே உள்ளது. தல்ஸ்தோய், தாமஸ் மன் எல்லாருக்கும் இது பொருந்தும். அந்த சட்டகத்தை உயிருள்ள வாழ்க்கையால் நிரப்பும்போதே நாவல் உருவாகிறது என்றேன். ஸந்த நுண்சித்தரிப்பு பலசமயம் அந்த சட்டகத்தை மீறிச் செல்லலாம். அதன் நேர் எதிர் திசையில்கூட போகலாம். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. நாவலின் மெளனம் பற்றியும் நிறைய பேசினோம். நாவல் ஒருவகையில் சாராம்சபடுத்தி /சுருக்கித் தொகுத்துச் சொல்கிறது. அதை விரித்தெடுக்கும் இடத்திலேயே அதன் வாசகப்பங்கேற்பு உள்ளது. எத்தனை முழுமையாக உக்கிரமாக தொகுக்கிறது என்பதே அளவுகோலாக இருக்க முடியும். சிறுகதையின் மெளனமல்ல நாவலுக்கு. அதுவும் இருக்கலாம். நாவலின் மெளனம் அதன் பகுதிகளுக்கு இடையேயான இடைவெளிகளில் இருக்கிறது. அங்கே நாம் வேறு நாவல்களை கற்பனை செய்யமுடியும். அதன்றி சிறுகதைபோல சிறு நுட்பங்களை சொல்லாமல் சொல்லி நிற்பது அல்ல நாவலின் வேலை.

சு ராவின் நாவலில் சில எளிய லெளகீக நுட்பங்களை கவனமாக ஒளித்து வைத்திருக்கிறார். எஸ் ஆர் எஸுக்கும், ஆனந்தத்துக்கும் ஒரு தவறான உறவு இருக்கலாம் என்ற ஐயம் அதில் ஒன்று. என்னால் அதை உடனேயே ஊகிக்க முடிந்தது. ஊகிக்காதவர்கள் சற்று கற்பனைசெய்தால் கண்டுபிடித்துவிடலாம். கண்டுபிடித்ததுமே கதை முடிந்துவிடுகிறது. இதல்ல நாவல் உருவாக்கும் மெளனம். உங்கள் நாவலையே எடுத்துக் கொள்வோம். ஓயாது பறவை இரைச்சலிடும் மரம் வந்ததுமே அக்குடும்பத்தின் அத்தனை மனிதர்களின் அலைச்சல்களும் அவர்கள் மூலம் தெளியும் சரித்திர அலைகளும் எல்லாமே வேறு ஒரு தளத்தில் தெரிய ஆரம்பித்துவிடுகின்றன. நாவலை மீண்டும் வேறு கோணத்தில் மனதில் தொகுக்கலாம். இதுதான் நாவல் தரும் வாசகப்பங்கேற்பு என்பது. ஃபாதர் சோஷிமாவின் பிணம் அழுகி நாற ஆரம்பித்ததுமே அதுவரை வந்த விவாதங்கள் எல்லாமே வேறு கோணத்தில் விரிய ஆரம்பித்து விடுகின்றன [கரமசோவ் சகோதரர்கள்]. சுராவின் கொள்கையை உலக நாவல்களுக்கு போட்டுப்பார்த்தால் செல்லுபடியாகுமா என்று கேட்டேன்.

அவரது நாவலில் தத்துவார்த்த உரையாடல்கள் சவசவ என இருப்பதை சுட்டிக்காட்டியபோது அவர் உங்கள் நாவலை உதாரணம் காட்டினார். அதில் உரையாடல்கள் மிக புத்திசாலித்தனமாக, உங்கள் தனிப்பட்ட பேச்சு போலவே இருக்கிறது என்றார். மாறாக தன் நாவலில் இயல்பாக அமைத்திருப்பதாக சொன்னார். எனக்கு உண்மையிலேயே வேடிக்கையாக இருந்தது. புனைவு யதார்த்தம் வேறு, யதார்த்தம் வேறு என்றேன். சினிமாவில் மாமரம் ஐந்து விநாடிகளில் வளர்ந்து காய்ப்பதாக காட்டலாம். உலகம் முழுக்க மாபெரும் நாவல்களின் நாயகர்கள் சிந்திப்பவர்கள் தனக்குள் ஆழ்ந்தவர்கள், கூர்ந்து கவனிப்பவர்கள். அப்படித்தான் இருக்கமுடியும். ஒருவன் அலுப்பூட்டும்படி பேசினால் அதை பத்து வரிகளில் நாவல் காட்டும், சுவாரஸியமாக பேசினால் பத்துபக்கம் அளிக்கும். நிஜமான உரையாடலை எவருமே அப்படியே எழுதமுடியாது, எழுதினால் படிக்கவும் முடியாது. அது செறிவுபடுத்தப்பட்ட சித்தரிப்பே, உண்மை அல்ல. செறிவுபடுத்தப்பட்ட உண்மை. யதார்த்தம் அல்ல, நோக்கமும் இலக்கும் உள்ளது, யதார்த்தம் என நம்மை நம்பவைக்கும் கலைச்செயல் அது. ரயில்வே அட்டவணைகூட நாவலில் சுவாரஸ்யமாக ஒரு இலக்குடன்தான் வரமுடியும்.

உண்மையில் மதுரை சிவராமனின் அபிப்பிராயங்கள் இவை. அவர் மனதில் யதார்த்தம் என்ற ஒரு பிம்பம் கிடக்கிறது. அதாவது ‘அப்பட்டமான ‘ யதார்த்தம். அது மட்டுமே உண்மை என்கிறார் அவர். அதை சு ரா தலையிலும் ஏற்றிவிட்டார் . சந்திரனில் தலைகீழாக நடந்தாலும் அது நம்பகத்தன்மையுடன் சொல்லப்பட்டால் அது யதார்த்தமே தான் என்று நான் சொன்னேன் . கி பி 3000 த்தில் நடக்கும் கதைகூட சமகாலத்தன்மை கொண்டதே என்றேன். புனைவு என்ற சொல்லை சு.ரா பொய் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துவதைக் காணலாம். சு.ரா வாசிப்பிலிருந்தோ அனுபவத்திலிருந்தோ கொள்கைகளை உருவாக்காமல் வெறுமே யோசித்து உருவாக்கியதன் குளறுபடியே அவரது கடைசி நாவல். அதை நான் சொன்னது அவரை மிக வருத்தம் கொள்ளச்செய்து விட்டது.

*

என் மனைவி அருண்மொழி நங்கை விவசாயப்பட்டதாரி . இப்போது தபால் குமாஸ்தா. காதல் மணம். அவள் ஊர் பட்டுக்கோட்டை. இலக்கிய விமரிசனங்கள் எழுதியுள்ளாள் . திண்ணையில்கூட இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. சு.ரா நாவல் பற்றி எழுதியிருக்கிறாள். இப்போது அலுவலகத்தில் மிக மிகக் கடுமையான வேலை. வீட்டுக்கு வந்தாலும் ஆபீஸ் வேலை. சமையல் வேலை. படிக்க எழுத நேரம் மிக குறைவு. தீவிரமும் சற்று குறைவே. நான்தான் மீதி வீட்டுவேலை எல்லாமே செய்கிறேன், ஆனாலும் போதவில்லை.

ஜெயமோகன்

அன்புள்ள ஜெயமோகன்,

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் Evelyn Waugh அவர்களுடைய நேர்காணல் ஒன்றைப் படித்தேன். அதில் அவர் மனிதனுடைய எல்லாப் பரிமாணங்களையும் ஒருபோதும் ஒரு நாவலால் உண்மையாகப் பேசிவிட முடியாது என்கிறார். எனக்கு அவருடன் சம்மதமே. உதாரணமாக எனக்குத் தெரிந்த புகழ்பெற்ற ஹிந்தி எழுத்தாளர் மிகவும் தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் போது பிருஷ்டத்தை இருக்கையிலிருந்து நகர்த்தி நாற்றம் மிகுந்த வெடிக்குசு ஒன்றை விடுவார். அவரைப் பற்றி எழுதினால் ஒரு தடவை இதைப் பற்றி எழுதலாம். ஆனால் அவர் விடுவது பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு முறை. அதே போல என்னுடைய பஞ்சாபி நண்பர் ஒருவர் மூதாதையருடைய பிறப்புறுப்புகளுக்கு அஞ்சலி தெரிவித்து விட்டுத்தான் பேச்சையே தொடங்குவார். அவர் சொல்வதை அப்படியே எழுதுவது என்னால் முடியாது. பேச்சைச் செதுக்கித்தான் எழுத்தில் வடிக்க முடியும். எல்லா மொழிகளிலும் அப்படித்தான். செதுக்கும் முறைதான் வேறு. நீங்கள் கூறுவதுபோல எழுதுவதில் யதார்த்தத்தின் உயிர் துடிக்கிறது என்பதை உணர வைப்பதுதான் கலை.

எனக்கு குழந்தைகள் பெண்கள் ஆண்கள் மிகவும் பிடித்த புத்தகம். தத்துவ உரையாடல்கள் நீர்த்துப் போய் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நாவலில் குழந்தைகளின் உலகம், வாலிப உலகம், பெரியவர்களின் உலகம் போன்றவை மிக நுணுக்கமாக சித்தரிக்கப் படுகின்றன. அவற்றின் உராய்வுகளும் குலாவல்களும் மோதல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழில் இப்படி யாரும் எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சுரா ஒவ்வொரு வார்த்தைகளையும் துல்லியமாக நிறுத்து எழுதுகிறார் என்பது முற்றிலும் சரி. ஆனால் இலக்கியத்தில் அப்படிப்பட்ட எழுத்துக்கும் நிறைய இடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

எங்களுக்கு இன்று விடுமுறை. கண்ணன் பிறந்த நாள். இன்று விடியோவில் இரு திரைப்படங்கள் பார்த்தேன். ஒன்று பாபா. மற்றொன்று Harry Potter. திரைப்படமே வெகுநாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன். Harry Potter உடைய மாயாஜால உலகத்தில் பாபா நுழைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! புத்திக்கும் தமிழ் திரைப்பட உலகத்திற்கும் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருகிறதாக எனக்குப் படுகிறது. ஆரம்பிக்கும் போதே தூரம் அதிகம்.

ஞாயிற்றுக் கிழமையிலிருந்து பதினைந்து நாட்கள் ஊர் ஊராகச் செல்ல வேண்டும். டேராடூன் சென்னை மைசூர் தன்பாத் புவனேசுவரம். நான்காம் தேதி சென்னையில் இருப்பேன்.

உங்கள் மனைவி குழந்தைகளுக்கு என்னுடைய ஆசிகள். அலுவலக வேலையை வீட்டிற்கு எடுத்து வருவது தண்டிக்கக் கூடிய குற்றம் என்று நான் கருதுகிறேன். நானே அந்தக் குற்றத்தைப் பல தடவை செய்திருக்கிறேன்.

அன்புள்ள

கிருஷ்ணன்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கிருஷ்ணன் அவர்களுக்கு,

தங்கள் கடிதம் ஏற்கனவே கிடைத்தது . தாங்கள் ஊரில் இருக்கமாட்டீர்கள் என்று சொன்னதனால் கடிதம் அனுப்ப தாமதித்தேன்.

சமீபத்தில் இங்கே ஒரு மிகச்சிறிய பத்திரிக்கைக்காக ஒரு கட்டுரை எழுதினேன். பெரியபுராணம் பற்றிய அந்த கட்டுரையை திண்ணையில் போட்டேன். முன்பெல்லாம் அப்படியே போய்விடும். இப்போது இணையத்தில் எல்லாவற்றையும் போட்டு விட வசதி இருக்கிறது.

என் தலைமுறை எழுத்தாளர்கள், வாசகர்களில் பெரியபுராணம் வாசித்த யாரையுமே நான் இதுவரை கண்டதில்லை. பொதுவாக ஒரு நக்கல், புறக்கணிப்பு சூழலில் உண்டு. ஓர் இலக்கியக் கூட்டத்தில் பெரியபுராணம் அல்லது கம்பராமாயணம் பற்றி நான்குவரி மேற்கோள் காட்டி விட்டால் பழைமைவாதி என்றோ மதவாதி என்றோ சொல்லிவிடுவார்கள். சங்க இலக்கியம் பரவாயில்லை. ஆனால் சிற்றிதழ் சார்ந்த கூட்டத்தில் அது கூட இழிவாகவே கருதப்பட்டு வருகிறது. நான் எழுத வந்தபோது பல மூத்த எழுத்தாளர்கள் என் பண்டை இலக்கியப்படிப்பு ஒரு சுமையாக ஆகும் என அறிவுறுத்தினார்கள் .சுத்தமாக மறந்துவிடச் சொன்னார்கள். எனக்கே பெரிய தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் கொஞ்சநாள் இருந்தது. அதைக் களைந்தவர் டி. எஸ். எலியட். விமரிசன / ரசனை அடிப்படையிலான பழைய இலக்கியக் கல்வி ஒருவனை மேலும் நவீனமானவனாகவே ஆக்குமென அவர் மூலம் அறிந்தேன்.

எழுத ஆரம்பித்த காலத்திலேயே நான் கம்பனை மட்டுமல்ல திருமூலரைக்கூட மேற்கோள் காட்டுவேன். என் தனிவாழ்வில் எவ்வகையிலும் நான் பழைமைவாதி அல்ல என்றாலும் பழமைவாதி என்ற முத்திரை வலுவாகவே குத்தப்பட்டுவிட்டது. மதவாதி என்றும். என்னளவு நவீனமான படைப்புகளை சிலரே தமிழில் எழுதியுள்ளனர் என்றாலும் என்னை எல்லாருமே பழைய மனநிலை கொண்டவன் என்பதுபோல சொல்கிறார்கள். ஆனால் யாராவது எதிர்த்தால் அதையே பிடிவாதமாக செய்வது என் குணம். ஒரு வகை சந்தோஷம் அதில் இருக்கிறது. திமிர் என்றே சொல்லலாம் .

இப்போதுகூட ஒரு வாசக நண்பர் தொலைபேசியில் அழைத்து ஏன் சேக்கிழார் பற்றியெல்லாம் எழுதி வசையை வாங்கி கட்டிக் கொள்கிறாய் என்று கேட்டார். மதவாதி முத்திரைக்கு மேலும் மேலும் ஆதாரம் சேர்த்துத் தரவேண்டுமா என்று கேட்டார். திண்ணையிலே போய்ப் பார்த்தால் உடனே இரண்டுபேர் அங்கே ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்தது.

எனக்கு சேக்கிழார் போலவே குமரகுருபரரிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆனால் என் ஆசிரியர்கள், பேரா.ஜேசுதாசன் போன்ற அதிநுட்பமான ரசனை கொண்டவர்கள் கூட குமரகுருபரரை பொருட்படுத்தவில்லை. எனக்குக் குழந்தைகள் பிறந்தபிறகு, குறிப்பாக சைதன்யா பிறந்த பறகு, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் ஒவ்வொரு சந்தமும் தித்திக்கிறது. ஒரு துறவி, மடாதிபதி இதை எழுதினார் என்பதில்தான் இலக்கிய ஆக்கத்தின் மகத்துவமே இருக்கிறது .

*

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் என்னைக் கவரவில்லை. இலக்கியப்படைப்பின் சவால்களை அது எதிர்கொள்ளவில்லை, அதன் முன்வரைவே மிகச் சாதாரணமான ஒன்று என்பது என்கருத்து. அதை சு ராவுக்குச் சொல்லியுமிருக்கிறேன். அதில் படைப்பூக்கம் சார்ந்த பகுதிகள் மிக மிகச் சொற்பம். பெரும்பகுதி நினைவு கூர்தல் சார்ந்தது. யார் தங்கள் இளமைப்பருவம் குறித்து நினைவு கூர்ந்து எழுதினாலும் அதில் ஒரு சுவாரஸியம், சில புதுமைகள் கண்டிப்பாக இருக்கும். இலக்கியப்படைப்புக்கு அது போதாது. அதற்கு அப்பால் ஒரு அம்சம் தேவை. அது எழுதும் போது ஏற்படும் ஆழமான மன நகர்வு மூலம், அக்கணங்களில் அதுவரை நாமறிந்த விஷயத்தையே நாம் புதிதாகக் காணநேர்வதன் மூலம் உருவாவது. ஒரு சாதாரணமான பார்வைக்கு, பொதுப்புத்திக்கு [காமன் சென்ஸ்] ஒருபோதும் சிக்கிவிடாத ஒன்றை எப்போதுமே கலைப்படைப்பு சொல்கிறது. அது என்ன என வகைப்படுத்த முடியாது, ஆனால் இந்த சிறப்பம்சமே மற்ற மொழி வடிவங்களில் இருந்து இலக்கியத்தை வேறுபடுத்துகிறது. ஒரு சுயசரிதைக்கும் இலக்கியத்துக்கும் வித்தியாசம் இதுவே. அப்படி ஏதும் அந்நாவலில் இல்லை. நாவல் பற்றிய என் அளவுகோல்களை இன்னும் தீவிரமானதாக வைத்துக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.

அதில் குழந்தைகள் சித்தரிப்பு உயிரோட்டமானதாக இல்லை. எழுதும்போது குழந்தையாகி எழுதப்பட்டதல்ல அது. ஒரு முதிர்ந்த மனிதரின் கண்வழியாக சித்தரிக்கப்பட்ட குழந்தையே அதில் உள்ளது. சிறுவர்கள் சிறுமியரின் உலகம் நுட்பமான புலன்கள் சார்ந்தது. மனிதர்கள் அசைவுகளாக, தோற்றங்களாக அவர்களுக்குத் தெரிகிறார்கள . ஒரு மனிதரைப் பார்த்தால் குழந்தை அவரது உடலை, பேச்சை அசைவுகளை மனதால் பிடித்துக் கொள்கிறது. அறிவால் மதிப்பிடுவதில்லை. ஆனால் பாலு ஒரு மூளை சார்ந்த [ செரிபரல் ] வடிவமாகவே உருவாக்கப்பட்டுள்ளான். அவனது புலன்கள் சார்ந்த பிம்பங்களே நாவலில் இல்லை [ சூட்கேஸ் வாசனை வருகிறதே, யார் வீட்டுக்கு வந்தது என்று அஜிதன் ஒருமுறைகேட்டான் ]. அதேபோல அந்த அப்பா கதாபாத்திரம். அக்கதாபாத்திரத்தின் மூல வார்ப்பு தொடர்ந்து திருத்தப்பட்டு குறுகலான ஒரு வியாபாரியை ஷெல்லி படிக்க செய்கிறார் சுரா. இது கதாபாத்திரம் மீதான ஆசிரியரின் ஈடுபாட்டால் ஏற்படுகிற, அவரது மனநெகிழ்வு சார்ந்த ஒரு ஒரு சித்திரம்தான். பல விஷயங்கள் எளிமையான் பிழைகள். உதாரணமாக காந்தி ஒரு போதும் விதவை மறுமணத்தை ஆதரித்தது இல்லை. அதை சிவராம காரந்த் கூட கண்டித்திருக்கிறார்.

ஜெயமோகன்.

அன்புள்ள ஜெயமோகன்,

தங்கள் கடிதத்தின் படிவத்தை மைசூரில் பார்த்தேன். தமிழில் பார்த்தது தில்லி வந்த பிறகுதான். காந்தியைப் பற்றி நீங்கள் கூறுவது சரியல்ல.

“Widow marriage is no sin- if it be- it is as much a sin as the marriage of a widower is..

If we would be pure, if we would save Hinduism, we must rid ourselves of this poison of enforced widowhood. The reform must begin by those who have girl widows, taking courage in both their hands and eeing that the child widows in their charge are duly married and well married- not remarried. They were never really married.

Widowhood imposed by religion or custom is an unbearable yoke and defiles the home by secret vice and degrades religion.”

Tendulkar’s Mahatma page 227

இது காந்தி 1926ல் எழுதியது.

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் பற்றிய உங்கள் விமரிசனம் சுராவிடம் இருந்து இந்த நாவல் வந்ததைக் குறித்து உங்கள் ஏமாற்றத்தைக் காட்டுகிறது. குழந்தைகள் உலகம் சித்தரிக்கப்படுவது செயற்கையாக இருக்கிறது என்று நான்நினைக்கவில்லை. அதற்கும் மேலாக எனக்கு அந்த நாவலில் பிடித்தது அதில்நடக்கும் உலகங்களின் போராட்டங்கள்தான். அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக் கோடு இந்தப் போராட்டங்களின் ஒரு கோடியை மட்டும் காட்டி நிறுத்தி விடுகிறது. அதை நான் குறை என்று சொல்லவில்லை. யூமா வாசுகியை நான் படித்ததில்லை. குழந்தைகள் பெண்கள் ஆண்களுக்கு பல மையங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாவலைப் பற்றி நாம் நேரில் சந்திக்கும் போது பேசலாம்.

உங்களுடைய சேக்கிழார் கட்டுரையைப் படித்தேன். ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ தமிழ் மொழியின் உள்ளார்ந்த இசையைக் காட்டும் சிறந்த பாடல்களில் ஒன்று. தமிழ் ஆசிரியர்களுடன் பழந்தமிழ்ச் சொத்துக்களையும் தூக்கி ஏறியும் வேலையையே நம்மில் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். சுராவும் பழந்தமிழ் இலக்கியத்தின் மீது அவர் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார். நீங்கள் ஒருவர்தான் நமது பண்டைநூல்களை மறுபார்வை செய்ய வேண்டியதின் அவசியத்தை ஓயாமல் வலியுறுத்தி வருகிறீர்கள். திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் மையத்துக்கு வந்திருப்பது தமிழ் மக்களின் அறிவுத்திறனுக்கும் நகைச்சுவை உணர்வுக்கும் வந்திருக்கும் நோயின் அறிகுறி. தில்லியில் அவர் வந்தால் அரங்கம் நிரம்பி வழியும். மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் படித்து பல நாட்கள் ஆகி விட்டன. என்னுடைய தந்தை-தீவிர வைஷ்ணவர். கம்பனின் பக்தர்- குமரகுருபரரின் சந்தத் தமிழ் ரசிகர். என்னுடைய அம்மாவிற்காக கிருஷ்ண ஜெயந்தி அன்று பெரியாழ்வார் பாசுரங்களை உரக்கப் படித்தேன், அம்மாவிற்குத் தெரியாமல்.

“வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க

மொட்டு நுனியில் முளைக்கின்ற முத்தேபோல்

சொட்டுச் சொட்டென்னத் துளிக்கத் துளிக்க என்

குட்டன் என்னைப் புறம் புல்குவான்

கோவிந்தன் என்னைப் புறம் புல்குவான்.”

சொட்டுச் சொட்டென்ன துளிக்கும் மூத்திரத்துக்காக பெரியாழ்வார் ஏங்கியது ஒரு அருமையான கவிதையை உருவாக்கி விட்டது. இது ஒரு தாத்தாவின் கவிதை என்று எனக்குத் தோன்றுகிறது. அல்லது தாத்தாவாக முடியாத துயரத்தில் எழுந்த கவிதை.

எனக்குப் பிடித்த மற்றொரு பாடல்.

“கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்

எடுத்துக் கொள்ளில் மருங்கை யிருத்திடும்.

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்

மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்!”

காலச் சுவடில் ஜெயந்த் நார்லிகரின் நேர்காணலைப் படித்தீர்களா ? உங்கள் கருத்தை எழுதுங்கள்.

தொலைக்காட்சி தொடர்களைக் குறித்து அனுப்பியதைப் பார்த்தீர்களா ?

அன்புள்ள,

கிருஷ்ணன்.

அன்புள்ள கிருஷ்ணன் அவர்களுக்கு ,

நலம்தானே ? உங்கள் கடிதம் கிடைத்தது .

சொல் புதிது இதழ் வந்துவிட்டது. சில மெய்ப்பு குளறுபடிகள். ஆகவே வினியோகம் பாதிமுடிந்தபிறகு இதழ்களைத் திரும்பபெற்று சில பக்கங்களைமாற்றிக் கொண்டிருக்கிறோம். சொந்தமாக கணிப்பொறி வைத்து மெல்ல மெல்ல அச்சு கோக்காதபட்சம் இதைத் தவிர்க்கவே முடிவதில்லை. எவருமே வேலையை ஒழுங்காக பொறுப்பாக செய்து தருவதில்லை. இத்தனைக்கும் மதுரையில் ஒரு தெருவில் 120 டி டி பி மையங்கள் உள்ளன. நேற்றெல்லாம் மிக மனமுடைந்த நிலையிலிருந்தேன். எங்களுக்கு ஊழியர் கிடையாது .சரவணன் என்ற இளம் நண்பர் அன்பின் அடிப்படையில் செய்து தருகிறார். ஒரு ‘ ஒன் மேன் ஆபீஸ் ‘ எனலாம். அவருக்கு ஊதியமேதும் அளிக்கமுடியவில்லை. அது மனக்குறையாகவே இருக்கிறது. அவரை நேற்று சற்று கடுமையாகவே பேசிவிட்டேன்.

நீங்கள் அனுப்பிய கடிதங்களில் குட்டன் புல்கும்போது சொட்டு சொட்டென்று விழுவது என்ன என்பது என்று வைணவ உரையாளர்களிடம் நடந்த வேடிக்கையான விவாதம் நினைவிருக்கிறதா ? ஸ்ரீவைஷ்ணவ சுதர்சனத்தில் அதை படித்ததாக நினைவு.

காந்தியின் மேற்கோளில்கூட விதவை மறுமணம் என்பது மனைவி இழந்தவனின் மறுமணமளவுக்கு தவறே என்ற தொனியே உள்ளது என்று எனக்கு படுகிறது. நடைமுறையில் அவர் விதவை மறுமணத்துக்கு எதிரான கருத்தை கொண்டிருந்ததற்கும் அதை வலியுறுத்தியதற்கும் பல சான்றுகள் உள்ளன. உதாரணமாக சிவராம காரந்த் அவர் காந்தியிடமிருந்து விலகியதற்கு காரணமே அதுதான் என குறிப்பிடுகிறார். நித்ய சைதன்ய யதியின் சுய சரிதையில் அப்படி ஒரு இடம் வருகிறது. அவர் சபர்மதி ஆசிரமம் விட்டு வெளியேற காரணமே காந்தி ஒரு இளம் காதலர்களை பொது அவைக்கு அழைத்து கண்டித்து தண்டனை வழங்கியமைதான். அப்பகுதி சொல் புதிது 9ல் வெளியாகியுள்ளது. ஆனால் சு ரா நாவலைப் பொறுத்தவரை நான் சொன்ன இக்கருத்து தவறென ஒத்துக் கொள்கிறேன். நாவலாசிரியனுக்கு கறாரான உண்மை தேவையில்லை. ஒரே ஒரு சாதக ஆதாரமே போதுமானது… அதாவது முகாந்திரம்.

நார்லிங்கரின் பேட்டி சிறப்பாக இருந்தது. பொதுவாக அசலான அறிவியல் பேட்டிகள் தமிழில் வருவதில்லை. சி வி ராமனின் ஒரு பேட்டி முன்பு கலைமகளில் வந்துள்ளது. உங்கள் கேள்விகள் அறிவியல் நோக்கை / அறிதல் முறையை வலியுறுத்துவனவாக இருந்தன. அவரது பதில்களும் தெளிவானவை. நான் உங்களுக்கு எழுதுவதாக இருந்தேன் . சொல் புதிது துவங்கும்போது நான் அதில் அறிவியல் கட்டுரைகள் போட ஆரம்பித்தபோது கடுமையான எதிர்ப்புகள் வந்தன. சிற்றிதழ் வாசகர்கள், சக எழுத்தாளர்கள் இது எதற்கு, இதெல்லாம் கல்லூரிப்பாடம்தானே என்றார்கள். ஒரு தலையங்கமே எழுதினேன் — நமக்கு இது எதற்கு என்று கேட்காதீர்கள் தயவுசெய்து என. கார்ல் சாகன் போன்ற அறிஞர்கள்மீது எனக்கு சில கருத்து வேறுபாடுகள் உண்டு என்றாலும் அவர் அறிவியல் நோக்கை வலியுறுத்துவது தமிழுக்கு மிக அவசியமென்பது என் கருத்து. கார்ல் சாகன், கார்ல் பாப்பர் உள்பட பல அறிவியலாளர்கள் அறிவியல் அணுகுமுறை பற்றி எழுதியவற்றை பிரசுரித்துள்ளோம். சில விஷயங்களை புரிந்துகொள்வது கஷ்டம், ஆனாலும் போட்டோம். இப்போது எல்லாருமே போடவேண்டிய நிலை வந்துவிட்டது . நீங்கள் கேள்விகளை அடிப்படை அறிவியல் மனநிலை பற்றி முனைப்படுத்த அவரும் அது குறித்து அழகாக சொல்கிறார் . ஆனால் சோதிடம் பற்றிய அவரது கட்டுரைக்கு என்னிடம் மறுப்பு உண்டு. இன்று செல்லுபடியாகும் ஓர் அறிவுத்துறை என்று பாராமல் அதை நேற்று இருந்த ஓர் அறிதல்முறை / ஒரு வகை குறியீட்டு இயக்கம் என்று ஆராய வேண்டிய அவசியம் உள்ளது . இடதுசாரிகள் பற்கலைகழகங்களை கைப்பற்றியமை காரணமாக அவ்வாராய்ச்சிகள் மூடநம்பிக்கை என்ற பெயரில் தூக்கி வீசப்பட்டன. வேளாண்மை குறித்த பல தேசிய அறிவுகள் இவ்வாறு 50 வருடம் வேளாண்மை பற்கலைகளால் புறக்கணிக்கப்பட்டமை பற்றி இப்போது முக்கியமான வேளாண்மை அறிவியலாளர்கள் பேசுகிறார்கள். மூடநம்பிக்கை என்ற முத்திரை சமூகவியல் சார்ந்தது, அறிவியல் சார்ந்தது அல்ல. உதாரணமாக சிலப்பதிகாரத்தில் வட்டப்பாலை என்ற இசை முறை பற்றி வருகிறது. அது என்ன என்று எவருக்குமே தெரியவில்லை. ஆகவே தென்னிந்திய ராகங்களின் கணக்குகள் பற்றிய ஞானமே எவருக்கும் இருக்கவில்லை — ராகங்கள் தெரியும் என்பதல்லாமல். ஆபிரகாம் பண்டிதர் ராகங்களின் சுருதி முறையை 12 ராசி சக்கர அடிப்படையில் அமைத்து பார்த்தார் . அது தெளிவாயிற்று. இன்று அதையே எல்லாரும் பயன்படுத்துகிறார்கள் [ சொல் புதிது 9ல் விரிவான கட்டுரைகள் இருந்தன ]. அதாவது அது ஒரு அறிதல் முறை, குறியீட்டுமுறையாக இருக்கலாம். இப்போது மொழி இலக்கணத்துக்கு குமரிமைந்தன் [ அதி தீவிர பகுத்தறிவுவாதி ] அதை பயன்படுத்திபார்க்கிறார். ஆயுர்வேதத்துக்கும் சோதிடத்தின் அறிதல்முறை பயன்படுகிறது. பட்டம் வாங்கி குறி சொல்ல போக சோதிட வகுப்பு தேவையில்லை. ஆனால் சிலப்பதிகாரம் , சீவக சிதாமணி முதலியவை சொல்லும் நாள் கோள் செய்திகளை தொகுத்துக் கொள்ள கண்டிப்பாக சோதிட ஆய்வு தேவை.

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி
அடுத்த கட்டுரைகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு